நான் யார்?



வணக்கம் நலந்தானே!

பகவான் ஸ்ரீ ரமணரின் அவதார நோக்கத்தை உற்று நோக்க நமக்கு கிடைப்பது ஒரேயொரு பதில்தான். அதாவது பகவான் தமது வாழ்வு முழுவதும் ஒரேயொரு உபதேசத்தை கூறிக் கொண்டேயிருந்தார். அதுதான் ‘நான் யார்?’’ எனும் ஆத்ம விசாரம். தன்னை அறிவது. ஏன் நான் யார்? என்பதை அறிய வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலைத்தான் விதம்விதமாக பல பாடல்களிலும், உபதேச நூல்கள் மூலமாகவும் உணர்த்தியபடி இருந்தார்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மௌன உபதேசத்தின் மூலமாக ஆலமர் கீழ் விளங்கும் தட்சிணா மூர்த்தமாக அமர்ந்தும் பிரம்மத்தை போதித்தார். மௌனத்தினால்தான் பிரம்மம் பிரகடனம் செய்யப்படுகிறது என்று உபநிஷதம் கூறியதையே தன் அனுபூதியில் நின்று காட்டினார். அல்லது ஞானியின் அனுபூதி நிலையை உபநிஷதம் அப்படிச் சொன்னது என்றும் கொள்ளலாம். ‘‘பகவானே, நான் யார் என்று எப்படி கேட்டுக் கொள்வது’’ என்று புரியாது கேட்டபோது அழகாக பகவான் விளக்கினார்.

‘‘எதற்கெடுத்தாலும் நான்... நான்... நான்... என்று சொல்கிறாய் அல்லவா. அந்த நான் யார்? என்று சற்று உள்ளே பாரேன். மீண்டும், மீண்டும் பகவானிடம் நான் யார் என்கிற ஆத்ம விசாரத்தை எப்படி செய்வது என்று கேட்கப் பட்டது. மகரிஷிகளும், ‘‘அப்பா... ஓர் இருட்டு அறையில் இருக்கிறாய். இருட்டில் எதுவும் தெரியவில்லை.

 ஆனால், நான் இருக்கிறேனா என்று யாரிடமாவது கேட்பாயா. நான் எங்கே என்று இருட்டில் தேடுவாயா. கண்கள் இருட்டில் தவித்தாலும் நான் என்கிற உணர்வு. இருக்கிறேன் என்கிற நிச்சய உணர்வு அதாவது உன்னுடைய இருப்பு உனக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா. நீ இருக்கிறாய் என்பதை யாரேனும் சொல்ல வேண்டுமா என்ன? அந்த நான் இருக்கிறேன் என்கிற உணர்வின் மீது உன் கவனத்தை செலுத்து.

அதனை வைத்துத்தான் மற்ற எண்ணங்கள் கூட்டமாக அமர்ந்துள்ளன. எனவே, நான் இருக்கிறேன் எனும் உணர்வின் மீது கவனத்தை திருப்புங்கள். சிரத்தையோடு திருப்ப வேண்டும். அந்த நான் என்கிற உணர்வு எங்கு உற்பத்தியாகிறதோ அங்கு சென்று ஒடுங்கும். அந்த நான் எனும் எண்ண விருத்தி எப்படி உடல் முழுவதும் பரவியிருக்கிறதோ, தன்னையே உடலாக நினைத்திருக்கிறதோ அப்படியே மெல்ல கூம்பி குறுகும்.

அப்படி அது சென்று ஒடுங்கும் இடம்தான் அருணாசலம். அதுவே ஆத்ம ஸ்தானம். அதுவே பேருணர்வு. உரைக்க முடியாதது’’ என்று மிக எளிமையான மார்க்கத்தை கூறினார். நான் எனும் எண்ணம் தோன்றிய பிறகுதான் மற்ற எல்லா எண்ணங்களும் தோன்றுகின்றன. எனவே, இந்த மனதின் உற்பத்தி ஸ்தானத்திற்கு செல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை பார்ப்பீர்கள். இதைத்தான் உபதேச உந்தியார் எனும் நூலில் ‘‘உதித்த இடத்தில் ஒடுங்கியிருத்தல்’’ என்று அழகாக கூறுகிறார்.பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆராதனை - 28.4.2022

கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)