அதிசயம் பொதிந்த மச்சாவதாரம்-ஸ்ரீ மத்ஸிய ஜெயந்தி: 28-4-2022



‘‘என் பிரிய மஹாராஜனே... பகவான் நரசிம்மமாக தூணைத் பிளந்து தோன்றினான். வராகமாக ஆழ்கடலில் கர்ஜித்து பூமியை மூக்கின் மீது நிறுத்தி சுழற்றினான். வேறொரு யுகத்தில் பாற்கடலை கடையும்போது கூர்மமாக மலையைத் தாங்கினான்.
அங்கேயே தன்வந்திரியாக அமிர்தத்தை ஏந்தினான். வாமனனாக மூவுலகத்தையும் அளந்தான். தர்மத்தை அதர்மம் அழிக்கும்போது மீண்டும் தர்மத்தை நிலைநாட்டுகிறான். நான் உன்னைச் சேர்ந்தவன் என்று எங்கேனும் ஒரு பக்தன் சொல்லி துளசியை அவன் பாதார விந்தங்களில் போட்டுவிட்டால் பரம்பரையாக நின்று காப்பாற்றுகிறான்.

ஆனால், மச்சாவதாரமோ ஆச்சரியமாக உலகமே இல்லாத காலத்தில் நிகழ்ந்தது. அது பிரளய காலம். ஆழிப்பேரலைகள் வானம் முட்டி எழுந்தன. அண்ட சராசரத்தையும் தன் மூலத்தோடு ஒடுக்கி, அனைத்தையும் நீரால் கரைத்து நீரையும் தனக்குள் கரைத்து விஷ்ணு யோக நித்திரையில் லயிப்பார். பிரபஞ்ச நாடகத்தை நிறுத்தி யுகத்தை முடிவுக்குக் கொண்டு வருவார். பிரம்மா தன் நான்கு சிரசுகளாய் விளங்கும் வேத அதிர்வுகளை மெல்ல வருடி தானும் அவருக்குள் சங்கமமாவார்.

 அடுத்த பிரபஞ்சப் படைப்பில் எல்லாவற்றையும் பரவவிடுவார். பிரளயத்தால் எண்திசைகளும், தேசங்களும், காலமும் மறைந்து வெறும் பெருவெளியாகி நிற்கும். இதற்குப் பிறகு ஸ்ரீமன் நாராயணன் எப்போது யோக நித்திரையிலிருந்து விழித்து பிரபஞ்சம் உருவாக வேண்டுமென நினைக்கிறாரோ அப்போது பிரம்மா தோன்றுவார். மீண்டும் வேதங்கள் பிரம்மாவிடம் அளிக்கப்படும். அதைக்கொண்டு சிருஷ்டி தொடங்கும்.

எப்போதும், எல்லா நேரமும் தேவர்களை விட அசுரர்கள் தெய்வமே ஆனாலும் அழிப்பதற்கு துணிகின்றனர். தன்னை ஆள இவன் யார் என்ற அகங்காரம் தெய்வத்திடமே அவர்களுக்கு தோன்றுவதுண்டு. அப்படி அகங்காரமாக நினைத்த மது, கைடபன் எனும் அரக்கர்கள் பிரபஞ்சம் முழுதும் பிரளய நீரினால் சூழப்பட்டு இருப்பதைக் கண்டான். நம்மை இதுவொன்றும் செய்யவில்லையே என ஆச்சரியமாகப் பார்த்தான்.

இனி நாம்தான் எல்லாவற்றையும் ஆள வேண்டுமோ என்று சிரித்துக்கொண்டனர். எங்கே அந்த மகாவிஷ்ணு. யார் அந்த பிரம்மன் உலகத்தை படைப்பது. வேதங்கள் பிரம்மாவிடம் இருந்தால் என்ன, என்னிடம் இருந்தால் என்ன. வேதங்களை வைத்துக் கொண்டு நானே படைத்துக் கொள்கிறேன். முதலில் அந்த மகாவிஷ்ணுவை பார்த்து வரலாம் வா என்று இரு அசுரர்களும் தமது மாய சக்தியினால் பிரளய நீரை கிழித்துக் கொண்டு வைகுந்தம் வந்தனர்.

பரீட்சித்... வேதத்தின் அருமையை அசுரர்கள் கூட அறிந்திருக்கின்றனர். ஏன் தெரியுமா. வேதமே பகவானின் சொரூபம். இறைவன் இருக்கிறான் என்று வேதம்தான் முதலில் சொன்னது. நேரே இருப்பதை பார்த்து தெரிந்துகொள்ள கண்கள் போதுமே பரீட்சித். இப்போது நீ வாழும் பிரபஞ்சத்திலுள்ள, மறைக்கப்பட்டிருக்கும் சக்திகளை தெரிந்துகொள்ள வேதத்தைத்தான் நாட வேண்டும்.

மறைந்திருக்கும் விஷயங்களையும், எது நம்மை மறைக்கிறது என்று வேதங்கள்தான் கூறுகின்றன. அதனால்தான் வேதத்திற்கு ‘மறை’ என்று பெயர். பகவானின் சுவாசமே வேதங்கள்தான். வேதங்களால் சொல்லப்பட்டதை சூட்சுமமாகவும், ஸ்தூலமாகவும் பகவான் படைக்கிறான்.

வேதத்தை ‘அபௌருஷேயம்’ என்றும் ‘அநாதி’ என்றும் ரிஷிகள் சொல்கிறார்கள். ‘அபௌருஷேயம்’ என்றால் ஒரு புருஷனால், தனி மனுஷனால் செய்யப்படாதது என்று பொருள். ‘அநாதி’ என்றால் எப்போது தோன்றியது என்ற காலம் வரையறுக்கப்படவில்லை என்று பொருள். வேத சப்தங்கள் அண்டத்தில் கூட்டம் கூட்டமாக இருப்பதை பார்த்து, கிரகித்து எழுதினார்கள். அந்த ரிஷிகள் நாங்கள் இயற்றவில்லை. மந்திரத்தை பார்த்தோம் என்றார்கள். அப்படிப்பட்ட வேதங்களை மது, கைடபன் என்ற இரு அசுரர்களும் கவர்ந்து படைப்புத் தொழிலை நாம் செய்து கொள்ளலாம் என கணக்கிட்டார்கள்.

வைகுந்தத்தின் வாயிலை அடைந்தனர். ஆயிரம் தலைகளையுடைய ஆதிசேஷன் நான்கு திசைகளிலும் பார்த்துக்கொண்டிருந்தார். அதன் மூச்சுக்காற்றின் அதிர்வைக் கூட தாங்க முடியாது பின்தங்கினர். ஆனால், அவர்கள் அசுரர்களே ஆனாலும் வைகுந்தத்திற்குள் வந்து மகாவிஷ்ணுவை பார்த்து விட்டார்களே. இந்த பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அவர்கள் வெகு தூரத்திலிருந்து மகாவிஷ்ணுவின் நாபியிலிருந்து சென்ற கொடியின் உச்சியில் பிரம்மா இருப்பதை கண்டனர்.

பிரம்மனின் கைகளில் வேதங்கள் இருந்ததைப் பார்த்தனர். எப்படியேனும் அதைக் கவர்ந்து விட வேண்டுமென வெகு உயரத்தில் பறந்தனர். அந்தரத்தில் மிதந்தபடி பிரம்மனிடமிருந்து சகல உலகினுடைய சிருஷ்டியின் ஆதாரமான வேதங்களைப் பறித்தனர். பிரம்மா அதிர்ந்தார். இனி எப்படி நான் எல்லாவற்றையும் சிருஷ்டிப்பேன் என்று கலங்கி நின்றார். யோக நித்திரையில் கிடக்கும் எம்பெருமானின் பாதம் பற்றிச் சொன்னார்.

மன் நாராயணன் விழித்தார். பிரம்மனை நோக்கினார். அப்போது பேரற்புதமான அந்த அவதாரம் அங்கு நிகழ்ந்தது. மச்சம் எனும் மீன் உருவத்தை எடுத்தார். அதன் பெரிய உருவம் பார்த்து பிரம்மாவே பயந்தார். அதன் வாலின் அசைவு பிரளய நீரையே கலைத்தது. அதன் திருவாயினின்று காப்பேன் என்பது போன்று பேரொலி எழுந்தது. பிரம்மாவே அந்த திவ்ய வடிவத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே மதுகைடப அசுரர்கள், இதென்ன விசித்திர மீன் என்று ஆத்திரத்தோடு அதை நோக்கித் திரும்பினார்கள்.

அந்த மச்சத்தின் உடலில் தோன்றிய ஒளியும், வசீகரமும் பார்த்து வியக்காமல் இருக்கமுடியவில்லை. ஆனாலும், இதை அழிக்க வேண்டுமென வெறியோடு அருகே வந்தனர். ஆனால், வெகு சுலபமாக மது கைடபர்களை மச்சாவதாரமெடுத்த பகவான் அழித்தார். வேதங்களை மீட்டார். பிரம்மாவிடம் அளித்து சிருஷ்டியின்போது வெளிப்படுத்து என்று அருளினார். வேதங் களின் அருமையை புரிந்து அதை கவர்ந்த அசுரர்கள் எம்பெருமானோடு கலந்தனர்.

எம்பெருமான் இதுபோன்று வேதங்களை காக்க பலமுறை அவதாரம் செய்திருக்கிறார். காலக் கணக்குகள் மிகப் பெரியது. யுகம் யுகமாக உலகைக் கண்டால் எண்ணற்ற அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. பிரபஞ்சத்தின் பிரமாண்டம் தெரியும்போது நமது அகங்காரத்தின் எடை குறைகிறது. அதைத்தான் நமது புராணங்கள் செய்கின்றன’’ என்று சொன்னபோது அவன் திகைத்துப்போய்க் கிடந்தான்.

கிருஷ்ணா