நினைவோ ஒரு பறவைவளர்சிதை மாற்றம் நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதில் கட்டுப்படுத்த முடியாதுநான்
நினைவில் காடுள்ள மிருகம்!
- கவிஞர் சச்சிதானந்தன்

புலி வளர்க்கக் காடும், காசும் இல்லாததால் சிறு வயதில் நாங்கள் நாய் வளர்த்தோம். செம்பழுப்பு நிறத்தில் கோதுமை மாவில் செய்த பொம்மை போல் இருந்த அந்த நாய்க்குட்டிக்கு ‘டைகர்’ என்று பெயர் வைத்தோம். தன்னை ‘டைகர்’ என்று இனம் மாற்றிக் கூப்பிடுகிறார்களே  என்று எந்த கர்வமும், குற்றச்சாட்டும் இன்றி கொட்டாங்குச்சியில் ஊற்றப்படும் பாலைக் குடித்தபடி ‘டைகர்’ எங்கள் வீட்டைக் காடாக்கி, பழைய துணிகளையும் உடைந்த மரத்துண்டுகளையும் பற்களால் கடித்து வேட்டையாடிக் கொண்டிருந்தது.

ஒரு மாலை நேர விளையாட்டுப்பொழுதில் எங்கள் ‘டைகர்’ பற்றியும், விருந்தினர்களுக்கு அது தன் கால்களால் ஷேக்ஹேண்ட் செய்வதைப் பற்றியும் பெருமையடித்துக் கொண்டிருந்தேன். ‘எங்கள் நாய்களுக்கும் டைகர் என்றுதான் பெயர் வைத்திருக்கிறோம்’ என்று நண்பர்கள் சொல்ல, ‘டைகர்’ என்ற பெயரின் மீதிருந்த கவர்ச்சி காணாமல் போனது.

மணி, முருகன், ஜிம்மி என்று பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் ‘007’ என்று நாமகரணம் செய்யப்பட்டது. தன் பெயரின் அர்த்தம் உணராமலேயே அது எங்களுக்காக விசுவாசத்துடன் துப்பறிந்துகொண்டிருந்தது. ஒரு மழை நாளில் சாலையைக் கடக்கையில், ‘ஏழுமலையான் துணை’ என்றெழுதிய லாரியில் அடிபட்டு இறந்தது. அன்று முழுவதும் உணவருந்தாமல் நன்றியுடன் டைகருக்காகத் துக்கம் அனுஷ்டித்தோம்.

டைகர் இல்லாத தனிமையைப் போக்க எங்கிருந்தோ ஒரு பூனைக்குட்டியை தம்பி எடுத்து வந்தான். எல்லாப் பெயர்களையும் அலட்சியப்படுத்தி ‘மியாவ்’ என்று அழைத்தால் மட்டுமே திரும்பிப் பார்த்ததால் ‘மியாவ்’ ஆகவே அது எங்கள் வீட்டில் வளர்ந்தது.

ஒரு குழந்தையின் அழுகுரலைப் போல் இரவெல்லாம் கத்தியபடி தூக்கத்தைக் கெடுத்ததால் அதை யாருக்கும் பிடிக்கவில்லை. பக்கத்து வீடுகளின் சமையலறைகளில் இருந்தெல்லாம் அதன் மீது புகார்ப் பட்டியல்கள் வந்து கொண்டிருந்தும், தம்பியின் பிடிவாதத்தால் எங்களை உதாசீனப்படுத்தியபடி அது உலா வந்துகொண்டிருந்தது. திடீரென்று ஒரு நாள் என் தம்பிக்கு கிளி வளர்க்க ஆசை வந்தது. கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பதா? கோணிப் பையில் அதை அடைத்து எங்கோ விட்டுவிட்டு வந்தான்.

ஆலமரப் பொந்திலிருந்து கூண்டிற்கு இடம்பெயர்ந்த அந்தப் பச்சைக்கிளி, கோவைப்பழத்தையும் தக்காளியையும் தட்டில் வைக்கும்போதெல்லாம் எங்கள் விரல்களையும் சேர்த்துக்  கொத்தியபடி தன் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. சினிமாக் கிளிகளைப் போல் சொன்ன பேரைத் திருப்பிச் சொல்லாமல் ‘கீக்கீ’ என்று கத்திக்கொண்டிருந்ததால், அதன் மீதிருந்த சுவாரசியம் குறைந்தது. சித்தார்த்தன் புத்தனான ஒரு நள்ளிரவில், வெட்டவெளியை நோக்கிப் பறக்கவிட்டு அதற்கு விடுதலை கொடுத்தோம். சிறகின் இயல்பை மறந்த நிலையில் தடுமாறிக்கொண்டிருந்த அதைப் பிடித்து, ஒரு மரத்தின் மீதேறி கிளையில் அமர வைத்துவிட்டு வந்தான் தம்பி. மறுநாள் காக்கைகளால் கொத்தப்பட்டு அது இறந்து கிடந்தது.

குற்றவுணர்வுடன் கொஞ்ச காலம் எதையும் வளர்க்காமல் இருந்தோம். கரும்புத் தோட்டத்தில் பிடித்துக் கட்டி வைத்திருந்தார்கள் என்று சொல்லி அப்பா ஒரு நரிக்குட்டியை எடுத்து வந்தார். நீண்ட முகத்துடன் நாயின் அண்ணன் போல் நரி வீட்டில் வளர்ந்தது. நரி முகத்தில் விழித்தும் அதிர்ஷ்டமில்லாமல், நான் வழக்கம் போல் ஆங்கிலப் பாடத்தில் நூற்றுக்கு ஆறு மதிப்பெண்களே வாங்கிக் கொண்டிருந்தேன். எதை வைத்தாலும் தின்றுகொண்டிருந்த அந்த நரி, ஒரு நாள் யாருமறியாமல் தந்திரத்துடன் தப்பிச் சென்றுவிட்டது.

கொஞ்ச காலம் கொரிக்கலிக்காய் தழைகளைத் தீனியாகப் போட்டு கொட்டாங்குச்சியில் அடைத்து பொன்வண்டு வளர்த்தோம்.  கழுத்தில் கட்டப்பட்ட நூல் அனுமதித்த உயரத்தில் பறந்து பறந்து அது எங்களுக்கு விளையாட்டு காட்டியது! அடிவயிற்றில் உள்ள கோடுகளை எண்ணிப் பார்த்து, எத்தனை முட்டை இடும் என்று ஜோதிடம் சொன்னோம். தீப்பெட்டிச் சிறையில் அதை அடைத்து பள்ளியில் வேடிக்கை காட்ட எடுத்துச் சென்றபோது ஏமாற்றிப் பறந்துபோனது.

பொன்வண்டு விட்டுச்சென்ற வெற்றிடத்தை மீன்குஞ்சுகள் நிரப்பின. தங்க மீன்களும், கருப்பு ஃபைட்டரும் கண்ணாடித் தொட்டியில் நீந்தும் திசைகளுக்கெல்லாம் எங்கள் கண்களும் நீந்தின. கருப்புநிற நீச்சல் உடையில் ஒரு குட்டி மனிதனும் மீன்களுடன் நீந்தியபடி தண்ணீரில் முட்டை விட்டுக்கொண்டிருந்தான். ஒரு நாள் அந்தக் கண்ணாடித் தொட்டி கீழே தள்ளி விடப்பட்டு மீன்கள் கடித்துக் குதறப்பட்டிருந்தன. எங்கேயோ நாங்கள் விட்டு வந்த பூனையின் வேலையாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் நம்பினோம்.

அதற்குப் பின்பு கோழி வளர்த்து, அது வந்த விருந்தினர்களுக்கு பிரியாணி ஆனதும், ஆடு வளர்க்கும் ஆசையைக் கைவிட்டோம். இடைப்பட்ட காலத்தில் ஹார்லிக்ஸ் பாட்டிலில் மின்மினிப் பூச்சிகளும், அட்டைப் பெட்டியில் முயலும் வளர்த்தோம். நாங்கள் விரும்பி வளர்த்தது போக, விரும்பாமலேயே பல்லிகள், கரப்பான் பூச்சிகள், தேள்கள், குளவிகள் என்று ஊர்வனவற்றில் தொடங்கி நடப்பன, பறப்பன வரை எங்கள் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தன.

மீசை வளர்ந்து மனதில் பொறாமையும், வஞ்சகமும், சூழ்ச்சியும், ஆசையும் வளர்ந்தபோது மற்றவற்றை வளர்க்கும் பழக்கம் நின்றுபோனது. இவை தானாகவே வளர்ந்து எங்கேயும் தொலையாமலும், இறக்காமலும் மனமென்னும் காட்டில் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டிருக்கின்றன. மிருகம் வளர்க்கும் மனமே... எப்போது ஓய்வுகொள்வாய்?

ஒரு குழந்தையின் அழுகுரலைப் போல் இரவெல்லாம்கத்தியபடி தூக்கத்தைக்  கெடுத்ததால் பூனையை யாருக்கும் பிடிக்கவில்லை.

(பறக்கலாம்...)

நா.முத்துக்குமார்

ஓவியங்கள்: மனோகர்