மஹாபுஷ்கரம் என்ற மகோன்னதம்



நூற்று நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகோன்னதம் இந்த ஆண்டு காவிரியில் நிகழப்போகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மகாமகத் திருவிழா, நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு கும்பமேளா போல, இந்த வருடம் காவிரி புஷ்கரம் நிகழவிருக்கிறது. இதற்கு முன் 12-4-1840 அன்று ஆண்டு நடைபெற்றது. அடுத்த வருடம் குருபெயர்ச்சிக்கு முன்பு உள்ள 12 நாட்கள் அந்தி புஷ்கரம் என்று பெயர் சொல்வர். ‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்று ஒரு பழமொழி உண்டு.

ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் தினமும் புனித நீராடினால் என்ன பலன் கிடைக்குமோ, அதே புண்ணிய பலன் மயிலாடுதுறையில் உள்ள துலாக் காவிரி தீர்த்தக் கட்டத்தில் இந்த புஷ்கர வைபவத்தின்போது நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். புஷ்கர மகிமை குறித்து காவிரி மகாத்மியம் விரிவாகப் பேசுகிறது. இந்த நூல் நதிகளில் உயர்ந்த நதி காவிரியே என்கிறது. ஒருநாள் கண்வ மகரிஷியை கருமை நிறமுடைய மூன்று பெண்கள் சந்தித்தனர்.

‘‘நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் புனித நதிகள். மக்கள் தாங்கள் செய்த பாவங்களை எங்களிடம் கொட்டித் தீர்த்து விட்டதால் நாங்கள் கருமையாகி விட்டோம். எங்கள் பாவங்கள் போக வழிவகை கூறவேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டனர். அதற்கு முனிவர் ‘‘தென்னிந்திய பாகமாகிய மயிலாடுதுறையிலுள்ள துலாக் கட்டம் அமைந்த காவிரி நதியில் ஐப்பசி எனும் துலா மாதத்தில் புனித நீராடி மயூரநாதரையும், அபயாம்பிகையையும், பரிமள ரங்கநாதப் பெருமாளையும் தரிசனம் செய்தால் உங்கள் பாவங்கள் அகன்று விடும்’’ என்று உபதேசம் செய்தார்.

அவர் கூறியபடி காவிரி துலாக்கட்டத்தில் நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டன அந்த நதிகள். ஒரு சமயம் நவநாயகர்களில் ஒருவரான குருபகவான் பிரம்மாவைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். பிரம்மா தோன்றியபோது, ‘‘உங்களிடமுள்ள மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியாகிய புஷ்கரத்தைத் தந்து விடுங்கள்,’’ என்று கேட்க, அதற்கு பிரம்மதேவனும் சம்மதித்தார். அந்த நேரத்தில் புஷ்கரமோ, ‘‘நான் உங்களிடமே இருப்பேன். என்னை உங்களிடமிருந்து பிரித்து விடாதீர்கள்,’’ என்று வேண்டிக் கொண்டது.

இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளான பிரம்மா, பிறகு தெளிந்து, குருபகவானுக்கும், புஷ்கரத்திற்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை செய்துவிட்டார். அதன்படியே செயல்பட இருவரும் உறுதி அளித்தனர். அதாவது புஷ்கரமானது, குருபகவான் சஞ்சரிக்கும் மேஷராசி முதல் மீனராசி, அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து நன்மைகளைச் செய்வது என்று முடிவானது.

இதன்படி துலாம் ராசிக்கு அதிபதியான காவிரியில் புஷ்கரம் தங்கி இருப்பதோடு பரமேஸ்வரன், பிரம்மா, விஷ்ணு, இந்திரன் ஆகியோரும் உடன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். எனவே, இந்த வருடம் செப்டம்பர் 12 முதல் 24 வரை காவிரி துலாக் கட்டமான ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி, பித்ரு தோஷம் விலகி, செல்வவளமும், செழிப்பும், நல்வாழ்வும் பெற முடியும்.

ஒருசமயம் கவேரர் என்ற மகரிஷி தனக்குக் குழந்தை வேண்டும் என பிரம்மதேவனை வேண்டினார். காட்சி அளித்த பிரம்மா ஒரு பெண் குழந்தையைக் கொடுத்து ‘இவளுக்குப் பெண் உருவமும், நதி உருவமும் உண்டு’ என்று கூறினார். அவளுக்கு லோபா முத்திரை எனப் பெயரிட்டு வளர்த்தார் மகரிஷி. அப்பெண் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இருந்து வரம் பெற்று காவிரி என்னும் நதியாகவும் அகத்தியருக்கு மனைவியாகவும் ஆகிவிட்டாள்.

இந்தக் காலகட்டத்தில் காவிரியின் அருட்பார்வை, வறண்டு போயிருக்கும் பூவுலகிற்குத் தேவை என்பதை உணர்ந்த சிவபெருமான் தேவர்களை அழைத்து காவிரி பூமியில் பாய்ந்து ஓடி வளப்படுத்த வேண்டுமானால் விநாயகப் பெருமானை பூஜை செய்ய வேண்டும் எனப் பணித்தார். விநாயகப் பெருமான் காக்கை வடிவம் எடுத்து அகத்தியர் அருகிலிருந்த கமண்டலத்தைக் கவிழ்த்திட அதிலிருந்த காவிரி ஆனந்தமாகப் பாய்ந்து ஓடத் தொடங்கினாள். காகத்தின் கருணையால் பூமியில் வழிந்தோடத் தொடங்கியதாலும் மக்களுக்குச் செழிப்பைத் தருகிற மனம் கொண்டவளாய் விளங்குவதாலும் காவிரி எனப் பெயர் பெற்றாள்.

குடகு மலையிலிருந்து உருவாகும் காவிரி கர்நாடகா, தமிழ்நாட்டுப் பகுதிகளை வளப்படுத்திக்கொண்டு, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக 765 கி.மீ. பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறாள். காவிரியைக் கொண்டாடும் மக்கள் ஆடி 18ல் விழா எடுப்பார்கள். தென்னாட்டு கங்கை என்று காவிரியைச் சங்க இலக்கியங்கள் புகழ்கின்றன. காவிரியிடமிருந்து பிரியும் கிளை நதிகள் சிம்லா, ஹேமாவதி, அக்ராவதி, லஷ்மணா, கபினி, பவானி, லோக பாவனி, நொய்யல் அமராவதி ஆகியன.

காவிரியின் மகிமையை நமது தர்ம சாஸ்திரம் புகழ்கிறது. மூன்று நாட்கள் புனித நீராடலால் கங்கை சகல பாவங்களைப் போக்கும். ஏழு நாட்களில் யமுனை பாவங்களை அகற்றி விடும். காவிரி நதியோ நம் ஜென்மாவில் செய்த பாவங்கள் அனைத்தையும் உடனே அகற்றுவாள்: ‘‘த்ரிராத்ரம் ஜான்ஹவீ தோயே ஸப்த ராத்ரந்து யாமுனே! ஸத்ய; புநாதி காவேரி பாபம் ஆபரணாந்திகம்’’ பார்வதிதேவி சிவபெருமானை மயிலாக இருந்து பூஜை செய்த தலமாதலால் ‘கெளரி மாயூரம்’ என்று பெயர் கொண்டது மயிலாடுதுறை.

தல விநாயகராக முக்குறுணிப் பிள்ளையார் உள்ளார். வடக்குப் பிராகாரத்தில் பழைய கோயில் எனப்படுகிற பிரம்மபுரீஸ்வரர் சந்நதி உள்ளது. திருவிளையாடல் புராணத்தில், ‘மதிநுதல் இமயச் செல்வி மஞ்ஞையாய் வழிபட்டேத்து மிது துலாப் பொன்னித் தானம்’ என்று துலா ஸ்நான மகிமை கூறப்பட்டுள்ளது. இங்கு சுவாமியின் திருப்பெயர் மாயூரநாதர், அம்பாளின் திருப்பெயர் அபயாம்பிகை. தலமரமாக மாமரமும்,  தீர்த்தமாக காவிரி, ரிஷப தீர்த்தங்களும் திகழ்கின்றன. திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், அப்பர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். சிவபோக சாகரம் என்னும் நூலில் தில்லை வனம், காசி, திருவாரூர், மாயூரம் தலங்களை நினைத்தாலே முக்தி கிடைத்துவிடும் என்று புகழ்ந்துரைக்கின்றது.

ஒரு காலத்தில் தர்மம் ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானை அவர் நினைத்த இடங்களுக்கெல்லாம் சுமந்து சென்றது. பார்வதிதேவி மயிலாக மாறி மாயூரத்தில் பரமனை நினைத்து பூஜை செய்துகொண்டிருந்தபோது, ஈசனோடு அன்னவாகனத்தில் பிரம்மனும், கருடனில் விஷ்ணுவும், ஐராவதத்தில் இந்திரனும், குதிரையில் தேவர் பெருமக்களும் வந்தனர்.

சிவபெருமானைச் சுமந்து சென்ற ரிஷபம் மிக விரைவாக மாயூரத்தை வந்து அடைந்தது. பிற அனைவரும் பின்தங்கிவிட, ‘என்னால்தான் சிவன் நினைத்த இடத்திற்கு சீக்கிரம் போய் வருகிறார். சிறப்படைகிறார்’ என்று கர்வம் அடைந்தது ரிஷபம். அதன் ஆணவத்தை சிவபெருமான் அறிந்து அதன்மேல் தன் கேசம் ஒன்றை எடுத்து வைக்க அது பாரம் தாங்காமல் பூமியில் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தது.

பிறகு, எழுந்து தன் நிலை உணர்ந்து வெட்கித் தலைகுனிந்தபடி ‘எனது ஆணவத்தால் ஏற்பட்ட பாவம் அகல வழி கூறுங்கள்’ என்று கேட்டது. பூவுலகில் மாயூரம் தலத்தில் தவமிருந்து என்னை பூஜித்தால் அங்கே தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு எழுந்தருளி உனக்குச் சாப விமோசனம் தருவோம்’ என்றார் பரமன். அவ்வாறு செய்து சாப விமோசனம் பெற்று துலாக் காவிரி கட்டத்தில் அவரருளால் ரிஷப தீர்த்தம் என்ற பெயர் பெற்றது.

மயிலாடுதுறை நகரத்திலுள்ள காவிரிக் கரையின் வடபாகத்தில் அமைந்துள்ள வள்ளலார் கோயில் என்ற தட்சிணாமூர்த்தி கோயிலில்தான் குருவடிவமாக, வதான்யேஸ்வரர் என்ற பெயரோடு அருட்பாலிக்கிறார் ஈசன். அம்பிகை, ஞானாம்பிகை என்ற நாமத்துடன் தென்திசை நோக்கி அருள் தருகிறார். சுவாமியை வழிகாட்டும் வள்ளல் பெருமான்  என்றும் கூறுவர்.

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் மேற்கு பார்த்தவாறு அமைந்துள்ளது. பிராகாரத்தில் சனீஸ்வரன், அங்காரகன், சூரியன், சந்திரன், பிரம்ம லிங்கம்,  அகத்திய லிங்கம், லிங்கோத்பவர், மேதா தட்சிணாமூர்த்தி ஆகிய திருமேனிகள் உள்ளன. சப்தமாதர்கள் தனித்தனியாக வந்து பூஜை செய்த தலம் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு. சண்டன், முண்டனை வதம் செய்த சாமுண்டீஸ்வரி இத்தலத்தில் அஷ்டபுஜ துர்க்கையாக வீற்றிருக்கிறாள். அசுரனை இந்த சக்திதேவி வதம் செய்தபோது, அவனது தலை விழுந்த இடம், ‘கிடாத்தலை மேடு’ என்ற கிராமப் பகுதியாக பெயர் பெற்றிருக்கிறது.

காவிரி புஷ்கரம் விழா நடைபெறும்போது காவிரி துலாக்கட்டம், ரிஷப தீர்த்தக் கட்டத்தில் பஞ்சமூர்த்திகள்  புறப்பாட்டுடன் அஸ்திர தேவர் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார்கள். அதுசமயம் பக்தர்கள் துலா ஸ்நானம் செய்வார்கள். செப்டம்பர் 12-24 தேதிகளில் போக முடியாதவர்கள் ஐப்பசி மாதம் 30 அல்லது நவம்பர் 16 தேதிகளில் மயிலாடுதுறைக்குச் சென்று துலாக் கட்டம், ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடி தல தரிசனம் செய்து வரலாம்.

- குமாரசிவாச்சாரியார்