நான் ரஜினி ரசிகன்! ‘காப்பான்’ வில்லன் பெருமிதம்!



தமிழுக்கு ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு வில்லன் கிடைத்திருக்கிறார்.சிராக் ஜானி. ‘காப்பான்’ படத்தில் சூர்யாவுக்கு தண்ணி காட்டினாரே? அவரேதான்.
“தமிழ்ப் படவுலகில் ஒருவருக்கு ஒருவர் நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். தமிழர்கள் அன்புடன் பேசிப்பழகும் பண்பு கொண்டவர்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்” என்று தமிழர்கள் புகழ் பாடும் சிராக் ஜானியை சந்தித்தோம்.

“தமிழ்ப் படங்கள் பார்த்ததுண்டா?”

“நான் ரஜினி சாரின் ரசிகன். அவர் நடித்த படங்களை விரும்பிப் பார்ப்பேன். ‘காலா’, ‘பேட்ட’ படங்களை எல்லாம் ரிலீஸின்போதே பார்த்து ரசித்தேன்.”“தமிழுக்கு வந்தது எப்படி?”“நான் டிவி சீரியல்களிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகன். சூர்யா சார் நடித்த ‘அஞ்சான்’ படத்திலேயே நான் வந்துவிட்டேன். அதில் சின்ன வேடம் என்பதால், அவ்வளவாக அடையாளம் காணப்படவில்லை.

இப்போது ‘காப்பான்’ மூலமாக பிரபலமாகி இருக்கிறேன். ‘காப்பான்’ படத்தில் கதைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்துக்கு கே.வி.ஆனந்த் சார், நடிகரை தேடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு என் மேனேஜர் மூலமாக டைரக்டரைப் போய்ப் பார்த்தேன்.

என்னுடைய தோற்றம் அவருக்கு ஓக்கேதான் என்றாலும், ஒர்க்‌ஷாப் வைத்து விட்டுதான் முடிவு சொல்வேன் என்றார். அவர் சொன்ன மாதிரியெல்லாம் நடித்துக் காட்டியபிறகே என்னை தேர்வு செய்தார்.”

“சூர்யா?”

“தமிழின் முன்னணி நடிகர். அவருடைய அப்பாவும் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் என்பதெல்லாம் பின்னர்தான் எனக்குத் தெரியும். ஆனால், ரொம்பவும் சிம்பிளாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் நடந்துகொள்வார். சக மனிதர்களின் உணர்வுகளை உணர்ந்துக் கொண்டு பயணிப்பார். எனக்கு தமிழில் வசனம் சொல்ல கொஞ்சம் பிரச்சினை ஆனபோது, பதட்டமில்லாமல் சரளமாக பேசவைக்க உதவினார்.”“ரஜினி ரசிகர் என்று சொல்கிறீர்கள். ரஜினி யும் வில்லனாக நடித்துதான் ஹீரோவானார் என்பது தெரியுமா?”

“அவரைப் பற்றி இந்தியாவுக்கே தெரியும். எனக்குத் தெரியாதா? ‘காப்பான்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தலைவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரைச் சந்தித்துப் பேசும்போது, ‘தமிழ் சினிமாவுக்கு அழகான வில்லன் கிடைச்சிருக்கீங்க...’ என்றார். சினிமாத்துறையில் எப்படி நடந்துக்கணும், வாய்ப்புகளை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கணும்னு அனுபவ ஆலோசனைகளை சொன்னார்.

ரொம்ப ரொம்ப சிம்பிளாக இருக்கிறார் சூப்பர் ஸ்டார். அவருடைய உயரத்துக்கு அவர் எப்படி எப்படியெல்லாமோ இருக்கலாம். ஆனால், இப்போதுதான் திரையுலகில் நுழைந்தவர் மாதிரி ஆர்வத்தோடு பேசுகிறார். தலைவர்னா தலைவர்தான்!”

“ரஜினி புகழ் பாடுகிறீர்களே! அவரோட படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கா?”
“அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் அது என்னோட பாக்கியம். ரஜினி படத்துலே நடிக்கிறது என்பது கரும்பு தின்பதற்கு கூலியும் வாங்குவது மாதிரி டபுள் போனஸ் ஆச்சே!”

ஆர்.சந்திரசேகர்