கண்ணைக்கவரும் சித்திரைத் திருவிழா



மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.
சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது.

இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகவும்  புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிஷிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

துணை சித்திரைத் திருவிழா
மதுரையில் சித்திரைத் திருவிழாவில்
அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா போன்றே மதுரை மாவட்டம் சோழவந்தானிலும், மானாமதுரையிலும், பரமக்குடியிலும் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது.

வீரபாண்டி சித்திரைத் திருவிழா
தேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் கடைசிச்செவ்வாய்க் கிழமை தொடங்கி மறு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து எட்டுநாட்கள் நடைபெறுகிறது.

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா உலகின் மிக நீளமான விழாக்களில் ஒன்றாகும் . விழாவின் முதல் 12 நாட்கள், மீனாட்சி அம்மனுக்கான நாட்களாகும். அடுத்து வரும் நாட்கள்
கள்ளழகருக்கான விழா நாட்களாகும்.மனிதர்கள் தாம் வணங்கும் கடவுளுக்குத் திருமணம் செய்து அழகு பார்ப்பது என்பது பொதுவான  நிகழ்வுதான். ஆனால் மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டி நடைபெறும் மற்ற நிகழ்ச்சிகளாலும்  அதன் காரணமாகக் கூறப்படும் திருவிளையாடல் புராண நிகழ்வுகளாலும்  சித்திரைத் திருவிழா மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாகக் கருதப்படுகின்றது.  

மீனாட்சியின் திருக்கல்யாணம் சித்திரை 27 தான் என்றாலும் அதற்கு ஒருவாரம் முன்பே கொடியேற்றப்பட்டு திருவிழா களை கட்ட தொடங்குகிறது. பின் வரும் ஒவ்வொரு  நாளும் மீனாட்சி பட்டமேற்பது, திக்விஜயம் செய்வது, பின் சிவனைக் கண்டு நாணம் கொள்ளுதல்,  திருமணம் நிச்சயித்தல், திருமணத்திற்கு முன் கன்னி ஊஞ்சலாடல் என நிகழ்ச்சிகள் அத்தனையும் நடந்த பிறகே திருக்கல்யாண வைபோகம் நடைபெறுகிறது.

அத்துடன் முடிந்ததா? பிரச்னைகள் இல்லாத கல்யாணமா? தங்கையின் கல்யாணத்தைக் காணவரும் அழகருக்கு வழியில் சிறிது தாமதமாகிறது. அதற்குள் இங்கே தங்கையின் திருமணம் முடிந்ததைக் கேள்விப்பட்ட அழகர் சினம்  கொண்டு வைகை ஆற்றில் இறங்குகிறார். மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுத்த பின் மதுரை செல்லாமல் அழகர் மலைக்கே திரும்புகிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம்

மன்னன் மலயத்துவச பாண்டியன் மற்றும் அவன் மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் பிள்ளைப்பேறு வேண்டி யாகம் செய்தனர். மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழந்தையாகத்  தீயிலிருந்து  தோன்றினாள். இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்ற அசரீரி கேட்டது. குழந்தைக்குத் ‘தடாதகை’ எனப் பெயரிடப்பட்டு வளர்ந்தாள்.  மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை ஆட்சிப் பொறுப்பேற்றாள். நான்கு  திசைகளிலும் திக்விஜயம் செய்து வென்றாள். திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போரிட்டாள் . பின் சிவபெருமானைக் கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது.  இறைவனே கணவன் என அறிந்து நாணம் கொண்டாள். திருமணம் நடந்தது.

மேற்கூறிய நிகழ்வுகள் தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம், தடாதகையாரின் திருமணப் படலம் ஆகிய திருவிளையாடல் புராணக் கதைகளில் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வாறுசிவபெருமான் மீனாட்சியை போரில் வென்று மணம் புரிந்த திருவிளையாடல் புராண நிகழ்வே மீனாட்சி திருக்கல்யாண விழாவாக கொண்டாடப்படுகிறது

கள்ளழகர் விழா

சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருக்கும் போது துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை
சரியாக கவனிக்கவில்லை. சினம்கொண்ட  துர்வாசரோ, ‘மண்டூக பவ’ அதாவது ‘தவளையாகப் போ’ என சாபமிட்டார். சாபம் பெற்ற சுதபஸ் வைகை ஆற்றில் தவம் செய்தார். பெருமாள் வைகை ஆற்றில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார்.

இந்த சித்திரை திருவிழா சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும்  விழாவாக மட்டும் அல்லாமல்  . நமது பழந்தமிழர்கள் பண்பாட்டினையும், கலாச்சாரத்தையும் விளக்கும்  இத்திருவிழா காண மதுரைக்கு வாருங்கள்.

குடந்தை நடேசன்