Must Watch



த ஃபேமிலி ஸ்டார்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தெலுங்குப் படம் , ‘த ஃபேமிலி ஸ்டார்’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், கோவர்த்தன். ஆர்க்கிடெக்ட் வேலையைச் செய்து வருகிறான். பாட்டி, இரண்டு அண்ணன்கள், அண்ணிகள், அவர்களின் குழந்தைகள் என பெரிய குடும்பமாக வாழ்ந்து வருகிறான்.

அண்ணன்கள் இருவரும் வெவ்வேறு பிரச்னைகளில் இருப்பதால் கோவர்த்தன்தான் குடும்பத்தைக் கவனித்து வருகிறான். அவனுக்கு குடும்பம்தான் ரொம்பவே முக்கியம். குடும்பச் செலவுகள் பெரிதாக இருப்பதால் கஞ்சனாக இருக்கிறான். இந்நிலையில் அவனது வீட்டின் மாடியில் இருக்கும் அறைக்கு இந்து என்ற கல்லூரி மாணவி குடியிருக்க வருகிறாள். கோவர்த்தனின் குடும்பத்துடன் நெருக்கமாகிறாள் இந்து. கோவர்த்தனுக்கும், இந்துவுக்கும் இடையில் காதல் மலர்கிறது.

இச்சூழலில் இந்துவின் ஆய்வறிக்கையால் கோவர்த்தனுக்கும், அவளுக்கும் இடையில் பிரச்னை வெடிக்கிறது. உண்மையில் இந்து யார்? எதற்காக கோவர்த்தனின் வீட்டுக்கு வாடகைக்கு வந்தாள்? இருவருக்கும் இடையிலான பிரச்னைக்குக் காரணம் என்ன? இருவரும் இணைந்தார்களா... போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் பரசுராம்.

ஹவ் டூ டேட் பில்லி வால்ஷ்

ஒரு ஜாலியான பதின்பருவத்து ரொமாண்டிக் காமெடி படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி இருக்கிறது, ‘ஹவ் டூ டேட் பில்லி வால்ஷ்’ எனும் ஆங்கிலப்படம். ஆர்ச்சியும், அமீலியாவும் குழந்தைப்பருவத்தில் இருந்தே நண்பர்கள். 

இருவரும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். எப்போதுமே ஒன்றாகத்தான் இருப்பார்கள். அமீலியாவிடம் பாலியல் சார்ந்த விஷயங்களைக் கூட கூச்சமில்லாமல் பகிர்ந்து கொள்வான் ஆர்ச்சி. ஆனால், தன் காதலை அமீலியாவிடம் அவனால் சொல்ல முடிவதில்லை. காதலைச் சொல்லப் போகும்போது எல்லாம் ஏதோ ஒரு தடை ஏற்பட்டு சொல்ல வந்ததையே மாற்றிவிடுகிறான்.

இந்நிலையில் அவர்களின் பள்ளிக்கு புதிதாக பில்லி வால்ஷ் என்ற மாணவன் வருகிறான். துடிப்பான பில்லியின் மீது எல்லா மாணவிகளுக்கும் காதல். அமீலியாவும் பில்லியின் மீது காதல் வயப்படுகிறாள். 

அமீலியாவும் பில்லியும் இணைந்தார்களா அல்லது ஆர்ச்சியின் காதல் வென்றதா என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறது திரைக்கதை. இன்றைய சூழலில் தமிழில் ரீமேக் செய்ய நல்ல சாய்ஸ் இந்தப் படம். பதின்பருவத்து விஷயங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இப்படத்தின் இயக்குநர் அலெக்ஸ் பிள்ளை.

தில்லு ஸ்கொயர்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிய தெலுங்குப் படம், ‘தில்லு ஸ்கொயர்’. ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ‘டிஜே தில்லு’வின் அடுத்த பாகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தில்லு ஈவண்ட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறான் தில்லு. திருமண நிகழ்வுகள் மற்றும் பார்ட்டிகளுக்கு டிஜேகளை அமைத்துத் தருவது அவனது வேலை.  

பிளேபாயாக வலம் வருகிறான் தில்லு. ஒரு பார்ட்டியில் லில்லியைச் சந்திக்கிறான். அவளுடன் பேசி தன்வசப்படுத்துகிறான். அன்றிரவு இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் தில்லுவிடம் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி விடுகிறாள் லில்லி. ஏமாந்து போகிறான் தில்லு. லில்லியைத் தேடி அலைகிறான். 

லில்லியைச் சந்திக்கிறான். தில்லுவின் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாகச் சொல்கிறாள் லில்லி. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர்.தில்லுவின் பிறந்த நாள் அன்று ஒரு அபார்ட்மெண்ட்டுக்கு அவனை அழைத்து வருகிறாள் லில்லி. அங்கே வந்ததும் அதிர்ச்சியடைகிறான் தில்லு. சூடுபிடிக்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் மாலிக் ராம்.  

லாபதா லேடீஸ்

இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்திப்படம், ‘லாபதா லேடீஸ்’. சர்வதேச அளவில் பாராட்டுகளை அள்ளி வரும் இந்தப் படம், ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. மணப்பெண் ஃபூல் குமாரியுடன் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கிறான் தீபக். அவர்களின் இருக்கைக்கு அருகில் இன்னொரு ஜோடியும் பயணிக்கின்றனர். இரண்டு மணப்பெண்களும் ஒரே வண்ணத்தில்  முக்காடு போட்டிருக்கின்றனர்.  

தீபக், குமாரியின் ஊர் வருகிறது. தவறுதலாக இன்னொரு மணப்பெண்ணுடன் ஸ்டேஷனில் இறங்குகிறான் தீபக்.  ஃபூல் குமாரியோ ரயில் நிலையத்தில் கணவனைக் காணாமல் தவித்துக்கொண்டிருக்கிறாள். தீபக்குடன் வீட்டுக்கு வந்த பெண்ணோ இயல்பாக இல்லாமல் ஏதோதோ செயல்களில் ஈடுபடுகிறாள். ஃபூல் குமாரி தீபக்குடனும், தீபக்குடன் வந்த பெண், அவளுடைய கணவனுடனும் சேர்ந்தார்களா என்பதை நகைச்சுவையுடன் சொல்லிச் செல்கிறது திரைக்கதை.

ஆள் மாறாட்டக் கதையை எடுத்துக்கொண்டு நாட்டில் பெண்களின் நிலையை அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். மொழியைத் தாண்டி எல்லோரும் ரசிக்கக்கூடிய ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கிரண் ராவ். பாலிவுட் நடிகர் அமீர் கானின் முன்னாள் மனைவி இவர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் அமீர் கானும் ஒருவர்.

தொகுப்பு:த.சக்திவேல்