கவிதைக்காரர்கள் வீதி



*இரண்டு
வெவ்வேறு நிறக் கூடைகளால்
வகைப்படுத்தி
தெரு முழுதும் ட்ரை சைக்கிளை
தள்ளிக்கொண்டு வந்து
குப்பைகள் நிரம்பியதும்
பிரித்து அடுக்கிவிட்டு
புங்க மரத்தின் கீழிருக்கும்
அடி பம்பின் நீரில்

கைகளையும் முகத்தையும் கழுவிய பின்
தெருவின் திருப்பத்தில் இருக்கும்
நாவல் மர நிழலில்
முருங்கைக்காய் சாம்பாரின்
சுவை பற்றிய பேச்சுடன்
புன்னகைத்தபடியே பார்க்கும்

செண்பகவள்ளி அக்காவினை
இன்றைப் போலவே
ஒவ்வொரு நாளும்
மிகச் சாதாரணமாகக் கடக்கிறேன்
ஒரு பதில் புன்னகையைக்கூட
உதிர்க்க மனமின்றி!

*தேனருந்தத்தான் வந்திருக்கும் என
உறுதியாய் சொல்லிவிட முடியாது
யாருமற்றிருக்கும்
மாலை வேளையில்
என்னைப் பார்க்க வேண்டுமென
பிரத்யேகமாய்க் கூட வந்திருக்கலாம்

நின்றுகொண்டு நான்
அதை வேடிக்கை பார்ப்பதைப் போல
காற்றில் அசையும்
பூவின் மேல்விளிம்பில்
லாவகமாய் உட்கார்ந்து
அதுவும் என்னை
வேடிக்கையாய் பார்க்கலாம்

கடைசியாய்
தோட்டத்தின் வாயிலை
அடைக்கையில்
கிலுவம் முள் மரத்திலிருந்து
பறந்து போகையில்
பார்த்தது.

இந்தமுறை அதன் விடைபெறலுக்காக
நான் காத்திருந்தேன்.
மாநகரில் பட்டாம்பூச்சிகள்
இன்னும் வசிக்கின்றன,
பூக்களையும்
இன்னும் சிலரது
புன்னகைகளையும் தேடிக்கொண்டு...

பிரபாகரன்