நவராத்திரி விரதமும், பூஜையும் நம் வழக்கத்தில் வந்தது எவ்வாறு?



திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

- கே.வெங்கடேசன், குரோம்பேட்டை.

ஒரு வருடத்தில் நான்கு முறை நவராத்திரி வருவதாகச் சொல்வார்கள் - சித்திரை மாதத்தில் வஸந்த நவராத்திரி, ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, மாசியில் சியாமளா நவராத்திரி. இவற்றில் புரட்டாசி மாதத்தில் வருகின்ற மஹாளய அமாவாசைக்கு மறுநாள் முதல் துவங்கும் சாரதா நவராத்திரியே நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விரதம் என்பது வியாச மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவின் குமாரன் ஜனமேஜயன் என்னும் மன்னனுக்கு உபதேசித்ததன் மூலமாக இந்த உலகிற்குத் தெரிய வந்ததாகக் கூறுவார்கள்.

வட இந்தியாவில் துர்கா பூஜா என்றும், தென்னாட்டில் நவராத்திரி என்றும், மைசூர் உள்ளிட்ட இதர பகுதிகளில் தசரா என்றும் பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது நாட்களில் அம்பிகையின் அம்சமான ஒன்பது தேவியர்கள் கீழ்காணுமாறு வரிசைப்படுத்தப்படுகிறார்கள். முதல்நாள் - மாஹேஸ்வரி, 2ம்நாள் - கௌமாரி, 3ம் நாள் - வாராஹி, 4ம்நாள் - மஹாலக்ஷ்மி, 5ம் நாள் - வைஷ்ணவி, 6ம் நாள் - இந்திராணி, 7ம் நாள் - மஹாசரஸ்வதி, 8ம் நாள் - நாரசிம்ஹி. 9ம் நாள் - சாமுண்டி.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியர் முதன்மை பெறுவதாகவும், மற்ற தேவியர் அவர்க்கு துணைசெய்யும் பரிவாரங்களாக இருப்பதாகவும் கூறுவர். ஒவ்வொருவரையும் தனித்தனியே வழிபட இயலாதவர்கள் எட்டாம் நாளான துர்காஷ்டமி நாளில் ஒன்பது தேவியர்க்கும் சேர்த்து விசேஷ பூஜை செய்வது நன்மையைத் தரும். பூஜா முறையைப் பற்றித் தெரியாதவர்கள் ஆயுதபூஜை நாளன்று துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூவரையும் பூஜை செய்து வணங்கினாலே எல்லா தேவர்களையும் வழிபட்டதற்கான பலன் வந்து சேரும் என்பது ஆன்மிகப் பெரியோர்களின் வாக்கு. அதனாலேயே ஜாதி, மத பேதமின்றி நாம் அனைவரும் ஆயுதபூஜையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறோம்.

* விநாயகர் சதுர்த்தி என்பது ஸ்ரீராமநவமி, கோகுலாஷ்டமி போன்று வீட்டுப் பூஜையறையில் செய்ய வேண்டிய பூஜைதானே, அதனை விடுத்து சாலையோரங்களில் பெரிய சிலைகளை வைத்து வழிபட்டு அதனைக் கொண்டுபோய் கடலில் கரைக்க வேண்டிய அவசியம் என்ன?
- இரா. செங்குட்டுவன், திருவான்மியூர்.

விநாயகர் சதுர்த்தி பூஜையை பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடும் வகையில் பொதுவிழாவாக மாற்றியவர் லோகமான்யர் என்று போற்றப்படும் பாலகங்காதர திலகர். ஆங்கிலேயர் தங்களது ஆட்சிக்காலத்தில் இந்திய மக்களிடையே இருந்த ஜாதிப்பிரிவினையைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களை வலிமைப்படுத்திக் கொண்டிருந்த காலம் அது.

பிரித்தாளும் கொள்கையின் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயருக்கு எதிராக மக்களிடையே ஒற்றுமையுணர்வு உண்டாகவேண்டும் என்ற எண்ணத்தில் திலகரால் கி.பி. 1893ல் உருவாக்கப்பட்ட நடைமுறை இன்றுவரை தொடர்கிறது. ஒரு பொதுஇடத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகப்பெருமானின் திருவுருவத்தை அமைத்து, அதற்கு பத்து நாட்கள் பூஜை செய்து சதுர்த்தசி நாளன்று கடலில் கரைக்கும் பழக்கத்தினை உருவாக்கினார்.

இதனால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற பேதம் நீங்கி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் வழிமுறை பிறந்தது. ஆன்மிக வழியில் உண்டான சமுதாயப் புரட்சியாகவே இதனை வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் என்றழைக்கப்படும் வேதிப்பொருட்களால் தற்போது விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு அதனை கடலில் சென்று கரைக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற உங்கள் கேள்வியின் பின்னணியில் உள்ள வருத்தம் நியாயமானதே. களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துங்கள். இதுபோன்று பொதுமக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் திருவிழாக்களால் மக்களிடையே ஒற்றுமை உணர்வு கூடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

* நவராத்திரி என்பது அம்பிகைக்கு உரிய பூஜைதானே! அப்படியிருக்க கொலுவில் அம்பிகையின் பொம்மைகளை மட்டும் வைத்து வழிபடாமல் எல்லா தெய்வங்களின் உருவங்களையும் வைத்து பூஜை செய்வதன் காரணம் என்ன?
- சுந்தர.இராமமூர்த்தி, திருச்சி.

நவராத்திரிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. ராமநவமி, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, மஹாசிவராத்திரி ஆகிய விசேஷ நாட்களில் அந்தந்த நாளுக்குரிய தெய்வத்தை மட்டும் பூஜை செய்கிறோம். ஆனால் இந்த நவராத்திரி நாட்களில் மட்டும் எல்லா கடவுளர்களின் திருவுருவங்களையும் பதுமைகளாக படிகளில் வைத்து பூஜை செய்கிறோம்.

மஹிஷாசுரனை அழிக்க வேண்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், முப்பெருந்தேவியர், விநாயகர், சுப்ரமணியர், நவகிரஹங்கள், ஏனைய தேவர்கள் மற்றும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் என அனைவரின் அம்சங்களிலிருந்தும் தோன்றிய ஒளிச்சக்தியானது ஒன்றிணைந்து அகில உலகத்தையும் காக்கும் தாயாக அம்பிகை உருவானாள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக புல், பூண்டு தாவரங்கள், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நிலவாழ் மிருகங்கள், மனிதர்கள், தேவர்கள், கடவுளர்கள் என வரிசையாக படிக்கட்டுகளில் பதுமைகளை வைத்து மத்தியில் நடுநாயகமாய் அம்பிகையின் பொம்மையையும் வைத்து வழிபடுகிறோம்.

ஆக ஒரு வருடத்தில் வருகின்ற மற்ற விசேஷ நாட்களில் அந்தந்த தேவதைகளைத் தனித்தனியாக பூஜிக்க இயலாதவர்கள் கூட இந்த நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடுவதன் மூலம் எல்லா கடவுள்களையும் வழிபட்ட பலனை அடைய முடியும்.

“யாசண்டீ மது கைடப ஆதி தைத்ய தனனீ யா மாஹிஷ உன்மூலினீ
யா தூம்ரேக்ஷண சண்ட முண்ட மதனீ யா ரக்தபீஜாசனீ
சக்தி: சும்ப நிசும்ப தைத்ய தனனீ யா சித்தி தாத்ரீ பரா
சாதேவீ நவகோடி மூர்த்தி ஸஹிதா மாம் பாது விச்வேஸ்வரீ ”

- என்ற அம்பிகையின் தியான ஸ்லோகத்தின் மூலம் ‘மது-கைடபர், மஹிஷாசுரன், தூம்ரலோசனன், சண்டன், முண்டன், ரக்தபீஜன், சும்பன், நிசும்பன் ஆகிய அசுரர்களை அழித்தவளும், ஒன்பது கோடி உருவங்களைத் தாங்கி தெய்வீகத் தன்மை பெற்றவளும், உலகத்தின் தாயாகவும் விளங்கும் சண்டி நம்மைக் காப்பாளாக’ என பிரார்த்தனை செய்வோம்.

* துர்காஷ்டமி நாளின் தனிச்சிறப்பு என்ன?
- பார்வதி ராமநாதன், பழங்காநத்தம்.

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் மிக விசேஷமானதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. துர்காஷ்டமி, மஹாநவமி, விஜயதசமி என்று போற்றப்படும் இந்த மூன்று நாட்களில் அம்பிகையை ஆத்மார்த்தமாய் பூஜித்து அநேகம்பேர் சொல்வதற்கரிய பலன்களைப் பெற்றுள்ளனர். குறிப்பாக துர்காஷ்டமி என்றும், மஹாஷ்டமி என்றும் வீராஷ்டமி என்றும் நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகின்ற நவராத்திரியின் எட்டாம் நாள் அபரிமிதமான சக்தியைப் பெற்ற நாள் என்பது அனுபவ பூர்வமாக பலரும் அறிந்த உண்மை.

வராஹ புராணத்தில் அக்ஞான ரூபமான மஹிஷன், அம்பிகை எனும் ஞானத்தினால் அழிக்கப்படுவதால் துர்காதேவியானவள் ‘ஞானசக்தி’ என்று போற்றப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மஹிஷாசுரனோடு யுத்தம் நடந்த காலத்தில் இந்த துர்காஷ்டமி நாளன்று சண்ட முண்டர்களையும், ரக்தபீஜன் என்ற அரக்கனையும் அடியோடு நாசம் செய்வதற்காக துர்காதேவியின் நெற்றியிலிருந்து காளிதேவி தோன்றியதாகச் சொல்வார்கள்.

கொல்கத்தா போன்ற நகரங்களில் துர்காஷ்டமி நாளன்று மிக விசேஷமாகக் காளி பூஜை செய்யப்படுவதை இன்றும் காண்கிறோம். அன்றைய தினத்தில் துர்காதேவியின் 64 யோகினிகளும், பிராஹ்மி, மாஹேஸ்வரி, மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டா ஆகிய அஷ்ட சக்திகளும் ஒன்றாக இணைந்து செயல்படுவதாக அம்பிகை உபாசகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் துர்காதேவியின் மற்ற வடிவங்களான சைலபுத்ரி, பிரஹ்மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, காலராத்ரீ, மஹாகௌரீ, சித்திதாத்ரி ஆகிய நவதுர்கைகளும் ஒன்றாக இணைந்து துர்காஷ்டமி நாளன்று நமக்கு அருள்புரிவதாகச் சொல்வார்கள். இவர்களில் குறிப்பாக சித்திதாத்ரி தேவியானவள் அஷ்டமாசித்திகள் எனப்படும் அனிமா, மஹிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகம்யா, ஈஸித்வம், வஸித்வம் ஆகிய எட்டு சித்திகளையும் தன்னகத்தே கொண்டவள். சிவபெருமான் துர்காஷ்டமி நாளில் ஆதிபராசக்தியைப் பிரார்த்தித்து இந்த அஷ்டமாசித்திகளை அடைந்ததாக தேவிபுராணம் கூறுகிறது.

மஹிஷாசுரமர்த்தினி, துர்கமன் என்ற அசுரனை அழித்ததால் துர்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். சர்வ துக்கங்களையும் போக்கிடும் இந்த துர்காதேவியானவள் அவளது உபாஸகர்களால் சூலினி துர்கா, வனதுர்கா, சாந்தி துர்கா, ஜாதவேத துர்கா, தீபதுர்கா, ஜ்வாலா துர்கா, ஆசுரீ துர்கா என்று விதவிதமான ஸ்வரூபங்களில், மந்திரங்களால் பலவிதமாகப் போற்றப்படுகிறாள்.

துர்கா பூஜையில் ஈடுபடுபவர்களுக்கு கடன், சோகம், பிசாசு ஆகியவை அருகில் அண்டாது என்றும், துர்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன் புத்திர, பௌத்திர விருத்தியையும், சுபிட்சத்தையும், தன விருத்தியையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான் என்றும், ஸர்ப்பங்கள், ராட்சஸர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவை யாவும் துர்கையின் பக்தனை பார்த்த மாத்திரத்திலேயே திசைமாறி ஓடுகின்றன என்றும் தேவி பாகவதத்தில் வியாஸ பகவான் கூறுவதே இதற்கு ஆதாரம் என்று தேவி உபாஸகர்கள் கூறுகிறார்கள்.

மேலும் துர்கா எனும் சப்தத்திலேயே தகாரம், உகாரம், ரேபம், ககாரம், ஆகாரம் என்ற ஐந்து வர்ணங்கள் இருப்பதாகவும், இவற்றில் தகாரமானது அசுரர்களின் அழிவையும், உகாரம் விக்ன நாசனத்தையும், ரேபம் ரோக நாசத்தையும், ககாரம் பாபம் தொலைவதையும், ஆகாரம் பயம் சத்ரு இவற்றின் அழிவைக் குறிப்பதாகவும், ஆக துர்கையின் பெயரை உச்சரிப்பவன் மேற்சொன்ன பலன்களை அடைவான் என்பது நிதர்சனமான உண்மை என்றும் கூறுகிறார்கள். 

ஆக சத்ரு (எதிரி), ரோகம் (நோய்), ருணம் (கடன்), ஆவி போன்ற அமானுஷ்ய சக்திகளால் உண்டான தொல்லைகள், சித்த பிரமை, பில்லி, சூனியம், ஏவல், பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாக தோஷம், புத்திர தோஷம் இன்ன பிற குறைகளாலும் அவதிப்படுபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறையே வருகின்ற சர்வசக்தி படைத்த இந்த துர்காஷ்டமி நாளன்று (28.09.2017) துர்கைக்காக விரதம் இருந்து விசேஷமான முறையில் அவரவர் இல்ல புரோகிதர்களைக் கொண்டு தங்கள் சக்திக்கு இயன்ற அளவில் பூஜை செய்தால் சர்வ தோஷங்களும் விலகி அம்பிகையின் அருளால் வாழ்வில் வளம் பெற முடியும்.

* நவராத்திரி சமயத்தில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் பூஜை செய்து வழிபட இயலாதவர்கள் பயன் பெறும் வகையில் எளிய வழிபாட்டு முறை உள்ளதா?
- குமாரசுப்ரமணியம், திருவதிகை.

நவராத்திரி சமயத்தில் ஒன்பது நாட்களும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுதபூஜைக்கு மறுநாள், விஜயதசமி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து கீழ்காணும் ஸ்லோகத்தினை 18 முறை சொல்லி வழிபடுவதால் முழுமையான பலனை அடையலாம்.

துர்கா துர்கார்த்தி ஸமநீ துர்கா பத்வி நிவாரிணீ
துர்கமஸ்சேதிநீ துர்காஸாதிநீ து:க்க நாஸிநீ
துர்கதோத்தாரிணீ துர்கநிஹந்த்ரீ துர்க மாபஹா
துர்கமக்ஞாதா துர்க தைத்யலோக தவாநலா
துர்கமாகா துர்கமாலோகா துர்க்காத்ம ஸ்வரூபிணி
துர்க்கமார்கப்ரதா துர்கமவித்யா துர்கமாஸ்ரிததுர்கமக்ஞாத ஸம்ஸ்தாநா துர்கமத்யாந பாஸிநீ
துர்கமோஹா துர்கமஹா துர்கமார்த்த ஸ்வரூபிணி
துர்கபீமா துர்கபாமா துர்கமா துர்கதாரிணீ
ஜயதுர்கே ஜயதுர்கே ஜயதுர்கே பாஹிமாம்.
ஜயதுர்கே ஜயதுர்கே ஜயதுர்கே ரக்ஷமாம்..

இவ்வாறு பாராயணம் செய்து, பல்வகைப் பழங்களை நைவேத்யம் செய்து வணங்கினாலேயே போதும். பக்தியுடன் கூடிய பிரார்த்தனையை அம்பிகை நிச்சயம் நிறைவேற்றுவாள்.

* நாலாம் பிறையைப் பார்த்தால் நாய்படாத பாடுபடுவான் என்று சொல்வதன் காரணம் என்ன?
- ஆர். சம்பத்குமார், திருவானைக்காவல்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையை அடுத்து வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் சந்திரனைக் காண்பவர்கள் தொல்லைக்கு ஆளாவார்கள் என்று நம்பப்படுகிறது. ‘நாலாம்பிறையைப் பார்த்தால் நாய்படாதபாடு படுவான்’ என்று கிராமத்துப் பெரியவர்கள் சொல்வார்கள். அதனால்தான் அமாவாசை கழித்த இரண்டாவது நாளே சந்திர தரிசனம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நாளில் சந்திரனை தரிசித்தவர்கள் அடுத்து வரும் நான்காம்பிறையில் சந்திரனைக் காண நேர்ந்தாலும் தோஷம் உண்டாகாது.

நான்காம்பிறை நாளில் சந்திரனைக் கண்டால் தோஷம் உண்டாகும் என்ற கருத்து புராணக் கதைகளில் இருந்து பரவியிருக்கிறது. விநாயக சதுர்த்தி விழாவில் ஆனந்தக் கூத்தாடிய விநாயகப்பெருமானின் திருவுருவத்தைக் கண்டு சந்திரன் பரிகாசம் செய்ய, தனது
ஒளியினையும், அழகினையும் இழந்து அழிந்துபோகக் கடவது என்ற சாபத்தினை சந்திரன் பெற்றார். அவரது சாப விமோசனத்திற்காக, பிரம்மாவின் ஆணைப்படி தேவகுருவான ப்ருஹஸ்பதி சந்திரனுக்கு சதுர்த்தி விரதத்தினை உபதேசித்தார். முறைப்படி பூஜை செய்த சந்திரன்,

“த்வம் காரணம் காரண காரணாநாம் வேத்தாஸி வேத்யம் ச விபோ ப்ரஸீத  
ப்ரஸீத தேவேஸ ஜகந்நிவாஸ கணேச லம்போதர வக்ரதுண்ட
விரிஞ்சி நாராயண பூஜ்யமாந க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம்”

-என்று பிரார்த்தனை செய்தார். இதனால் மனம் மகிழ்ந்த விநாயகப் பெருமான், நான்காம் பிறை நாளில் மட்டும் சந்திரனைக் காண்பவர்கள் அந்த வருடம் முழுவதும் தொல்லைகளை அனுபவிப்பர் என்று தனது சாபத்தின் வீரியத்தைக் குறைத்துக்கொண்டார். இந்தக் கருத்தினை மெய்ப்பிக்கும் விதமாக ஸ்காந்த புராணத்தில் வரும் நந்திகேஸ்வர - சநத்குமார ஸம்வாதத்தில் ‘சியமந்தக உபாக்யானம்’ என்ற அத்தியாயத்தில் கிருஷ்ண பகவான் குறித்த ஒரு கதை இடம்பெற்றிருக்கிறது.

ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணன், ஸ்யமந்தகமணி என்ற அபரிமிதமான ரத்தினத்தின் மேல் ஆசை கொண்டு, தனது உறவினன் என்றும் பாராமல் சததன்வா என்ற யாதவனைக் கொன்றதாக பலராமனாலும், யாதவ மக்களாலும் தூற்றப்பட்டு, வீணான அவப்பெயரை அடைந்தாராம். இவ்வாறு அவர் மீது வீண்பழி வரக் காரணம் அவர் பாத்ரபத சுக்ல சதுர்த்தி நாளில் சந்திரனைக் கண்டதே ஆகும் என்று நாரதர் கிருஷ்ணனிடம் சொல்ல, கிருஷ்ண பரமாத்மா முறைப்படி சித்திவிநாயகப் பூஜை செய்து தனக்கு உண்டான அவப்பெயர் நீங்கப்பெற்றதாக சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு நான்காம் பிறையில் தவறுதலாக சந்திரனை தரிசிக்க நேர்ந்தால், ஒரு பாத்திரத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு, “ஸிம்ஹ ப்ரஸேனமவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத:  சுகுமாரக மா ரோதீஸ்த்வ ஹோஷ் ச்யமன்தக:” என்ற ஸ்லோகத்தினை ஜபித்து தீர்த்தத்தினை உட்கொள்ள வேண்டும் என்ற பரிகாரமும் அதே புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதைவிட எளிய பரிகாரமாக, நான்காம் பிறையில் சந்திரனைக் காண நேர்ந்தால் விநாயகரைப் பூஜித்த நிர்மால்யத்தினைக் கொண்டு அதாவது, பூஜை செய்த அறுகம்புல் அல்லது மலர்களை சந்திரனை நோக்கித் தூவி, விநாயகப் பெருமானை பிரார்த்தனை செய்துகொண்டால் தோஷம் நீங்கும், அவப்பெயர் உண்டாகாது என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள். எப்படி ஆகினும், சந்திரனைக் காணும்
போதெல்லாம் விநாயகப் பெருமானின் நினைவு நமக்கு வந்தால் நன்மைதானே.!

-  கே.வெங்கடேசன், குரோம்பேட்டை.