நடுத்தெரு நாராயணன் என்கிறார்களே, அவர் யார்?



- திருமலைவாசன், விழுப்புரம்.

தெளிவு பெறு ஓம் 

பேச்சுவழக்கில் பல வார்த்தைகள் திரிந்துவிட்டதற்கு இதுவும் ஒரு உதாரணம். அந்த வார்த்தை நடுத்தெரு நாராயணன் அல்ல, ‘நடுத்தரு’ நாராயணன். தரு என்ற வார்த்தைக்கு மரம் என்று பொருள். அரச மரத்தைச் சுற்றி வந்து வணங்கும்போது ‘மூலதோ ப்ரஹ்ம ரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரத: சிவய ரூபாய, வ்ருக்ஷராஜாயதே நம:’ என்ற மந்திரத்தைச் சொல்லி வணங்குவார்கள்.

அதாவது, அடிப்பகுதியில் ப்ரஹ்ம ரூபத்தையும், நடுவினில் விஷ்ணு ரூபத்தையும், உச்சியில் சிவ ரூபத்தையும் கொண்டிருக்கும் அரசமரத்தினை நமஸ்கரிக்கிறேன் என்பது இதன் பொருள். தரு என்றால் மரம். மரத்தின் மத்தியில், அதாவது தருவின் நடுவில் விஷ்ணுவாகிய நாராயணன் குடியிருக்கிறார் என்பதை நடுத்தரு நாராயணன் என்று குறிப்பிட்டார்கள். மரத்தின் நடுவில் என்பது நடுத்தரு என்ற வார்த்தையாக மாறி அது காலப்போக்கில் நடுத்தெரு நாராயணன் என்று மாறிவிட்டது. நடுத்தரு நாராயணனை வணங்கி வருவதால் நிச்சயமாக நன்மை கிடைக்கும்.

* வருகின்ற வைகாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதாகவும், அந்த மாதத்தில் சுபநிகழ்ச்சிகளைச் செய்யக்கூடாது என்றும் சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா?
- ஜி.டி.சுப்ரமணியன், கொளத்தூர்.

ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதை மலமாஸம் என்று குறிப்பிடுவர். இந்த மலமாஸ தோஷம் என்பது வசந்த ருதுவுக்குக் கிடையாது என்கிறது சாஸ்திரம். சித்திரை, வைகாசி மாதங்களை உள்ளடக்கியதே வசந்த ருது. ஆக, இந்த வருடம் மட்டுமல்ல, எந்த வருடத்திலும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் இரண்டு அமாவாசைகள் வந்தால் அங்கு மலமாஸ தோஷம் வந்து சேராது. எனவே, வைகாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்தாலும் அந்த மாதத்தில் தாராளமாக சுபநிகழ்ச்சிகளைச் செய்யலாம், எந்தவித சந்தேகமும் இல்லை.

* சிராத்தம் செய்து முடித்தபின் பிண்டங்களை பசுமாட்டிற்கு வைக்கலாமா?
- இராமசங்கரன், முகப்பேர்.

கூடாது. சிராத்த நாள் அன்று பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வேண்டுமானால் வாங்கித் தரலாம். சிராத்தத்தின்போது வைத்த பிண்டங்களை நீர்நிலையில் கரைப்பதே நல்லது. கிணறு, ஆறு, ஏரி, குளம், கடல் முதலான நீர்நிலைகளில் மட்டுமே பிண்டங்களைக் கரைக்க வேண்டும். சரியான முறையும் அதுவே. அதற்குரிய வசதியும், வாய்ப்பும் இல்லாதவர்கள் பூமியில் சிறிய குழி தோண்டி, அதில் பிண்டங்களை நீர் ஊற்றி கரைத்தபின்பு குழியை மூடிவிட வேண்டும். அந்த இடம் நாய், எலி முதலானவை வராத இடமாக இருக்க வேண்டும். முடிந்தவரை நீர்நிலையில் பிண்டங்களைக் கரைப்பதே சாலச்சிறந்தது.

* கிரஹண காலத்தில் ஆலயங்களை மூட
வேண்டியதன் அவசியம் என்ன? - ராஜசேகரன், காஞ்சிபுரம்.

கிரஹண காலத்தில் ஆலயத்தில் உள்ள சிலையின் சாந்நித்தியம் குறைந்துவிடும், தெய்வம் சக்தி இழந்துவிடும் என்று சொல்லப்படும் கருத்து முற்றிலும் தவறானது. தெய்வத்தை எந்த தோஷமும் அண்டாது, தெய்வத்தின் சக்தி எந்தக் காலத்திலும் குறையாது என்பதே நிஜம். ஒரு ஆலயத்தில் பூஜை நடைபெறுவதற்கு என தனியாக விதிமுறைகள் உண்டு. பூஜைகள் நடைபெற தெய்வம், காலம், திரவியம், மனிதர்கள் என இந்த நான்கும் அவசியம்.

இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறை உண்டானாலும் பூஜை முழுமை பெறாது. ஒவ்வொன்றாகக் காண்போம். தெய்வத்தின் சிலையில் ஏதேனும் விரிசலோ அல்லது பின்னமோ ஏற்பட்டால் அந்தச் சிலை வழிபாட்டிற்கு உகந்தது அல்ல. அவ்வாறு குறைபாடு உண்டாகும் நேரத்தில் பூஜைகள் நிற்கும். அந்தச் சிலையை தரிசனம் செய்வதால் பலன் இல்லை. அடுத்ததாக பூஜைக்கு உரிய காலங்கள் ஆறு என வகுத்துக் கொடுத்துள்ளது ஆகமம். உஷத்காலம், காலஸந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம், ஏகாந்தம் ஆகியவையே அந்த ஆறு காலங்கள். இந்த ஆறு காலங்களைத் தவிர மற்ற நேரம் பூஜை செய்வதற்கு உகந்தது அல்ல. உதாரணத்திற்கு நள்ளிரவில் ஆலயத்தைத் திறந்து பூஜை செய்யக்கூடாது என்பது நாம் அறிந்ததே. அதனால்தான் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் நாளில் நள்ளிரவு நேரத்தில் ஆலயத்தைத் திறந்து வழிபடக் கூடாது என்பதை ஆன்மிகவாதிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

அடுத்ததாக திரவியம். அதாவது புஷ்பம், பழங்கள், அபிஷேக சாமான்கள், நைவேத்தியம் உட்பட ஆலயத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களை திரவியங்கள் என்று அழைக்கிறோம். புஷ்ப வகையைச் சேர்ந்தது என்பதற்காக ஊமத்தம்பூவை ஆலயத்தில் உபயோகப்படுத்த முடியுமா? உண்ணும் பொருட்கள்தானே என்று வெங்காய பஜ்ஜியையும், பானிபூரியையும் இறைவனுக்கு நைவேத்யம் செய்ய முடியுமா? எண்ணெய் வகையைச் சேர்ந்ததுதானே என்பதற்காக பாமாயில் எண்ணெயை சுவாமியின் மீது தடவ இயலுமா? இவ்வாறு இந்த திரவியங்களைத்தான் உபயோகப்படுத்த இயலும், சிலவற்றை பயன்படுத்த இயலாது என்று பிரித்து வைத்திருக்கிறோம்.

அடுத்ததாக மனிதர்கள். அதாவது ஆலயத்தில் பணிபுரியும் சிப்பந்திகள் என்று வைத்துக் கொள்வோம். ஆலய அர்ச்சகர், பரிசாரகர், சமையல் கலைஞர், வாத்தியக்காரர், காவலர் என பல்வேறு பணிகளைச் செய்பவர்களும் ஆலயத்தில் இருப்பார்கள். இவர்களில்
எவருக்கேனும் பிறப்பு, இறப்பு தீட்டு வந்தால் அவர்கள் பணிபுரிய தகுதி இல்லாதவர்களாக ஆவார்கள். அந்த தீட்டு காலம் முடிந்த பின்னரே அவர்கள் ஆலயத்திற்குள் நுழைய முடியும். எப்படி தீட்டு காலத்தில் மனிதர்கள் ஆலயத்திற்குள் செல்லமுடியாதோ, அவ்வாறே கிரஹண காலத்திலும் ஆலயத்திற்குள் நுழைய முடியாது. ஏனெனில் இந்துக்கள் அனைவருக்குமே கிரஹண காலம் என்பது ஆசௌச காலமே. அதாவது கிரஹண காலத்தில் அனைவருக்குமே தீட்டு வந்து சேர்கிறது.

அதனால்தான் அந்த நேரத்தில் உண்ணுதல், உறங்குதல், புணர்தல் கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள். கிரஹணம் முடிந்தவுடன் எல்லோரும் ஸ்நானம் செய்வதும் தீட்டு போகவேண்டும் என்பதற்காகத்தான். கிரஹண காலத்தில் வீட்டில் உள்ள திரவியங்கள் அனைத்திலும் தோஷம் உண்டாகக் கூடாது என்பதற்காக தர்ப்பைப் புல்லை போட்டு வைப்பார்கள்.

அந்த நேரத்தில் சமைக்கப்படும் பண்டங்களும் தோஷமானவையே. பிறப்பு, இறப்பு தீட்டு உள்ளவர்கள் எப்படி ஆலயத்திற்குள் வரக்கூடாதோ, அதே போல தீட்டு உள்ள மனிதர்கள் யாரும் ஆலயத்திற்குள் வரக்கூடாது அல்லவா? கிரஹண காலத்தில் மனிதர்கள் அனைவருக்கும் தீட்டு உண்டாவதால் யாராலும் கோயிலுக்குள் செல்ல இயலாது. அதாவது, ஒரு அலுவலகத்தில் எவரேனும் ஒரு பணியாளர் வராமல் விடுமுறையில் இருந்தால், அவர் இல்லாமலேயே எப்படியோ சமாளித்து அலுவலகம் இயங்கிவிடும். எல்லா பணியாளர்களும் பணிக்கு வர இயலாமல் விடுமுறையில் இருந்தால் அலுவலகம் எவ்வாறு இயங்கும்? இழுத்து மூடிவிடுவார்கள் அல்லவா? அதுபோலத்தான் கிரஹண காலத்தில் மனிதர்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல இயலாது என்பதால் ஆலயங்களை மூடி வைக்கிறார்களே தவிர கிரஹண காலத்தில் தெய்வத்தின் சக்தி குறைந்துவிடும் என்பதற்காக அல்ல. மனிதர்கள் அனைவரும் கிரஹணத் தீட்டு கொண்டிருப்பதால் ஆலயத்திற்குள் நுழைய முடியாது என்பதற்காகத்தான் அந்த நேரத்தில் ஆலயத்தை மூடி வைக்கிறார்கள்.

* இரட்டைத்திரி போட்டுத் தான் விளக்கேற்ற வேண்டுமா?
- டி.என்.ரங்கநாதன், திருச்சி.

திரி காற்றில் அணையாத அளவிற்கு பருமனாக இருந்தால் ஒற்றைத்திரிகூட போதும். இரட்டைத்திரி போட்டுத்தான் விளக்கு ஏற்ற வேண்டும் என்றெல்லாம் விதிமுறை ஏதும் கிடையாது. விளக்கில் ஏற்றப்படும் திரியானது எளிதில் அணைந்துவிடக்கூடாது என்பதற்காக சற்று பருமனாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைதான் இந்த இரட்டைத்திரி.

* குடும்ப ஒற்றுமைக்கு எந்த ஸ்லோகம் சொல்லி வழிபட வேண்டும்?
- மு.வெங்கடேசன், திருபுவனம்.

“சிவோ மஹேச்வரச்சைவ ருத்ரோ விஷ்ணு: பிதாமஹ:
 ஸம்ஸார வைத்ய: ஸர்வேச: பரமாத்மா ஸதாசிவ:”
- என்ற ஸ்லோகத்தினை தினமும் காலை, மாலை இரு வேளையும் சொல்லி வழிபட்டு வருவதால் சிவ ஸஹஸ்ரநாமம் படித்த புண்ணியம் கிடைப்பதோடு, குடும்ப ஒற்றுமையும் கூடும்.

* தியானத்தின் மூலம் முற்பிறவியை காணமுடியுமா?
- விஜய், ஈரோடு.

முடியாது. தியானம் என்பது அலைபாய்கின்ற மனதை ஒருமுகப்படுத்தி செய்யக்கூடிய பயிற்சி. தியானம் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும். ஆத்ம ஞானம் கூடும்.
முற்பிறவியைக் கண்டறிய மனிதர்கள் யாராலும் இயலாது என்பதே நிதர்சனமான உண்மை.

* ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் திருமணம் செய்யக்கூடாது என்கிறார்களே, இது சரியானதா?
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

சரியே. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கும்போது இருவரில், ஒரு தம்பதியருக்கு மட்டுமே வளமான வாழ்வு அமையும் என்கிறார்கள் பெரியவர்கள். அவ்வாறு சொல்லப்படுவதற்கும் காரணம் உண்டு. உதாரணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காள்-தங்கை இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கும்போது, பெற்றோர் ஏதேனும் ஒரு பெண்ணை மட்டுமே கன்னிகாதானம் செய்து தர இயலும்.

மற்றொரு பெண்ணுக்கு குடும்பப் பெரியவர்களில் வேறு யாரையேனும் அமர வைத்துத்தான் கன்னிகாதானம் செய்ய இயலும். அவ்வாறு செய்யும்போது அந்தத் தகப்பன் தான் பெற்ற இந்தப் பெண்ணை கன்னிகாதானம் செய்து தர வேண்டிய கடமையிலிருந்து தவறியவன் ஆகிறான். இவ்வாறு கடமை தவறி செய்யப்படும் ஒரு செயல் முழுமை பெறாது.

பெற்றவர் உயிருடன் இருக்க, மற்றவர் செய்து தரும் கன்னிகாதானமான மஹாதானம் முழுமை பெறாது. ஒரேநேரத்தில் அண்ணன்-தம்பி இருவருக்கும் திருமணம் செய்துவைக்கும்போதும் இதே விதி பொருந்தும். தானத்திலேயே சிறந்த தானமாக, அதாவது, மிகப்பெரிய தானமாக இந்த கன்னிகாதானத்தை சாஸ்திரம் மஹாதானம் என்ற பெயரில் அழைக்கிறது.

ஒரு குடும்பத்தில் ஒரு நேரத்தில் இந்த மஹாதானத்தை ஒருமுறை மட்டுமே செய்யவும், பெற்றுக் கொள்ளவும் இயலும். மற்றொரு மஹாதானம் செய்யவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ புதிதாக மற்றொரு நேரத்தினைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விதி ஒருதாய் மக்களுக்கு  மட்டுமே, அதாவது, ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு மட்டுமே பொருந்தும். வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த வெவ்வேறு பிள்ளைகளுக்கு ஒரேநேரத்தில் ஒரே இடத்தில் திருமணங்கள் நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை.

* புத்தர் சிலையை பூஜை அறையில் வைத்து வணங்கலாமா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம். வணங்கலாம். ஆதிசங்கரர்,

ராமானுஜர், ராகவேந்திரர், சாயிபாபா, இயேசுபிரான் போன்று புத்தரும் மனிதராக வாழ்ந்து இறைநிலையை  அடைந்தவர் என்பதால் புத்தர் சிலையை பூஜை அறையில் வைத்து வணங்கலாம். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் புத்தரை வணங்க வேண்டும் என்பதில்லை. மகான்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமில்லை. அவர்கள் சொன்ன கருத்துகளை முடிந்தவரை நம் வாழ்வில் கடைபிடித்து வரவேண்டும் என்பதே முக்கியம்.

* ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்கிறார்களே, அன்னதானம் செய்யும்போது அதனைப் பெறுபவர்கள் கையில் என்ன பாத்திரம் வைத்திருந்தால் நமக்கென்ன?
- ஆர். திவ்யா, திருவண்ணாமலை.

நீங்கள் நினைப்பது போல் அது கையில் வைத்திருக்கும் உலோகத்தால் ஆன பாத்திரம் அல்ல. அல்லது திருவோடும் அல்ல. இங்கே பாத்திரம் என்ற வார்த்தை மனிதரின் குணத்தினைக் குறிக்கிறது. கதாபாத்திரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கதையில் வருகின்ற ஒரு நபரைப் பற்றிச் சொல்வதற்கு கதாபாத்திரம் என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். திரைப்படத்தில் வருகின்ற சோகக்காட்சியின்போது ஒரு சிலர் தம்மையும் அறியாமல் அழுவார்கள்.

அப்படிப்பட்டவர்களை அவன் பாத்திரத்துடன் ஒன்றிப் போய்விட்டான் என்று சொல்வார்கள். பாத்திரம் என்ற சொல்லுக்கு குணம் அல்லது தகுதி என்ற பொருளும் உண்டு. ஒருவன் தான தருமம் செய்யும்போது தானம் பெறுபவனின் குணம், தகுதி ஆகியவற்றைத் தெரிந்து செய்ய வேண்டும். உதாரணத்திற்கு சர்க்கரை வியாதிக்காரருக்கு அரைகிலோ அல்வா வாங்கித் தருவதில் பலன் இல்லை.

அபார்ட்மென்ட்டில் வாடகை வீட்டில் வசிக்கும் அந்தணனுக்கு கோதானம் தருவதில் பயன் இல்லை. கண்ணில்லாத குருடனுக்கு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கித் தருவதால் என்ன பலன்? தான தருமம் செய்யும்போது, அதனைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு தானம் தரப்படுகின்ற பொருள் பலன் தரும் வகையில் அமைய வேண்டும். எந்த பொருளை தானமாகத் தர உள்ளோமோ அதனைப் பெற்றுக்கொள்ளும் தகுதி, தானம் பெற்றுக் கொள்பவனுக்கு இருக்கிறதா, அந்தப் பொருளால் அவன் பலன் பெறுவானா என்பதைத் தெரிந்துகொண்டு தரவேண்டும்.

தானம் அல்லது தருமம் செய்பவனும் சரி, பெற்றுக் கொள்பவனும் சரி இருவருக்கும் நல்ல மனமும், குணமும் இருக்க வேண்டும். இருவருமே அந்த தானத்தால் அகம் மகிழ வேண்டும். அவ்வாறு செய்யப்படுகின்ற தான தருமங்கள் மட்டுமே முழுமையான பலனைத் தரும். இந்தக் கருத்தினை வலியுறுத்துவதற்காகத்தான் பெரியவர்கள் ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்று சொல்லி வைத்தார்கள்.