ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் டான்ஸ் மாஸ்டர்!



தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநர் தினேஷ். விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களையும் நடன இயக்குநராக ஆட வைத்த பெருமை இவருக்கு உண்டு. விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ (‘நான் ரெடிதான் வரவா...’) பாடலுக்கு இவர்தான் நடனம்.தற்போது ‘நின்னு விளையாடு’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் செளந்தரராஜன் இயக்கியுள்ளார். இவர் பாக்யராஜ் மாணவர். பட வெளியீட்டு வேலையில் மும்முரமாக இருந்த செளந்தரராஜனிடம் பேசினோம்.

ஜல்லிக்கட்டு கதையா?

இது ஜல்லிக் கட்டு காளையை அடக்குபவர்களின் கதை கிடையாது. ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமா வெச்சு எடுக்கப்பட்ட படம். மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளையை பலதரப்பட்ட குடும்பங்கள் வளர்க்கிறார்கள். அந்த மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் இல்லாத குடும்பங்களே இருக்க முடியாது. பல தலைமுறைகளாக  ஒவ்வொரு வீட்டிலும் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கிறார்கள்.

இந்தக் கதைக்காக சிவகங்கை மாவட்டத்துல கள ஆய்வு செய்தேன். அப்போது நான் கவனிச்சவரை காளை வளர்க்கும் குடும்பங்கள் தங்கள் நலனைவிட காளைகளின் நலனைத்தான் முக்கியமாகப் பார்க்கிறார்கள். அவர்களின் தேவைகளை சுருக்கிக் கொண்டு காளைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறவர்களும் இருக்கிறார்கள். போட்டியில் வெற்றியடைவதே அவர்களின் லட்சியமாக உள்ளது.

அங்குள்ள இளைஞர்களும் காதலா, காளையா என்று வரும்போது காளைக்கு முன்னுரிமை கொடுப்பதையும் கவனிக்க முடிஞ்சது.அதுமட்டுமல்ல, பாரம்பர்யமான விளையாட்டையும் காப்பாத்தணும், காளை வழியாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கணும் என்ற லட்சியத்துடன் வாழ்கிறார்கள்.

அப்படி ஓர் ஏழைக் குடும்பம் ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கிறது. காளையை களத்துக்கு கொண்டு செல்லவும், அதை வெற்றி பெற வைக்கவும் காளை வளர்ப்பில் என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்கிறார்கள், அதில் என்ன மாதிரியான பிரச்னைகளை சந்திக்கிறார்கள், அது அந்தக் குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதை விறுவிறு திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.

டான்ஸ் மாஸ்டர் எப்படி மாடு பிடி வீரராக மாறினார்?

‘ஒரு குப்ைப கதை’யில் தினேஷ் மாஸ்டர் மிக யதார்த்தமா நடிச்சிருந்தார். இது காளையை வளர்க்கும் ஒரு குடும்பத்தின் வாழ்வியல் கதை. அந்த வகையில் கதைக்களத்துக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமா இருந்தார்.கதை எழுதி முடிச்சதும் ஒவ்வொரு காட்சியும் அவருக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருந்துச்சு.நான் உதவி இயக்குநராக வேலை பார்த்த படங்களில் அவரும் வேலை பார்த்துள்ளார். நட்பின் அடிப்படையில் ஒருநாள் காலை அவருக்கு போன் பண்ணி கதை சொன்னேன். அவருக்கு கதை ரொம்ப பிடிச்சிருந்ததால உடனே ஓகே சொல்லிட்டார்.

சிவகங்கை மாவட்டத்துல 35 நாள் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிச்சோம். படம் கமிட்டான நாளிலிருந்து ரிலீஸ் வரை பிரமாதமான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
‘என்னுடைய சினிமா வாழ்க்கையில் 10 நாட்களுக்கு மேல் அவுட்டோர் படப்பிடிப்புல இருந்தது இல்ல. இதுதான் முதல் முறை’ன்னு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தப் படத்துக்காக முன்னணி ஹீரோக்களின் பல பட வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தார்.

ஜல்லிக்கட்டு காளையை அவ்வளவு எளிதா யாரும் நெருங்க முடியாது. காளை மாடுகளுக்கு மனிதர்களின் சைக்காலஜி தெரியும். நம்முடைய நோக்கம் நல்லதா, கெட்டதா என்று சீக்கிரத்துல கண்டுபிடிச்சுடும்.நம்முடைய நடவடிக்கைகளிலிருந்தே நமக்கான ரெஸ்பான்ஸை கொடுத்துவிடும். தினேஷ் மாஸ்டர் காளையின் சொந்தக்காரர் மாதிரி காளையைப் பராமரிக்க ஆரம்பிச்சதால காளை மாடும் அவருடன் பாசமா பழக ஆரம்பிச்சது. படத்துல முக்கிய கதாபாத்திரம் எனுமளவுக்கு காளையும் இடம் பிடிச்சிருக்கும்.

படம் முடியும் வரை காளை அவர் கன்ட்ரோலில் இருந்ததைப் பார்த்து காளையின் சொந்தக்காரருக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. க்ளைமாக்ஸ் காட்சியை 8 நிமிஷத்துக்கு சிங்கிள் ஷாட்டா எடுத்தோம். அந்தக் காட்சியில் காளைக்கு கயிறு கட்டாமதான் பயன்படுத்தினோம். காளையால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை. காரணம், தினேஷ் மாஸ்டர் கன்ட்ரோலில் காளை இருந்துச்சு. இந்தப் படம் அவருக்கு மிக முக்கியமான படமா இருக்கும்.

நாயகியா நந்தனா ஆனந்த் வர்றார். மலையாளத்தில் சில பட ங்கள் பண்ணியவர். மனசுல நிக்குமளவுக்கு ஹோம்லி கேரக்டர். சிறப்பா பண்ணினார். தமிழ் கத்துக்கிட்டு படப்பிடிப்புல கலந்துக்கிட்டார். முக்கிய வேடத்துல வர்ற ‘பசங்க’ சிவகுமார், பழ.கருப்பையா, தீபா சங்கர் ஆகியோருக்கு அழுத்தமான வேடங்கள்.ஒளிப்பதிவு பிச்சுமணி. இசை சத்ய தேவ் உதய சங்கர். நான்கு பாடல்கள். எல்லாமே கதையோடு கலந்திருக்கும். தயாரிப்பு கார்த்திக்.

நாங்க படப்பிடிப்பு நடத்திய சிவகங்கை சுற்றுப்புற இடங்களில் உள்ள எல்லா வீடுகளிலும் காளை இருக்கிறது. அவங்க எல்லாருக்கும் இந்தக் கதை தெரியும். அவங்களுடைய வாழ்வியலை மக்கள் மத்தியில் கொண்டு போவதில் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஏனெனில், காளை இல்லாத வாழ்க்கையை அவர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. காளை அவர்களுடைய வாழ்க்கை மட்டுமல்ல, அதுக்கும் மேல!.

எஸ்.ராஜா