ஜோதியாய் ஒளிவிட்டது!



- உள்ள(த்)தைச் சொல்கிறோம் 

இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கவும் எல்லாம் அவன் செயல் என்றும் பெரியோர்கள் சொன்னதை மிக எளிமையாக மனதில் கொள்ளும்படியாக, அதே சமயம் வித்தியாசமாக அளித்த பொறுப்பாசிரியரின் தலையங்கம் ஒவ்வொருவருக்கும், மனமுதிர்ச்சியையும்,
விழிப்புணர்வையும் அளிப்பதாக அமைந்தது.
- கே.ஆர்.எஸ். சம்பத், திருச்சி-620017.

அபூர்வ ஸ்லோகம் பகுதியில் வாழ்வாங்கு வாழ வைக்கும் வாமன அவதாரம் மற்றும் திரிவிக்ரம அவதார ஸ்லோகங்களை பொருளுடன் வழங்கியது வாசகர்கள் புரிந்து படிக்க வசதியாக இருந்தது. அற்புதமான இச்ஸ்லோகங்களை  ஓணம் பண்டிகை நடைபெறும் இத்தருணத்தில் வெளியிட்டதற்கு நன்றி.
- K. சிவக்குமார், சீர்காழி.

மருத்துவ குணமிகுந்த முப்புரி வலம்புரி சங்கு மற்றும் ஆலயச் செய்திகள் படித்து வியந்தேன். இறைவன் அருளில்தான்
எத்தனை விந்தைகள்! இறை உருவங்களை வழிபடுவதால் நன்மைகள்தான் என்று படித்ததும், ஆன்மிக உணர்வு இதயத்தில் ஜோதியாய் ஒளிவிட்டது.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை-6

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற செய்தியை திருப்பூராரின் கட்டுரைத் தெளிவாகத் தந்தது.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

பொறுப்பாசிரியர் சோதனைகளின் அருமை, பெருமைகளோடு, சோதனையை எதிர்கொண்டாலும் அவற்றிலிருந்து மீண்டு பெருமை கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் கூறியிருப்பது, மீண்டும் மீண்டும் படித்து, நல்வழிப்பாதைக்குத் திரும்பச் செய்கிறது.
- வா.மீனாவாசன், சென்னாவரம்.

ஓணம் திருவிழா தருணத்தில் மலையாள தேசத்தில் மகத்துவம் நிறைந்த திவ்ய தேசத் திருத்தலங்களை தரிசிக்க வைத்த வளர ஜோராணும்! (ரொம்ப அருமை). நோய்களை அகற்றும் மருந்தீஸ்வரரை திருவான்மியூர் திருத்தலத்தில் மட்டும் தரிசித்துள்ளோம். தஞ்சை பேராவூரணியில் மருங்கப்பள்ளம் என்ற கிராமத்தில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தை தரிசிக்க வைத்த கட்டுரை மகிழ்ச்சியான இறை அனுபவம். ‘திருவோணத் திருநாளில் திருமால்தாள் பணிவோம்’ என்று பக்தர்களை பணிக்க வைத்திடும் விஷ்ணுதாசனின் கவிதை ஓணம் சிறப்பிதழுக்கு மேலும் மணம் சேர்த்துவிட்டது!
 - அயன்புரம் த.சத்திய நாராயணன், சென்னை-72.

மூன்றடி மண் கேட்ட பெருமானின் திருஉருவ அட்டைப்படம் முதல் அவனது அவதார ஸ்லோகங்கள் மற்றும் பிற விஷயங்கள் எல்லாம் அற்புதம். திருவல்லவாழ், திருவண்வண்டூர், திருவாரண்முளா, திருக்காட்கரை ஆகிய நான்கு கேரளத் திருத்தலங்களின் மகத்துவத்தை விரிவாகப் படித்தது சுவையான சாக்கப்ரதமன் (பலாப்பழ பாயசம்) சுவைத்த மகிழ்ச்சியைத் தந்தது.
- சிம்ம வாஹினி, வியாசர்பாடி.

 எக்காலத்திற்கும் ஏற்ற கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்கிறது ‘அர்த்தமுள்ள இந்துமதம்.’ நாட்டில் ஆன்மிகம் தழைக்கவென்றே இறைவன் கவியரசு கண்ணதாசனைப் படைத்தார், போலும்! அனைவர் இல்லங்களிலும் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டிய நல்ல நூல், அர்த்தமுள்ள இந்துமதம்.
- எம்.லோகநாதன், சிகரலப்பள்ளி- 635104.

அபூர்வ ஸ்லோகங்கள் பகுதியில், நாராயண பட்டத்ரி இயற்றிய நாராயணீயத்தில் வாமன-திருவிக்ரம அவதார ஸ்லோகங்கள் அளித்தது வெகு சிறப்பு. ஸ்லோகங்களுக்குத் தமிழில் பொருளையும் தந்து  வாழ்வில்  உயரத்தை எட்ட வாசகர்களுக்கு வாய்ப்பளித்த ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுக்கள்.
- பாபு கிருஷ்ணராஜ், கோவை- 2.

நேரில் சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்கு, கேரள திவ்யதேசத் திருத்தலங்களில் சிலவற்றை படங்களுடன் படித்து, நேரிலேயே தரிசித்த திருப்தியை ஏற்படுத்திய ஆன்மிகம் பலனுக்கு என்றும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.