வீழ்ந்தான் வீணன்!



மாகாபாரதம் - 70

வானர வீரர்கள் இலங்கைக்குள் இறங்கி தோப்புகளுக்குள் மெல்ல நுழைந்து, நகரைச் சுற்றியுள்ள காடுகளுக்குள் ஊடுருவதை, அங்கு காவல் காத்திருந்த இரண்டு அரக்கர்கள் பார்த்து விட்டனர். சைன்யம் பெரிதாக இருக்கிறது எதிர்க்க முடியாது, போய் தகவல் சொல்லி விட்டு வரவும் நேரம் இல்லை என்பதால், என்ன, ஏது என்று தெரிந்து கொள்வதற்காக சட்டென்று தங்களை வானரங்களாக உருமாற்றிக் கொண்டு அவர்களோடு கலந்து, இப்போது எங்கே போகிறோம், என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம் தங்களுக்குள் பேச, மற்ற வானரங்கள் பதில் சொல்ல முயற்சிக்க, ஒரு தவறான வாசனை வருகிறது என்பதை விபீஷணன் உணர்ந்து கொண்டு, அந்த இடம் நோக்கிப் போய், உருமாறிய அந்த அரக்கர்களை சட்டென்று தாவி பிடித்தார். வானர வீரர்கள் பயந்தார்கள். அடித்து நொறுக்கினார்கள். விபீஷணன் தடுத்து ராமரிடம் கொண்டு போனார்.

“அட, ஒற்றர்களா, நீங்களாகவே இந்த வேலைகளை செய்வீர்களா? அரசருக்கு இன்னும் தெரிவிக்கவில்லையா? நிச்சயம் தெரிவிக்க வேண்டும். அது ஒற்றர்களுடைய கடமை. நீங்கள் செய்த வேலை சரி. உருமாறி வந்ததும் சரி. தவறேதும் இல்லை. என்னுடைய சைன்னியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், அதுதானே? என்னுடைய மகத்தான தளபதிகளை நான் அறிமுகப்படுத்துகிறன்” என்ற ராமர், அங்கதனையும், நீலனையும், கரணையும், ஜாம்பவானையும் அறிமுகப்படுத்தினார். ஹனுமாரை சுட்டிக் காட்டினார். தன் இளவளையும் தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர்கள் பயந்து நடுங்கினார்கள். வெட்கப்பட்டார்கள்.

“எந்த பயமும் கொள்ள வேண்டாம். நல்ல உயரத்திற்கு வந்து வானர சேனையைப் பாருங்கள்” என்று உயரமான இடத்திற்கு அனுப்பி, அங்கிருந்து வானர சேனையைப் பார்க்கச் சொன்னார். வானர சேனையை முழுவதும் பார்த்து விட்டு அவர்கள் ராமருக்கு அருகே வந்தார்கள். “இப்பொழுது நீங்கள் போகலாம். உங்களுக்கு விடுதலை கொடுத்து விட்டேன். எந்த பயமும் இல்லை. யாரும் தாக்க மாட்டார்கள். இவர்கள் தாக்கியதற்கும் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வேகத்தில் நடந்து விட்டது. நீங்கள் போய் உங்களுடைய அரசனிடம் இந்த சைன்யம் பற்றிச் சொல்லுங்கள்” என்று சொல்லிய ராமரைப் பார்த்து அவர்கள் வியந்தார்கள்.

மெல்ல வானரங்களூடே அரக்கர்கள் நகர, ஒரு வானரம் வேண்டுமென்றே பெரிதாய் பயமுறுத்த, அவர்கள் துள்ளி எகிறி தரையில் விழுந்து அலறினார்கள். மற்ற வானரங்கள் தூக்கி நிறுத்தி வாய்விட்டு சிரித்தன. ‘இத்தனை பயமா?’ என்று கேட்டன. தொலைவிலிருந்து இதை பார்த்த ராமரும் மெல்லியதாய் சிரித்தார். கோபமாக இருக்கின்ற வானர வீரர்களைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.

அந்த அரக்கர்கள் வெகுவேகமாக ரகசிய வழியின் மூலம் இலங்கைக்குள் ஓடினார்கள். சைன்யங்கள் அந்த காடுகளையும், தோட்டங்களையும் பாழ்படுத்த ஆரம்பித்தன. காடுகளை அழித்து பாதைகளை உண்டாக்கின. இலங்கைக்குள் போவதற்கு நாலாபக்கமும் பாதைகள் போடப்பட்டன. அவற்றில் சைன்யம் மிகப் பெரிய முழக்கத்தோடு உள்ளே நுழைந்தது. ஒற்றர் மூலமும், மற்றவர் மூலமும் அந்த ராட்சஸ மன்னன் ராவணன், ராமரின் வருகையை உணர்ந்து கொண்டான். தன்னுடைய சைன்யத்தை திரட்டினான்.

ஆயுதங்களை தயார் செய்யச் சொன்னான். கோட்டைக்கு அருகே வானர வீரர்கள் நெருங்கினார்கள். கோட்டைக்கு அப்பால் பெரிய அகழி இருந்தது. அதில் சுறா மீன்களும், முதலைகளும் இருந்தன. இரும்புக் கம்பிகள் நடப்பட்டிருந்தன. கோட்டையிலிருந்து எறிகுண்டுகளும், கவண் கற்களும், பாறைகளும் எறியப்பட தயாராக இருந்தன. எகிறி குதித்து கோட்டையினுடைய உயரம், அந்தப் பக்கம் இருக்கின்ற விஷயங்கள் இவற்றையெல்லாம் வானர வீரர்கள் கண்டுகொண்டார்கள். தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள்.

வானர வீரர்களின் துடிப்பு ராமருக்கு சந்தோஷத்தை கொடுத்தது. போர் தொடுக்கும் யாரையேனும் தூதாக அனுப்ப ராமர் தீர்மானித்தார். வானரப் படையின் தலைவனான அங்கதனை அழைத்து ‘தைரியமாகப் போய் ராவணனை சந்தித்து விட்டு வா’ என்று சொன்னார். கோட்டை வழியினூடே செல்லாமல் மாளிகை சுவர் மீது ஏறி மறுபக்கம் குதித்து, ‘உங்கள் அரசனை பார்க்க வேண்டும்’ என்ற கோஷத்தோடு அங்கதன் இலங்கைக்குள் நுழைந்தான். அவனை கருத்த மேனியுள்ள ராட்சஸர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.

மேகங்களுக்கு நடுவே நடக்கின்ற சூரியனைப் போல அங்கதன் காட்சியளித்தான். அமைச்சர்களுக்கு நடுவே அரியாசனத்தில் அட்டகாசமாய் அமர்ந்திருந்த ராவணேஸ்வரனைப் பார்த்து கர்ஜிக்கும் குரலில் ‘புலஸ்தியா’ என்று அங்கதன் அவனை விளித்தான். ராவணன் தன்னை ஈஸ்வரன் என்று சொல்லிக் கொள்வதில் விருப்பமுள்ளவன். அங்கதன் சொல்ல விரும்பவில்லை. அவனுடைய இயற்பெயரை அழைத்தான்.

‘‘கோசல நாட்டு மன்னர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தூதுவனாக நான் இங்கு வந்திருக்கிறேன். அவர் உனக்கு ஒரு எச்சரிக்கை விடுவித்திருக்கிறார். அவருடைய மனைவியை அபகரித்து இருக்கிறாய். அடாது செய்திருக்கிறாய். சிறை வைத்திருக்கிறாய். அவர் இல்லாதபோது போர் செய்யாது, ஒரு கோழையைப் போல ஒளிந்திருந்து கவர்ந்து போயிருக்கிறாய். உன்னுடைய இழிவான செயல் அரச குலத்திற்கே இழிவு. அது மட்டுமல்லாமல் வனவாசிகளான ரிஷிகளை, அந்தணர்களை கொன்றிருக்கிறாய். பல பெண்களை பலவந்தமாக கவர்ந்து வந்திருக்கிறாய். தேவர்களோடு சண்டையிட்டிருக்கிறாய். பல்வேறு உயிரினங்களுக்கும் துன்பம் இழைத்திருக்கிறாய்.

அவர்கள் அழுது தொழுதும், மறுத்து கொன்றிருக்கிறாய். உன்னைப் போல உன் சேனைகளும் அட்டகாசம் செய்திருக்கின்றன. என்னை மனிதன் என்று நினைத்துக் கொண்டு கொக்கரிக்காதே. என்னுடைய வில்லின் வலிமை மிகப் பெரியது. புலஸ்தியா, உன்னை உன் கூட்டத்தோடு அடித்து ஜெயிக்க என்னால் முடியும். ஒரு அரக்கர்கூட உலகத்தில் இல்லாது, சகல ராட்சஸர்களும் அழியும்படியான ஒரு யுத்தத்தை என்னால் செய்ய முடியும். மன்னிப்பு கேட்டு சீதையை விடுவித்து, செய்த குற்றத்திற்கு பரிகாரம் தேடு. இல்லை, ஆண் மகனாக யுத்தத்திற்கு வா. மறுபடியும் ஓடி ஒளியாதே. தந்திரங்கள் செய்யாதே என்று அவர் சொல்லச் சொன்னார்’’ என உரத்தக் குரலில் பேச, ராவணன் பல் கடித்தான். ஓங்கி காலால் தரையை மிதித்தான். ‘அடேய்...’ என்று கூவினான்.

தலைவனுடைய கோபத்தை உணர்ந்து கொண்ட ராட்சஸர்கள் அங்கதன் மீது பாய்ந்தார்கள். அங்கதன் தன் இடத்திலிருந்து எகிறி அவர்களுக்கு போக்கு காட்டினான். தன்னை பிடித்தவர்களை அடித்து வீழ்த்தினான். தொடர்ந்து வந்த ராட்சஸர்களை கடுமையாக அடித்து துன்புறுத்தினான். ஒரு மாளிகையின் உச்சிக்குப் போய், அங்கிருந்து கோட்டைக்குத் தாவி பிறகு வெளியே வந்து கோசலேந்திரரான ஸ்ரீராமச்சந்திரரை வணங்கி நடந்த விஷயங்களைச் சொன்னான்.

அங்கதனுடைய வீரம் ராமருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. மனமுவந்து பாராட்டினார். தன்னுடைய மன்னர் செயற்கரிய செய்கை செய்து, ராமச்சந்திர மூர்த்தியால் பாராட்டப்படுகிறார் என்பது தெரிந்து வானர வீரர்கள் உத்வேகம் கொண்டார்கள். உற்சாகம் கொண்டார்கள். மன்னனால் முடிந்தபோது நம்மால் முடியாதா என்று நெஞ்சு தட்டிக் கொண்டார்கள். ‘கொல்லுவோம், அரக்கனை கொல்லுவோம்’ என்று வீர வசனம் எழுப்பினார்கள். இதன் பொருட்டுதான் ராமர் அங்கதனை தேர்ந்தெடுத்து அனுப்பினார். அங்கதனின் தூதால், சாமர்த்தியத்தால் அந்தப் படை உக்கரமாகியது. போருக்கு பரபரத்தது.

பல்லாயிரக் கோடிக்கணக்கான வானர வீரர்களும், தன்னுடைய வில்லின் துணையோடும் ராமச்சந்திர மூர்த்தி இலங்கையினுடைய கோட்டையின் மீது படையெடுத்தார். கோட்டை சுவரை இடித்து மண்ணோடு மண்ணாக்கினார். கோட்டையிலுள்ள அலங்கார வளைவுகளை வானர வீரர்கள் தகர்த்து எறிந்தார்கள். அபாய மணிகளை பிடுங்கி அகழியில் போட்டார்கள். கொடிகளை உடைத்து ஊருக்குள் வீசினார்கள். பாறைகளை எறியும், குண்டுகளை பொழியும் கவண் கல்லை உடைத்து அகழியில் போட்டார்கள். தங்கள் மீது ஈட்டியும், கத்தியும் வீசியவர்களை, சட்டென்று தரையில் இறங்கி கம்புகளால் ஆண் பெண் பாராது சகலரையும் அடித்து துவைத்தார்கள்.

ஓட ஓட விரட்டினார்கள். மறுபக்கம் இருந்தபடியே சரமாரியாக அம்புகளை ராமர் விட, அவை அங்குள்ள வீரர்களை தாக்கின. அங்கதனும், நீலனும், மற்றவர்களும் எந்த இடத்திற்கு அம்பு போக வேண்டும் என்று சைகை செய்ய, அந்த இடத்திற்கு ராமரும், லட்சுமணனும் இடையறாது அம்பு மாரி பொழிந்தார்கள். எங்கிருந்து அம்பு வருகிறது என்றுத் தெரியாமல் பல அரக்கர்கள் குத்துப்பட்டு இறந்தார்கள். ‘சரியான அழிவு’ என்று அங்கதன் கொக்கரித்த பிறகு அதில் சந்தோஷமடைந்த ராமர் பின்னடைந்தார்.

வானர வீரர்கள் அழிக்காத ஒரு தோப்புக்குள் வந்து தங்கினார். மாலைநேரம். வானர வீரர்கள் மதில் சுவரிலிருந்து இறங்கி பின்னடைந்தார்கள். ஆனால், எப்பொழுது வேண்டுமானாலும் யுத்தம் நடக்கும் என்று தயாராக இருந்தார்கள். தோப்புக்குள் வந்ததும் மாலை நேரத்து பேய், பிசாசங்கள் வேகமாக வந்து கற்களையும், மண்ணையும் வானர வீரர்கள் மீது வாரி இறைத்தன. கண்ணுக்குத் தெரியாதபடி இருந்து மேலே விழுந்து தொந்தரவு கொடுத்தன. வானர வீரர்கள் அலை மோதினார்கள்.

விபீஷ்ணனுக்கு அந்த அந்தர்ஜால வித்தை தெரியும். அதற்கு பதிலடி கொடுக்க, அந்த பூதங்களும், பிசாசங்களும் வானர வீரர்கள் கண்ணுக்குத் தெரிந்தன. வானர வீரர்கள் அந்த மங்கிய ஒளியில் அவர்களை கடுமையாகத் தாக்கினார்கள். அவர்கள் பிய்த்து எறியப்பட்டார்கள். மறுநாள் ராவணன் மிகுந்த கோபத்தோடு யுத்த சாஸ்திரத்தின் முறையை அறிந்து சரியான வியூகம் அமைத்து மாளிகையிலிருந்து வெளிப்பட்டு, ராமச்சந்திரமூர்த்தி தங்கியிருந்த தோப்புக்குள் வர, அங்கதன் துணையோடு ராமர் வேறுவிதமான வியூகம் அமைத்து எதிரியை எதிர்கொண்டார். ராவணனை நோக்கி அம்புகள் செலுத்தினார்.

அவன் வேகத்தை தடுத்து நிறுத்தினார். லட்சுமணன் இந்திரஜித்தோடு போர் புரிந்தான். சுக்ரீவன் விருபாட்சனோடு யுத்தம் செய்தான். தாருணன் என்னும் வானரம் விகர்ணன் என்ற அரக்கனோடு போர் செய்தான். நளன் என்ற வாரணன் கும்பன் என்பவனை எதிர்த்தான். போர், விடியும் நேரத்தில் கடுமையாக நடந்தது. ராமரை நோக்கி சூலங்களும், கத்திகளும், சக்கரங்களும் வேகமாக வந்தன. இடையறாது அம்புகளால் அவற்றைத் தடுத்துக் கொண்டிருந்தார். ராவணனை நோக்கி இரும்பு அம்புகளை செலுத்தினார்.

அவை அவனைத் தாக்கின. விபீஷணன் தன்னை தாக்க வந்த பிரகஸ்தனை தடுத்து நிறுத்தி, தன் சக்தி ஆயுதத்தால் அவன் தலையில் ஓங்கி அடிக்க, அவன் தலை உடம்பிலிருந்து துண்டாகி விழ, அவன் இறந்து தரையில் சாய்ந்தான். அவன் இறந்ததைப் பார்த்து துர்ராட்சஸன் என்ற அரக்கன், வானர வீரர்களை நோக்கி வெறி கொண்டு ஓடிவந்தான். அவன் வேகத்தைப் பார்த்து வானர வீரர்கள் பதுங்கிக் கொண்டார்கள். பின்னடைந்தார்கள்.

அந்த ராட்சஸனைத் தடுப்பதற்கு ஹனுமார் முன் வந்தார். தடுத்து தரையில் தள்ளினார். எட்டி உதைத்தார். அவர் வருவதைக் கண்டு மற்ற வானர வீரர்கள் வேகமாக தாக்கத் துவங்கினார்கள். பெரிய மரக்கிளையை உடைத்து, துர்ராட்சஸனின் தேரை உடைத்து குதிரையை நாசம் செய்தார். அவன் மீது அடிமரத்தால் ஓங்கி அடித்து நசுக்கினார். துர்ராட்சஸன் இறந்தான்.

வானரங்களும், கரடிகளும் உற்சாகமானார்கள். இன்னும் வேகத்தோடு அரக்கர்களை கொல்லலானார்கள். அடிதாங்காமல் இலங்கைக்குள் ஓடிப்போய் ராவணனிடம் முறையிட்டார்கள். அயர்ந்து தூங்கும் கும்பகர்ணனை எழுப்பும்படி ராவணன் கட்டளையிட்டான். மிகப்பெரிய பேரிகைகளும், முரசுகளும், எக்காளங்களும் வைத்து உறங்குகின்ற கும்பகர்ணனை அவர்கள் தட்டி எழுப்பினார்கள். அரைதூக்கத்தில், மயக்கத்தில் இருந்த கும்பகர்ணனைப் பார்த்து, ‘‘என் அருமைத் தம்பியே, உன்னைப் போல வீரன் இந்த உலகத்தில் எவரும் இல்லை.

போ. நம்மை துன்புறுத்துகின்ற ராமனையும், லட்சுமணனையும் தாக்கு. அடித்து துவம்சம் செய். வானர வீரர்களை இங்கிருந்து பலத்த காயங்களோடு வெளியேற்று. இது என் கட்டளை. நீ முன்னே போக, என் தம்பி வஜ்ரனும், பிராகாதியும் பெரும் சேனையோடு உன்னைத் தொடர்வார்கள். வானர வீரர்களை அடித்து நொறுக்குவார்கள்,’’ என்று உற்சாகமூட்ட, கும்பகர்ணன் சிரிப்போடு எல்லாம் தெரிந்த ஒரு முகபாவத்தோடு யுத்த களத்தில் பிரவேசித்தான்.

எங்கே வானர வீரர்கள் என்று ஆவலோடு தேடினான். அவர்கள் கும்பகர்ணனை சூழ்ந்து கொண்டார்கள். எகிறி எகிறி தாக்கத் துவங்கினார்கள். பிரமாண்டமான உருவம் கொண்ட கும்பகர்ணன், தன் புறங்கைகளால் அவர்களை ஒட்டுமொத்தமாக விலக்கினான். அவர்கள், அந்த வேகம் தாங்காமல் சுருண்டு விழுந்தார்கள். கடுமையாக அடிபட்டார்கள். வானர வீரர்களை கொத்தாகப் பிடித்து தரையில் அடித்தும், இன்னொரு கொத்தாக பிடித்து வாயில் கடித்து துப்பியும் மிகுந்த இம்சை கொடுத்தான். இம்மாதிரியான யுத்தத்தை பார்த்திராத வானர வீரர்கள் பயந்து பின்வாங்கினார்கள். உயரே தூக்கி தரையில் அடிபடுகிறபோது ஏற்பட்ட வலி தாங்காமல் அலறினார்கள்.

வானர வீரர்களின் அலறலை பார்த்து சுக்ரீவன் ஓடினான். பெரிய ஆல மரத்தை பிய்த்து எடுத்து கும்பகர்ணன் தலையில் அடித்தான். ஆலமரம் துண்டாகியது. கும்பகர்ணனுக்கு எதுவும் நேரவில்லை. சுக்ரீவனை அள்ளி எடுத்துக் கொண்டான். உச்சியில் தூக்கினான். ஓங்கி தரையில் போடுவதற்காக பிடித்துக் கொண்டான். சுக்ரீவனை கும்பகர்ணன் பிடித்துக் கொண்டதைப் பார்த்து லட்சுமணர் அங்கே ஓடினார். வில் வளைத்து தூக்கிய கைகளில் இடையறாது கூரிய அம்புகளை செலுத்தினார்.

புறங்கையில் அம்புகள் நுழைந்ததால் கும்பகர்ணன் சுக்ரீவனை நழுவ விட்டான். தனது கையால் பெரிய பாறையை எடுத்துக் கொண்டு லட்சுமணர் மீது போடுவதற்காக முயற்சித்தான். லட்சுமணர் அந்தப் பாறையையும் தன்னுடைய அம்புகளால் துளைத்துத் தூள்தூளாக்கினார். அந்தப் பக்கத்து கையையும் அம்புகளால் துளைத்தார். இரண்டு கைகளும் செயலற்று கும்பகர்ணன் வெறுமே நின்றான். அவனுக்கு மேலும் நான்கு கைகள் உண்டாயின. அந்தக் கைகளையும் லட்சுமணர் தகர்க்கத் துவங்கினார்.

அவனைக் கொல்லக் கருதி, பிரம்மாஸ்திரத்தை மனதில் நினைத்து கையில் வரவழைத்து, நெற்றியில் வைத்து கும்பகர்ணன் நெஞ்சு நோக்கி பிரம்மாஸ்திரத்தை செலுத்தினார். பெரும் ஓசையோடு வந்த அந்த பிரம்மாஸ்திரம் கும்பகர்ணன் நெஞ்சை தாக்கி இரண்டாக கிழித்தது. கும்பகர்ணன் மிகப் பெரிய சத்தத்தோடு தரையில் விழுந்தான்.

கும்பகர்ணனை தொடர்ந்து வந்த பிரம்மாதி, நீலனால் அழிக்கப்பட்டான். வஜ்ரவேகனை மலைச் சிகரத்தால் எடுத்து அடித்து நசுக்கி கொன்றான். அரக்கர்கள் ராமருடைய சைன்யத்தால் கொல்லப்பட்டார்கள். கும்பகர்ணன் இறந்ததைக் கேட்டு ராவணன் தன் மகனை அழைத்தான். இறுக அணைத்துக் கொண்டான். ‘பகைவரை அழிப்பவனே, ராம லட்சுமணரை வதம் செய். சுக்ரீவனை கொன்று போடு. நீ இந்திரனை வென்று புகழ் பெற்றவன். இவர்கள் உனக்கு இணையேயில்லை. போ.

வெறியோடு போர் செய்’ என்று உசுப்பி அனுப்பினான். இந்திரஜித் மாயையில் வல்லவன். அவன் தேரில் ஏறி லட்சுமணனை நோக்கி உள்ளே நுழைந்தான். லட்சுமணர் அவன் தேரை உடைத்தார். பாணங்களால் அவனை அடித்தார். இந்திரஜித் மாயமானான். மாயமான முறையில் நின்று வேகமாக அவர்கள் மீது பாணம் செலுத்தினான். எங்கிருந்து பாணம் எப்படி வருகிறது, எப்படி எதிர்ப்பது என்று தெரியாமல் திகைத்துப் போன ராம, லட்சுமணர் மயங்கி விழுந்தார்கள்.

அவர்களை மேலும் பாணத்தால் கட்டினான். சுஷேசணன், மைந்தன், த்வீதன், ஹனுமான், குமுதன், அங்கதன், நீலன், தாரன் மற்றும் நளனோடு சுக்ரீவன் அவ்விருவரையும் பத்திரமாக பாதுகாத்தான். விபீஷணன் அங்கு ஓடி வந்து மந்திரத்தின் மூலம் அவ்விருவரையும் நினைவுக்கு கொண்டு வந்தான். உடம்பு முழுவதும் அம்புகளால் துளைக்கப்பட்ட ராம, லட்சுமணர் வேதனைப்பட்டார்கள். சுக்ரீவன் விஷயா என்ற மந்திரத்தின் மூலம் அவர்கள் அங்கங்களில் இருந்த அம்புகளை எடுத்து ஒரு நொடியில் குணப்படுத்தி விட்டான். விஷம் நீங்க அவர்கள் துள்ளி எழுந்தார்கள்.

அப்பொழுது குபேரன் கட்டளையால், ஒரு தேவன் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொண்டு ராமரிடம் வந்தான். ‘குபேரன் இந்த நீரை எடுத்து உங்கள் கண்களை கழுவச் சொன்னார். உங்களைச் சுற்றி இருக்கின்ற மாயை நீங்க இந்த நீரை உபயோகப்படுத்தினால் மாயையால் மறைந்தவர்களை உங்களால் பார்க்க முடியும் என்று சொல்லி இதை கொடுத்து அனுப்பினார்’ என்று சொல்ல, ராமர் அந்த மந்திர நீரை எடுத்துக் கொண்டு முகம் கழுவி, லட்சுமணன், சுக்ரீவன், நீலன், ஹனுமான் எல்லோருக்கும் கொடுக்க, வானர வீரர்களும் கழுவிக் கொண்டார்கள். எல்லோருக்கும் அந்தரத்திலிருந்து போர் புரிகின்ற மாயையான வீரர்கள் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

வெற்றி பெற்ற இந்திரஜித் ராவணனிடம் போய் அலட்டிக் கொண்டான். மறுபடியும் போருக்கு வந்தான். துவம்சம் செய்வேன் என்று கொக்கரித்தான். லட்சுமணர் அவனை எதிர்கொண்டார். வேகமாக அவனை நோக்கி பாணங்களை செலுத்தினார். லட்சுமணனுக்கு கட்டுங்கடங்காத கோபம் இருந்தது. பெருத்த அகங்காரம் இந்திரஜித்திடம் இருந்தது. அவர்கள் இருவரும் மிக உக்கிரத்தோடு போரிட்டார்கள். மூன்று பாணங்களால் இந்திரஜித்தின் நெஞ்சை நோக்கி செலுத்தி லட்சுமணர் அவன் உயிரை எடுத்தார்.

அவன் தலையை உடம்பிலிருந்து துண்டித்தார். இந்திரஜித்தினுடைய சாரதியையும் லட்சுமணர் ஒரு பாணத்தால் கொல்ல, குதிரைகள் திரும்பி அரண்மனைக்கு இந்திரஜித் இல்லாமல் ஓடின. மகன் இல்லாது தேர் வருவதைப் பார்த்து ராவணன் பயத்தால் நடுங்கினான். பித்துப் பிடித்தவன்போல் ஆனான். எல்லாவற்றுக்கும் காரணம் அந்த சீதைதானே? அவளை வெட்டிக் கொன்று போடுகிறேன். அதுதான் ராமனுக்கு நான் தரும் தண்டனை என்று வாளை உருவிக் கொண்டு சீதையை நோக்கி ஓடினான்.

அப்பொழுது அபிங்ஞன் என்கிற மந்திரி ராவணனைத் தடுத்தான். ‘‘பல எதிரிகளைக் கொன்ற இந்த வாள் ஒரு அபலையை கொல்வதா? நீங்கள் போரிட வேண்டியது ராமரை நோக்கியே தவிர, கொல்ல வேண்டியது சீதையை அல்ல. உங்களிடம் கைதியாக இருப்பவரை வெட்டிப் போடுவது எந்த விதத்திலும் வீரமல்ல. உங்களுக்கு கொல்ல வேண்டுமென்றால் இவள் கணவனைக் கொல்லுங்கள். இவள் கணவனைக் கொன்றால் இவள் தானாக இறந்து விடுவாள். இந்திரனை புறமுதுகு காட்டி ஓடச் செய்த நீங்கள் இப்படி வாளோடு ஒரு பெண்ணை நோக்கிப் போவது பரிதாபமாக இருக்கிறது.’’ என்று அவன் வாளை பிடுங்கி உறையில் சொருகினான்.

மகன் இறந்த துக்கத்தில் தன் தேரில் ஏறி மிக கம்பீரமாக ராவணன் கோட்டையை விட்டு வெளியே வந்தான். அவனைச் சுற்றி பல்வேறு விதமான ராட்சஸர்கள் துணையாக வந்தார்கள். அவர்கள் கோட்டையை விட்டு வெளியே வந்ததும் வானர வீரர்கள் சூழ்ந்துகொண்டு கற்களாலும், கம்பு கட்டைகளாலும் அடித்து அந்த கூட்டத்தை ஓடச் செய்தார்கள். இடையறாது பாறைகளை எறிந்தார்கள். அப்பொழுது ராவணன் ஒரு மாயா விவகாரம் செய்தான். ராம, லட்சுமணரைப் போலவே ஆயிரக்கணக்கானவர்களை உண்டாக்கி அவர்களை வானரங்களை நோக்கி பாணங்களை விடச்செய்தான். வானர வீரர்கள் திகைத்தார்கள். ஆனால், லட்சுமணர் திகைக்கவில்லை. இது அரக்கனுடைய கூத்து என்பதை புரிந்து கொண்டு கடுமையாக அந்த உருவங்களை தாக்கினார்.

அப்பொழுது இந்திரனுடைய சாரதியான மாதலி பச்சை வர்ணமுள்ள குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி ராமனுக்கு அருகே வந்தான். இந்தத் தேரிலே ஏறி ராவணனை கொல்லுங்கள். இது இந்திரனுடைய தேர் என்று அழைக்க, ராமர் முதலில் இது அரக்கனுடைய சூட்சியோ என்று சந்தேகித்து பின் விபீஷணனிடம் விசாரித்து இது உண்மை என்றுத் தெரிந்து அந்தத் தேரில் ஏறிக் கொண்டார்.

ராமர் மீது ராவணன் பாணங்களைச் செலுத்த தன்னுடைய கூரிய அம்புகளால் ராமர் அதை துண்டு துண்டாக்கினார். தங்கத்தால் ஆன ஒரு பாணத்தை எடுத்து அதை அட்சரம் உச்சரித்து ராவணனுடைய நெஞ்சு நோக்கி அனுப்பினார். அந்த அம்பு ராவணனுடைய தேரை எரித்தது. குதிரையை எரித்தது. தேர் பாகனை கொன்றது.

ராவணனுடைய நெஞ்சு அறுத்து கீழே சாய்த்தது. ராமருடைய பிரம்மாஸ்திரத்தால் ராவணனுடைய எலும்புகளும், நரம்புகளும், தோலும் பஸ்மமாகி விட்டன. அதன் சாம்பல்கூட எஞ்சவில்லை. ராவணன் இறந்த அந்த கணமே விபீஷ்ணனுக்கு ராமர் பட்டம் கட்டினார். கோட்டைக்குள் போன விபீஷ்ணன் முக்கிய மந்திரியான அபிங்ஞனோடு சீதையை நோக்கி நடந்துபோய் கைகூப்பி அவளை வெளியே அழைத்து வந்தான். அழுக்கு படிந்த உடையும், கலைந்த தலையும், அழுத கண்களும், துவண்ட உடம்புமாக இருந்த சீதை பல்லக்கில் ஏறி
ஸ்ரீராமரை வந்து அடைந்தாள்.

‘இனிய என் மனைவியே, உன்னை ராவணனுடைய சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து விட்டேன். உன்னை கடத்திய ராவணனை கொன்று விட்டேன். கடைசிவரை, முதுமைவரை நீ அவனுடைய சிறையில் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தினாலேயே இந்த அரக்கனை நான் வதம் புரிந்தேன். ஆனால், வேறொரு புருஷனுடைய கையில் அகப்பட்டு, ஒரு நாழிகை நேரத்திற்கு மேலே இருந்த பெண்ணை மறுபடியும் ஏற்றுக் கொள்வது என்பது எங்ஙனம்? நீ தூய்மை உள்ளவளா, தூய்மையற்றவளா என்பது எனக்கு முக்கியமல்ல. ஆனால், நான் உன்னை ஏற்க முடியாது. நாய் நக்கிய அவிஸை யாரும் ஏற்பதில்லை’ என்று சொல்ல, சீதை கவலையடைந்தாள். துவண்டு சரிந்தாள்.

(தொடரும்)