157 மில்லியன் இந்திய மக்கள் வாங்கிய 943 மில்லியன் சினிமா டிக்கெட்கள்... வருமானம் ரூ.19,700 கோடி!



இது 2023ம் ஆண்டு புள்ளிவிவரம் மட்டுமே

2023ம் ஆண்டுக்கான கணக்குதான் இந்த சினிமா டிக்கெட் விற்பனை விவரம்! அதிலும் இது கொரோனா காலத்திற்கு முந்தைய காலத்தில் இருந்ததைக் காட்டிலும் அதிகம் என்பதுதான் ஹைலைட். ஜனவரி 20 முதல் மார்ச் 20 வரையில் இந்திய சினிமா 145.7 மில்லியன் டிக்கெட்டுகளை விற்றிருக்கிறது. 
மீண்டும் இரண்டு வருட காலம் முடிந்து 2022ல் சினிமாவிற்கு செல்ல துவங்கியபின் அந்த வருடத்தில் சினிமாவிற்கு சென்று படம் பார்க்கும் பார்வையாளர்களாக 122 மில்லியன் மக்கள் இருந்திருக்கிறார்கள். 2023ம் ஆண்டு 157.4 மில்லியன் சினிமாவிற்கு சென்று படம் பார்த்த இந்தியர்களாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பையை அடிப்படையாகக் கொண்ட ஆர்மேக்ஸ் மீடியா (Ormax media) என்னும் அனலாடிக்ஸ் நிறுவனம் இந்த டேட்டாக்களை வெளியிட்டு இருக்கிறது. மேலும் மொழிவாரியாகவும் சினிமா பார்க்கும் ஆர்வம் அடிப்படையிலும் கணக்கீடு 2024 ஜனவரி மாதம் சுமார் 8,500 மக்களைக் கொண்டு ஆய்வு நடத்தியதின் விளைவாக சராசரியாக இந்திய மக்கள் எவ்வளவு படம் பார்க்கிறார்கள் என்கிற புள்ளிவிபரமும் இந்த டேட்டாக்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

2019ம் ஆண்டு தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 33 மில்லியன் என்கையில் 2023ல் 157.4 மில்லியன் என்பது மிகப்பெரிய எழுச்சி என்று சொல்லலாம்.  
157 மில்லியன் மக்கள் ஒன்றிணைந்து 943.7 மில்லியன் டிக்கெட்டுகளை வாங்கியதன் விளைவாக 2023ம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வருமானம் ரூ.12,226 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது! 

முறையே உள்ளூர் மற்றும் வெளிநாடு விற்பனை, இசை உரிமம், சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் விற்பனை என அனைத்துமாக ரூ.19,700 கோடி வருமானம் 2023ல் மட்டும் இந்திய சினிமாவிற்கு கிடைத்திருக்கிறது. இது குறித்து ஆர்மாக்ஸ் மீடியா உரிமையாளர் சைலேஷ் கபூர் மேலும் விவரங்களை கொடுத்திருக்கிறார்.  

‘‘இது பெரும் மகிழ்ச்சியைத் தரவில்லை என்றாலும் ஒரு நல்ல மாற்றம்தான். 1.4 பில்லியன் சினிமா ஆர்வம் கொண்ட நாட்டின் மக்கள் தொகையில் 157 மில்லியன் மக்கள்தான் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள் என்பது சற்று வருத்தமான டேட்டாதான். இதில் ஒவ்வொரு வருடமும் 900 மில்லியன் மக்கள் டிவி நிகழ்ச்சிகளையும் 510 மில்லியன் மக்கள் இணையதளம் வழியாக வும் வீடியோ மற்றும் படங்களாக கண்டு ரசிக்கிறார்கள்.

எனில் டிஜிட்டலில் காணும் மக்களில் பாதி அளவேனும் தியேட்டருக்கு வரவேண்டும். அப்படி வந்தால் மட்டுமே இந்தியா போன்ற மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் சினிமாவின் பிசினஸ் இன்னும் ஆரோக்கியமான சூழலுக்கு மாறும். ஆனால், இந்திய மக்கள் தொகையில் வெறும் 11%  மக்கள் மட்டுமே சினிமாவிற்கு செல்பவர்களாக இருக்கிறார்கள்...’’ என்னும் கபூர், தொடர்ந்து பல விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.

‘‘கொரோனாவிற்கு முன்பு - அதாவது 2019ம் ஆண்டு - அமெரிக்க மக்கள் தொகையில் 76% பேர் தியேட்டருக்கு சென்று படம் பார்த்திருக்கிறார்கள். ஐரோப்பிய மக்கள் தொகையில் 50% பேர் அதே வருடம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்திருக்கிறார்கள் என்னும் பட்சத்தில் 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 11% என்பது மிகவும் சிறிய எண்ணிக்கைதான்.

எனினும் 2019ம் ஆண்டு தியேட்டர் சென்ற மக்களைக் கொண்டு பார்க்கையில் 2023ம் ஆண்டு 157 மில்லியன் என்பது மிகப் பெரும் மாற்றம்தான். அதே சமயம் டிவி சேனலில் படம் பார்க்கும் இந்திய மக்களுடன் ஒப்பிடுகையில் இன்னொரு விவரம் தெரிய வருகிறது. ஆம். அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் வீட்டில் படம் பார்க்கும் பழக்கம் குறைவாகவே இருக்கிறது.

ஆனால், இந்தியர்கள் உலகிலேயே அதிக அளவில் சினிமாவை விரும்பி பார்க்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட வகையில் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் சதவீதம் இங்கே குறைவு என்பதும் அதை அதிகரிக்கும் வழிகளை இந்திய சினிமா அதிகரிக்க வேண்டும் என்பதும் இதன் மூலம் புலப்படுகிறது. 2023ம் ஆண்டு வெளியான சில பான் இந்தியா படங்கள்தான் மிகப்பெரும் தியேட்டர் பார்வையாளர்களை உருவாக்கி இருக்கின்றன. ‘பதான்’, ‘ஜவான்’, ‘ஜெய்லர்’, ‘கடார் 2’, ‘ஓஎம்ஜி 2’... உள்ளிட்ட படங்கள் அதிக பார்வையாளர்களை தியேட்டருக்கு  கொண்டுவந்த வகையில் முதலிடம் பிடிக்கின்றன.

இதில் மொழிவாரியாக அல்லது மாநில வாரியாக பிரிக்கும் பொழுது இருப்பதிலேயே அதிகமாக தெலுங்கு சினிமாவின் 26.2 மில்லியன் பார்வையாளர்களில் 83% மக்கள் தொடர்ந்து படம் பார்க்கும் ரசிகர்களாக முதலிடம் பிடிக்கின்றனர். அதாவது வருடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை நிச்சயம் பார்க்கிறார்கள். இரண்டாம் இடத்தில் 76% பார்வையாளர்களுடன் தமிழ் சினிமாவும், 32% இந்தி மொழி பார்வையாளர்களும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் மக்களாக உள்ளனர்.

அதேசமயம் இந்தியாவில் வெளியாகும் ஹாலிவுட் படங்கள் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 19% மட்டுமே. காரணம், இந்தியா என்றாலே ஆங்கிலம் மற்றும் இந்தி பார்வையாளர்கள் என்னும் மனப்போக்கில் ஹாலிவுட் சினிமா இந்த இரண்டு மொழிகளில் மட்டுமே அதிகம் படங்களை வெளியிடுகிறது. ஒருவேளை தென்னிந்திய மொழிகளில் ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாகும் பட்சத்தில் இதன் வருமானமும் அதிகரிக்கும்.

இதற்கு இந்தியாவில் வெளியாகும் வெளிநாட்டு திரைப்படங்களை அந்தந்த மாநில மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யும்பொழுது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
இதேநிலை ஓடிடி தளத்திலும் தொடர்ந்து காண முடிகிறது. இதனால்தான் திடீரென கொரியன் திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் கூட ஓடிடியில் தனக்கென தனி அந்தஸ்தை பெற்றன. காரணம், வெளியாகும் பத்துக்கு எட்டு கொரிய திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் குறைந்தபட்சம் ஆறு மொழிகளில் இந்தியாவில் வெளியிடுகின்றன.  

157.4 மில்லியன் மக்கள் ஒன்றிணைந்து 943.7 மில்லியன் டிக்கெட்டுகளை வாங்கி இருக்கிறார்கள். அதாவது சராசரியாக ஆறு படங்களைக் கண்டு களித்துள்ளனர். இதனை மொழிவாரியாக, தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மற்றும் விற்பனையான டிக்கெட்டுகள், பார்க்கப்பட்ட படங்களின் எண்ணிக்கை அடிப்படையில் பிரித்தால் இந்தி சினிமா 92.2 மில்லியன் மக்கள் திரையரங்கம் சென்று 274.6 மில்லியன் டிக்கெட்டுகளை வாங்கி இருக்கிறார்கள். இதில் சராசரியாக மூன்று படங்கள் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள்.இரண்டாம் இடத்தில் தெலுங்கு சினிமா 26.2 மில்லியன் பார்வையாளர்கள் சென்ற வருடம் 241.9 மில்லியன் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். சராசரியாக ஒருவர் 9 படங்கள் வீதம் பார்த்திருக்கிறார்.

மூன்றாம் இடத்தில் தமிழ் சினிமா. 27.3 மில்லியன் பார்வையாளர்கள் திரையரங்கம் சென்று படம் பார்க்க 220 மில்லியன் டிக்கெட்டுகளை வாங்கி இருக்கிறார்கள். சராசரியாக ஒருவர் எட்டு படங்களை சென்ற வருடம் பார்த்திருக்கிறார். தவறாமல் ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் 26.8 மில்லியன் பார்வையாளர்கள் 48 மில்லியன் டிக்கெட்டுகளை வாங்கி இருக்கிறார்கள். அதாவது வருடத்திற்கு இரண்டு படம் என்கிற கணக்கில் இவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

அடுத்து கன்னட சினிமா. 13.3 மில்லியன் மக்கள் 30.3 மில்லியன் டிக்கெட்டுகளை வாங்கியதன் அடிப்படையில் சென்ற வருடம் குறைந்தது இரண்டு படங்களையாவது பார்த்திருக்கிறார்கள்.
இந்த கணக்கில் அதிகம் பின்தங்கி இருப்பது பெங்காலி மற்றும் குஜராத்தி திரைப்படங்கள்தான். அதிக டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்ற தேதியாக 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 13ஐ சொல்லலாம். அதாவது சுதந்திர தின விடுமுறைக்கு வெளியான படங்களால் இவை புக்கிங் செய்யப்பட்டுள்ளன. அதாவது இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிகமாக 2.8 மில்லியன் டிக்கெட்டுகள் இந்த ஆகஸ்ட் 13ம் தேதிதான் எடுக்கப்பட்டிருக்கிறது.

‘புக் மை ஷோ’ டிக்கெட் விற்பனை இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையில் சுதந்திர தின விடுமுறை வாரத்தில் மட்டும், அதாவது ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 20 வரை 10.9 மில்லியன் மக்கள் டிக்கெட்டுகள் வாங்கி இருக்கிறார்கள். அதிலும் மெட்ரோ நகரங்களான மும்பை ,ஹைதராபாத், சென்னை மற்றும் திருவனந்தபுர மக்கள் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 6:00 மணி வரை சினிமா பார்க்கும் ஆர்வத்தை அதிகம் கொண்டிருக்கிறார்கள். அதாகப்பட்டது மிகப்பெரும் ஸ்டார்களின் முதல் நாள் முதல் காட்சிகளுக்கு இந்த நகரங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.  

இதில் ‘பதான்’, ‘ஜவான்’, ‘கடார் 2’, ‘அனிமல்’ உள்ளிட்ட படங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தென்னிந்தியாவில் சில மாநிலங்கள் முதல் நாள் முதல் காட்சி என்பதை 8:00 மணிக்கு மாற்றியதன் விளைவால் இதற்கு முந்தைய வருடங்களை விட சென்ற வருடம் டிக்கெட் விற்பனை சற்று குறைந்து இருக்கிறது. பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள் அல்லது பெரும் பட்ஜெட் திரைப்படங்கள் வார நாட்களில் வெளியாவதால் அலுவலகத்திற்கு செல்லும் முன் முதல் நாள் முதல் காட்சியிலேயே படத்தை பார்த்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் தென்னிந்திய ரசிகர்கள் பலரும் முயற்சி செய்வதுண்டு.

அது தவறும் பட்சத்தில் வார இறுதி விடுமுறைகளில் பார்க்கலாம் எனில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை அல்லது முதல் நாள் முதல் காட்சி கிடைக்கவில்லை எனில் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையால் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் சமீப காலமாக இந்த முதல் நாள் முதல் காட்சி வருமானம் அல்லது முதல் நாள் வருமானம் தொய்வை சந்தித்துக் கொண்டிருக்கிறது.  

முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் இளைஞர்கள் பெரும்பாலும் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்பவர்களாக இருப்பதால் அவர்களால் ஒரு படத்திற்காக ஒரு நாள்அல்லது அரை நாள் விடுமுறை எடுப்பது கடினம். அவர்களைப் பொறுத்தவரை காலை 9 மணிக்கு முன்பு படத்தை பார்த்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும்.

அந்த வகையில் சென்ற வருடம் முழுக்க வெளியான பெரிய படங்கள் அனைத்தும் குறைந்தபட்சம் காலை 8 மணி காட்சியாகத் துவங்கியதால் பலரும் முதல் நாள் முதல் காட்சியைத் தவிர்த்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் பெரிய படங்களுக்கு இந்த முதல் நாள் முதல் காட்சியை அரசு அனுமதித்தால் தமிழ்நாடு போன்ற அதிகம் சினிமா பார்க்கும் பார்வையாளர்களைக் கொண்ட மாநிலங்கள் இன்னும் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும்...’’ என்கிறார் கபூர்.

ஷாலினி நியூட்டன்