மிடில் கிளாஸ் மக்கள் ஓட்டு யாருக்கு?‘‘நாட்டுல எந்தப் பிரச்னை வந்தாலும் அதனால பாதிக்கப்படுறது மிடில் கிளாஸ் மக்கள்தான். அரபு நாட்டுல கச்சா எண்ணெய்க்கு 1 டாலர் கூடுதல் விலையேறினா இங்கேயிருக்கிற ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தோட பட்ஜெட்ல நூறு ரூபாய் பற்றாக்குறை விழுது. ஒரு அரசு, மிடில் கிளாஸ் மக்களை டார்கெட்டா வச்சுத்தான் திட்டங்களைத் தீட்டணும்.

ஆனா, கடந்த 5 வருஷத்துல தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசுக்கு மிடில் கிளாஸ் பத்தி எந்தப் புரிதலும் இல்லை. அதனாலதான் பால் விலையில இருந்து பஸ் கட்டணம் வரைக்கும் கண்மூடித்தனமா உயர்த்தியிருக்காங்க.

தமிழகத்துல இருக்கிற ஒவ்வொரு இல்லத்தரசியும் மிகப்பெரும் மன உளைச்சல்ல இருக்காங்க. குழந்தைகள் பற்றி, அவங்களோட எதிர்காலம் பற்றி மிகப்பெரிய கவலையை இந்த அரசு அவங்களுக்குப் பரிசா கொடுத்திருக்கு. அதுக்கான விலையை கண்டிப்பா இந்த தேர்தல்ல அதிமுகவுக்கு மக்கள் கொடுப்பாங்க...’’ - ராணிப்பேட்டையைச் சேர்ந்த பிரபாவதி மிகவும் கவலை தொனிக்க பேசுகிறார்.

‘உங்கள் வாக்கு யாருக்கு?’ என்ற கேள்வியோடு தமிழகம் முழுக்க மிடில் கிளாஸ் மக்களைக் குறி வைத்து நாம் நடத்திய நேர்காணல்களில் பெருமளவு மக்கள், இப்படி பிரபாவதியின் குரலைத்தான் எதிரொலிக்கிறார்கள்.நடுத்தரக் குடும்ப வாழ்வு என்பது, துயரங்களின் தொட்டில். பிள்ளைகளுக்காகவும் பெற்றவர்களுக்காகவும் தியாகங்கள் செய்து, புறக்கணிப்புகளைத் தாங்கி, வலிகளை விழுங்கி, சுகங்களைத் துறந்து, ஏக்கங்களை நெஞ்சில் நிரப்பி நாட்களை நகர்த்தி, தனக்கான வாழ்வை ஒருநாள்கூட வாழ முடியாத அனுபவமே மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு நிரந்தரம்.  

நடுத்தர மக்கள், தங்கள் பிள்ளைகளின் கல்விக்காகத்தான் வருமானத்தில் பெரும்பகுதியை இழக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் திட்டமிட்டு அரசுப்பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதும், தனியார் பள்ளிகள் தனி ராஜ்ஜியம் போல செயல்படுவதும் மக்களை வெகுண்டெழச் செய்திருக்கிறது. விலைவாசி உயர்வு, குடும்பங்களின் குரல்வளையை நசுக்குகிறது.

பட்ஜெட் போட்டு குடித்தனம் நடத்தும் குடும்பங்களைத்திணற வைக்கும் அளவுக்கு மோசம். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கட்டுப்பாடில்லாமல் விலையேறுகின்றன. அவற்றை நிலைப்படுத்துவதில் அரசு முற்றிலும் தோல்வியைத் தழுவி விட்டது. பீன்ஸ் முதல் பருப்பு வரை எதையும் நடுத்தர, அடித்தட்டு மக்கள் வாங்கிச் சாப்பிட முடியாத நிலை.

திருவண்ணாமலையில் பழக்கடை நடத்தும் விஜயா மிகவும் ஆதங்கமாக நம்மிடம் பேசினார். ‘‘கடந்த 5 ஆண்டுகள்ல நடுத்தர மக்களோட வாழ்வாதாரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் இவங்க எடுக்கலே. வார்டு உறுப்பினர்ல இருந்து முதல்வர் வரைக்கும் யாருக்கும் மக்கள் மேல அக்கறையில்லை. ஓட்டு வாங்கணும்னா மட்டும் வருவாங்க. அதுக்கப்புறம் நாங்க எப்படி இருக்கோம்...

எங்களுக்கு என்ன குறை... என்ன தேவை... எதைப் பற்றியும் கவலையில்லை. ராஜாக்கள் காலத்தில கூட, அப்பப்போ ராஜா நகர் உலா வந்து மக்களோட குறைகளைக் கேப்பாரு. அதிமுக ஆட்சியில அதுகூட இல்லை. எல்லாத்திலயும் ஊழல்... எதுக்கெடுத்தாலும் லஞ்சம்... இந்த ஆட்சி போனால்தான் நடுத்தர மக்களுக்கு வாழ்க்கை மேலயே நம்பிக்கை வரும்...’’ என்று சொல்லும்போது விஜயா உணர்ச்சிவசப்படுகிறார்.  

நாம் சந்தித்த பெருவாரியான மிடில் கிளாஸ் வாக்காளர்கள் அ.தி.மு.க.வுக்கு எதிராக வைக்கும் பிரதான குற்றச்சாட்டு, விலைவாசி உயர்வு. இரண்டாவது குற்றச்சாட்டு, வீதிக்கு வீதி கரை புரண்டோடும் மது. டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடுபவர்களை காவல்துறையைக் கொண்டு கண்மூடித்தனமாக ஒடுக்குவதும், தாக்கி காயப்படுத்துவதும், அமைச்சர்களும் முதல்வரும் டாஸ்மாக்குக்கு ஆதரவாகப் பேசுவதும், நடுத்தர மக்கள் மத்தியில் மிகுந்த கொதிப்பை உருவாக்கியிருக்கிறது. பேருந்து வராத கிராமத்திற்குள் எல்லாம் மதுக்கடை நுழைந்திருக்கிறது.

பல குடும்பங்கள் குடியின் பாதிப்பால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. நடுத்தர மக்களிடம் மதுவால் ஏராளமான சாபங்களை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க. ‘‘படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கலே. வேலைவாய்ப்பை உருவாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கலே. ‘ஊருக்கு ஊர் தொழில்கள் ஆரம்பிப்போம்; அத்தனை லட்சம் வேலை, இத்தனை லட்சம் வேலை’ன்னு எல்லாம் வாக்குறுதி கொடுத்த முதல்வர், இதுநாள் வரை எத்தனை புதிய தொழிற்சாலைகளை ஆரம்பித்திருக்கிறார்..? மின்சாரப் பற்றாக்குறையால் ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதுதான் மிச்சம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போகுது. சாதாரணமா தெருவில் நடக்க முடியலே. செயின் பறிப்பு, பாலியல் வன்முறைகள் என சட்டம், ஒழுங்கு சந்தியில் நிற்குது. பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் வீதிக்கு வீதி மதுக்கடைகளைத் திறந்து பெண்களின் தாலியைப் பறித்துக் கொள்கிறார்கள்.

ஒருகாலத்தில் குடிப்பழக்கம் உள்ளவர்களை ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். இன்று குடிப்பழக்கம் இல்லையென்றால் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். குடிப்பதை சட்டபூர்வமாக மாற்றியதுதான் அ.தி.மு.க அரசின் சாதனை. படித்த இளைஞர்கள் வேலை கேட்டால், மதுக்கடைகளில் ஊற்றிக் கொடுக்கும் வேலை கொடுத்தார்கள். குடிப்பழக்கமே இல்லாத பல பட்டதாரி இளைஞர்கள் மதுக்கடைக்கு வேலைக்குப் போய் குடிக்கு அடிமையாகி விட்டார்கள். இந்தப் பாவம் சும்மா விடாது...’’ என்று ஆவேசமாகிறார் சலோமி. இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்.

“முன்னல்லாம் சாராயம் விக்கிறவங்களை ஜெயில்ல போடுவாங்க. இப்போ சாராயக்கடையை சாத்துங்கன்னு சொல்றவங்களை எல்லாம் ஜெயில்ல புடிச்சுப் போடுறாங்க. எங்க ஊர்ல சாராயத்தால நிறைய பெண்கள் வாழ்க்கையை இழந்து விதவையா நிக்குறாங்க. பல பிள்ளைகளோட கல்வி பாதிக்கப்பட்டிருக்கு. பல குடும்பங்கள் கலைஞ்சு போச்சு.

அன்றாடம் கூலி வேலைக்குப் போறவங்க, கிடைக்கிறதுல முக்கால்வாசியை டாஸ்மாக்ல கொடுத்துட்டு வந்திடுறாங்க. நடுத்தர, அடித்தட்டு குடும்பங்கள்ல ஏகப்பட்ட பிரச்னைகள். இந்த ஆட்சி திரும்பவும் வந்தா, எல்லாரும் நடுத்தெருவுக்குத்தான் வரணும்...’’ என்று கோபமாகச் சொல்கிறார் சின்னசேலத்தைச் சேர்ந்த கவிதா.

“பணிபுரியும் மத்திய தர மக்களின் மனநிலை முற்றிலும் அ.தி.மு.க.வுக்கு எதிராகவே இருக்கிறது...’’ என்கிறார் சி.பி.எம். மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ்.‘‘மத்தியில் ஆளும் அரசு 2004ம் ஆண்டில் பென்ஷனை ரத்து செய்தது. ஆனால் அதற்கு முன்பாகவே 2003ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா பென்ஷனை ரத்து செய்து விட்டார். அதன் பலனை இப்போது மத்திய தர வர்க்கம் மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், அண்மையில் நடந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்.

ஜெயலலிதா சென்ட் வித்தால் லாபம் என்றால் சென்ட் விப்பார். சேறு விற்றால் லாபம் என்றால் சேறு விற்பார். 2003லேயே பென்ஷனை ரத்து செய்துவிட்டு 2011 தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வோம்’ என்றார். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

‘தமிழ்நாட்டில் முதலீட்டை அதிகப்படுத்துகிறோம்’ என்று கூறி, ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளையும் அதன் துணைத் தொழிற்சாலைகளையும் ‘பப்ளிக் யுடிலிடி சர்வீஸ்’ பட்டியலுக்குக் கொண்டு வந்தார் ஜெயலலிதா. ‘பப்ளிக் யுடிலிடி சர்வீஸ்’ பட்டியலுக்கு வந்துவிட்டால் அந்தத் தொழிற்சாலையில் ஒரு வேலைநிறுத்தம் செய்யக்கூட உரிமை கிடைக்காது. இப்படி தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் செய்த பிறகும் கூட முதலீடு வரவில்லை. வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. ‘மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி’ என்பதைப் போல மத்திய தர வர்க்கம் தொழில் நிறுவனங்களிடமும் அரசாங்கத்திடமும் இடிபட்டு நசுங்கி வாழ்கிறது.

இதையெல்லாம் கடந்து இந்த அரசாங்கத்தின் மீது மூன்று பெரும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஒன்று, செயல்படாத அரசாங்கம். இரண்டாவது குற்றச்சாட்டு, அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வர்... யாரையும் அணுகவே முடியவில்லை. அமைச்சர்கள் எவருக்கும் அவரவர் துறை பற்றி சிறிதளவும் புரிதல் இல்லை. முதல்வரை வரவேற்பதிலேயே காலத்தைக் கழித்து விட்டார்கள்.

மூன்றாவது குற்றச்சாட்டு, இண்டு இடுக்கு விடாமல் புரையோடிப் போன லஞ்சம். இந்த மூன்றும் மிக மோசமான நிலைக்கு தமிழகத்தைத் தள்ளிச் சென்றிருக்கின்றன. மக்கள் நலன் மீது அக்கறையுள்ள, எளிதில் அணுக முடிந்த, ஊழலை அகற்றும் திராணியுள்ள ஒரு அரசு தான் இப்போதைய தேவை. மத்திய தர வர்க்கம் இதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறது...’’ என்கிறார் கனகராஜ்.தமிழகமெங்கும் அ.தி.மு.க.வுக்கு எதிராக வீசுகிற அலையும் கோபமும் கனகராஜின் கருத்தை உறுதிப்படுத்துகிறது.  தினகரன் செய்தியாளர்கள் உதவியுடன்

செய்தீர்களா? செய்தீர்களா?

2011 தேர்தலில் மிடில் கிளாஸ்
மக்களுக்கு அ.தி.மு.க. கொடுத்த,
இன்றுவரை நிறைவேற்றப்படாத
வாக்குறுதிகள்:

* இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள், மொத்த விற்பனையாளர்கள், ஆன்லைன் டிரேடிங் எக்சேஞ்ச் வரன்முறையாளர்களால் திட்டமிட்டு நடைபெறும் விலையேற்றம் தடுக்கப்பட்டு, விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்
படும்.

* வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

* நடமாடும் மருத்துவமனை கிராமத்திற்கே வரும் உன்னதத் திட்டம் (Hospital on Wheels) செயல்படுத்தப்படும்.
40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் குறைந்தவிலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சாரப் பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.

* வீடில்லா குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் வழங்கப்படும்.

* கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக்கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் மக்களின் பிரச்னைகள் களையப்படும்.

* அனைத்து கிராமங்கள், நகரங்களுக்கு 2015க்குள் மும்முனை மின்சார இணைப்பு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

* வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க, தற்காப்புக்கலை கற்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்புப் படைகள் அமைக்கப்படும்.

*  சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

* செயல்படாத கிராமப்புற பிபிஓ மையங்களை மாற்றி மாவட்டம்தோறும் 250 கிராமப்புற பிபிஓ மையங்கள் ஏற்படுத்தப்படும். இதனால் 15 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 1 லட்சம் கிராம மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும்.

* சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் சிங்கப்பூரில் உள்ளது போல மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

நடுத்தரக் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு?

சையத், ஆரணி
படிச்சவங்களுக்கு வேலை கிடைச்சா மட்டும்தான் அந்த நாடு முன்னேறும். தமிழ்நாட்டுல கடந்த 5 வருஷத்தில படித்த முக்கால்வாசி பேரு வேலையில்லாம தவிக்கிறாங்க. மக்கள் மேல கொஞ்சமும் அக்கறையில்லாத இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.

பாஸ்கர், ஆரணி
இவ்வளவு காலம் மதுவை விற்று ஆட்சியை நடத்திட்டு, காலம் போன கடைசியில படிப்படியா மதுவிலக்கு கொண்டு வருவோம்னு சொல்றாங்க. யாரை ஏமாற்ற இந்த வாக்குறுதி? 

சத்தியமூர்த்தி, வேலூர்
தமிழகத்துல கண்டிப்பா ஆட்சி மாற்றம் தேவை. அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் வாக்களிக்கப் போறதில்லை.

மகேந்திரன், வேலூர்
பஸ் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் எல்லாத்தையும் உயர்த்தி நடுத்தர மக்களை துயரத்தில தள்ளின அ.தி.மு.க.வை இந்த முறை வீட்டுக்கு அனுப்புவோம்.

மகேந்திரன், வேலூர்
கடந்த தி.மு.க. ஆட்சியில ஆட்டோ டிரைவர்களுக்கு இலவச பர்மிட் கொடுத்தாங்க. இந்த அம்மா ஆட்டோ டிரைவர்களுக்கு எதுவும் செய்யலே. எதுக்காக நாங்க இவங்களுக்கு ஓட்டுப் போடணும்?

பிரகாஷ், ஆற்காடு
எல்லாத்திலயும் ஏகப்பட்ட குளறுபடி. எல்லா அவதியையும் மக்கள்தான் சுமக்க வேண்டியிருக்கு. இவங்களை வீட்டுக்கு அனுப்பிட்டு எங்களை மாதிரி மிடில்கிளாஸ் பத்தி கவலைப்படுற ஒரு ஆட்சியைக் கொண்டு வரணும்.

ராஜேஷ் கண்ணன், திண்டுக்கல்
மேல்தட்டு வாழ்க்கை வாழும் ஜெயலலிதாவால் எங்களைப் போன்றோரின் சிரமத்தை உணரமுடியாது. அவருக்கு இந்தமுறை வாக்களிக்கப் போவதில்லை.

காமாட்சி, திருவண்ணாமலை
மிக்சி, மின்விசிறி, கிரைண்டர்லாம் பல பேருக்குக் கிடைக்கலே. எல்லாத்திலயும் பாரபட்சம். கட்சிக்காரங்களுக்குத்தான் முதலிடம். இந்த அராஜகம் ஒழியணும். அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடவே போறதில்லை.

ராஜம், கடலூர்
கொளுத்துற வெயில்ல அப்பாவி ஜனங்களை கட்டாயமா உக்கார வச்சு இப்படி உயிரை எடுக்கலாமா? இவங்க சொகுசாவும், சொகமாகவும் இருக்கணும்ங்கிறதுக்காக அப்பாவி மக்கள் சாகணுமா? இந்த அநியாயம் மாறினாதான் நாட்டுக்கு நல்லது.

சரஸ்வதி, கடலூர்
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனே பார்த்து வியந்த சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கல்யாண மண்டபமாக மாற்றியவர் ஜெயலலிதா. அவர் மீண்டும் ஆட்சிக்கு வர அனுமதிக்க மாட்டோம்.

வெங்கடேசன், விருத்தாசலம் 
எங்கள் பகுதி வெள்ளத்தால பாதிக்கப்பட்டபோது ஆளுங்கட்சிக்காரங்க யாரும் எட்டிக்கூட பார்க்கலே. இந்தத் தேர்தல்ல அவங்களுக்கு பாடம் புகட்டுவோம்.

ராமச்சந்திரன், தொப்புளிக்குப்பம்
நெய்வேலியில நிலக்கரியை எரிக்கும்போது வெளியேறும் சாம்பல், சுத்தியிருக்கிற கிராமங்கள் மேல படிந்து நோய்களை உருவாக்குது. இதுபத்தி பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கலே. அதனால அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டேன்.

மீனாட்சி, சின்னசேலம்
அமைச்சர்களே முதல்வரை சந்திக்க முடியலே. அப்புறம் மக்கள் எப்படி சந்திக்கிறது? தேவைன்னா வந்து ஓட்டு கேட்பாங்க. நமக்கு எதுனா தேவைன்னு போய் நின்னா துரத்துவாங்க. அ.தி.மு.க.வை மொத்தமா ஆட்சியில இருந்து வெளியேத்தணும்.

சிவகாமி, கச்சிராயபாளையம்.
இந்தம்மா ஆட்சியில விவசாய வேலையே இல்லாமப் போச்சு. விலைவாசியும் கூடிப்போச்சு. நிம்மதியா மூணுவேளை கஞ்சி குடிக்க  முடியலே. ஆட்சி மாறினாதான் நிலைமை மாறும்.

கில்பர்ட், கோழிப்பண்ணை
எங்கூர்ல சின்னச் சின்னப் பையன்லாம் தண்ணியடிச்சுட்டு தகராறு பண்றான். காரணம், மதுக்கடைகள். ‘ஏண்டா இப்படி கெட்டழிஞ்சு போறீங்க?’ன்னு கேட்டா, ‘குடிக்கிறது தப்பே இல்லைன்னு கவர்மென்ட்டே சொல்லுது... நீ போண்ணே’னு சிரிக்கிறானுங்க. ஒரு தலைமுறையே வீணா போச்சு. அ.தி.மு.க.வுக்கு தகுந்த பாடம் புகட்ட இதுதான் தருணம்.

காந்தி, விக்கிரவாண்டி
அரசுப்பள்ளியில மாணவர்களுக்கு நிறைய இலவசங்கள் கொடுக்கிறாங்க. ஆனா போதுமான வாத்தியாரு இல்லை. திட்டமிட்டே அரசுப்பள்ளியை வீணடிச்சுட்டாங்க. இவங்களுக்கு நான் ஏன் ஓட்டுப் போடணும்?

சுப்புராயர், வாடிப்பட்டி
மக்களோட தொடர்பே இல்லாத முதலமைச்சர். நலத்திட்டங்களை எல்லாம் அறிவிக்கிறதோட சரி... எதையும் செயல்படுத்துறதில்லை. இந்த ஆட்சியே எங்களுக்கு வேண்டாம்.

சிவக்குமார், போடிநாயக்கன்பட்டி
 அஞ்சு வருஷம் முன்னால 125 ரூபா கரன்ட் பில் கட்டுனேன். இப்போ 350 ரூபா வருது. எனக்கு சம்பளம் மாதம் 4500 ரூபா. இதை வச்சுத்தான் வாழ வேண்டியிருக்கு. இந்தம்மாவை திரும்பவும் முதல்வரா உக்கார வச்சா விவசாயிகளைப் போல நாங்களும் தற்கொலைதான் பண்ணிக்க வேண்டியிருக்கும்.

லதா, ராமநாதபுரம்
பருப்பு, உளுந்து, எண்ணெய்னு எல்லாப் பொருளும் விலையேறிப் போச்சு. ஆட்சி மாற்றம் வந்தாதான் மக்கள் நிம்மதியா வாழ முடியும்.

ரவிக்குமார், சின்னமனூர்
காசைக் கொடுத்தா எல்லாத்தையும் மறந்துட்டு ஓட்டு போட்டுருவாங்கன்னு அ.தி.மு.க.காரங்க நினைக்கிறாங்க. அப்படியெல்லாம் யாரும் சொரணை கெட்டுப் போயிடலே. அஞ்சு வருஷமா ஆடுன ஆட்டத்துக்கு இப்போ பதில் சொல்லியே ஆகணும்.

ரஞ்சித்குமார், கூடலூர்
விவசாயி, நெசவாளி, மண்பாண்டத் தொழிலாளின்னு கிராமத்தை நம்பியிருக்கிற யாருமே நிம்மதியாவும் சந்தோஷமாவும் இல்லை. எல்லாரும் வாழ்வாதாரத்தை இழந்துட்டு நிக்குறாங்க. ‘எனக்குன்னு தனிப்பட்ட வாழ்வு இல்லை. எதிர்பார்ப்புகள் இல்லை. நான் வாழ்வதே மக்களுக்காகத்
தான்’னு இவங்க சொல்றதெல்லாம் ஏமாத்து வேலைன்னு எங்களுக்குத் தெரியும்.

முருகானந்தம், தேவதானப்பட்டி
எல்லாத்திலயும் ஊழல். ஒரு வருமானச் சான்றிதழ் வாங்கப் போனாலும் அதிகாரிங்க வருமானம் பாக்கத் துடிக்கிறாங்க. அ.தி.மு.க. ஆட்சியில அதிகாரிங்களுக்குத்தான் காலம். மக்களுக்கு ஒண்ணுமில்லை.

அருள்ஜோதி, விருதுநகர்
பருப்பு முதல் கடுகு வரை, கத்திரிக்காய் முதல் சுண்டைக்காய் வரை அனைத்து பொருட்களின் விலையும் ஏறிப்போச்சு. முதியோர் பென்ஷனை நிறுத்திவிட்டனர். அதனால் இம்முறை அ.தி.மு.க.விற்கு எனது ஓட்டு இல்லவே இல்லை.

அமுதா சுரேஷ், காரைக்குடி
அரசாங்கமே அரசுப்பள்ளிகள்ல நிறைய மதிப்பெண் எடுக்கிற பிள்ளைகளை தனியார் பள்ளிகள்ல சேத்து விடுது. இந்த அரசு மாறினாதான் மிடில் கிளாஸ் மக்களோட வாழ்க்கை மாறும்.

இந்த அரசாங்கத்தின் மீது மூன்று பெரும்  குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஒன்று, செயல்படாத அரசாங்கம். இரண்டாவது  குற்றச்சாட்டு, அதிகாரிகள், அமைச்சர்கள், முதல்வர்... யாரையும் அணுகவே  முடியவில்லை. மூன்றாவது  குற்றச்சாட்டு, எங்கும் புரையோடிப்போன லஞ்சம்.

- வெ.நீலகண்டன்