குட்டிச்சுவர் சிந்தனைகள்கருணை அருளும் கடவுள்தான் என்றாலும் கையில் வேல் வைத்திருப்பது போல, வீட்டின் பாதுகாப்புக்குத்தான் கதவு என்றிருந்தும் பூட்டு இருப்பதைப் போல, இடுப்பில் இறுக்கமாய் ஜீன்ஸ் இருந்தும் பெல்ட் போடுவதைப் போல, பள்ளிக்கூட பேருந்துகளில் ஜன்னல் கம்பிகள் இருந்தும் அதற்கு வெளியே கம்பி வலை இருப்பதைப் போல, காவல் நிலையம் என்றாலும் கண்காணிப்பு கேமரா இருப்பதைப் போல,

பிணக்கிடங்கு முன் காவல் காக்கும் வாட்ச்மேன் போல, சாவி போட்டுத்தான் ஸ்டார்ட் செய்ய முடியுமென்றாலும் சென்ட்ரல் லாக்கிங் இருக்கும் கார்களைப் போல, கடவுள் படங்களுக்கு கண்ணாடிச் சட்டம் போல, புத்திசாலிதான் என்றாலும் படித்த பட்டம் போல, மருத்துவமனை முன்னிருக்கும் பிள்ளையார் கோயில் போல, அன்பு மட்டுமே மொழி என்றாலும் அவ்வப்போது வரும் அம்மாவின் அதட்டலைப் போல, ரோஜா செடியின் முட்களைப் போல...

சர்வாதிகாரத்தின் சின்னமான துப்பாக்கியை ஏந்திய 20 ஆயிரத்து சொச்ச ராணுவ  வீரர்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவைப்படுகிறார்கள், ஜனநாயக முறையிலான தேர்தலை பிரச்னையின்றி நடத்த! சரி, சுதந்திர தின உரையையே குண்டு துளைக்காத கூண்டில் நின்று பிரதமர் பேசும் தேசத்தில், துப்பாக்கிகளை வைத்துத்தான் ஜனநாயகம் போற்றியாக வேண்டும், தவறில்லை. காந்தி தாத்தா வீட்டு கிச்சன் என்றாலும் கத்தி இல்லாமலா இருக்கப் போகிறது?

அடிக்கடி, ‘காமராஜர் ஆட்சி அமைப்போம்’, தேர்தல் சமயங்களில், ‘பாமக ஆட்சியைப் பிடிக்கும்’, ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு’, தேர்தல் வாக்குறுதிகளில் ‘கச்சத்தீவை மீட்போம்’, மாசம் ஒரு தடவை ‘தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பாரத பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார்’, தீபாவளி மற்றும் பொங்கல் சமயங்களில் ‘போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்’,

ஆடி மாசம் முடிஞ்சாலே ‘இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை குறையும்’, வாரம் ஒரு தடவை ‘சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது’, ‘பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளரை அடித்தார் கேப்டன்’, ‘சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரும்’, ‘நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் ‘மருதநாயகம்’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும்’, தேர்வு முடிவுகளின்போது ‘மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி’,

வெயில் காலங்களில் ‘சென்ற வருடத்தை விட இந்த வருடம் வெயில் அதிகமாக இருக்கும்’, ‘நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்துகொள்வேன்’ - த்ரிஷா, ‘காவிரி தண்ணீரை தராமல் இழுத்தடிப்பதாக கர்நாடகம் மீது சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு’, ‘யாரையும் காதலிக்கவில்லை’ என நடிகர் ஆர்யா பேட்டி,

‘விரைவில் கடனில் ஒரு பகுதியை அடைப்பேன்’ என விஜய் மல்லையா உத்தரவாதம், ‘தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசு, தின்பண்டங்கள் விற்பனை சரிவு’, ‘டாஸ்மாக் விற்பனை சென்ற வருடத்தை விட அதிகம்’, ‘டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு’, ‘சதமடித்தார் விராட் கோலி’, ரஜினி நடிப்பில் புதுப் படத்தைத் தொடங்கினார் இயக்குநர் ஷங்கர்... # இதெல்லாம் என்னன்னு பார்க்குறீங்களா? அடுத்த பத்து, இருபது வருஷத்துக்கு மாறாமல் வரப்போகும் அதே செய்திகள்.

பத்து நிமிஷம் வெளிய வச்சா, பசு மாட்டுல அப்ப கறந்த பால் கறுத்துடும் போலிருக்கு. காமராஜர் பேரைச் சொல்லி கதர் சட்டையில சுத்துனாலும், ரெண்டு மணி நேரத்துல பெரியார் புகழ் பாடுமளவு சட்டை கூட கறுத்திடும்னு நினைக்கிறேன். மோரை ஒரு பாட்டில்ல ஊத்தி பத்து நிமிஷம் வெளிய வச்சா புளிச்சுப் போயி பீரா வந்திடும்னு ஐ திங்க்.

குயில், காக்கா போல இப்ப சுத்துறது எல்லாம் போன மாசம் வரை வெள்ளைப் புறாவா விளையாடிக்கிட்டு இருந்திருக்கலாம்னு சந்தேகம் கூட வருது. சூடு தந்து அடைகாக்க சோம்பேறித்தனம் கொண்டு, கோழிகள் கூட முட்டைகளை மொட்டை மாடிகளில் வைத்துவிட்டுப் போகின்றனவாம். நிழல் பார்த்து நிறுத்தாத வண்டியோட சீட்டெல்லாம் வேஷம் போட்டு வந்த விறகுக் கட்டைகள் என்றே சொல்லலாம்.

என்னா வெயில்டா சாமி, வேலை வெட்டிக்கு போகாத மருமகன வையுற மாமியார் மாதிரி இரக்கமில்லாத வெயில். இந்த வெயில்ல டென் மினிட்ஸ் நின்னா டால்கம் பவுடரை விட டாலடிக்கும் தமன்னா, டாப்ஸி கூட ஓரியோ பிஸ்கட் மாதிரி டார்க் ஆயிடுவாங்க போல!

உடல்நிலை பாதிக்கப்படுவது நம் கையில் இல்லை, ஆனால் மனதை பாதிக்கப்படாமல் வைத்திருப்பது நம்மிடம்தான் இருக்கிறது. உடல் வலிமை மட்டும் இருந்தவர்கள் வீழ்ந்ததையும், மனவலிமை பெற்றவர்கள் வாழ்ந்ததையுமே வரலாறு நமக்குக் காட்டியிருக்கிறது. உலகின் மிகப்பெரும் நோய் என்பது, யாராலும் விரும்பப்படாமல் இருப்பதுதான்.

ஆனால் உங்களிடம் அன்பைத் தரவும், உங்களிடம் அன்பைப் பெறவும் பெரும் குடும்பமே காத்திருக்கிறது என எப்போதும் நினைவில் வையுங்கள். நீங்கள் ஜெயித்துக்காட்டுவது முக்கியமல்ல, ஜெயித்தபின் இதுபோல பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு வழிகாட்டுவதுதான் முக்கியம்.  உடல்நலமின்மையைத் தவிர்ப்பது விவேகம், உடல்நலமின்மையை ஜெயிப்பது வீரம். மருந்துகள் 20%தான் குணப்படுத்தும், மனசுதான் 80% குணப்படுத்தும்!           

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்