உள்ள(த்)தைச் சொல்கிறோம்



இந்தியாவின் பெருமைவாய்ந்த கோயில்களில் ஒன்றாய் மிளிரும் ``ஒப்பற்ற  ஒண்டிமிட்டா ராமாலயம்’’ பற்றிய கட்டுரையும், எழில் மிகு வண்ணப்படங்களும்  மிகவும் அற்புதமாக இருந்தது. ஸ்ரீராமபிரானின் அவதாரத் திருநாளான ஸ்ரீ ராமநவமி நன்னாளை கொண்டாடப்படுவதன் தாத்பரியங்களை 30 முத்துக்களாகக் கோர்த்த  முனைவர் ஸ்ரீராம்  வழங்கிய கட்டுரை, பரவசத்தில் ஆழ்த்தி விட்டது. ஸ்ரீராமநவமி நன்னாள் சமயத்தில் ஸ்ரீராமர் ஜாதகத்தை தரிசிக்கவைத்து,  புண்ணியம் அடையச் செய்து விட்டீர்கள். நன்றி கலந்த பாராட்டுக்கள்!
- த. சத்தியநாராயணன், அயன்புரம், சென்னை.

`சுப கிருது வருட பஞ்சாங் கம்’ வண்ண இணைப்பாக்கி, எண்ணங்களில் இனிப்பாக்கிய ஆன்மிகம். கூடவே, புத்தாண்டு ராசி பலனையும் இணைப்பாக்கி விலை மாறாமல் வாசகர்கள் நிலைஉயர அருள்புரியும் கலை அதி அற்புதம்!
- ஆர்.ஜே.கல்யாணி, நெல்லை.

உலகமயமாக்கல் நம்மை நுகர்வு பொருளாக்கி, ஆடம்பரமாக வாழ்வதே அந்தஸ்து  என்ற மூட நம்பிக்கையை விதைத்த விளைவு, சேமிப்பின் அவசியத்தை உணராமல், வரவுக்கும், செலவுக்குமாக வாழ்ந்து, முதன்முதலாக கொரோனா ஊரடங்கு என்ற  பெரும் நெருக்கடியில் சிக்கி, திக்கு முக்காடிப்போன நாம், இன்று சற்றே  ஆசுவாசப்படுத்தி, போராட்ட வாழ்வை தொடரும் சூழலில் பொருளாதார மேம்பாடு பெற  ஸ்ரீலட்சுமி பஞ்சமி விரதத்தை அறிமுகப்படுத்தியது பெரும் பாக்கியமானது.  முதன் முதலாக அறிந்து கடைபிடிக்கும் எங்கள் குடும்பம் போல, எல்லோரும் வருடந்தோறும் இந்த ஸ்ரீலட்சுமி பஞ்சமி விரதத்தை இல்லங்களில் அனுஷ்டிப்போம்.  ஆனந்தமாக வாழ்வோம்.
- மல்லிகா அன்பழகன், சென்னை.

`ராம பிரம்மம்’ சொல்லும் `சுகப்பிரம்மம்’ தழுதழுத்தாலும் `ஆன்மிகம்’ தலையங்கம் தத்துவ முத்திரை பதிக்கத் தவறவில்லை. தந்தை சொல்லே மந்திரம் தாயின் மீதான பாசம் பிறருக்காகவே வாழ்வது தியாக நெஞ்சு என பன்முகத் தன்மையில் ஸ்ரீ ராமரைக் குறிப்பிட்ட பொறுப்பாசிரியரின் வடித்த வரிகள் அனைத்தும் வைரப்பிரகாசம்!
- என்.ஜானகி ராமன், திருநெல்வேலி

`ஸ்ரீராமனின் ஜாதகம் சொல்லும் உண்மைகள்’ என்கிற பகுதி வாசகர் நெஞ்சம் நிறைந்து நெகிழ வைத்தது. பகவானின் ஜாதகம் என்பதால், இது 780 கோடி பேரின் ஜாதகம் என்ற பாவனை மற்றும் ஒப்பீடு எண்ணத்தோடு உலா வந்த விழிகளுக்கு வரிகள் ஒவ்வொன்றுமே வாழ்வியல் வரிகள் ஆயின!
- ஆர். உமா ராமர், நெல்லை.

குருப்பெயர்ச்சி ராசி பலன்களும் தந்து, கூடவே குரு தலங்கள் தரிசனமும் அருளிய விதம், ஆனந்தராகம் இசைக்க வைத்தது. அதிலும், என் கடக ராசிக்கு கணித்தது அத்தனையுமே
இனித்தது.
 - ஆர். ராஜகோபாலன், நெல்லை.

“கம்பராமாயணம் பற்றி மதிவண்ணன் கூறியிருப்பது”, “முனைவர் ஸ்ரீராம் தொகுத்து வழங்கியுள்ள ராமர் பற்றிய முத்துக்கள் முப்பது” என அனைத்து அற்புதங்களும் சேர்ந்து “ராமாயணம்” படித்தது போன்று, ‘ஆன்மிகம்’ ஒரு மன நிறைவை வழங்கி விட்டது.
 - வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

ஸ்ரீமன் நாராயணரின் ராம அவதாரத்தின் எளிமையையும், ராம நாமத்தின் வலிமையையும், மக்களின் நல்வாழ்விற்காக அவர் வாழ்ந்து காட்டிய படிப்பினையையும் பொறுப்பாசிரியர் உணர்வுப் பூர்வமாகப் பிரதிபலித்திருப்பது பக்தர்களின் நலன் சார்ந்தது.
 - ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

பிரானும், பிராட்டியும் மங்களமுடன் அருள் கூறும் படி அட்டைப்படம் அமைய  ``ஸ்ரீ ராம நவமி’’ இதழ் பூத்துக் குலுங்கிய விதம் பூரிப்பில் அடித்தது  சதம்!
 - ஆர்.விநாயகராமன், நெல்லை.