சித்ரகுப்தரை வணங்கினால் சிந்தனைகள் சீர்படும்-சித்ரா பௌர்ணமி : 16-4-2022



உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயில், கோயில்களில் வித்யாசமான கோவிலாகும். இக்கோயில் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். ஏனெனில் உலகில், காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்திரகுப்தனுக்கென்று தனி    ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு, சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பௌர்ணமிக்கு முன்தினம், சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார். இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில், ராஜவீதியில் அமைந்துள்ளது.

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால், திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருவார்கள். இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.மனிதர்களின் பாவச் செயலுக்கு இறைவன் சித்ரகுப்தரே கணக்குக் கொடுக்கிறார். அவர் வாழ்க்கையில் பாவம் செய்பவர்களைக் கண்காணித்து, அவர்களை யமனுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். இந்தியாவில் சித்திரகுப்தர் கோயில்கள் அரிதாகவே காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணப்படுகிறது.

கோயில் வரலாறு 9 ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், மூன்றுநிலை ராஜகோபுரங்களைக் கொண்டுள்ளது. இங்கே, சித்ரகுப்தர் தனது பக்தர்களுக்கு, வலது கையில் எழுத்தாணி மற்றும் இடது கையில் ஓலைச்சுவடிகளுடன் அமர்ந்த நிலையில் ஆசிர்வதிக்கிறார். இந்து நம்பிக்கையின்படி, சிவபெருமான் ஒருமுறை உலகில் ஒழுக்கத்தை நிலைநாட்ட விரும்பினார்.

பாவம் செய்தவர்களை தண்டிக்க விரும்பினார். அவர் ஒரு நபருக்குக் கடமையை ஒதுக்க வேண்டும். எனவே, அவர் ஒரு தங்கத் தட்டில் சித்திரகுப்தராக உருவம் வரைந்தார். அவர் சித்தரிப்பிலிருந்து உருவானதால், அவர் சித்ரகுப்தன் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் சித்ரகுப்தரிடம், மக்களின் நன்மை தீமைகளைக் கணக்கிட்டு, அவர்களை யமனின் முன் அழைத்துச் செல்லுமாறு கட்டளையிடுகிறார். சோழர்களுக்குப் பிறகு, மற்ற வம்சங்களால் இக்கோயில் விரிவுபடுத்தப்பட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கோயில் இது. பெரும்பாலான சுற்றுலா வழிகாட்டிகள் இந்தக் கோயிலை பார்வையாளர்களுக்கு பரிந்துரைக்கின்றனர். பக்தர்கள் சித்ரகுப்தரைத் தரிசிக்கும்போது, ​​அவர்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து, கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்.

மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் பாவங்களைச் செய்யும்போது, ​​​​ஒவ்வொரு பாவமும் சித்ரகுப்தன் மூலம் கணக்கிடப்படுகிறது என்று அவர்கள் உணர வேண்டும். இது நம் ஆன்மாவை மரணத்திற்குப் பிறகு வெகுமதி அல்லது தண்டனையைப் பெற தீர்மானிக்கிறது. இந்தக் கோயிலுக்குள் நுழைந்து சித்ரகுப்தனின் கைகளின் எழுத்தாணியையும், எழுத்தையும் பார்த்தபோது, ​​காஞ்சிபுரத்தை நிர்வகித்த பல்லவர்களும், சோழர்களும் சித்ரகுப்தனால் கண்காணிக்கப்பட்டு யமனிடம் சமர்ப்பித்தார்கள் என்று நினைக்கத் தோன்றியது.

சித்ரகுப்தரின் பதிவுகளுக்குப் பிறகு யமன் மக்களை தண்டிக்கிறார். வாழ்க்கையில் பாவம் செய்தவர்கள் யமனின் தண்டனையைப் பெறுவதை, உச்சியின் மேல் உள்ள படம் காட்டுகிறது. இந்தத் தலத்தில் செல்வ விநாயகர் சந்நதி, ராமலிங்க அடிகள் சந்நதி, ஐயப்பன் சந்நதி, விஷ்ணு துர்கை சந்நதி, நவக்கிரகங்களின் தனிச்சந்நதி என பல சந்நதிகள் அமைந்துள்ளன. மூலவர் சித்ரகுப்தர் தெற்கு பார்த்த வண்ணம் எழுந்தருள்கிறார்.

யார்யாரெல்லாம் சந்நதிக்கு வருகிறார்கள் என்பதைப் பார்த்துப் பார்த்து, நமக்கு அருள்கிறார் சித்ரகுப்தர். எமதர்மன் ஒருமுறை, கயிலாயத்தில் சிவபெருமானைச் சந்தித்து, பிரம்மதேவனால் படைக்கப்படும் உயிர்களின் பாவ புண்ணியங்களை கணக்கிட்டுத் தண்டனை வழங்குவதில் சற்று சிரமமாக இருப்பதாகவும், அதற்கென்று தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்றும் கூறினார்.

உடனே ஈசன், பிரம்மதேவனை வரச்செய்து எமதர்மனின் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கட்டளையிட்டார். ஒருநாள் சூரியன் ஆகாய மார்க்கமாகத் தன் பயணத்தைத் தொடரும்போது, ஒளிக் கதிர்கள் கடல் நீரில் விழுந்து பல வண்ண ஜாலங்களை ஏற்படுத்தின. அப்போது, கடல் நீர்ப்பரப்பில் நீலாதேவி எனும் பெண் தோன்றி, சூரியனின் மீது ஆசைப்பட்டு சூரிய பகவானைத் தழுவினாள்.

இதனால், அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் நீலாதேவி அந்த கடல் நீர் பரப்பினுள் மறைந்தாள். அந்தக் குழந்தை பிறந்த நேரம், சித்திரை மாதம் பௌர்ணமி தினம். அதாவது, சித்ரா பௌர்ணமி. சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய அந்தக் குழந்தையே சித்ரகுப்தர் ஆவார். பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் பிறந்தார் என்கிறது புராணம்.

இவர் இமயமலையில் கடும் தவம்புரிந்து பல சக்திகளைப் பெற்றார். பிறகு தந்தை, சூரியபகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராக பணியில் சேர்ந்து இன்றளவும் பணியாற்றுகிறார் என்கிறது புராணம். தென்னிந்தியாவில் சித்ரகுப்தருக்கு உள்ள ஒரே திருக்கோயில் என்ற பெருமையைப் பெறுகிறது இந்தத் திருத்தலம்.

நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதிதேவதையாக, சித்ரகுப்தர் விளங்குவதாகத் தெரிவிக்கிறார்கள், ஜோதிட வல்லுநர்கள். கேதுவை மோட்சம் அளிக்கும் கிரகம் என்பர். யார் யார் மோட்சம் செல்வர் என்று உயிர்களின் கணக்குகளை கையில் தயாராக வைத்துக்கொண்டிருப்பவர்தான் சித்ரகுப்தர். மிகச்சிறந்த ராகு-கேது பரிகாரத் தலமாகவும் இந்தத் தலம் திகழ்கிறது. சித்ரகுப்தன் கேதுவுக்கு அதிபதியாக திகழ்வதால், 7 கொள்ளு விளக்கேற்றி வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

மேலும், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய கோரிக்கைகளை ரகசியமாக, நோட்டு மூலம் எழுதி வழிபட்டால், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி உங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவர் காஞ்சி புரம் சித்ரகுப்தர். ஆகவே, சித்திரை மாதத்தில் சித்திரை பவுர்ணமியன்று சித்ரகுப்தனை வழிபட்டால் உங்கள் சிந்தனைகள் சீர்படும். வாழ்வில் நன்மைகள் ஏற்படும்!

படங்கள்: இரத்தின கேசவன்