சிந்தனைக்கு இனிய சித்திரை



தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். பகவான் கீதையில்  
ப்ருஹத்ஸாம ததாஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம் |
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும், சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும் ,மாதங்களில் நான் மார்கழியாகவும், பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத்  தனிச் சிறப்பு உண்டு.

பன்னிரண்டு ராசிகளில் முதல் ராசி  மேஷம்.

அந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம் சித்திரை மாதத் துவக்கம். உத்தராயணக் காலத்தின் முழு ஆற்றலை நவகிரக நாயகனான சூரிய பகவான் பெரும் நேரம்.காலக் கணக்கை தீர்மானம் செய்பவன் கதிரவன் அல்லவா? ராசி மண்டலத்தின் தலை வாயிலில் அவன் நுழையும் காலம் ஆண்டின் துவக்க நாளாகக் கொண்டாடுகிறோம். இந்த மாதத்திற்குப் பல சிறப்புக்கள் உண்டு. இராமபிரான் பட்டாபிஷேகம் செய்த மாதம் இந்த சித்திரை மாதம்.  

இந்த சித்திரை மாதத்தில் சைவம், வைணவம் மட்டுமல்ல, ஜைனர்களுக்கும் கூட விழாக்கள் நிறைந்த  மாதமாக இருக்கிறது.இந்த சித்திரை மாதத்தில் தான் அத்வைத நெறியை, அனைத்துலகும் பரப்பிய, சிவனின் அவதாரமாக கருதப்படுகின்ற ஆதிசங்கர பகவத் பாதர் அவதரித்தார். (சித்திரை வளர்பிறை பஞ்சமி). இதே சித்திரை மாதத்தில்தான், (திருவாதிரை நட்சத்திரம்), அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச  மாமுனிவரான பகவத் ராமானுஜரும் அவதரித்தார்.

இதே சித்திரை மாதத்தில்தான் மத்வாச்சாரியார் ஜெயந்தியும் வருகின்றது. இதே சித்திரையில் தான் மதுரகவியாழ்வாரின் ஜெயந்தியும் வருகிறது. நம்மாழ்வாரின் தமிழ் பிரபந்தங்களை உலகம் முழுக்க பரப்பியவர் மதுரகவியாழ்வார். சித்திரை மாதத்தின் முதல் நாளில், அனேகமாக, சைவ வைணவ வேற்றுமை இல்லாது, எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடக்கும்.

எல்லாக்  கோயில்களிலும் அன்று பஞ்சாங்க படனம் என்று நடத்துவார்கள். சித்திரை முதல் நாள் ரங்கத்தில் பஞ்சாங்கம் படிப்பது  மிக விசேஷமாக நடக்கும். அதைப் போலவே திருமலையிலும் கொலு வைத்து பஞ்சாங்கம் படிப்பது  நடை பெறும்.

தினசரியும் பஞ்சாங்க படனம் உண்டு. சித்திரை மாதம் நம்முடைய தமிழகத்தில் மட்டும் இல்லாமல், கேரளாவிலும்  சைத்ர விஷூ  என்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தின் கடைசி நாளில் அவர்கள் தங்கள் பூஜை அறையில், தங்கம், வெள்ளி, மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், பழங்கள், காய்கறிகள், புத்தாடைகள், கண்ணாடி, தானியங்கள், தேங்காய் முதலிய அத்தனை மங்கலப் பொருட்களையும் வைப்பார்கள்.  சித்திரை முதல் நாள் காலையில் விடிந்ததும் அவர்கள்கண்ணை மூடிக் கொண்டு நேராக பூஜை அறைக்குச் சென்று  இந்த மங்கலப் பொருட் களைத்தான் பார்ப்பார்கள்.

இதன்மூலமாக அந்த வருடம் முழுக்க தங்களுக்கு மங்கல நாட்களாக இருக்கும் என்கிற நம்பிக்கை. சித்திரையில்தான் நான்முகன் உலகத்தை படைத்ததாகச்  சொல் வார்கள். அதற்காக பகவான் மச்ச அவதாரம் எடுத்தார்.12 அவதாரங்களில் மச்ச அவதாரம், பரசுராம அவதாரம் சித்திரை மாதத்தில் நடந்தது.சித்திரையில் மதுரை மீனாட்சி திருக்கோயிலில் 12 நாட்கள் விழாக்கள் நடக்கும்.

பிரமோற்சவ விழாவில் சித்திரைத் தேர் மிக அற்புதமாக நடக்கும். அந்தத் தேரை வடம் பற்றி இழுத்தால் எந்த வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் தரிசித்தவர்களுக்கு திருமணத் தடைகள் விலகி விடும் என்பார்கள். கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி, வைகை ஆற்றில் இறங்கும் காட்சி, உலகப் பிரசித்தி பெற்ற விழாக் காட்சியாகும்.

சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமியில் தான் திருமகள் பூலோகத்திற்கு வந்ததாக ஒரு வரலாறு உண்டு. தில்லை திருச்சித்திர கூடத்தில் சித்திரை மாதப் பிறப்பு அன்று காலை, பெருமாள் கோயிலில், தேவாதி தேவனுக்கு உபய நாச்சியார் மற்றும் ஆண்டாளுடன் விசேஷமான அலங்காரத் திருமஞ்சனம் நடைபெறும். அன்று பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் இரவு பிரகார புறப்பாடு கண்டருளுவார்.

அதைப்போலவே சித்திரைப் பௌர்ணமியன்று கஜேந்திர மோட்சம் நடைபெறும். கஜேந்திர மோட்ச விழாவானது ஸ்ரீரங்கத்திலும் மிகச் சிறப்பாக நடைபெறும்.
சித்திரை மாதத்தில் மிக விசேஷமான ஒரு திதி வளர்பிறையில் வரும் திரு தியை.இந்தத் திருதியை திதியில் தான் பெருமான் மச்ச அவதாரம் எடுத்தார். சோமுகாசுரன் என்கிற குதிரை முகம் கொண்ட அசுரனை அழித்து வேதங்களை மீட்டெடுத்தார்.

எனவே, பெருமாளுக்கு மிகவும் உரிய இந்த அக்ஷய திருதியை நாளில் துவங்கப்படும் எந்தக் காரியங்களும் வளர்பிறை போல் வளர்ந்து நிறைவான பலனைக் கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. அட்சய திருதியை அன்று கும்பகோணம்  வீதிகளில்12 கருட சேவை மிகவும் சிறப்பாகநடைபெறும்.

அட்சய திருதியை அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்து, தானங்களைச் செய்ய வேண்டும். சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரம் நடராஜருக்கு விசேஷமானது. வருடத்தில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களில் மிக முக்கியமான அபிஷேகம் சித்திரை மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் நடக்கும் அபிஷேகமாகும். சித்திரை முதல் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலே மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சித்திரை முதல் நாளில் எல்லா நதிகளும் தங்கள் பாவங்களை தீர்த்துக் கொள்வதற்காக தாமிரபரணியில் நீராடி தூய்மை பெற்றன. ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று தேர்த்திருவிழா நடை பெறுகிறது.ரேவதி ஸ்ரீரங்கம் பெருமாளின் நட்ஷத்திரம். இந்த மாதத்தின் இன்னொரு மிகப் பெரிய சிறப்பு சித்ரா பவுர்ணமியில் கொண்டாடப்படுகின்ற சித்திரகுப்த ஜெயந்தி விழா.

இந்த சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகில் நெல்லுக்கார வீதியில் ஒரு ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தில் சித்ரகுப்தருக்கு விசேஷமான பூஜைகள் நடந்து வருகின்றன. விழாக்களில் உண்மையான அர்த்தங்களை நாம் தெரிந்து கொள்வது நம்முடைய ஒழுக்கத்தை மேம் படுத்திக் கொள்ளவே தவிர, நாம் பாவங்களில் இருந்து தப்பிப்பதற்காகஅல்ல.

பாரதிநாதன்