நேயம் நினைத்து வியக்கிறேன்!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

பொறுப்பாசிரியரின் ‘உள்ளே ஒலிக்கும் குரல்’ தலையங்கம் சிந்திக்கவைத்தது. ‘இறைவனுக்கில்லாத அக்கறையா பிறருக்கு வந்து விடப்போகிறது? நம்புவோம். பிரார்த்திப்போம். ஒளி பெறுவோம்’ என்ற அறிவுரை மனதுக்கு இதமாக இருந்தது.
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

‘திருமலை - திருப்பதி கோவிந்தனின் கட்டுரையும், வண்ணமயமான படங்களும் கோவிந்தனையே நேரில் தரிசிக்கின்ற பாக்கியத்தை பெற்றதுபோல் இருந்தது. மிகச் சரியான தருணத்தில் வெளியிடப்பட்ட மிகச் சிறந்த கட்டுரை.
- வா.மீனாவாசன், சென்னாவரம்.

பாலகுமாரனின் எழுத்துகளில் மகாபாரதத்தை படிப்பது என்பது அப்படியே அந்தக் காவியத்தை மனதுக்குள் நிகழ்வது போன்றது என்றால் அது மிகையில்லை. எழுத்துச் சித்தருக்குத் தொடர்ந்து அஞ்சலி செலுத்திவரும் தங்களது நேயம் நினைத்து வியக்கிறேன்.
- லட்சுமி, சென்னை.

ஆன்மிகம் இதழில் வரும் ஒவ்வொரு பகுதியும் சிறப்பானது. திருமூலர் மந்திர ரகசியம் தொடர் இறையை தேடுவதில் எங்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது. திருமலை மஹா சம்ப்ரோக்ஷண வேளையில் திருப்பதி குறித்த கட்டுரை வேங்கடவனையே தரிசித்த நிறைவைத் தந்தது.
- மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

திருப்பரங்குன்றம் பற்றிய கட்டுரை, வரலாற்று தடயங்களோடு தலத்தின் சிறப்பையும் தெரிந்துகொள்ள உதவியது.
- சுப்பிரமணியன், கடலூர்.

ஆன்மிகம் பலன்-ராகவேந்திரர் சேவா டிரஸ்ட் இணைந்து வழங்கும் நாலம்பல தரிசனத்தில் கலந்துகொள்ள எங்களுக்கும் பாக்கியம் கிடைத்தது. ‘‘அந்த நாளும் வந்திடாதோ’’ என்று ஏங்கிக் காத்திருக்கிறோம். ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி ஏழை அம்மையாரை மகிழ்வித்த அதே
உணர்வைப் பெறுகிறோம்.
- அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி, பெங்களூரு-76.

திருச்செந்தூர் முருகன் கோயில் கட்டுரையில் தினசரி வழிபாட்டு முறைகள், மாதச்சிறப்பு வழிபாடுகள், ஆண்டு திருவிழாக்கள் பட்டியலை வெளியிட்டதோடு தலத்தின் சிறப்புகள் பலவற்றையும் கூறியிருந்தது பயனுள்ளதாக இருந்தது - குறிப்பாக  இலை விபூதி பிரசாதம் தயாரிக்கும் முறை.
- K.சிவக்குமார், சீர்காழி.

வடஇந்தியாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்று போற்றப்படும் மதுரா அருகில் உள்ள ஸ்ரீரங்க ஆலயத்தின் மகத்துவங்களையும், அரிய வண்ணப்படங்களையும் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் திருநாள் தருணத்தில் வெளியிட்டிருப்பது அபாரம். .‘கோவிந்தா, கோவிந்தா’ எனும் மாலவனின் திருநாமத்தை தலைப்பாக்கி திருமலை-திருப்பதி மஹாசம்ப்ரோக்ஷணம் சமயத்தில் கட்டுரை மற்ரும் வண்ணப்படங்களை வழங்கி வேங்கடவனுக்குச் சிறப்பு மகுடம் சூட்டி அலங்கரித்து விட்டீர்கள்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.  சென்னை-72.

திருப்பதி தரிசன மரபை விளக்கும் வகையில், கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவில் மற்றும் அலர்மேல் மங்கை தாயார் மகிமைகள் என அந்த பதினான்கு பக்கங்களும் ஒரே கோவிந்த பக்தி பரவசம்தான் போங்கள்.
- சிம்ம வாஹினி, வியாசர் நககர்.