பிரசாதங்கள்



* முலாம்பழ முந்திரி டிலைட்

என்னென்ன தேவை?

முலாம் பழம் சிறியது - 1,
திக்கான தேங்காய்ப்பால் - 1 கப்,
வெல்லம் - 1 கப், குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா
1 சிட்டிகை, முந்திரி - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

முலாம் பழத்தை தோல், விதை நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முந்திரியை தண்ணீரில் ஊறவைக்கவும். பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட்டு முலாம் பழம், முந்திரியை சேர்த்து ஒரே ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து தேன் போல வந்ததும் இறக்கி சிறிது ஆற விட்டு, முலாம் பழக்கலவையில் சேர்த்து, அதனுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கலந்து, மேலே சிறிது முந்திரியை தூவி ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

குறிப்பு: நுங்கு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழத்திலும் செய்யலாம்.

* பிஸ்தா சந்தேஷ்

என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் பனீர் - 250 கிராம்,
பொடித்த சர்க்கரை - 1/2 கப்,
நெய் - 1 டீஸ்பூன்,
குங்குமப்பூ - சிறிது,
பிஸ்தா தூள், பிஸ்தா சீவல் - தலா 1/4 கப்,
அலங்கரிக்க முந்திரி, பிஸ்தா, பாதாம் சீவல் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கொதிக்கும் தண்ணீரில் பனீரை போட்டு 10 நிமிடம் கழித்து துணியில் கட்டி தொங்க விடவும். தண்ணீர் முழுவதும் வடிந்ததும் பனீரை துருவி தட்டில் போட்டு அதனுடன் பிஸ்தா தூள், சர்க்கரைத்தூள், குங்குமப்பூ சேர்த்து கைவிடாமல் தேய்க்கவும். தவாவில் நெய் ஊற்றி பனீர் கலவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி ஆறவிடவும். மீண்டும் பிசைந்து பிஸ்தா சீவல் சேர்த்து விருப்பமான வடிவத்தில் செய்து மேலே பிஸ்தா சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.

பொரித்த பத்ரி

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1½ கப்,
பெரிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
இஞ்சி - 1 துண்டு,
தண்ணீர் - 1¾ கப்,
உப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 3,
சீரகம் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 1¾ கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிது சிறிதாக மாவை சேர்த்து கொதிக்க விடவும்.  கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கரகரப்பாக அரைத்த பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியை வதக்கி மாவில் கொட்டி உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும். அனைத்தும் சேர்ந்து வெந்து சுருண்டு வரும்போது இறக்கி ஆறவிடவும். ஆறிய மாவை கைவிடாமல் நன்கு மிருதுவாக பிசைந்து தேங்காய்த்துருவல், சாம்பார் வெங்காயம், சீரகம் கலந்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 5 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு மாவை 1/2 இன்ச் கனத்திற்கு சப்பாத்தியாக தேய்த்து பூரி அளவிற்கு வட்ட வட்டமாக வெட்டி சூடான எண்ணெயில் பத்ரிகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

* சாக்லேட் பர்ஃபி

என்னென்ன தேவை?

பால் பவுடர் - 1/2 கப்,
கோகோ பவுடர் அல்லது சாக்லேட் பவுடர் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை - 50 கிராம்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
இனிப்பு கோவா - 1/2 கப்,
தண்ணீர், நறுக்கிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் பால் பவுடர், கோகோ பவுடர் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பால் பவுடர், கோகோ கலவையை கொட்டி கிளறி, நடுநடுவே நெய் சேர்த்து கிளறி இறக்கவும். நான்ஸ்டிக் தவாவில் சிறிது நெய்யை ஊற்றி மிதமான தீயில் வைத்து கோவாவை சேர்த்து கிளறி, அதனுடன் பால் பவுடர், கோகோ கலவையை சேர்த்து கிளறவும். நடு நடுவே சூடான நெய் சேர்த்து தவாவில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் ஊற்றி, நட்ஸ் தூவி லேசாக அழுத்தி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

* காய்கறி அவியல்

என்னென்ன தேவை?

துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, மாங்காய், கொத்தவரங்காய் அனைத்தும் சேர்த்து - 1/2 கிலோ,
பச்சைமிளகாய் - 4-6,
உப்பு - தேவைக்கு,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டித் தயிர் - 1 பெரிய கப்,
தேங்காய்த்துருவல் - 1/2 முடி,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தாளிக்க கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். காய்கறிகளில் உப்பு, தண்ணீர் ஊற்றி சிறு தீயில் வைத்து வேக விடவும். நன்றாக வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து கிளறி கொதிக்க விடாமல் இறக்கவும். பிறகு அதன் மீது தேங்காய் எண்ணெய், அடித்த தயிரை ஊற்றி கலந்து கொள்ளவும். கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அவியலில் ஊற்றி கலந்து பரிமாறவும்.

* கோதுமை ரவை ஸ்வீட் கிச்சடி

என்னென்ன தேவை?

கோதுமை ரவை, வெல்லம் - தலா 1/2 கப்,
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
தண்ணீர் - 1¾ கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 1 டேபிள்ஸ்பூன்,
குங்குமப்பூ - சிறிது.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர், வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கரைந்ததும் வடித்து கொள்ளவும். தவாவில் நெய் விட்டு முந்திரி, பாதாம், பிஸ்தாவை வறுத்தெடுத்து தனியே வைக்கவும். அதே தவாவில் கோதுமை ரவையை சேர்த்து வறுத்தெடுத்து தனியே வைக்கவும். மீண்டும் தவாவில் 1½ கப் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பு போட்டு மிதமான தீயில் வைத்து வேகவைத்து உப்பு போட்டு கிளறவும். அதனுடன் வறுத்த கோதுமை ரவை, வெல்ல கரைசல் ஊற்றி நெய் சேர்த்து கிளறவும். அனைத்தும் சேர்ந்து நெய் பிரிந்ததும் குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த நட்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

- சந்திரலேகா ராமமூர்த்தி