இதுவரை 4 முறை சிவகார்த்திகேயன் படம் பார்த்துட்டார்... அவர் ஹேப்பியோ ஹேப்பி!



தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ சிவகார்த்திகேயன். இவரின் படங்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு இவர் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கும் உண்டு. அந்த வகையில் ‘கனா’, ‘டாக்டர்’, ‘டான்’ என இவர் தயாரித்த படங்கள் ஹிட்டடித்தன. 
அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் பெருமையுடன் வழங்கும் படம் ‘குரங்கு பெடல்’. கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இவர் ‘மதுபான கடை’, ‘வட்டம்’  போன்ற படங்களை இயக்கியவர். படம் வெளியாகும் முன்பே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் இயக்குநர் கமலக்கண்ணனிடம் பேசினோம்.

முதல் பார்வை இம்ப்ரஸ் பண்ணுதே?

தேங்க்ஸ். ராசி அழகப்பன் சார் எழுதிய ‘சைக்கிள்’ சிறுகதைதான் ‘குரங்கு பெடல்’. இந்தக் கதையை 15 வருஷங்களுக்கு முன்பே படிச்சிருக்கேன். பாலுமகேந்திரா சாரின் ‘கதை நேரம்’ பார்த்தபிறகுதான் சிறுகதையை படமாக்கணும் என்ற இன்ஸ்பிரேஷன் வந்துச்சு.ஆரம்பத்துல பத்து, பதினைஞ்சு சிறுகதைகளை டெலி ஃபிலிம்மா பண்ணணும்னு யோச்சிச்சு வெச்சிருந்தேன். அது நடக்காத நிலையில் சினிமாவா பண்ணணும்னு நினைச்சேன்.

குழந்தைகளை வெச்சு பண்ணுவதற்கு பெரிய பிராசஸ் தேவைப்பட்டதால அதை விட்டுட்டு ‘மதுபான கடை’ பண்ணினேன்.சைக்கிள் ஓட்ட ஆசைப்படும் சிறுவனின் ஆசை, ஆர்வம்தான் ‘சைக்கிள்’ சிறுகதை. 

அதுல அப்பா, மகன் இருவரிடையே இருக்கும் பாசப் பிணைப்பை படிக்கும்போதே என்னுடைய பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது.‘குரங்குபெடல்’ 80களில் நடக்கும் கதை. காவிரிக்கரை ஓரமாக இருக்கும் கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் சைக்கிள் ஓட்ட ஆசைப்படுகிறான். சைக்கிள் கத்துக்கொடுக்க ஆர்வமில்லாமல் இருக்கிறார் அவனுடைய அப்பா.

அவ்விருவருக்குமிடையே நடக்கும் எமோஷன், பந்த பாசம், சிறுவர் உலகத்தின் நட்பு என எல்லாம் கலந்த வாழ்வியலை முடிந்தளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.

காளிவெங்கட்?இந்தக் கதைக்கு காளிவெங்கட் மட்டுமே பொருத்தமா இருப்பார் என்பதால் அவரிடம் கதை சொன்னேன். அவருக்கும் அவருடைய அப்பாவுக்குமிடையே ஒரு சைக்கிள் கதை இருந்ததால், லைன் சொன்னதுமே படத்தோட கனெக்ட்டாகிட்டார். அது கதையை எமோஷனலா கொண்டு போவதற்கு யூஸாச்சு. 

அவர் வர்றதுக்கு முன்னாடியே பசங்களை வெச்சு ஷூட் போயிருந்தோம். பசங்க எல்லோரும் செல்போன் காலத்தில் வாழ்கிறவர்கள். அவர்களுக்கு 80களின் காலம் என்பது சுத்தமா தெரியாது. அவங்களை டிரைன் பண்ணி கதைக்குள் கொண்டுவந்தாலும் பசங்ககிட்ட விளையாட்டுத்தனம் எட்டிப்பார்க்கும்.

காளி வெங்கட் ஷூட்டிங்ல ஜாயின் பண்ணபிறகுதான் டீமுக்கே புது எனர்ஜி கிடைச்சு படப்பிடிப்பு வேகம் எடுக்க ஆரம்பிச்சது.மகன் கேரக்டர்ல சந்தோஷ் வர்றார். நண்பர்களாக ரத்தீஷ், சாய் கணேஷ், செல்வம், ராகவன் நடித்துள்ளார்கள். பசங்களைத் தேடி தமிழ்நாடு முழுக்க டிராவல் பண்ணினோம். இது சம்மர்ல நடக்கும் கதை என்பதால பசங்க கொஞ்சம் பலசாலியா இருக்கிற மாதிரி தேடினோம். டான்ஸ் அகாடமி, சிலம்பம், கராத்தே பள்ளி என பல இடங்களில் பசங்களைத் தேடினோம்.

நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ஆடிஷன் பண்ணி அதிலிருந்து 5 மாணவர்களை செலக்ட் பண்ணி நடிக்க வெச்சிருக்கோம். அவர்களுக்கு பயிற்சி கொடுக்க 6 மாதங்கள் எடுத்துக்கிட்டோம். பிறகுதான் ஷூட்டிங்.குணச்சித்திர வேடங்களில் ‘நக்கலைட்ஸ்’ பிரசன்னா, ஜென்சன், செல்லா, சாவித்ரி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

பசங்களுக்கு ஒர்க் ஷாப் நடத்தியதால் படப்பிடிப்பு ஈஸியா இருந்துச்சு. பசங்க அனைவரும் சின்சியரா இருந்தாலும் அவங்களுடைய எனர்ஜி லெவல் அதிகமா இருக்கும். அவங்களை கன்ட்ரோல் பண்ணுவது சுலபம் அல்ல. 

கொஞ்சம் செல்லம் கொடுத்தா நமக்கே உத்தரவு போடுவாங்க.பசங்க எல்லோருக்கும் கதை தெரியும் என்பதால் எல்லோருக்கும் படத்துல அவங்களுடைய பங்கு என்ன என்று தெரிஞ்சு வெச்சிருந்தாங்க. டயலாக், காட்சி என எல்லாத்தையும் ஞாபகம்  வெச்சிருந்ததால் பொறாமைப்படாம, ஒற்றுமையாநடிச்சாங்க.

‘மதுபான கடை’யில் ஒர்க் பண்ணிய சுமி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதுல எப்படி சப்போர்ட் பண்ணினாரோ அதே மாதிரி சப்போர்ட் இந்தப் படத்துக்கும் பன்ணினார். காவேரி ஆறு, மலை என கதை நடக்கும் இடங்களை மிக அழகா காண்பிக்க அதிகம் மெனக்கெட்டார்.ஜிப்ரான் சார் மியூசிக். 

படம் முடிஞ்சதும் இயக்குநர் பிரம்மாவிடம் காட்டினேன். அவர் ஜிப்ரான் சாரை பார்க்கச் சொல்லி அனுப்பி வெச்சார். அவரிடம் எடிட்டட் வெர்ஷன் காட்டினேன். படம் பார்த்துட்டு ‘நான் பண்றேன்’னு சொன்னதும் ஷாக் ஆயிட்டேன். ஏனெனில், அவர் கமிட் பண்ணுவார்னு எதிர்பார்க்கல. ஓப்பனாவே அவரிடம், ‘சார், எங்களுடைய பட்ஜெட்டை விட உங்க சம்பளம் அதிகமா இருக்கும்னு எனக்கு தெரியும்’னு சொன்னேன்.

‘நான் உங்ககிட்ட சம்பளத்தைப் பத்தி பேசவே இல்லையே’ன்னு டியூன் போட ஆரம்பிச்சார். படத்துல 2 பாட்டு இருக்குன்னு சொன்னேன். அவர், 3 பாட்டு இருக்குன்னு சொல்லி 3 பாட்டு கொடுத்தார். பின்னணி இசையும் 80 காலக்கட்டத்துக்கே அழைத்துச் செல்லும்படியா நவீன இசையை ரீகிரியேட் பண்ணிக்கொடுத்தார். அவருடைய இசை படத்துக்கு பெரிய பலம்.
பீரியட் படம் என்பதால செல்போன் டவர், பிளாஸ்டிக் கவர், மாஸ்க் இது இல்லாம எடுப்பது சிரமமா இருந்துச்சு.

அதனாலேயே ஷூட்டிங் நடக்கும்போது பிளாஸ்டிக் கவர், மாஸ்க் பொறுக்குவதுதான் முதல் வேலையா இருக்கும். அதையும் மீறி சில ஃபிரேம்களில் மாஸ்க், பிளாஸ்டிக் கவர் இருக்கும் . அதெல்லாத்தையும் சிஜியில் அழிப்பது பெரிய வேலையா இருந்துச்சு. அதுக்கு பெரிய பட்ஜெட் செலவாச்சு.‘மதுபான கடை’ தயாரிச்ச சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமி பாஸ்கரன் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார்கள்.

சிவகார்த்திகேயன் என்ன சொன்னார்?

இப்போ தமிழ் சினிமாவுல குழந்தைகளுடன் அதிகம் கனெக்ட் ஆகக்கூடிய ஹீரோவா இருக்கிறார் சிவகார்த்திகேயன் சார். படம் பார்த்ததும் அவருக்கு ரொம்ப பிடிச்சது. படத்துக்கு பெரிய வரவேற்பு, எதிர்பார்ப்பு ஏற்பட காரணம் அவர்தான்.என்னுடைய முதல் படம் ‘மதுபான கடை’ விமர்சன ரீதியா பேசப்பட்டது. ஆனா, தியேட்டருக்கு வரும்போது வரவேற்பு குறைவா இருந்துச்சு. இந்தப் படத்தை ரிலீசுக்கு முன்பே பேச ஆரம்பிச்சுட்டாங்க.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை பிரசன்ட் பண்ணுவதை நல்ல முன்னுதாரணமா பார்க்கிறேன். ஏனெனில், மற்ற ஹீரோக்களும் பல சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட முன்வருவதற்கு இது ஒரு தொடக்கமா இருக்கும்னு நினைக்கிறேன்.சார் இதுவரை 4 முறை படம் பார்த்துவிட்டார். பெரிய ஸ்டார் என்பதைத் தாண்டி, ரசிகன் என்ற பார்வையில் படத்தை சிலாகிச்சுப் பேசியது சந்தோஷமா இருந்துச்சு.

எஸ்.ராஜா