பதினாறு செல்வங்கள் அருளும் வரலட்சுமி



திருமகள் இல்லம் குடிபுகுந்து
தினமொரு கோலம் பூண்டாள்!
வறுமையதை விரட்டி விட்டாள்!
பசியதைப் பூரணமாய் போக்கினாள்!
வீடெங்கும் தானியம் சிந்தவிட்டு
சிற்றெறும்புக்கும் உணவளித்தாள்!

மானம் மறைக்கவே ஆடை
மனிதருக்கது அடிப்படை ஆசை!
ஆடம்பரமாக்கியதை கொண்டாடுவது
மனதில் எழுந்த பேராசை!
சொர்க்கம் நீங்கி செய்யாள்
பாற்கடல் புகுந்தாள்!

அமிர்தம் கடைந்திட்ட போது
மாலையுடன் அவதரித்தாள்!
தாமரையிலை தண்ணீராய்
பரந்தாமன் மனம் கண்டு
மகிழ்ந்து மாலை சூட்டினாள்!
மாலவன் மார்பில் குடியேறினாள்

நல்லோர் மனம் நாடியமர்ந்து
நலம் பதினாறும் தரும் செல்வமகள்!
சுனையூறிய பாறைக்கும்
கோடையில் தாகமெடுக்கும்
ஒவ்வொரு அசைவினிலும்
இயற்கை பாடம் நடத்தும்!

அறியாமையில் ஆடியவர்
அடங்கி அமரும்போது
அனுபவத்தின் அறிவுரை
ஆழ்ந்த ஞானம் சேர்க்கும்!

இருப்பதை மறைத்துவைத்து
பொருள் இல்லை என்பாரிடம்
சொல்லாமல் விலகிடுவாள்!
இருப்பதைக் கொண்டு
மனநிறைவு கொண்டால்
விரும்பி சேர்ந்திடுவாள் வரலட்சுமி!

வெள்ளி நீரருவி பெருக்கில்
வெள்ளை மனதில்! பசுமை முகத்தில்!
அழகாடும் இடத்தில், மழலை அன்பில்!
கற்றோரைப் போற்றி, கலைகள் வளர்ப்பதில்
வெற்றிக் களிப்பில், நற்சாந்து மணத்தில்!

நற்குலமங்கையர் குங்குமத்தில், குணத்தில்
நலிந்தோருக்கு செய்யும் உதவியில்
நிரந்தரமாய் தங்கிடுவாள் திருமகள்!
முயற்சிக்கு நம்பிக்கை செல்வம்!
நம்பினோருக்கு வாழ்க்கை செல்வம்!

- விஷ்ணுதாசன்