முடியும்னு நினைச்சா முடியும்ணே!காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தங்கங்கள்

‘‘எங்களால எதுவுமே முடியாதுனு நினைச்சவங்க நிறைய. ஆனா, இன்னைக்கு நாங்க வாங்கியிருக்கிற பதக்கங்களைப் பார்த்து அவங்களே பிரமிக்கறாங்க. வீடு விட்டா பள்ளி... பள்ளியை விட்டா வீடுனு மட்டுமே இனி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இருந்துடக் கூடாது.

வெளியுலகத்திற்கு வந்து நிறைய சாதிக்கணும்!’’ - நம்பிக்கை அள்ளி வீசுகிறார்கள் மனோகரன், விஜயசாந்தி மற்றும் சுசீலா. தென் ஆப்ரிக்காவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஜூடோ பிரிவில் தங்கம் வென்று திரும்பியிருக்கும் நம்ம ஊர் தங்கங்கள்!
முதலில் மனோகரன்...

‘‘எனக்கு சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் கிராமம். பிறக்கும்போதே எண்பத்தைந்து சதவீதம் பார்வைக் குறைபாடு. இதனால, பத்தாவதுக்கு மேல படிக்க முடியலை. மூட்டை சுமக்கிற வேலைக்குப் போயிட்டேன். அப்போ, எங்க கிராமத்துல சிலர் மூலமா கராத்தே கிளாஸ் போனேன்.

 அதுல, பார்வையற்றவர்கள் பிரிவு கிடையாது. நார்மலான ஆட்கள் கூட மோதணும். நிழல் பக்கத்துல வர்றதை வச்சு ஃபைட் பண்ணுவேன். அப்படியும் மாநில அளவுல ஜெயிச்சேன். அப்புறம்தான் ஜூடோ மாஸ்டர் உமாசங்கர் சாரை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது.

அவர், பிளைண்ட் ஜூடோ பத்தி சொல்லி, பயிற்சி கொடுத்தார். முதல்ல, தேசிய அளவுல வெள்ளிப் பதக்கம் வாங்கினேன். போன வருஷம் தேசிய அளவுல தங்கம். இப்போ காமன்வெல்த்ல வெண்கலம் கிடைச்சிருக்கு!’’ என்கிறார் அவர் உற்சாகமாக.அவரைத் தொடரும் சுசீலாவுக்கு சொந்த ஊர் கரூர் பக்கத்தில் ஆத்துப்பட்டி கிராமம். பி.ஏ ஆங்கிலம் முடித்துவிட்டு பி.எட் படித்து வருகிறார். 63 கிலோ பிரிவில் அசால்ட்டாக தங்கங்கள் குவித்து வருபவர், காமன்வெல்த்திலும் தங்கத்தை சொல்லியடித்திருக்கிறார்.

‘‘எனக்கு எண்பது சதவீத பார்வை பிரச்னை இருக்கு. மதுரை பார்வையற்றோர் பள்ளியில +2 வரை படிச்சேன். எங்க சீனியர் அக்கா மூலமா சென்னை ராணி மேரி கல்லூரியில பி.ஏ சேர்ந்தேன். அங்கதான் ஜூடோ பயிற்சி கொடுத்தாங்க. எங்க வீட்ல வெளியூர்ல படிக்க வைக்கவே ரொம்ப யோசிச்சாங்க. இதைச் சொன்னதும் ரொம்ப பயந்துட்டாங்க. அப்புறம் என்னோட மன தைரியத்தைப் பார்த்துட்டு சம்மதிச்சாங்க. நாலு வருஷப் பயிற்சிக்கு கிடைச்ச வெற்றி இது. முடியும்னு நினைச்சா எதுவும் முடியும்ணே!’’ என்கிறார் தத்துவார்த்தமாக!

அவரைத் தொடர்ந்து பேசுகிறார் விஜயசாந்தி... ‘‘எனக்கு திருவண்ணாமலை பக்கம் கண்ணமங்கலம் கிராமம். பத்து வயசு வரை பார்வை நல்லாயிருந்துச்சு. ஒருநாள் டெலிபோன் கம்பி தலையில விழுந்து பார்வை நரம்பு கட் ஆகி, நூறு சதவீத பார்வையும் போயிடுச்சு. நிழலை வச்சுதான் எதையும் கண்டுபிடிப்பேன். பி.ஏ. முடிச்சு பி.எட் பண்ணிட்டு இருக்கேன். இப்போ, 45 டூ 48 கிலோ பிரிவுல விளையாடுறேன். 2014ல தென்கொரியாவுல நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில வெண்கலம் வாங்கினேன். தேசிய அளவுல தங்கம் வாங்கி காமன்வெல்த்துக்கு செலக்ட் ஆனேன். அங்கேயும் தங்கம் கிடைச்சது பெரிய சந்தோஷம்!’’ என்கிறார் துள்ளலுடன்!

இவர்களுக்கென ஏதேனும் விதிகள் இருக்கிறதா? பயிற்சியாளர் உமாசங்கர் அதை விவரிக்கிறார்...‘‘தமிழகத்துல, 2012ல இருந்துதான் பார்வையற்றோர் ஜூடோ நடத்தப்பட்டு வருது. நான், தமிழ்நாடு பார்வையற்றோர் ஜூடோவின் நிறுவனர். தவிர, நார்மல் மக்களுக்கும் பார்வையற்றோருக்கும் தமிழ்நாடு பயிற்சியாளரா இருக்கேன்.

பொதுவா பார்வையற்றவங்க, மற்றவங்களை விட ஈஸியா புரிஞ்சுப்பாங்க. வேகமாகவும் விளையாடுவாங்க. ஜூடோவில் எதிராளியைக் கூர்மையா அப்சர்வ் பண்றதுதான் முக்கியம். அது இவங்ககிட்ட இயல்பாவே இருக்கு. அதனாலதான், முதல் பார்வையற்றோர் தேசியப் போட்டியிலயே 20 பதக்கங்கள் வாங்கி நாம ரெண்டாவது இடத்துக்கு வர முடிஞ்சது. ஆனா, இவங்க பிரச்னையே ஸ்பான்சர் கிடைக்காததுதான்’’ என்கிறார் வருத்தம் பொங்க!

‘‘இந்த ஸ்பான்சர்ஷிப்புக்காக நாங்க பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல சார்...’’ எனத் துவங்குகிறார் இவர்களுக்கு ஸ்பான்சர் ஏற்பாட்டினை கவனித்த ‘லிட் தி லைட்’ என்கிற அமைப்பைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். ‘‘இவங்க ஆசிய பாரா விளையாட்டுல பதக்கம் வாங்கினதும் உலக சாம்பியன்ஷிப் விளையாட வாய்ப்பு வந்துச்சு. அதுக்காக, அமெரிக்கா போகணும்.

ஆனா, பணமில்லாம அந்த பெரிய சான்ஸ் கை நழுவிப் போச்சு. இந்த காமன்வெல்த் போகக் கூட அஞ்சு நாட்களுக்குள்ள அஞ்சு லட்ச ரூபாய் கட்ட வேண்டியிருந்துச்சு. தமிழக அரசு, தேர்தலைக் காட்டி மறுத்துட்டாங்க. ஏற்கனவே, ஆசிய பாரா விளையாட்டுல ஜெயிச்சதுக்கே எந்த உதவித் தொகையும் வழங்கலை.

இதை எப்படிக் கொடுப்பாங்கனு விட்டுட்டோம். அப்புறம் சமூக வலைத்தளங்கள், நண்பர்கள்னு எல்லோர்கிட்டயும் விஷயத்தைக் கொண்டு போனோம். மெல்ல மெல்ல பணம் சேர்ந்தது. சிறுகச் சிறுக முந்நூறு பேருக்கும் மேல இதுக்காக பணம் கொடுத்து உதவினாங்க. இந்த வெற்றியையும் பெருமையையும் அந்த நல்ல உள்ளங்களுக்கு காணிக்கையாக்குறோம்!’’ என்கிறார் அவர்.

ஜூடோவில் எதிராளியைக் கூர்மையா அப்சர்வ் பண்றதுதான் முக்கியம். அது பார்வையற்றவர்கள்கிட்ட இயல்பாவே இருக்கு.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்