பகைவரை விரட்டப் புறப்படும் பெருமாள்



- சதுரங்கப்பட்டினம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் சதுரங்கப்பட்டினம் முற்காலத்தில் சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியிருக்கிறது. இங்கே தொன்மை வாய்ந்த, தனிச்சிறப்புகள் கொண்ட, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மலைமண்டலப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலை நோக்கி அனுமன் சந்நதி அமைந்துள்ளது. இதற்கு அடுத்தாற்போல தீபத்தூண் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவாயிலின் இடதுபுறத்தில் விநாயகப் பெருமானும் வலதுபுறத்தில் நாகராஜரும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். கோயிலுக்குள் நுழைந்ததும் பலிபீடமும் அடுத்து கொடிமரமும் அமைந்துள்ளன. மலைமண்டலப் பெருமாளை நோக்கியவண்ணம் அஷ்டநாக கருடன் சந்நதி அமைந்துள்ளது. இதற்கு இடதுபுறத்தில் ஸ்ரீலஷ்மி நரசிம்மர் சுதைச்சிற்பமும் வலதுபுறத்தில் ஸ்ரீலஷ்மிநாராயணர் சுதைச்சிற்பமும் காணப்படுகின்றன. 

மகாமண்டபத்தில் பெருமாளுக்கு வலப்பக்கம் ஸ்ரீநர்த்தனகிருஷ்ணர் கொலுவிருக்கிறார்; இடப்பக்கம் ஸ்ரீலட்சுமி நாராயணர், மகாலட்சுமித் தாயாரோடு காணப்படுகிறார். இவருக்கு அருகில் ஸ்ரீகோதண்டராமரும் ஆழ்வார்களும் காட்சியளிக்கிறார்கள். கர்ப்பக்கிரக நுழைவுவாயிலில் துவார பாலகர்களான ஜயன் விஜயரைக் காணலாம். பொதுவாகப் பெருமாள் கர்ப்பகிரக நிலைப்படியில் வழக்கமாக கஜலட்சுமியின் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு, யோகநரசிம்மரின் புடைப்புச் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. அந்தராளத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் திவ்ய ரூபங்களைத் தரிசிக்கலாம். இங்குள்ள ஆஞ்சநேயர் உற்சவர் சிலை, விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இவரை மனமுருகிப் பிரார்த்தித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

கோயில் மூலவர் மலைமண்டலப் பெருமாள் என்றழைக்கப்படும் கிரிவரதர். ஸ்ரீதேவி-பூதேவியோடு நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறை சற்று மேடான பகுதியில் அமைந்துள்ளது. இவருடைய வலது கரத்திலுள்ள சக்கரம் சற்று சாய்ந்து, புறப்படும் நிலையில் அமைந்துள்ளது. பெருமாள் தனது ஒரு காலை சற்று முன்வைத்த நிலையில் காணப்படுகிறார்.

தன் பக்தர்களின் பகைவர்களை விரட்டி அடிக்கப் புறப்படும் தோற்றம் இது என்று நயமாகக் குறிப்பிடுகிறார்கள். பெருமாளின் திருவடியும், கருடபகவானின் திருமுடியும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பு. உற்சவர் ஸ்ரீவரதராஜப் பெருமாள் என்ற திருநாமம் தாங்கி ஸ்ரீதேவி-பூதேவித் தாயார்களோடு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் தாயார் ஸ்ரீபெருந்தேவித்தாயார் என்ற பெயரில் திருவருள் புரிகிறார்.

பெருமாளை உளமுருகி வணங்கி வெளியே வந்தால் இடதுபுறத்தில் தலவிருட்சமாக அரசும் வேம்பும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. அடுத்து ஸ்ரீவிஷ்ணு துர்க்கை சந்நதி. இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெருந்தேவித்தாயார், ஆண்டாள் இருவரும் தனித்தனி சந்நதி கொண்டு திகழ்கிறார்கள். இவர்களைத் தரிசித்துச் சென்றால், ஆழ்வார்களையும், ஸ்ரீரங்கநாதரையும் அடுத்தடுத்த சந்நதிகளில் வணங்கி மகிழலாம். 

இங்குள்ள அஷ்டநாக கருடபகவான் தனிச்சிறப்பு வாய்ந்தவராய் கருதப்படுகிறார். தலையில் ஒன்று, இரு காதுகளில் ஒவ்வொன்று, மார்பில் மாலையாய் இரண்டு, இருதோள்களிலும் ஒவ்வொன்று, இடுப்பில் அரைஞாண்கயிறாக ஒன்று என எட்டு நாகங்களை அணிந்துகொண்டு அருள்செய்கிறார். இத்திருக்கோயிலில் கலைவேலைப்பாடுகளுடன் அமைந்த புராதனமான ஒரு விளக்கு உள்ளது. விளக்கின் அடிப்பாகத்தில் ஆறு கிளிகளும் மேற்புறத்தில் நான்கு கருடன்களும் நான்கு மணிகளும் அமைந்து மிகவித்தியாசமாகத் திகழ்கிறது இந்தத் திருவிளக்கு.

இவ்விளக்கில் நெய்யிட்டு தீபமேற்றி பிராத்தித்துக் கொண்டால் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை. தை வெள்ளி மற்றும் ஆடி வெள்ளிகளில் தாயார் ஊஞ்சல் சேவை, மாசிமகத்தன்று சமுத்திரத்தில் தீர்த்தவாரி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள், வைகுண்ட ஏகாதசி,  பகல்பத்து  உற்சவம், ஆழ்வார்கள் ஆச்சாரியார்களின் திருநட்சத்திர உற்சவம், ஆடிப்பூரம் ஆண்டாள் உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை, பங்குனி உத்திரம் பெருமாள் மற்றும் தாயார் சிறப்பு பூஜை மற்றும் ஊஞ்சல் போன்றவை இத்திருக்கோயிலில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.  

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ஸ்ரீராம நவமி விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. காலை ஏழு முதல் பதினோரு மணிவரையும், மாலை ஐந்து முதல் இரவு எட்டு மணிவரையும் கோயில் திறந்திருக்கும். தொன்மை வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி மிகவேகமாக நடைபெற்று வருகிறது.

மலைமண்டலப் பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே ஸ்ரீராகவேந்திரர் கோயில், பழமையான சிவன் கோயில் மற்றும் சற்றுத் தொலைவில் மெய்யூரில் பழம்பெருமை வாய்ந்த வெள்ளீஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன. திருக்கழுக்குன்றம்-கல்பாக்கம் வழித்தடத்தில் அமைந்துள்ள சட்ராஸ் என்றழைக்கப்படும் சதுரங்கப்பட்டினத்தில் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சதுரங்கப்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு. செங்கற்பட்டிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

- ஆர்.வி.பதி