வெளிநாடுகளில் நாறும் இந்திய கலப்பட உணவுகள்!



ஒருகாலத்தில் தேநீர் கடையில் குடிக்கும் டீயில் ‘புளிக் கொட்டையைக் கலக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு சர்வசாதாரணமாக பேசப்படும்.உண்மையா பொய்யா என்று தெரியாது. ஆனால், புளியமரத்தில் புளியம் பழத்தைப் பறித்து, அதிலிருந்து கொட்டையை எடுத்து காயவைத்து, அரைத்து அதை டீயில் கலப்பதாக ஒரு நம்பிக்கை இருந்தது.

இந்த நம்பிக்கையின் காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது. இன்றைய தேதியில் எல்லாவற்றுக்குமே ரெடிமேட் கலர்கள் கடையில் கிடைக்கின்றன. கலர்கள் மட்டும் அல்ல. உணவை நீண்ட காலம் தாக்குப்பிடிக்கக் கலக்கும் இரசாயனங்கள் (பிரிசர்வேடிவ்), மணமூட்டிகள், இன்னும் பிறவும் உணவுகளில் தாறுமாறாக கலக்கப்படுகின்றன. 
இவைதான் இந்தியாவில் விற்கப்படும் பலவித துரித உணவுகள், சமையல் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களில் கலக்கப்படுகின்றன. இச்சூழலில் அண்மையில் ஹாங்காங்கிலும், சிங்கப்பூரிலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருவகையான பாக்கெட் மசாலாப் பொருட்களுக்கு அங்கே தடைவிதித்திருப்பது இந்திய நுகர்வோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

என்ன நடக்கிறது உணவு உலகில்?

கடந்தவாரம் ஹங்காங், சிங்கப்பூர் நாடுகள் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் இரண்டு பிராண்டு உணவுப் பொட்டலங்களுக்கு தடை விதித்தது. அவை. ‘XXX’ பிராண்டின் கறி பவுடர், சாம்பார் மசாலா பவுடர் மற்றும் ‘YYY’ பிராண்டின் ஃபிஷ் கறி மசாலா பவுடர். இந்திய உணவுகளின் தரத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் (fSSAI). இந்த இருநாடுகளின் தடையை கணக்கில் கொண்டு இந்த ஆணையமும் இந்த உணவுகளைப் பற்றிய ஆய்வை முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில் ‘லோக்கல் சர்க்கிள்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பு இந்திய அளவில் எடுக்கப்பட்ட ஆய்வில் சுமார் 73 சதவீத இந்திய நுகர்வோருக்கு இந்த ஆணையம் மற்றும் அது தொடர்பான மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்புகளில் பெரிய நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. இது இந்தியாவில் கோலோச்சும் உணவுக் கலப்படத்தைப் பற்றிய பெரியதொரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இரு நுகர்வோர் ஆர்வலர்களை பிடித்து தமிழக நிலவரங்களைப் பற்றிக் கேட்டோம்.

‘‘இந்தியாவில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு இருப்பது மாதிரியே வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் உணவுகளுக்கும் ஒன்றிய அரசின் ஆணையத்திடம் சில விதிகள் இருக்கின்றன...’’ என்று பேசத் தொடங்கினார் சோமசுந்தரம்.‘‘முன்பு ஏற்றுமதியாகும் எல்லாப் பொருட்களையும் சோதனையிட்டு அனுப்பினர். 

ஆனால், இன்றைய தேதியில் சில சாம்பிள்களை மட்டும் ஆய்வு செய்து அனுமதிக்கிறார்கள். இதனால்தான் இதுபோன்ற குறைகளை வெளிநாட்டினர் உடனடியாகக் கண்டுபிடித்து விடுகின்றனர்.

கடையில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா, ஏலக்காய், இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், பொரித்த சிக்கன்கள்... என எல்லாவற்றிலுமே கலர் சேர்க்கப்படுகிறது. 

உதாரணமாக நம் வீட்டில் மிளகாயை அரைத்தால் செக்கச்செவேல் எனக் கலர் எல்லாம் வராது. ஆனால், கடையில் பாக்கெட்டில் வாங்கும் மிளகாய் இரத்த சிகப்பில் இருக்கும். அதேபோல்தான் மஞ்சள் தூளை நாம் வீட்டில் அரைத்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் எல்லாம் இருக்காது. ஆனால், கடையில் வாங்கும் பாக்கெட் மஞ்சள் தூள் பளீர் மஞ்சளில் இருக்கும்.

தனியாவை ஒரு விவசாய நிலத்தில் வாங்கி அரைத்தால் சாணி நிறத்தில் பச்சையாக இருக்கும். வீட்டில் அதையே அரைத்தால் பச்சை நிறமெல்லாம் வராது. ஆனால், கடையில் வாங்கும் தனியா பச்சையாக இருக்கும். பொதுவாக உணவுப் பொருட்களின் அறுவடை நம்ம ஊரில் மே மாத்துக்குள் முடிந்துவிடும். 

ஆனால், வருடம் முழுக்க இந்த உணவுப் பொருட்கள் நமக்குத் தேவையாக உள்ளது. இதனால் மே மாதம் வரை விளையும் உணவு தானியங்களை கோல்ட் ஸ்டோரேஜ் முறையில் சேமித்து வைத்து ஆண்டு முழுக்க அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அரைத்து விற்கிறார்கள்.

கோல்ட் ஸ்டோரேஜில் இருந்து உணவை வெளியில் எடுத்தாலே அது சீக்கிரமாக கலர் இழந்துவிடும். இந்த இழப்பை சரிக்கட்டுவதற்காக விற்பனையாளர்கள் கலர்களை சேர்க்கிறார்கள்...’’ என்று சொல்லும் சோமசுந்தரம் கலர்கள் பற்றியும் பேசினார்.‘‘மிளகாய் செக்கச்செவேலாக இருக்க சூடான் த்ரீ ( sudan three), தனியாவை பச்சை நிறமாக்க சல்ஃபர் புகைமூட்டம், உணவுகளை மஞ்சள் நிறத்துக்கு கொண்டுவர மெட்டானில் யெல்லோ (metanil yellow) போன்ற நிறமிகள் (கலர்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

கேசரி செய்ய ரவைதான் முக்கியம். எந்தவித கலரும் இல்லாமலேயே கேசரியைச் செய்யலாம். ஆனால், கேசரியை சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்துக்கு கொண்டு வருவதற்காக மஞ்சள் நிறமிகளை ஆரம்பத்தில் பயன்படுத்தினார்கள். இன்று கேசரி பவுடர் என்றே மஞ்சள், சிவப்பு மற்றும் பல இரசாயன நிறமிகளை கடைகளில் விற்கிறார்கள்.

பார்வைக்கு கவர்ச்சியாக இருக்க மட்டுமே உணவுகளுக்கு நிறமிகளை பயன்படுத்துகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு கலர் சேர்க்காத கேசரியை சாப்பிட்டால் சுவை மட்டுமல்ல நம் ஆரோக்கியமும் கெடாது...’’ என்று சோமசுந்தரம் முடிக்க, ‘கன்ஸ்யூமர் ஆக்‌ஷன் க்ரூப்’பின் நிர்வாகிகளில் ஒருவரான சரோஜா மேலும் இதுகுறித்து பேசினார்.

‘‘உணவுப் பொருட்களில் கலப்படத்தைக் களைய இரண்டு வகையான சட்டங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஒன்று ‘உணவுப் பாதுகாப்புச் சட்டம்’, அடுத்து ‘நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்’.
இதில் உணவுகளில் கலப்படம் செய்யும் நபர்களை கடுமையாக தண்டிக்க பல விதிகள் இருக்கின்றன. ஆனாலும் கலப்படம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...’’ என்று சொல்லும் சரோஜா என்ன வகையான உணவுகளில் பெரும்பாலும் கலப்படங்கள் நடைபெறுகின்றன என பட்டியலிட்டார்.

‘‘கோழி இறைச்சியில் ஆண்டிபயோட்டிக் இருப்பது பற்றி பலர் அறிந்திருக்கலாம். அதை தவிர்த்து பால் முதற்கொண்டு கடுகு வரை கலப்படம் இருக்கிறது. அரிசியில், கோதுமையில் எல்லாம் கல், தூசு, மண் கலப்பதை பலர் அறிந்திருக்கலாம். இது எடைக்காக கலப்பது. இதுவும் ஆபத்தானதுதான். இதைவிட ஆபத்தானது சில நிறமிகள் மற்றும் உணவை கெடாமல் பாதுகாக்கும் (பிரிசர்வேடிவ்) இரசாயனங்கள்.

உதாரணமாக கடுகில் ஒருவித ஆர்.ஜி மோன் (rg mone) என்ற விதை கலக்கப்படுகிறது. இது தோல் வியாதியைக் கொண்டுவரும். அடுத்து சமையல் எண்ணெய். இதில் மினரல் ஆயிலைக் கலக்கிறார்கள். இது புற்றுநோயைக் கொண்டுவரும். மிளகாயில் சாய நிறங்களைக் கலக்கிறார்கள். மஞ்சள் தூளில் ‘லெட் க்ரோமேட்’ (Lead Chromate) எனும் ஒரு வகை ஈயத்தை கலக்கிறார்கள். இது ஒருவகை பிரிசர்வேடிவ். இது இரத்தசோகை, மூளை பாதிப்பு மற்றும் குறைப் பிரசவத்தை ஏற்படுத்தும்.

அதேபோல மிளகில் பப்பாளி விதையைக் கலப்பார்கள். இது எடைக்காக கலப்பது. இனிப்பு வகைகளிலும் நிறமிகளை பயன்படுத்துகிறார்கள். இந்தக் கலப்படங்களை இந்திய அரசின் கட்டுப்பாட்டுத் துறைகளும் மாநில அரசின் உணவுக் கட்டுபாட்டுத் துறையும் வேட்டையாடி களைந்தாலும் இந்த உணவு மோசடி நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் போகிறது...’’ என்கிறார் சரோஜா.

ஹாங்காங், சிங்கப்பூர் தடை செய்த மசாலாப் பொடிகளில் ‘எத்திலின் ஆக்சைட்’ (ethylene oxide) என்ற கான்சரை உருவாக்கும் பூச்சிகொல்லி இரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த கலப்பட உணவுகள் பிரச்னை இந்திய நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டி.ரஞ்சித்