ரசிகர்களை ஏமாற்ற முடியாது! ‘அசுரன்’ ஆர்ட் டைரக்டர் ஜாக்கி சொல்கிறார்



இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் குட்டுப்படுவது என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. அந்த அதிர்ஷ்டம் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக அடித்தது என்கிறார் கலை இயக்குநர் ஜாக்கி. இவர் சமீபத்தில் அசுரத்தனமாக ஓடி வசூலை அள்ளிய ‘அசுரன்’ படத்தின் கலை இயக்குநர்.

மிகப் பெரிய வெற்றிப் படங்கள் கொடுத்த பிறகும் டூ வீலரில் டிராவலாகும் எளிமை விரும்பி. ஒரு மாலைப் பொழுதில் ஜாக்கியை சந்தித்தோம். தடுக்கி வீழ்ந்தால் எதாவது ஒரு புத்தகத்தின் மீதுதான் விழவேண்டும். வீட்டையே புத்தகக் கண்காட்சியாக மாற்றி வைத்திருக்கிறார். நாம் சந்தித்த வேளையில் ‘தி லைஃப் சேஞ்சிங் மேஜிக் ஆஃப் டிடியிங்’ என்ற ஜப்பானிய புத்தகத்தை கால்வாசி முடித்திருந்தார். படிப்பதை நிறுத்திவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

“எப்படி ஆர்ட் டைரக்டர் ஆனீர்கள்?”

“சினிமாவுக்கு வருவதற்கு முன் ஆர்ட் டைரக்‌ஷன் பற்றி எதுவும் தெரியாது. விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் மாதச் சம்பளத்தில் இருந்தேன். அந்தத் துறை டவுனானபோது நண்பர் ஒருவர் மூலம் ‘இவன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிஷ் ஆச்சர்யா தனியாக படம் பண்ணும்போது என்னை ஆர்ட் டைரக்‌ஷன் பண்ணச் சொன்னார்.

‘எனக்கு ஆர்ட் டைரக்‌ஷன் தெரியாது’ என்றேன். விடாப்பிடியாக அழைத்ததால் ஒர்க் பண்ணினேன். ‘பிரைட்ஸ் வான்டட்’ என்ற அந்தப் படம் இந்திய- ஆங்கிலப் படமாக வந்தது. அதன்பிறகு அரவிந்தன் என்ற நண்பர் அவர் இயக்கிய படத்தில் ஆர்ட் டைரக்‌ஷன் பண்ண அழைத்தார். அந்தப் படம் தாமதமானதால் மறுபடியும் கிராஃபிக்ஸ் துறைக்கே தொழிலை மாற்றிக் கொண்டேன்.

ஒருநாள் திடீர்னு கவிதாலயாவிலிருந்து ஒரு ஃபோன். நானும் யாரோ கலாய்க்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்த அழைப்பை தட்டிக்கழிக்காமல் மறுநாள் ஆபீஸ் போனேன். இயக்குநர் கே.பாலசந்தர் சாரை சந்திக்கச் சொன்னார்கள். கே.பி சார் ஒரு தேதியைச் சொல்லி படப்பிடிப்புக்கு வரச்சொல்லிவிட்டார்.

சாரிடம் தலையாட்டிவிட்டு வந்தாலும் வெளியிலிருந்த  அவருடைய உதவியாளர் மோகன் அண்ணாவிடம் ‘என்ன நடக்கிறது’ என்று புரியாமல் கேட்டேன். ‘கே.பி.சார் இயக்கும் ‘பொய்’ படத்துக்கு நீங்கள்தான் ஆர்ட் டைரக்டர்’ என்று சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. அந்த ஆச்சர்யம் என்னைவிட்டு நீங்குவதற்கு முன்பே படப்பிடிப்புக்காக இலங்கைக்கு கிளம்பிப் போனோம்.

அங்குதான் என் நண்பன் சமுத்திரக்கனியின் நட்பு கிடைத்தது. ‘பொய்’ படத்துக்கு ‘பருத்திவீரன்’ படத்தில் வேலை செய்தேன். அந்தப் படம் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. அந்தப் படம் கொடுத்த வெற்றியால் கிடுகிடுஎன டாப் கியரில் என்னுடைய கிராஃப் ஏற ஆரம்பித்தது. குறுகிய காலத்தில் சுமார் நாற்பது படங்களில் வேலை பண்ணிவிட்டேன்.

கே.பாலசந்தர், கே.எஸ்.ரவிக் குமார், தங்கர்பச்சான், அமீர், வெற்றிமாறன், ராஜேஷ், திரு என்று வெற்றிப்பட இயக்குநர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதெல்லாம் நானாக தேடிப்போனால் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் எல்லாமே அதுவாக அமைந்தது.”“வெற்றிமாறனோட ஃபேவரைட் ஆர்ட் டைரக்டரா ஆகியிருக்கீங்க...”

“வெற்றிமாறனுடன் ‘ஆடுகளம்’ படத்திலிருந்து தொடர்ச்சியாக வேலை செய்து வருகிறேன். வெற்றியின் படம் என்றாலே சவால் காத்திருக்கும். ‘வடசென்னை’யில் ஜெயில், ராயபுரம் என்று எனக்கான சவால் இருந்தது.

‘அசுரன்’ படத்தில் 80களில் ஆரம்பித்து 60க்குள் கதை நகரும். ‘காடு, ஊர் பிரதானமாக இருக்கும்’ என்று ஒரு வரியில் முடித்துக் கொண்டார் வெற்றி. அது எனக்கு சவாலாக இருந்தது. நான் 70 கிட்ஸ். அந்தக் காலத்தில் பிறக்கவில்லை. 80கள் என்றால் ரெஃபரன்ஸ் எடுக்கமுடியும். 60 என்று வரும்போது ரெஃபரன்ஸ் கடினமாக இருந்தது.

அந்தக் காலத்தில் எப்படி கிராமம் இருந்தது என்று தெரியவில்லை. படத்தில் வயல்வெளியில் மஞ்சுவாரியர் வயலுக்கு நீர்பாய்ச்சும் காட்சி, முதுகுக்குப் பின்னாடி சினிமா பப்ளிசிட்டி பண்ணுவதெல்லாம் அக்காலத்து வழக்கம். 60களில் ரூபாய் நோட்டு மாறியது. 60களில் வந்த ரூபாய் பெரிய பேப்பர் போன்று இருக்கும். இதையெல்லாம் கொண்டுவந்ததற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெற்றியைப் பொறுத்தவரை கலை இயக்குநராக நான் ஒரு விஷயத்தைப் பண்ணும்போது அதுக்காக மெனக்கெடல் போடுவார். ‘வடசென்னை’ படத்தில் ஜெயில் செட் போட்டேன். ஜெயில் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு விஷயம் பண்ணிவைத்திருந்தால் அந்த டீடெயிலுக்காக கதையை அங்கிருந்து நகர்த்துவார். ஜெயில் செட்டுக்காக லாரி லாரியாக பொருட்கள் வந்தது. தனுஷ் தயாரிப்பாளர் என்பதால் எல்லாமே கேட்டதும் கிடைத்தது.

‘அசுரன்’ படத்தில் ஓலைக்குடிசைக்காக பனை ஓலை தேவைப்பட்டது. அந்தக் காட்சியை சென்னையில் எடுத்தோம். அதற்காக என்னுடைய கல்லூரி நண்பர் கெளதம் திருவள்ளூர் பகுதியிலிருந்து ஆயிரமாயிரம் பனை ஓலைகளை வெட்டி பதப்படுத்தி லாரிகளில் அனுப்பி வைத்தார்.

இரண்டாம் பகுதியில் வந்த வீடுகள், வீதி செட்டப் அனைத்தும் செட். தனுஷ் சார் வீட்டை களிமண்ணால் நிஜ மேஸ்திரிகளை வைத்துக் கட்டினோம். அதேபோல் காடு பகுதியும் சவாலாக இருந்தது. ஆறடி நீளத்துக்கு பாம்பு சர்வ சாதாரணமாக நடமாடியதைக் கண்டு டப்பா கழன்றுவிட்டது.

‘ஆடுகளம்’ படத்திலிருந்து நானும் வெற்றியும் டிராவல் பண்ணுகிறோம். அது எனக்கு கம்ஃபோர்ட் சோன்ல இருக்கிறது. இயக்குநர்களுக்கும் அது பிடித்திருக்கிறது. அடுத்து பழகும் விதமும் அடுத்தடுத்து பண்ணுவதற்கான காரணமாக சொல்லலாம். விளக்கம் சொல்வதாக இருந்தால், பழகிய இயக்குநருடன் படம் பண்ணும்போது விளக்கம் தேவைப்படாது. கதையைச் சொல்லிவிட்டு யோசித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார்கள்.

வெற்றிக்கு என்ன பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் என்பதால் அவர் டேஸ்ட்டுக்கு செட் அமைப்பேன். கனி சமூகக் கருத்துள்ள படங்கள் எடுத்தாலும் அவருடனான படப்பிடிப்பு அனுபவம் டூர் அனுபவத்தை ஞாபகப்படுத்தும். அந்தவகையில் இதில் பாதகம் என்று எதுவுமில்லை. ஒரே இயக்குநருடன் தொடர்ந்து வேலை செய்வதை ஆரோக்யமாகவே பார்க்கிறேன்.”

“அடுத்து?”

“சூர்யா சார் நடிக்கும் ‘சூரரைப்போற்று’, சந்தானம் நடிக்கும் ‘டக்கால்டி’, கனியின் ‘நாடோடிகள் 2’, அஹமத்  இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படம் என்று வரிசையாக படங்கள் உள்ளன.”“கலை இயக்குநராக உங்கள் வேலையை எப்படி தீர்மானிக்கிறீர்கள்?”“இயக்குநரின் கற்பனைக்கு சப்போர்ட் பண்ணும் சப்போர்ட் சர்வீஸ்தான் கலை இயக்குநரின் பணி.  இதுதான் ஒரு ஆர்ட் டைரக்டரின் வேலை.

இயக்குநர்கள் கஷ்டப்பட்டு ‘கரு’ உண்டாக்குகிறார்கள். அவர்கள் யோசித்த விஷுவல்ஸைக் கொண்டுவரு வதுதான் ஆர்ட் டைரக்டர் வேலை.  நான் அந்தப் படத்தில் அப்படிப் பண்ணினேன், இந்தப் படத்தில் இப்படிப் பண்ணினேன் என்று என்னுடைய வித்தையை இறக்கக்கூடாது. எனக்கான இடம் அது கிடையாது. அதற்கு நான் இயக்குநராக இருக்கவேண்டும்.

கதைக்கு தேவையானதை யதார்த்தமாகக் கொடுக்க முயற்சி பண்ணணும். ‘ஆர்ட் டைர்க்டர் நல்லா பண்ணியிருக்கிறார்’ என்றால் அதைவிட அசிங்கம் எதுவுமில்லை. அப்படியென்றால் நான் கண்ணை உறுத்துகிற மாதிரி பண்ணியிருக்கிறேன் என்று அர்த்தம். சிம்பிளாக சொல்வதாக இருந்தால், சரியாகப் பண்ணவில்லை.”

“ஒரு கதைக்கு கலை இயக்குநர் பணி எப்படி முக்கியமாக பார்க்கப்படுகிறது?”

“அந்தக் காலத்தில் ‘கர்ணன்’, ‘சந்திரலேகா’ போன்ற படங்களில் கலை இயக்குநருடன் டிஸ்கஸ் பண்ணிய பிறகுதான் படப்பிடிப்புக்கே செல்லமுடியும்.  நடுவில் கலை இயக்குநருக்கான மரியாதை குறைந்தது.

எல்லாம் முடிந்து கடைசியில் கூப்பிட்டு ‘இந்த இடத்தில் ஜன்னல், கதவு வையுங்கள்’ என்பார்கள். முறையாகக் கதை சொல்லமாட்டார்கள். அன்றன்றுதான் கதை சொல்வார்கள்.  

அப்போது கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கும்.இப்போது மாற்றங்கள் வர ஆரம்பித்துவிட்டது. இப்போது முழு ஸ்கிரிப்ட் தருகிறார்கள். கதை சொல்கிறார்கள். எங்களிடம் சஜஷன் கேட்கிறார்கள். இந்த ஃப்ரீடம் ஆரோக்யமாக இருக்கிறது. இதை ஆர்ட் டைரக்டருக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன். ஸ்கிப்ரிட் கொடுக்கும்போது என்னுடைய எல்லா உதவியாளருக்கும் கதையை விளக்கிச் சொல்லிவிடுகிறேன்.

அவர்களும் கதையோடு டிராவல் பண்ணமுடிகிறது. அப்படி என்னுடைய டீம்ல மாதவன், கண்ணன், சீனு உட்பட நிறையப் பேர் இருக்கிறார்கள். சில சமயம் இயக்குநர்கள் என்னுடைய உதவியாளர்களை அனுப்பி வைத்தாலே போதும் என்கிறார்கள்.”

“ஸ்டூடியோக்கள் அடுக்குமாடிக் கட்டடங் களாகவும் மால்களாகவும் மாறிவிட்டதால் படத்தயாரிப்பு குறைந்துள்ளதா?”“இது சுழற்சி மாதிரி. சாதா பேன்ட், பெல்பாட்டம், பேக்கி பேன்ட்டுக்கு மாறி மறுபடியும் இப்போது சாதா பேன்ட்டுக்கு வந்துள்ளோம். அதுமாதிரி முன்பு செட்டிலே மட்டுமே படங்கள் உருவாகியது.  பாரதிராஜா வந்தபிறகு வெளிப்புறப் படப்பிடிப்புக்கு போனார்கள்.

பிறகு பெரிய நடிகர்கள் படம் பொதுவெளியில் எடுக்க முடியாததால் பாடல்களை செட் போட்டு எடுத்தார்கள். ‘பருத்திவீரன்’  வந்ததும் மீண்டும் கிராமத்துக்கு போனார்கள். இப்போது பொது இடங்கள் பிஸியாக இருக்கிறது. பர்மிஷன் கிடைப்பதில்லை. அதனால் மீண்டும் செட்டுக்குள் போய்விட்டார்கள்.

சமீப காலமாக சென்னையில் பல இடங்களில் படப்பிடிப்புத் தளங்கள் உருவாகியுள்ளது. சினிமா இப்போது பீக்கில் இருக்கிறது. நல்ல படங்கள் வருகின்றன. முதலீட்டுக்கு உத்தரவாதம் கிடைக்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.”

“தமிழர்களைக் கவரும் குறிப்பிட்ட அழகியல் அம்சம் என்ன?”

“ரசனை மாறிக்கிட்டே இருக்கும். ஒரு காலத்தில் பறந்து பறந்து போட்ட சண்டை,  ஃபாரீன் சாங்கை ரசித்தார்கள். இப்போது ரசிகர்கள் நுட்பமாக படம் பார்க்கிறார்கள். நல்லா இருந்தால் பாராட்டுகிறார்கள். இல்லை என்றால் இது சி.ஜி., இது செட் என்று சொல்லிவிடுகிறார்கள். அடுத்து தமிழ் ரசிகர்கள் கலவையான ரசனை உள்ளவர்கள். அழகு சுவரையும் ரசிப்பார்கள், அழுக்கு சுவரையும் ரசிப்பார்கள். கிராண்டியர் என்ற பெயரில் ரசிகர்களை ஏமாற்றமுடியாது.”

“கலை இயக்கம் என்பது?”

“மாடமாளிகை அமைப்பது மட்டுமே செட் கிடையாது. ஒவ்வொரு பிரேமிலும் கலை இயக்குநரின் பங்களிப்பு அவசியம். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் முதல் பாதியில் சிவப்பு வண்ணம் வராதளவுக்கு பார்த்துக் கொண்டேன். இரண்டாவது பாதியில் எந்த இடத்தில் பார்த்தாலும் சிவப்பு வண்ணம் இருக்கும்.

பேனாவின் நிறம் சிவப்பு, பேஸ்ட் மூடியின் நிறம் சிவப்பு என்று எங்கும் சிவப்பு மயமாக இருக்கும். பெரிய டிரம் செய்து இதுதான் ஆர்ட் டைரக்‌ஷன் என்று சொல்லத்தேவையில்லை. ஒரு இருட்டறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதும் கலை இயக்குநரின் கைவண்ணமே.”
“உங்க பர்சனல் பக்கம்?”

“சொந்த ஊர் திருவள்ளூர். அரசு கவின் கல்லூரியில் டிகிரி பண்ணினேன். அப்பா அம்புரோஸ் நடத்துநராக சில காலம் வேலை பார்த்துவிட்டு எளிய மக்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில வருடங்களுக்கு ஸ்கூல் நடத்தினார். அப்பா மிகச் சிறந்த ஓவியர்.

ஆனால் என்னுடைய தாத்தா கண்டிப்பானவர் என்பதால் அப்பாவுக்கு ஓவியராகும் பாக்யம் கிடைக்கவில்லை. நான் பெயிண்டிங் படிக்கிறேன் என்றதும் உடனே சேர்த்துவிட்டார். அம்மா கெத்சீ அரசு செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் ஆர்கிலாஸ் லயோலா வில் முதலாமாண்டு படிக்கிறார்.”

சுரேஷ்ராஜா