அடியார் துணையுடன் இறையருள் பெறலாம்!



திருமூலர் மந்திர ரகசியம்

அன்பான மனது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. இதில் பாதி இருக்கிறது; மீதி இல்லை. அதாவது, மனது இருக்கிறது; அதில் அன்பு இல்லை. எளிமையாகச் சொல்வதானால், பர்ஸ் இருக்கிறது, அதில் பணம் இல்லை!

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரான ‘டால்ஸ்டாய்’ 1885ம் ஆண்டு எழுதிய கதை இது: சிறு கிராமம் ஒன்றில், தோல்பொருள் தயாரிக்கும் பணியாளர், மார்ட்டின். மனைவி மக்களை எல்லாம் இழந்த அவர், முதுமையால் தளர்ந்துபோயிருந்தாலும், அன்பில் தளர்வு இல்லாதவராக இருந்தார்.

தெய்வ பக்தியிலும், இறை அருளிலும் அழுத்தமான பிடிப்பு கொண்ட அவர், தன்னைத் தேடி வருபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கொடுத்து அவர்களை ஆதரிப்பார். அப்படிப்பட்ட மார்ட்டினுக்கு தன்னைப் படைத்துக் காப்பாற்றும் தெய்வத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதைத் தினந்தோறும் இறைவனிடம் முறையிட்டும் வந்தார்.

ஒரு நாள் அவர் கனவில் கடவுள் வந்தார். ‘‘மார்ட்டின்! நாளை உன்னை நான் பார்க்க
வருகிறேன்’’ என்றார்.மார்ட்டினுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மறுநாள் பொழுது விடிந்ததும், தன்னைக் காணவரும் தெய்வத்தை வரவேற்கத் தயாராக இருந்தார். பகல் பொழுது முடிந்து இரவு பத்து மணியும் ஆகிவிட்டது. பகவான் வந்த பாடில்லை. ‘‘தெய்வம் இப்படி ஏமாற்றி விட்டதே’’ என மனம் உடைந்தார் மார்ட்டின். அப்போது ஓர் அசரீரி கேட்டது: ‘‘என்ன மார்ட்டின்! உன் ஆசை நிறைவேறியதா?’’மார்ட்டின் திகைத்தார்.

‘‘தெய்வமே! வருவதாகச் சொல்லி விட்டு, வராமல் ஏமாற்றி விட்டீர்கள். அதன் பிறகும் இப்படிக் கேட்கிறீர்களே! இது என்ன நியாயம்?’’ என முறையிட்டார்.தெய்வம் பதில் சொல்லியது ‘‘மார்ட்டின்! இன்று காலை முதிர்ந்த வயதுடைய சிப்பாய் ஒருவன் வந்தான். அவனுக்கு நீ ரொட்டியும், டீயும் தந்தாய். அவன் யாரென்று நினைத்தாய்? மதியவேளையில் கைக்குழந்தையுடன் ஏழைப் பெண் ஒருத்தி உன்னைத் தேடி வந்தாள். பசியுடன் வந்த அவளுக்கு உணவளித்து, அவள் குழந்தைக்குப் பால் தந்து, குளிரிலிருந்து தப்பிக்க அந்த ஏழைப் பெண்ணுக்கு ஒரு போர்வையும் தந்தாயே! அவள் யாரென்று நினைத்தாய்?

இன்று மாலை, பழம் விற்றுக் கொண்டிருந்த கிழவியிடம், பழம் திருடிப் பிடிபட்ட சிறுவனுக்காகப் பரிந்து பேசி, அவனை அடிபடாமல் காத்து அவனுக்கு நற்புத்தி சொல்லித் திருத்தி, அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தாயே! அந்தச் சிறுவனை யாரென்று நினைத்தாய்? வயதான சிப்பாயாக, ஏழைப் பெண்ணாக, திருந்தாத சிறுவனாக வந்தவன் நான் தான்! என்னைத் தெரிந்து கொள்ளவில்லையா நீ?’’ எனக் கேட்டது தெய்வம்.

மார்ட்டின் மனம் விம்மியது, ‘‘தெய்வம்தான், எத்தனை எத்தனை வடிவங்களில் வந்து, என்னை ஆட்கொண்டிருக்கிறது!’’ எனப் பெருமிதப்பட்டார். அடுத்தவர்க்கு உதவி செய்வது, ஆண்டவனுக்கு செய்வதைப் போல. இறைவன் அருளைப் பெறவேண்டுமானால், அடியார்களின் துணையைக் கொள்ளவேண்டும். பிறகு என்ன? தெய்வம், தானே தேடி வந்து அருள் செய்யாதா? சரி, இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்?

உடையான் அடியார் அடியாருடன் போய்ப்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப
உடையான் வருகென ஓலம் என்றாரே

(திருமந்திரம் - 547)
கருத்து: சர்வ வல்லமையும் சர்வத்தையும் உடையவர் சிவபெருமான். அவருடைய அடியார்களுக்கும் அடியவர்களாக இருப்பவர்களுடன் சேர்ந்து, சிவந்த நெருப்பைப் போன்ற மழுப்படை ஏந்திய அச்சிவபெருமானின் சிவப்பதியைச் சென்றடைந்தேன். அடியேன் வந்ததைக் கண்டு, அங்கே கடைவாசல் காப்பாளர், சிவபெருமானிடம் சென்று அடியேன் வருகையைத் தெரிவித்தார். உடனே சிவபெருமான், ‘‘அன்பு உடையவனே! வருக! உனக்கு அபயம் அளித்தேன்’’ என்று கூறி அருள்புரிந்தார்.

அடியார்க்கும் அடியராய் இருப்பவர்களுடன் போய் சிவதரிசனம் செய்ய, சிவபெருமானிடம் கடைவாசல் காவல் காப்பவர் போய்ச் சொல்ல, சிவபெருமான் உடனே வரவழைத்து அபயம் அளித்தாராம்! இத்திருமந்திரத்தின் விளக்கம்தான் டால்ஸ்டாயியின் கதை. அது கதை! ஆனால் ,அக்கதை வெளியான நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே, பெரிய புராணத்தில் ஒரு வரலாற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறார் சேக்கிழார்.

ஆதி அந்தமில்லா அரும்பெரும் ஜோதியான சிவபெருமானே நேருக்கு நேராக வந்ததை ஒரு தலபுராணத்தின் மூலம், மேலும் விரிவாகக் காணலாம்.‘எத்தன்மையராயினும் ஈசனுக்கு அன்பர் என்றால், அத்தன்மையர் தாம் நம்மை ஆள்பவர்’ என்ற எண்ணம் உடையவர், திருஅம்பர் எனும் ஊரில் அவதரித்த சோமாசிமாற நாயனார். சிவபெருமானை நோக்கி யாகம் செய்யும் பெரியோர்களுக்குச் ‘சோமயாஜி’ என்ற பட்டம் உண்டு. அதுவே ‘சோமாசி’ என மருவியது. அதன் காரணமாகவே, மாறன் எனப் பெயர் பூண்டவர், சோமாசி மாறன் என அழைக்கப்பட்டார்.

சிவநேசச் ெசல்வராக வாழ்ந்த சேரமாசி மாறர், பிரணவ மந்திரம் ஓதி சிவநாம ஜபம் செய்து பக்தியில் திளைத்திருந்தார். இவர் திருவாரூர் சென்று தியாகேசரை வணங்கியபொழுது, ‘‘வன்தொண்டர் எனும் சுந்தரருடன் சிவபெருமான் தோழமை கொண்டு, அவர் ஏவிய ஏவலைச் செய்கிறார்’’ எனும் தகவலை அறிந்து கொள்கிறார்.

சோமாசிமாறர் உள்ளத்தில் உடனே ஓர் எண்ணம் தோன்றியது; ஆசையும்கூட! சுந்தரருக்குச் செய்வதைப்போல, நான் ஏவியதை எல்லாம் சிவபெருமான் செய்ய வேண்டாம். நாம் செய்யும் யாகத்தில் இந்தச் சிவபெருமான் நேரில் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொண்டால் போதும் என ஆசைப்பட்டார். இந்த ஆசை நிறைவேற ஒரே வழி - சுந்தரரிடம் போய்ச் சொல்லி நமக்காகச் சிவபெருமானிடம் வேண்டுகோள் விடுக்கச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்த சோமாசி மாறர், அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.

பரவை நாச்சியாரிடம் போய், ‘‘அம்மா! அடியேன் யாகம் செய்து கொண்டிருக்கிறேன். அதில் சிவபெருமான் நேரில் வந்து அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அது நடக்க வேண்டுமானால், தங்கள் கணவர் சுந்தரர் மனம் வைத்தால்தான் முடியும். அவரிடம் சொல்லி, அடியேனுக்காகச் சிவபெருமானிடம் சிபாரிசு செய்யச் சொல்ல வேண்டும்.’’ என வேண்டினார்.

அதை ஏற்ற பரவை நாச்சியார், தன் கணவரிடம் விஷயத்தைச் சொல்ல, அதற்கு சம்மதித்த சுந்தரர், சிவபெருமானிடம் போய் சோமாசிமாறரின் ஆசையைச் சொல்லி வேண்டினார்.,சுந்தரரே சொன்ன பிறகு, சிவபெருமானால் மறுக்க முடியுமா? ஒப்புக் கொண்டார்; ஆனால் கூடவே ஒரு நிபந்தனையும் விதித்தார். ‘‘சுந்தரா! உன் விருப்பப்படியே, யாம் சோமாசிமாறன் நடத்தும் யாகத்திற்கு வருகிறோம். எந்த வடிவத்திலும் எப்படி வேண்டுமானாலும் வருவோம். உன் நண்பனை (சோமாசிமாறரை) கவனத்துடன் யாகத்தை நடத்தச் சொல்!’’ என்றார் சிவபெருமான்.

தகவல் சோமாசிமாறருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரும் யாகத்தைத் தொடங்கினார். வேத விற்பன்னர்கள் புடை சூழ்ந்து பங்கேற்க, யாகம் நடந்து கொண்டிருந்தது. தியாகேசரான சிவபெருமான், தான் சொன்ன வாக்குப்படி சோமாசிமாறரின் யாகத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்டார். நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கிப் பிடித்துக் கொண்டு, தம்பட்டம், மதுக்குடம், மாட்டிறைச்சி என அனைத்தையும் சுமந்தபடி, ஒரு வேடுவனாக மாறிய சிவபெருமான் அப்படியே, சோமாசிமாறரின் யாக சாலைக்குள் நுழைந்தார்.

அவ்வளவுதான்! யாக சாலையில் இருந்த வேதியர்கள் எல்லாம், ‘‘ஆகா, மாட்டு மாமிசம், மதுக்குடம்னு தூக்கிக்கொண்டு யாக சாலைக்குள்ள வந்துட்டான் இவன். யாகமே கெட்டுப் போச்சு!’’ என்றலறியபடியே, யாகசாலையை விட்டு ஓடினார்கள்.ஆனால், சோமாசிமாறர் ஏமாறவில்லை. யாகசாலைக்கு ஒவ்வாத வடிவத்தில் வந்திருந்தாலும், வந்திருப்பது தியாகேசரான சிவபெருமான் என்பதை உணர்ந்த அவர், வரவேற்று வணங்கித் துதித்து, அவிர்ப்பாகத்தையும் அளித்தார்.

இறைவன் தன் அடியார்களை ஆட்கொள்ள எந்த வடிவில் வேண்டுமானாலும் வருவார். எப்போது வேண்டுமானாலும் வருவார் என்பதை விளக்கும் இந்நிகழ்ச்சி நடந்த திருத்தலம் திருஅம்பர் மாகாளம். இந்நிகழ்ச்சி, உற்சவமாக வருடந்தோறும், வைகாசி ஆயில்ய நட்சத்திர நாளில் நடக்கிறது. அடியார் உறவைக் கொண்டால் ஆண்டவன் அருளைத் தடையின்றி அடையலாம் எனும் இத்தகவலைச் சொல்லும் திருமூலர், இப்பாடலில் மற்றொரு சூட்சுமமான தகவலையும் கூறியிருக்கிறார்.

அடியார் வருகையை வாசற்காப்பாளர் (நந்தி) அறிவிக்க இறைவன் உடனே அழைத்து அருள்புரிந்ததாக பாடலின் பிற்பகுதி கூறுகிறது.இதைச் சற்று ஊன்றிப் பார்த்தால் சிவவாக்கியர் மூலமாக ஓர் உண்மை விளங்கும். தெய்வங்களுக்கெல்லாம் வாகனம் என்று வைத்திருக்கிறோம். எல்லா இடங்களிலும் பரந்திருக்கும் அனைத்து சக்தியும் கொண்ட சுவாமிக்கு வாகனம் எதற்காக?  விளக்கமளிக்கிறார் சிவவாக்கியர்.
நாம் செய்யும் அறச்செயல்களே தெய்வ அருளைச் சுமந்து வந்து நமக்கு அளிக்கும். மற்றபடி அரசபதவிகளோ, படைகளோ, மூச்சடக்கித் தவம் செய்வதோ, தெய்வ அருளை நமக்கு அளிக்காது.

நாம் செய்யும் தர்மங்களே வாகனமாக இருந்து தெய்வ அருளைச் சுமந்து வரும் என்பது சிவவாக்கியர் பாடல்:-
ஆடி நாடு தேடினும் ஆனை சேனை தேடினும்
கோடி வாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ!
ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும்
சாடி விட்ட குதிரை போல் தாமே வந்து நிற்குமே
திருமுறைகளும் சிவபெருமானை அற விடையோன் என்கின்றன.
நாம் செய்யும் அப்படிப்பட்ட அறங்கள் போய் இறைவனிடம் சொல்லட்டும்! இறையருள் இன்பங்களை வழங்கட்டும்!

(தொடரும்)