ஓடுகிற மானா, துரத்துகிற புலியா, எது வேகம் அதிகம்?



மகாபாரதம் - 92

ஸ்தூணாகர்ணம் பாசுபதாஸ்திரம், பிரம்மாஸ்திரம், இந்திராஸ்திரம் போன்ற பாணங்களை நான் கூச்சமின்றி கௌரவப் படையின் மீது பிரயோகிப்பேன். அத்தனை கோபம் என் நெஞ்சில் இருக்கிறது. இதைச் சொல்லுகிற போது மெல்லிய துக்கமும் என்னுள் வருகிறது. கௌரவர்கள் அனைவரும் நீண்ட ஆயுளோடு இருக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.’’ என்று அர்ஜுனன் கூறினான். அர்ஜுனனுடைய இந்தச் செய்தி கௌரவ சபையை கலக்கமடையச் செய்தது.‘‘ஒரு சமயம் பிரம்மாவின் சபையில் நர நாராயணர்கள் வந்து இறங்கினார்கள். சபை அவர்களை வணங்கியது,’’ சஞ்சயன் தான் அறிந்த விஷயத்தை கௌரவர் முன்பு பேசத் துவங்கினார்.

‘‘அந்த நர நாராயணர்கள் இந்திரனுக்கு துணையாக நின்று அவன் எதிரிகளை அழித்தார்கள். எவரையும் வணங்கத் தேவையில்லாத அளவுக்கு வலிவும், புகழும் அவர்கள் கொண்டிருந்தார்கள். தேவர்களுக்கு ஆதரவாக அவர்களை எதிர்த்த தைத்யவர்களை நரனும், நாராயணனும் பல்வேறு போர்களில் பழி தீர்த்தார்கள். அந்த நர நாராயணர்கள் மறுபடியும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அவர்களே அர்ஜுனனும், கிருஷ்ணனுமாய் இங்கு பிறந்திருக்கிறார்கள். இதைப் புரிந்தவர்கள் அவர்களோடு சண்டையிடத் துணிய மாட்டார்கள்.

வாழ்வின் சூட்சுமத்தை அறியாதவர்கள் ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் ஒன்று என்று புரியாதவர்கள் எதிரே இருக்கிற வியக்தி யார் என்ற கேள்வி இல்லாதவர்கள் வெறும் கோபத்தால் அசூயையோடு எதிரியை இழிவாக நினைப்பவர்கள் மிகுந்த சிக்கலுக்குள்ளாகிறார்கள். அந்த நரன் அர்ஜுனன். அந்த நாராயணன் ஸ்ரீகிருஷ்ணன். ‘‘உலகம் எப்பொழுது நன்மை பெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்பொழுது இவர்கள் அவதரிக்கிறார்கள். அயோக்கியத்தனமான வன்முறையால் இந்த உலகம் அல்லலுறும் போது சாதாரண மக்கள் கண்ணீர் விட்டு அழும்போது மாமிசத்தனமான வலுவுள்ளவர்களையும், ஆத்திரக்காரர்களையும் சிதறி சீரழிக்க அவதாரங்கள் ஏற்படுகின்றன.

பூமியினுடைய சமநிலை ஆட்டங்காணுமே தவிர குலைவதில்லை. ஸ்ரீகிருஷ்ணரின் கையில் இருக்கின்ற ஸ்ரீசக்ரமும், அர்ஜுனனுடைய காண்டீபமும், அதன் வேகமும் நர நாராயணர்களின் பிறப்பை உறுதி செய்கின்றன. பரசுராமரால் சபிக்கப்பட்டவனும், கடுஞ்சொற்கள் உடையவனுமான கர்ணனையும், சூட்சிக்கார சகுனியையும் நீ ஒருவன் மட்டும்தான் முழு மனதாக நம்புகிறாய். போர் என்று துவங்கினால் கௌரவர்கள் அழிவு நிச்சயம். உலகத்தின் சோகமயமான நேரம் எது தெரியுமா துரியோதனா, தன்னுடைய தூண்டுதலின் பேரில் தன் காரியத்திற்காக தன் உறவுகள் இறந்து போவதைக் கேட்க நேருவதுதான் மிகப்பெரிய சோகம். உன் நெற்றியைப் பார்க்கும் பொழுது அது உனக்கு ஏற்படப் போகிறது என்றுதான் தோன்றுகிறது.

ஆனாலும் முயற்சி செய். ‘‘காது என்ற அவயம் இருக்கிறது. அது நல்ல சொற்கள் சொல்லப்படும் பொழுது ஸ்பஷ்டமாகக் கேட்கிறது. அது பற்றிய விளக்கத்தை அறிவு பற்றிக் கொள்கிறது. ஆனால் மனம் அதை மறுதலிக்கிறது. அல்லது அலட்சியப்படுத்துகிறது. வீட்டு வாசலில் நின்று யாசிப்பவர் நல்ல சொற்களைக் கூறும்பொழுது அந்த வீட்டுத் தலைவன் அதைக் காது குளிரக் கேட்கிறான். அந்த வீட்டிலுள்ள பெரியவர்கள் அதை ஆமோதித்து வணங்குகிறார்கள். ஆனால் அந்த வீட்டு எஜமானியோ அதாவது எஜமானனோ யாசிப்பவனை புறக்கணிக்கிறார். கர்வத்தால் மறுதலிக்கிறார். ஒரு குடும்பம் பிரிந்து கிடக்கலாகாது.

அதே போல புலன்கள், அறிவு, மனம் என்பவை ஒன்றுசேர்ந்து வாழும் வாழ்க்கையைப் பரிசோதிக்க வேண்டும். துரியோதனா, உனக்கு நல்லது நடக்கட்டும்.’’ என்று துக்கம் தோய்ந்த குரலில் சொல்லி விட்டு சஞ்சயன் தள்ளாடி அமர்ந்தான். ஆராயத் தகுந்த நல்ல சொற்கள், ஆராய்ச்சியை முடித்து வினை துவங்க ஆரம்பித்தவருக்கு விளங்காது. சஞ்சயனுடைய பேச்சால் கர்ணன் கோபமுற்றான். ‘‘நான் போர் வீரன், க்ஷத்ரியன், வில்லாளி, துரியோதனன் என்ன மன்னனின் படைத் தளபதி. என்னுடைய தர்மத்திலிருந்து நான் ஒருக்காலும் பின் வாங்கவில்லை. பிழறவில்லை. இவ்விதம் குறை கூற என்னிடம் என்ன தீய நடத்தை இருக்கிறது. நான் துரியோதனனுக்கு ஒருபொழுதும் தீமையை நினைத்ததில்லை.

 திருதராஷ்டிரன் இங்கு மன்னர். துரியோதனன் அவர் புதல்வர். இவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்ய நான் சித்தமாக இருக்கிறேன். இங்கு அரசன் என்பவர் துரியோதனனே. தூது போய் வந்தவர்கள் அல்ல. துரியோதனனுக்கு ஆதரவாக நின்று விரோதிகள் என்று தீர்மானிக்கப்பட்ட பாண்டவர்களை நான் கொன்று போடுவேன். அவர்கள்  படைகளை நான் கடுமையாக தண்டிப்பேன். வெறுமே உபதேசத்தைக் கேட்பதால் ஒருவன் புகழ் நிலைக்காது. மன்னனுக்கு உபதேசிக்கும் தகுதி எந்த தளபதிக்கும் இல்லை.’’கோபத்தோடு கர்ணன் பேசி முடித்ததும் பீஷ்மர் வாய்விட்டு சிரித்தார். கர்ணனோடு நேரிடையாக பேசுவதைத் தவிர்த்தார்.

‘‘திருதராஷ்டிரா, பஞ்ச பாண்டவர்களைக் கொன்று போடுவேன் என்கிற இந்த கர்ணன் பேச்சு விசித்திரமானது. அர்ஜுனனுடைய வித்தைக்கு பதினாறில் ஒரு பங்கு கூட இந்த கர்ணன் சமானமாக மாட்டான். வெறும் வாய்ச் சொல் வீரனான, சபையின் மதிப்பு அறியாது பேசுகிற இந்த மூடனை நம்பி உன் பிள்ளை யுத்தத்தில் இறங்குகிறான். இதற்கு முன் எத்தனை முறை பாண்டவர்களை ஜெயித்திருக்கிறாய் என்று பலமுறை கேட்டும் இவன் பதில் சொல்லவில்லை. தோற்ற கதை சொன்னாலும் இவன் புரிந்து கொள்ளவில்லை. விராட நகரத்தில் நடந்த கூத்து ஏன் இவர்கள் அனைவருக்கும் மறந்து விட்டது.

அர்ஜுனன் தனி ஒருவனாக இவர்கள் அத்தனை பேரையும் அடித்து காயப்படுத்தி மூர்ச்சடைய வைத்து மேலாடைகளைப் பறித்து விராடதேசத்து அரசகுமாரியிடம் பரிசளித்தது எப்படி மறந்து போயிற்று. இதற்கு என்ன சமாதானம். இதுதான் கோஷ யாத்திரையிலும் நடந்தது. கந்தர்வர்கள் நீராடுகிற போது வம்பு செய்து அவர்கள் சுழற்றி அடித்து கட்டி இழுத்துப் போக, குலத்தின் பெருமைக்கு இழுக்கு என்று உதவிக்கு வந்த கந்தர்வர்களை அடித்து விரட்டியும், தர்மபுத்திரரால் சமாதானம் பேசியும் விடுவிக்கப்பட்டவனல்லவா துரியோதனன். எப்படி சௌகரியமாய் இந்த நிகழ்வுகளை மறந்து விடுகிறீர்கள். இந்தக் கர்ணன் வீணான பெருமை பேசுகிறான். இவனைப் புறக்கணிப்பது நல்லது.’’

பீஷ்மருடைய பேச்சுக்கு துரோணர் தொடை தட்டி கோஷம் செய்தார். ‘‘திருதராஷ்டிரா, பரதகுல திலகமான பீஷ்மர் சொல்வதைக் கேளுங்கள். யார் காமத்தின் லோபிகளோ, வெறும் ஆசையை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு பேசுகிறார்களோ அவர்கள் பேச்சை ஏற்க வேண்டாம். சஞ்சயன் மூலமாக அர்ஜுனனுடைய குமுறலை இந்த சபையில் கேட்டபோது அர்ஜுனன் தன் சபதத்தை செய்தே தீருவான். வெற்றி அடைவான் என்றே எனக்குத் தோன்றுகிறது.’’ ஆனால் துரதிஷ்டவசமாக பீஷ்மருடைய, துரோணருடைய பேச்சை திருதராஷ்டிரன் ஏற்கவில்லை. மாறாக அவர்கள் இருவரையும் புறக்கணித்து விட்டு சஞ்சயனோடு தன் சம்பாஷணையை துவக்கினார்.

அது யுத்தத்தைத் தொடக்கி வைப்பதான எண்ணமாகத்தான் இருந்தது. சபை கலக்கமடைந்தது. திருதராஷ்டிரன் பேச்சு முட்டாள்தனத்தின் உச்சியில் இருந்தது. தன் புதல்வனின் பக்கமே அவன் இருப்பதை தெளிவுபடுத்தியது. நம் பக்கம் மன்னர்கள் பலர் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பெரிய படைகள் சேர்ந்து விட்டன. அவர்கள் போருக்கான துடிப்போடு இருக்கிறார்கள். அதை உணர்கிறபோது வெற்றி பெறுவோம் என்ற எண்ணமே ஏற்படுகிறது. தருமபுத்திரர் எத்தனை படைகளை சேர்த்துள்ளார் என்ற கணக்கை திருதராஷ்டிரன் கேட்கிறபோது அயர்ச்சியினாலும் துக்கத்தினாலும் சஞ்சயன் நீண்டதாய் மூச்சுகள் இழுத்து விட்டார். இனி இங்கு என்ன பேசப் போகிறோம் என்று மனம் குழம்ப மனதில் வேகம் தாங்காமல் மூர்ச்சித்து விழுந்தார்.

அருகில் உள்ளவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினார்கள். தான் இதுவரை கூறியவற்றையே மறுபடியும் கூறலானார்.‘‘அங்குள்ள வீரர்களின் மேன்மையையும்,
அவர் படை பலத்தையும் நான் ஏற்கனவே சொல்லி விட்டேன். இங்கில்லாதது அங்கு என்ன என்ற கேள்வி உங்களுக்குள் மறைமுகமாய் இருக்குமாயின் ஸ்ரீகிருஷ்ணர் என்ற பெயரை உரக்கச் சொல்வேன். கௌரவர் படை பலம் அதிகம் இருப்பினும் பாண்டவர் பக்கம் மதியூகம் மிக்க ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறார். அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாது அவரை ஆஸ்ரயத்து எது சொன்னாலும் ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவத்தோடு பஞ்ச பாண்டவர்கள் இருக்கிறார்கள்.

போருக்குத் தலைமை யுதிஷ்டிரர் என்றாலும் போரை நடத்துவது ஸ்ரீகிருஷ்ணர். அத்தகைய ஒரு பலம் கௌரவர்களிடையே நிலைபெறவில்லை. அப்படி ஒருவர் வேண்டுமென்றே இங்கு இருப்பவர்களுக்குத் தெரியவில்லை. ‘‘அர்ஜுனனைக் கண்டு மட்டுமே பயப்படுகிறீர்கள். கர்ணனும் அர்ஜுனனையே மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறான். பீமசேனனைப் பற்றி யாரும் சிந்திப்பதேயில்லை. பீமன் கோபாவேசம் கொண்டு அலைகிறான். அவன் உடல் பலத்திற்கு நிகராக இங்கு நான் யாரையும் காணவில்லை. அவன் மனோபலம் அதைவிட பன்மடங்கு மேலானது. தன் மனைவிக்கு நடந்த கொடுமையை நினைத்து நினைத்து அவன் கோபம் கூர்மையாய் இருக்கிறது.

பீமனை வெறும் பலசாலி என்று மட்டும் கருத வேண்டாம்.‘‘பாண்டவர்களுக்கு இருக்கும் கோபாவேசம் கௌரவர்களிடம் இல்லை. இதுவும் ஒரு பெரிய குறை. ஓடுகிற மானா, துரத்துகிற புலியா, எதில் வேகம் கூடுதலாக இருக்கும். யோசித்து தெளிய வேண்டும். எனக்கு அடாது செய்தாயே, உன் பங்காளியான எங்களை துன்பத்தில் ஆழ்த்தினாயே, என் வீட்டுப் பெண்மணியை அவமானப்படுத்தினாயே என்கிற கோபத்தின் வலிவு எவராலும் எதிர்க்கவொண்ணாதது. இந்தக் கோபம் பற்றிய எதுவும் துரியோதனாதிகளிடம் இல்லை. மரத்தின் உச்சிக்கூட்டில் தேன் இருக்கிறது. அதை ஏறி எடுக்க கை நீட்டுபவனுக்கு விழுவோம் என்ற பயம் இல்லை.

நழுவி விழும் வரை அது புரியப் போவதில்லை’’ என்று சஞ்சயன் சொன்னதை திருதராஷ்டிரன் கவலையோடு ஆமோதித்தான்.‘‘ஆமாம். என் புதல்வர்கள் உச்சிக் கிளையில் இருக்கும் தேனடைக்கு கை நீட்டுபவர்கள். தேனை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள். கிடைக்கும் சாதக பாதகம் பற்றி கணக்கு இல்லாதவர்கள். நீ சொன்ன பீமனுடைய கோபத்தை நான் அறிவேன். உடல் பலம் மட்டுமல்ல, கோபத்தால் ஏற்பட்ட மனோபலத்தை ஒருக்காலும் தவிர்க்க முடியாது. அதை எதிர்க்க அதற்கு இணையான மனோபலம் கிடையாது. இரண்டு கட்சியில் ஏதோ ஒரு பக்கம் தான் இந்த மனோபலம் இருக்கும். மற்றது அந்த மனோபலத்தை பரிட்சிக்கும் விதமாய், எதிர்க்கும் விதமாய் அமையும்.

உன் வாக்கின் மூலம் பாண்டவர்களின் வெற்றியை நான் அறிகிறேன். என்னால் என் புதல்வர்களை தடுக்க முடியவில்லை. பீஷ்மரும், துரோணரும் தங்கள் இன்னுயிரை ஒரு தர்மத்தின் பொருட்டு என் புதல்வனுக்காக இழக்கப் போகிறார்கள் என்பதை நான் தெளிவாகப் புரிந்து கொள்கிறேன்.‘‘விதுரர் முன்பு சொன்ன உபதேசங்களின் பயம் எனக்கு வந்து விட்டது. ஐஸ்வர்யத்தை விரும்பும் முட்டாளான துரியோதனன் பேராசையால் சூதாட்டம் என்னும் பாபத்தை செய்திருக்கிறான். என் நூறு புத்திரர்களும் கொல்லப்படப் போகிறார்கள். அனாதியான அவர்களுடைய மனைவிகளின் அழுகை சத்தம் இப்போதே என் காதுகளில் கேட்கத் துவங்குகிறது.

காலத்தின் கையில் நான் பலஹீனனாக இருப்பதை உணர்கிறேன்.‘‘அர்ஜுனன் தேர் ஏறி விட்டான். அந்தத் தேரை அந்த யுத்தத்தை கிருஷ்ணர் வழி நடத்துகிறார். அர்ஜுனனுடைய காண்டீபம் நாண் ஏற்றி விட்டது. இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து விட்டது. அதாவது தெய்வ சங்கல்பமும், மனித உறுதியும் நடந்த மோசமான விஷயங்களின் கோபாவேசங்களும் ஒன்று சேர்ந்து விட்டது. காயப்பட்ட மனம் காண்டீபத்தை பல் கடித்து வளைத்து நாண் ஏற்றி விட்டது. இந்த மூன்று புயல்களின் வேகத்தை யார் எதிர்க்க முடியும். நம்மிடம் காண்டீபமும் இல்லை. அர்ஜுனனும் இல்லை. ஸ்ரீகிருஷ்ணனும் இல்லை. ஓ சஞ்சயா, பரத வம்சத்தின் அழிவு துவங்கி விட்டது.

‘‘கௌரவர்களே, பாண்டவர்களோடு யுத்தம் நடக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். அப்படி போர் உண்டானால் குருகுலம் அழியும். யுதிஷ்டர் என்னைத்தான் குறை சொல்லுகிறார். தவறு நடந்ததை அனுமதித்தது என் குற்றம் என்று சொல்கிறார். நான் அதை ஏற்றுக் கொண்டு போர் வேண்டாம் அமைதி வேண்டும் என்று சொன்னால் அதை யுதிஷ்டர் ஏற்க மாட்டாரா. போர் வேண்டாம் போர் வேண்டாம் என்பதே என் விருப்பம். இதைப் புரிந்து கொள்ள எவர் ஆலோசனையும் தேவையில்லை.’’இடித்துரைக்க தகுந்த நேரம் கிடைத்து விட்டது என்று சஞ்சயன் திருதராஷ்டிரனை நோக்கி தன் பேச்சைத் துவங்கினார்.

‘‘போர் நெருங்கி வந்ததும் எதிரியின் பலம் சொன்னதும் கலவரமடைந்து கையை பிசைந்து சமாதானம் கோருகிறீர்கள். சூதாட வேண்டாம் என்று சொன்ன போது அதை புறக்கணித்து மௌனமாய் இருந்தீர்கள். சகுனி சூதாட்டத்தை துவங்கிய போது என்ன நடக்கிறது அங்கே யார் ஜெயித்தார்கள் என்று ஆவலானீர்கள். சகுனி இதை வென்றேன், அதை வென்றேன் என்று ஆரவாரித்தபோது நீங்களும் ஒரு சிறுவனைப் போல குதூகலித்தீர்கள். அப்பொழுது பாண்டவர்கள் மீது கடுமையான பேச்சுக்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்தன. அவைகளை கண்டும் காணாது இருந்தீர்கள்.

பாண்டவர்கள் சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்டு வனத்திற்கு போகும் போது நீங்கள் குழந்தையைப் போல அடிக்கடி சிரித்து உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது அதிகமாக துயரப்படாதீர்கள். இதை விதுரரும், நானும் முன் கூட்டியே சொன்னபோது காது கொடுத்துக் கேட்காது இப்போதுதான் பாண்டவர்களுடைய திறமையை புரிந்து கொள்வது போல வீணாக அழுதீர்கள்.’’துரியோதனன் குறுக்கிட்டுப் பேசினான். ‘‘அழைப்பை ஏற்று சூதுக்கு வந்து சூதாட சகுனியை தேர்ந்தெடுத்து நியாயமாக நடந்த சூதாட்டத்தில் உடமைகளை இழந்து நிர்கதியானவர்களுக்கு ஆதரவாக பேசுகிறாய்.

நீ பாண்டவர்களைச் சந்தித்தாயா அல்லது இந்த பேச்சு முழுவதும் உன் பயமா என்பது எனக்குப் புரியவில்லை. அர்ஜுனன் தேரில் என்ன கொடி இருந்தது.’’ துரியோதனன் தன்னை சந்தேகப்படுவது கண்டு சஞ்சயன் வருத்தமுற்றான். ‘‘அர்ஜுனனுடைய தேரில் பல திவ்ய உருவங்கள் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கின்றன. அவன் தேரில் பவன குமாரனான ஹனுமனுடைய உருவம் நிலைபெறப் போகிறது. அற்புதமான வெண் குதிரைகள் அந்தத் தேரில் பூட்டப்பட்டு இருக்கின்றன. யுதிஷ்டிரருடைய தேரிலும் வெண் குதிரைகள் இருக்கின்றன. அவை மிக அழகியவை. பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுபவை.

பீமசேனனுடைய குதிரைகள் கரடி போல் கருப்பானது. சகாதேவனுடைய குதிரைகள் பல விசித்திர வண்ணங்கள் கொண்டது. நகுலனுடைய குதிரைகள் பச்சை வர்ணம் கொண்டவை. இவை ஓடுகின்ற ஓட்டமும் பரஸ்பரம் செய்கின்ற போட்டியும் பார்க்கப் பார்க்க பரவசமூட்டுபவை. என்னை நம்பாமல் என்னிடம் கேட்காதே. நீ கேட்டதற்கு மேலும் என்னால் விஷயங்கள் சொல்ல முடியும். சொல்கிறேன் கேள்.’’ என்று பயமுறுத்தலான பேச்சை ஆரம்பித்தார். ஆனால் அந்தப் பேச்சுக்கு இடையில் திருதராஷ்டிரன் புகுந்து கொண்டான். இந்தப் போரில் யார் யார் என்ற கணக்கு கேட்க ஆரம்பித்தான். அவை அவனுக்கு விவரமாக சொல்லப்பட்டன.

பாண்டவர்களுடைய யுத்த முறையைச் சொல்ல, திருதராஷ்டிரனை பயம் கவ்வியது. என் பிள்ளைகள் எனக்கு இல்லையென்றே ஆகி விட்டார்கள் என்று புலம்பத் துவங்கினான். ஆனால் என் புதல்வன் துரியோதனன், யார் கத்திக் கூச்சலிட்டாலும் போரைத் தொடர்வேன் என்ற ஆத்திரத்தோடு நிற்கிறான். இதன் முடிவு என்னவென்று தெரியவில்லை என்று குழம்பினான். ஒரு நேரத்தில் திருதராஷ்டிரன் துரியோதனனுக்கு பக்கபலமாக இருந்தான். சூதாட்ட காலத்தில் அவன் சிரிப்பும், அங்கீகாரமும்  கௌரவர்களை பெரிதாகத் தூண்டின.

பாண்டவர்களுக்கு வேதனை அளித்தன. ஆனால் அதே திருதராஷ்டிரன் நிலைமை தடுமாறி துரியோதனனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லத் துவங்குகிறான். இது துரியோதனன் செய்த பாபம். துரியோதனன் கடுகடுப்பான குரலில் திருதராஷ்டிரனை நோக்கிப் பேசினான். ‘‘பாண்டவர்களும், கௌரவர்களும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் பூமியிலே மானுடராய் இருப்பவர்கள். பிறகு பாண்டவர்கள் மட்டும்தான் வெற்றியடைவார்கள் என்று ஒரு கொள்கையை எப்படி அமைத்துக் கொள்கிறீர்கள்? பீஷ்மர், துரோணாச்சியார், கிருபாச்சாரியார், கர்ணன், ஜெய்த்ரதன், சோமதத்தன், அஸ்வத்தாமா, விவிம்சதி, சலன், விகர்ணன், குருமித்ரன் ஆகிய அத்தனை தேஜஸ்விகளும் பெரிய வில்லாளிகளாவர்.

எனக்காக பாண்டவர்களுக்கு துன்பம் செய்வதில் வல்லவர்கள். பாண்டவர்கள் பக்கத்து வீரர்கள் இவர்களை கண் உயர்த்தி பார்க்கும் யோக்கியதையை கூட அடையவில்லை. சூதாட்டமல்ல அதற்கு முன்பே எனக்கு இருந்த கோபம் இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த கோபத்துடன் நான் தனியாகவே பாண்டவர்களோடு போர் புரியும் வல்லமை கொண்டவன்.’’திருதராஷ்டிரன் இடைமறித்தான். ‘‘என் மகன் பைத்தியக்காரனைப் போல பேசுகிறான். இவன் வல்லவன் என்று உயர்த்தி சொல்லுகின்ற பீஷ்மர் எவ்வளவு அமைதியாக அடக்கமாக இருக்கிறார்.

பீஷ்மருக்கு மகாத்மாக்களோடு செய்யப்படும் போர் பிடிக்கவில்லை. அது துரியோதனனுக்குப் புரியவில்லை. எனக்கு ஒரு கேள்வி. உண்மையில் இந்தப் போரை யார் தூண்டி விடுகிறார்கள். போர் செய்யும் உபதேசங்களை பாண்டவர்களுக்கு யார் சொல்லுகிறார்கள்?’’‘‘த்ருஷ்டத்யும்னன் சொல்கிறான். அவன்தான் அர்ஜுனா நாம் ஜெயிப்போம் போர் துவங்கு என்கிறான். துரியோதனனையும், கர்ணனையும் அழிக்க வேண்டும் என்ற வெறி த்ருஷ்டத்யும்னனுக்கு அதிகம் இருக்கிறது. யுதிஷ்டரிடம் ராஜ்யத்தை ஒப்படைப்பது மட்டுமல்ல. அர்ஜுனனிடமும் பீமனிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறான்.

பஞ்ச பாண்டவர்களுக்கு த்ருஷ்டத்யும்னன் பேச்சால் சூடேறுகிறது.’’ என்று சஞ்சயன் கூற, மறுபடியும் திருதராஷ்டிரன் கை உயர்த்தினான்.‘‘நீ வாழ்வதற்கு பாதி ராஜ்யம் போதுமானது. மீதி பாகத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து விடு. த்ருஷ்டத்யும்னன் போர் வெறியை தூண்டுவதாக சொல்லப்படுகிறதே, நம் பக்கம் அப்படி இருப்பவர் யார்? பாண்டவர்கள் ஒருவருக்கொருவர் தூண்டிவிட்டுக் கொள்ளவில்லை. அவர்களைச் சுற்றி வெளி வட்டத்தில் இருந்த உறவுகளே இதை அடிக்கடி செய்கிறார்கள்.

ஆனால் நம் பக்கம் நானோ, பீஷ்மரோ, துரோணாச்சாரியரோ, கிருபாச்சாரியரோ, அஸ்வத்தாமனோ போர் செய்ய விரும்பவில்லை. போர் வந்தால் ஈடுபடுவதற்கும் போரை விரும்புவதற்கும் வித்தியாசம் உண்டு. உன் புத்தியோடு ஐக்கியமாகி இருக்கிற துச்சாதனன், கர்ணன், சகுனியே உன்னை போர் புரியத் தூண்டுகிறார்கள். மற்றவர் ஏன் தூண்டவில்லை என்று நீ யோசிக்கவில்லை. பெண் மீது கொண்ட மோகாவேசத்தை விட போர் மீது கொண்ட மோகாவேசம் மிகக் கொடியது.’’துரியோதனன் மனநிலை தெளிவாக இல்லை என்பதை அவனுடைய அடுத்த பேச்சு வர்ணிக்கிறது.

(தொடரும்)

- பாலகுமாரன்