மக்களைத் திருத்த வேண்டியது மன்னனின் கடமை!



திருமூலர் திருமந்திர ரகசியம்

ஒரு நாட்டின் குடிமக்கள் செய்யும் நன்மை, தீமைகள் இன்ப-துன்பங்கள் எல்லாம் அந்நாட்டில் பிரதிபலிக்கும். அதைப்பற்றித் திருமூலர் அழகாகச் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வழி வருமுன் ராயர்  - அப்பாஜி கதை ஒன்றைப் பார்க்கலாம். கிருஷ்ண தேவராயரிடம், அப்பாஜி அமைச்சராக இருந்தார். தீயவர்களையும் திருத்திப் பணி கொள்ளும் திறமை அவருக்கு உண்டு. ஒருசமயம் பகைவர்களின் படை ஒன்று வந்து, துன்பம் விளைவித்தது. பகைவர்களை விரட்டி அடித்து, அவர்களின் படைத்தலைவனைச் சிறைபிடித்துக் கொண்டு வந்து அமைச்சரான அப்பாஜி முன் நிறுத்தினார்கள்.

‘‘அமைச்சர் பெருமானே! இவன் மிகவும் முரடன். ஒரு வழியாகத் சிறைபிடித்து விட்டோம். யாராவது காறி உமிழ்ந்தால், இவனுக்குப்  பிடிக்காது. அவர்கள் தலையை உடனே வாங்கி விடுவான். அவ்வளவு முரடன்’’ என்றும் சொன்னார்கள். முன்னால் நிறுத்தப்பட்ட முரடனை, ஒருமுறை நன்றாகப் பார்த்தார் அப்பாஜி. நீண்ட முடியும், எகத்தாளமாகச் சிரித்து வெளிப்படுத்தும் பல் வரிசையும், நீண்ட உறுதியான கை-கால்களும் கொண்ட அந்த முரடனின் தோற்றமே, பயத்தை ஊட்டுவதாக இருந்தது.

‘‘சரி! இவனைக் கொண்டுபோய், தனி அறையில் அடையுங்கள்! நல்ல விதமாகப் பராமரியுங்கள்!’’ என்றார் அப்பாஜி. முரடனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. காவலர்களோ, ‘‘என்ன இவர்? இந்தக் கொலைகாரப் பாவியைக் கொல்லாமல், தனி சிறையில் வைத்துப் பராமரிக்கச் சொல்கிறாரே!’’ என்று நினைத்தார்கள். இருந்தாலும், அரசரின் வலதுகரம்போல விளங்கும் அப்பாஜியின் கட்டளையை மீற முடியாமல், முரடனைத் தனி சிறையில் வைத்துப் பராமரித்தார்கள். கொஞ்ச காலம் ஆனது. புது பகைவன் ஒருவன் சிறு படையுடன் வந்து, எல்லை தாண்டிச் சற்று தூரத்தில் முகாமிட்டு இருப்பதாகத் தகவல் வந்தது.

‘‘போரிடும் நிலையில் இப்போது படைகள் இல்லை. என்ன செய்யலாம்?’’ என்று சேனாதிபதி சிந்தனையில் ஆழ்ந்தார். அப்பாஜியோ யோசிக்கவே இல்லை. ‘‘முரடன் ஒருவனைத் தனி சிறையில் வைத்துப் பராமரிக்கச் சொன்னேன் அல்லவா? அவனுக்கு நம் வீரன் உடுப்பைப்  போட்டு அழைத்து வாருங்கள்!’’ என்றார். விவரம் புரியாமல் சேனாதிபதியும் அவ்வாறே செய்தார். இடுப்பில் தொங்கும் நீண்ட கத்தியுடன் தன் எதிரில் வந்து நின்ற முரடனிடம், ஒரு சில வார்த்தைகள் பேசினார் அப்பாஜி.

பின் சேனாதிபதியிடம் திரும்பி, ‘‘எல்லையில் வந்து முகாமிட்டு இருக்கும் பகைவனிடம், நம் நாட்டின் சார்பாக இவனைத் தூதுவனாக அனுப்புங்கள்!’’ என்றார். சேனாதிபதியும் அவ்வாறே செய்தார். புது ஆடைகள், பளபளக்கும் பட்டாக்கத்தி ஆகியவற்றுடன் புறப்பட்ட முரடன், எல்லை தாண்டி இருந்த பகைவரின் கூடாரத்தை நெருங்கி, ‘‘தூதுவனாக வந்திருக்கிறேன்’’ என்றான். அவனைக்கூட்டிப் போய், தளபதியிடம் நிறுத்தினார்கள். இந்த முரடன் போன நேரம், அந்தத் தளபதி காறி உமிழ்ந்து கொண்டிருந்தான்.

முரடனுக்குத்தான் யாராவது காறி உமிழ்ந்தால் பிடிக்காதே! உடனே இடுப்பில் தொங்கும் வாளை எடுத்து தளபதியின் தலையை வெட்டி விட்டான். அங்கிருந்த மற்ற வீரர்கள் பாய்ந்து, முரடனைச் சின்னா பின்னமாக்கி விட்டார்கள். முரடன் கதை முடிந்து போனது. தளபதியை இழந்து பரபரப்பில் ஆழ்ந்த பகைவர்களோ உடனே அங்கிருந்து மறைந்து விட்டார்கள். பகை தீர்ந்தது. அப்பாஜியின் நுண்ணறிவும் செயல் பாடுகளும் கண்டு, சேனாதிபதி வியந்தார்.

அரசரோ ‘‘அப்பாஜி! மிகவும் முரடனான அவனுக்குத் தண்டனை அளிக்காமல் அவனை வைத்துப் புதுப்பகைவனை முடித்து, அவனுடைய கதையையும் முடித்த  உங்கள் திறமைக்கு நான் தலைவணங்குகிறேன்’’ என்று அன்போடு கூறினார். இவ்வாறு முரடனுக்குத் தண்டனை அளிக்காமல், அவனை வைத்துப் புதுப்பகையையும் முடித்து, மக்களைக் காப்பாற்றிய இந்த சம்பவத்தின் தத்துவத்தைதான்  திருமூலர் பாடலும் சொல்கிறது.

இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள்ள
நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்காம்
என்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின் வையம் வாழுமே. (திருமந்திரம் - 1657)

கருத்து: நாட்டின் இன்பமும் துன்பமும் அந்நாட்டில் வாழும் மக்கள் நடைமுறைப்படுத்தும் நற்செயல்கள். தீய செயல்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் என்பார்கள். ஆகையால், நாடாளும் மன்னன் (ஆள்பவர்கள்) குடிமக்களின் நற்செயல்கள்-தீய செயல்கள் ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்து பார்த்து, மக்களை நல்வழியில் செலுத்தி, தீய வழியில் போகாமல் அவர்களைத் திருத்திச் சரிசெய்தால், உலகம் நன்றாக வாழும்.

மக்களின் செயல்கள் அவற்றின் விளைவுகள் ஆகியவற்றைச் சொல்லும் இப்பாடல், தவறு செய்யும் மக்களைத் திருத்த வேண்டியது ஆள்வோரின் கடமை என்கிறது. அவ்வாறு செய்தால், உலகமே வாழும் என்கிறது. நாடு என்று, உலகின் ஒரு சிறுபகுதியைச் சொல்லி, ‘வையம்’ என்று உலகம் முழுவதையும் சொல்லும் சூட்சுமமான பாடல் இது. ஓரளவிற்கு வெளிப்படையான பொருள் கொண்ட பாடலாக இருந்தாலும் ஆழ்ந்த தகவல் கொண்ட பாடல்.

நல்வழியில் செயல்படுபவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டியது அரசனின்/ஆள்வோரின் கடமை. அதேசமயம் தீயவர்களைத் திருத்திப் பணி கொள்வதும் அரசனின்/ஆள்வோரின் கடமையே. அவ்வாறு  செயல்பட்டால், அதனால் உலகமே நன்மை பெறும் என்ற நோக்கிலேயே, ‘வையம்’ என்ற சொல்லைத் திருமூலர் இப்பாடலில் இடம்பெறச் செய்திருக்கிறார்.

நடப்பைச் சொல்லி வருந்துகிறார்
திருமூலர்; தெய்வம்கூட, துணை நிற்காது என்கிறார்.
துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறிவாரே (திருமந்திரம் - 255)

கருத்து: முற்றும் துறந்தவனுக்கு, சுற்றம் முதலான தொடர்புகள் இல்லை. அதனால், அவன் இறைவனை மறக்க மாட்டான். அதனால், அவனை எந்தத் தீங்கும் தீண்டாது. அப்படி இல்லாமல், சுற்றத்தாரோடு கூடி வாழ்பவன் அறம் செய்யாமல் இறந்தால், அவன் விரும்பிய இன்பம் அவனுக்கு இல்லை. வாழும்போது, இறைவனை மறந்திருந்தால், தெய்வமும் அவனுக்குத் துணை வராது. அதனால், அவனுக்கு இங்கு மட்டுமல்ல; மேலுலக இன்பங்களும் இல்லை. ஆகவே இல்லறம் - துறவறம் எனும் இருவகை அறங்களை - அவற்றின் தன்மைகளை அறிந்து, இயன்ற ஒன்றில் நில்லுங்கள்!

இப்பாடலில் ‘வழிமுதல்’ எனும் சொல்லைத் திருமூலர் கையாண்டிருக்கும் விதம், ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இல்லறம் - துறவறம் எனும் இரண்டிலும், முதலில் சொல்லப்படுவது இல்லறமே. அப்படி இருந்தும் திருமூலர் இப்பாடலில் ‘துறவறத்தை’ முதலில் சொல்லியிருப்பது நுணுகி ஆராய வேண்டியதாகும். அது மட்டுமல்ல, துறவறத்தைச் சொல்லித் துவக்கப்பட்ட இப்பாடலில், இல்லறத்தைப்பற்றி வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. துறவறத்தைச் சொல்லிப் பாடலைத் துவக்கக் காரணம் - வாழ்வியல் உண்மை. ஆம், வாழ்வியல் உண்மைதான். துறவறம் என்பதுதான் வாழ்வியல் உண்மை.

தாயின் வயிற்றில் பத்து மாதங்கள் இருந்தோம். அதைத் துறந்து வெளியில் வந்தோம். அதன்பின், தாய் ஊட்டிய பாலைத் துறந்து, நாமாகவே உண்டோம். சிறுவயதில் விளையாட்டுப் பொருட்களில் மனம் பதிய, பிறகு அவற்றைத் துறந்து, எதிர்பாலாரிடம் (ஆண்/பெண்) மனம் பதிந்தது. இவ்வாறு பிறப்பு முதல் விரும்பியோ விரும்பாமலோ; ஒவ்வொரு பருவத்திலும்  துறவை ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஒன்றைத் துறந்தோமே தவிர, அது உண்மையான முழுமையான துறவாக இல்லை. ஒன்றைத் துறந்த நாம், அந்த வேகத்திலேயே அடுத்ததைப் பற்றி விட்டோம்.

பிறகு, துறவாவது ஒன்றாவது? ஒவ்வொன்றாகத் துறந்தோம், அல்லவா? அது பக்குவம். அடுத்ததைப் பற்றினோம் அல்லவா? அது பக்குவமின்மை. ஒன்றை விட்டு, அடுத்ததை ஒவ்வொன்றாகப் பற்றிக்கொண்டிருந்த நாம், ஒரு காலகட்டத்தில் எதையுமே பற்றிக்கொள்ள முடியாத நிலைக்குப் போய் (தள்ளப்பட்டு) விடுவோம். இருப்பதையாவது பற்றிக் கொள்ளலாம் என்றால், அடுத்தவர்கள் பிடுங்கிக் கொண்டுபோய் விடுவார்கள்! அந்த நேரத்தில் மனம் படும் துயரம் இருக்கிறதே, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

வேறு வழியே இல்லை. ஓரளவிற்கு வயதான பிறகாவது, துறவறத்தை மேற்கொள்ள முயன்றுதான் ஆக வேண்டும். ஆனால் சிறுவயதில் இருந்தே ‘‘அதைக்கொடு! இதைக் கொடு!’’ என்று தெய்வத்திடம் கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்ட நாம்,  ஓரளவிற்கு வயதான பிறகும்கூட,  எந்தக் கோயிலுக்குப் போனால், எந்த சாமி, என்ன வரம் கொடுக்கும், ஏதாவது பரிகாரம் இருக்கிறதா  என்றுதான் அலைகிறோமே தவிர, அன்பின் வடிவாக, அமைதியின் இருப்பிடமாகச் சொல்லப்படும் தெய்வத்திடம் ‘‘அன்பைக் கொடு! அமைதியைக் கொடு! நல்லதை அறிந்து அதைக் கடைபிடிக்கும் நிலையைக் கொடு!’’  என்று கேட்பது இல்லை.

இருப்பதில் இருந்தே தப்ப வழி தெரியாத நிலையில், மேலும் மேலும் சிக்கிக் கொள்கிறோம். சிக்கல் அதிகமானவுடன், தாங்க முடியாமல் திண்டாடுகிறோம். இதைத்தான் ‘வழிமுதல்’ என அடிக்கடிச் சொல்லி, பாடம் நடத்துகிறார் திருமூலர். தீயவற்றிலிருந்து விலகி, நல்லனவற்றில் ஈடுபட்டு, தெய்வ சிந்தனையுடன் இருக்கிறோம் என்பது தெரிந்தாலே போதும். நம்மைச் சுற்றியிருக்கும் (வில்லங்க) கூட்டம், தானாகவே விலகிப்போய் விடும். அதை விட்டு, கண்களில் பட்டனவற்றிலும், காதுகளால் கேட்டவற்றிலும் கருத்தைப் பறிகொடுத்து, தெய்வ சிந்தனையே இல்லாமல், அறத்தை மீறி நடந்தால் - உலகில் எந்தவிதமான இன்பமும் நமக்கு இருக்காது.

அறத்தை மீறியதால், மேலுலுக இன்பமும் இருக்காது. அதாவது அறம் மறந்து செயல்படுபவர்களுக்கு தெய்வம்கூடத் துணையாக இருக்காது. ‘‘ஆகவே இதை உணர்ந்து, இல்லறமோ, துறவறமோ ஏதாவது ஒன்றில் உறுதியாக நில்லுங்கள்!’’ என்கிறார் திருமூலர். மேலும் ‘‘இல்லறம்-துறவறம் இரண்டின் மேன்மைகளை அறிந்திருந்தும், அறவழியில் நடவாமல், அறமல்லாத வழியிலேயே நடக்கிறார்களே இம்மனிதர்கள்’’ எனத் திருமூலரின் வருத்தமும் இப்பாடலில் வெளிப்பட்டுள்ளது. இல்லறமோ, துறவறமோ, தீமைகளில் இருந்து விலகி, அறவழியில் நடக்க முயல்வோம்! ‘தெய்வம் நமக்குத் துணை பாப்பா, ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா’ எனும் பாரதியின் வாக்கு உண்மையாகட்டும்.

(மந்திரம் ஒலிக்கும்)

- பி.என்.பரசுராமன்