அதிக கூலிங்... ஆபத்து...



ஏசி கவனம்... எச்சரிக்கும் மருத்துவர்...

தமிழகத்தில் வெப்பம் அனலாய் தகிக்கிறது. இன்னும் நான்கு நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என ஒவ்வொரு நாளும் சொல்லப்படும் செய்திகளே பயத்தை ஏற்படுத்துகின்றன. இதிலிருந்து தப்பிக்க ஏசியைத் தவிர வேறு வழியே இல்லை மக்களுக்கு.ஆனால், ஏசியை ரொம்ப குளிராக வைப்பது தற்போது புதிய பிரச்னைக்கு வழிவகுத்திருக்கிறது. அதிக கூலிங் உடலில் பல்வேறு நோய்களை தோற்றுவிக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

சமீபத்தில் ஒன்றிய மின்துறை அமைச்சகம்கூட பொது நலம் கருதி ஏசி பயன்படுத்தும் மக்களுக்காக அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதில், ஏசியைப் பயன்படுத்துவோர் 26 பிளஸ் டிகிரியில் பராமரிப்பது சிறந்தது என்றும், இல்லையென்றால் உடலில் ஹைபோதெர்மியா, ஆர்த்ரிடிஸ் உள்ளிட்ட நோய்கள் வரலாம் என்றும் தெரிவித்துள்ளது.மேலும் உடல்நலம் மட்டுமில்லாமல் குடும்பத்தின் மின்கட்டணமும் சிக்கனமாகும் என்றும், அதனால் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, ஒரு வீட்டில் 26 பிளஸ் டிகிரியில் ஏசியை ஓடவிடும்போது ஒருநாள் இரவில் 5 யூனிட் வரை மின்சாரம் சேமிக்கப்பட்டால் 10 லட்சம் வீடுகள் இதேபோல் செய்யும்போது 50 லட்சம் யூனிட்கள் ஒரு நாளில் மிச்சமாகும் என்கிறது அரசின் அந்த அறிவுரை. ஆனால், பலரும் வீடுகளில் 16, 18, 20 டிகிரிகளிலேயே ஏசியை மெயின்டெய்ன் செய்கின்றனர். வீடுகள் மட்டுமல்ல. பல அலுவலகங்களிலும் கூட குளிர் போதவில்லை என 21 டிகிரி வரை ஏசியின் குளிரை வைக்கின்றனர்.

இந்நிலையில் ஏசியின் அதிகக் குளிரால் ஏற்படும் விளைவுகள், ஹைபோதெர்மியா உள்ளிட்ட நோய்கள் குறித்து சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் எம்.வி.சுரேஷ்குமாரிடம் பேசினோம்.‘‘இப்ப காலநிலை மாற்றம், உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திட்டு வருது. இதனால் வெப்பம் அதிகரிக்குது. இந்த வெயிலின் கொடுமையால் எல்லா வீடுகள்லயும் ஏசி வாங்குறாங்க. ஆனா, அதைச் சரியாக பராமரிக்கிறதில்ல.

பொதுவாக வீடுகள்ல 22 டூ 25 டிகிரி வரை ஏசியின் குளிரை வைக்கலாம். 21 டிகிரி அல்லது அதுக்குக் கீழே போகும்போது ஹைபோதெர்மியா வந்திடும்.நம் உடலின் வெப்பநிலை கீழே போகும் நிலையின் பெயரே ஹைபோதெர்மியா. அதாவது நம் உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். ஏசியின் குளிருக்காக 20 டிகிரி கீழே போகும்போது நம் உடல் வெப்பநிலையும் குறையும். வெப்பநிலை குறையக் குறைய ஹைபோதெர்மியா வந்திடும்.

அதாவது ஏசியின் குளிரால் தசையிலிருந்து வெப்பம் வெளியேறும். அப்ப நம் உடல் அந்தக் குளிரை சமமாக்க முயற்சி செய்யும். இந்த மெக்கானிசம் இருக்கிறவரை உடல்ல பாதிப்பு வராது.

குளிரை அதிகப்படுத்தும்போது இந்த மெக்கானிசம் வேலை செய்யாது. இதுவே ஹைபோதெர்மியா நிலை. 

அப்ப உடலும், மூளையும் நமக்கு உதவாமல் போயிடும். அப்புறம், உடல் உள்ளே குளிரத் தொடங்கிடுச்சுனா ரத்த ஓட்டத்துல பிரச்னை வரும். ரத்த அழுத்தத்திலும், பல்ஸிலும் மாற்றங்கள் உண்டாகும். புற ரத்த ஓட்டம் எல்லாம் குறைஞ்சிடும். நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கை மற்றும் பாதங்களுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதனால், சுருக்கென கை மற்றும் பாதங்கள்ல குத்து வலி ஏற்படும்.

அப்புறம், மூளைக்கு போகிற இரத்த ஓட்டமும் குறையும். இதனால், குழந்தைகளுக்கு வலிப்பு வரவும் வாய்ப்பு இருக்கு. பச்சிளம் குழந்தைகளை அந்த ஏசியின் காற்று நேரடியாக படும்படி படுக்க வைக்கக்கூடாது.  அப்புறம், வீடுகள்ல இந்த மாதிரி குறைந்த வெப்பநிலையில் ஏசியை வைக்கும்போது பச்சிளம் குழந்தைகள், வயசானவங்க மட்டுமல்ல தைராய்டு நோய், இதயநோய், சர்க்கரை நோய் உள்ளவங்களாலும் அதிகக் குளிரைத் தாங்கமுடியாது.

ஏற்கனவே இவங்களுக்கு நரம்புகள் கொஞ்சம் தளர்வாகி இருக்கும். நம் மூளையில் தெர்மல் ரெகுலேஷன் சென்டர்னு இருக்கு. இதுல மாற்றம் ஏற்படும். அந்நேரம் நம்மால் குளிரைத் தாங்கமுடியாது. அப்புறம், இன்னைக்கு சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரை மனஅழுத்தப் பிரச்னை இருக்கு.மனரீதியாக ஏதோ சில காரணங்களால் மாத்திரைகள் எடுத்துக்கிறாங்க. இந்த ஆன்டி டிப்ரஷன் மாத்திரைகள் எடுத்துக்கிறவங்க ஏசியை 20 டிகிரி கீழே வச்சிட்டு தூங்கினால் பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

அடுத்ததாக ஏசியை பராமரிக்கணும். 20 நாட்களுக்கு ஒருமுறை அதிலுள்ள தூசிகளை துடைக்கணும். இந்த தூசிகளுடன் ஏசி ஓடும்போது அலர்ஜிகளாலும் நோய்கள் வரும். இதனால் ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் மூச்சுவிட ரொம்ப சிரமப்படுவாங்க...’’ என்றவர், தொடர்ந்து பேசினார்.‘‘ஏசியின் வெப்பநிலையை குறைக்கும்போது அது அந்த  சுற்றுச்சூழலின் ஈரப்பதத்தைக் குறைச்சிடும். அப்ப நம்ம தோல்ல உள்ள வேர்வையை உறிஞ்சிடும்.

இதனால், குளிர்ல படுத்து உறங்குறவங்களுக்கு அவங்கள அறியாமல் நீரிழப்பு ஏற்படும். அப்ப தோல் உலர்ந்து அரிப்பு ஏற்படும். இந்த நீரிழப்பால் மூளையில் ஒரு சுறுக்கு விழுந்திடும். அதனால் 20 டிகிரிக்கு கீழ் வைச்சு படுக்கிறவர்கள் காலையில் எழும்போது சிறிய மனகுழப்பத்தில் எழுந்திருப்பாங்க. தலைவலியும் அதிகம் இருக்கும். எந்த விஷயத்திலும் கவனம் வராது. இதுவே ரொம்ப நாட்கள் நீடித்தால் மெமரி லாஸ் ஏற்படலாம். ஐடியில் வேலை செய்கிறவர்களுக்கு அவங்கள அறியாமல் ஒரு சோர்வு இருக்கும்.

ஒருநாள் வேலை செய்தாலே ரொம்ப மனஅழுத்தத்திற்கு ஆளாகறாங்க. இந்த மனச்சோர்வு, உடல்சோர்வு எல்லாம் ஏசியின் வெப்பநிலையை குறைப்பதனால் வருவது.உடலுக்குப் பாதிப்பு வராமல் ஒரு வசதியான வெப்பநிலையை வச்சுக்கணும். 24 டூ 26 ரொம்ப சிறந்தது. இந்த டிகிரியில் ஏசியை வச்சிட்டு இரண்டிலோ அல்லது மூன்றிலோ ஃபேன் ஓடுகிற
மாதிரி செய்திட்டால் போதும். உடலும், மனதும் ஆரோக்கியமாக இருக்கும்...’’ என்றார் டாக்டர் எம்.வி.சுரேஷ்குமார்.

கோடைக்காலத்தில் ஏசியை எப்படி பராமரிக்க வேண்டும்?

இதுகுறித்து சென்னை ஐஸ்பெர்க் ஏசி சர்வீஸ் நிறுவனத்தில் பிசினஸ் மேனேஜராக இருக்கும் பிரவீன்குமாரிடம் பேசினோம். ‘‘வாஷிங்மிஷின், ஃபிரிட்ஜ் மாதிரி ஏசி கிடையாது. அந்தப் பொருட்களை எப்பவாவது ரிப்பேர்னு வந்தால் அவற்றை சர்வீஸ் பண்ணலாம். ஆனா, ஏசி அப்படியில்ல. கட்டாயம் மூன்று மாசத்திற்கு ஒருமுறை சர்வீஸ் செய்யணும். அப்பதான் ஏசி நீண்ட காலம் உழைக்கும். தவிர, அதிலுள்ள தூசிகள், கேஸ் லீக் உள்ளிட்ட பிரச்னைகளை மெக்கானிக்குகளால் மட்டுமே சரிபார்த்து பராமரிக்க முடியும்.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள்ல வெயில் கடுமையாக இருக்கும். அப்ப 18 டிகிரிக்கு ஏசியின் குளிரைக் கொண்டு வந்தால் ஏசி மிஷின் கடுமையான உழைப்பைக் கொடுக்கும். அதனால் அடிக்கடி பழுதாகலாம். அப்புறம், இவ்வளவு குறைவான டிகிரியில் நிறைய நேரம் ஏசி ஓடும்போது அதிக மின்சாரத்தை இழுக்கும். இதனால், மின்கட்டணம் தாறுமாறாக ஏறும். அதனால் ஏசியின் குளிரை 25, 26, 28 டிகிரி அளவில் வைத்தால் மின் கட்டணமும் குறையும்; ஏசியின் ஓட்டமும் குறைந்து நீண்டநாட்கள் உழைக்கும்.

பொதுவாக ஏசி பராமரிப்பிற்கு ஏழு வழிகள் உள்ளன. முதல்ல ஏர் ஃபில்டர் எனப்படும் காற்று வடிகட்டிகளைச் சுத்தம் செய்வது முக்கியம். இந்தக் காற்று வடிகட்டிகள் ஏசியின் முக்கியமான அங்கம். இவை வீட்டிலுள்ள தூசி மற்றும் அழுக்குகளிலிருந்து ஏசியை சுத்தமாக வைக்குது. 

இருந்தும் இரண்டு மூணு மாசத்துல அவை தூசிகளாலும் அழுக்குகளாலும் அடைபட்டுடும். இதனை வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். இரண்டாவது, இந்த ஏர் ஃபில்டர்களுக்குப் பின்னால் இருக்கும் ஆவியாக்கி சுருளிலும் (Evaporator coil) நிறைய அழுக்கு, தூசுகள் படிந்திருக்கும். இதனையும் சுத்தப்படுத்தணும். இதை நாம் சுத்தப்படுத்தலனா, அது கேஸ் லீக்கிற்கு வழிவகுக்கும்.
 
மூன்றாவது, தினமும் நீர் கசிவுகள் இருக்கானு சரிபார்க்கணும். ஏதேனும் ஒருபகுதியில் கசிவுகள் இருந்தாலும் அது நிறைய மின்சாரத்தை எடுத்துக்கும். ஏசியும் போதுமான குளிரைத் தராது. ஒருகட்டத்துல ஏசி செயலிழந்து நின்னுடும். இதனை கோடைகாலத்திற்கு முன்பே சர்வீஸ் எஞ்சினியர் மூலம் சரிபார்த்திடணும். 

நான்காவது, ஏசியின் பின்னால் உள்ள வடிகால் பைப்பை முறையாக பராமரிக்கணும். ஏசியின் வேலையே, காற்றிலுள்ள ஈரப்பதத்தையும் வெப்பத்தையும் நீக்கி குளிரைக் கொடுப்பது. இந்த ஈரப்பதம் எல்லாம் நீராக ஒரு வடிகால் தொட்டியில் சேர்ந்து பைப் வழியாக வெளியேறும். இப்ப பைப் அடைத்துக் கொண்டால் வடிகால் தொட்டியிலேயே நீர் சேகரமாகும்.

இந்தத் தேங்கி நிற்கும் தண்ணீர்ல பூஞ்சைகள் உருவாகும். அப்ப ஏசி ஓடும்போது துர்நாற்றம் வீசும். பிறகு ஏசி ஆன் ஆகாது. ஐந்தாவதாக, ஏசியின் அவுட்டோர் யூனிட்டை சுத்தமாக வச்சுக்கணும். ஒரு கம்ப்ரசர், ஃபேன் எல்லாம் அதில் அடங்கியிருக்கும். வெளியில் வைக்கப்படுவதால் எளிதாக அழுக்காகிடும். இதனை பராமரிப்பதும் முக்கியம்.

ஆறாவதாக, சரியான வெப்பநிலையில் ஏசியை பராமரிக்கணும். இப்ப மக்கள் ஏசியை ஆன் செய்ததும் 16 டிகிரி டூ 18 டிகிரி செல்சியஸ் வைக்கிறாங்க. இது உடல்நலத்திற்குத் தீங்கானது. இது ஏசியின் ஆயுளை மட்டுமல்ல, மக்களின் ஆயுளையும் குறைச்சிடும். 24 டிகிரி நல்லது. இதனுடன் சீலிங் ஃபேனை பயன்படுத்தலாம். ஏழாவதாக, ரிமோட் கண்ட்ரோலை சரியாக பராமரிக்கணும். இவற்றை செய்தாலே போதுமானது. நீண்டநாட்கள் நல்ல கண்டிஷன்ல ஏசி இருக்கும்...’’ என்றார்.

- ஆர் சந்திரசேகர்

பேராச்சி கண்ணன்