நியூஸ் வே* கலிபோர்னியாவில் ஃபேமிலியுடன் சம்மர் ட்ரிப்பில் இருக்கும் சூர்யா, அங்கே  வெளியாகியிருக்கும் ‘24’ பட ப்ரீமியர் ஷோவில் கலந்துகொண்டு அமெரிக்க ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

* வெள்ளை மாளிகை சென்று அமெரிக்க அதிபர் ஒபாமா தம்பதியுடன் டின்னர் சாப்பிட்டு வந்திருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. ஒபாமாவின் பதவிக்காலம் முடிந்ததும், பெண் கல்விக்கான சேவை அமைப்பில் தீவிரம் காட்டப் போகிறார், அவரது மனைவி மிச்செல்லி ஒபாமா. அதில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து வந்திருக்கிறார் ப்ரியங்கா.

* ‘‘எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தெலங்கானாவில் இருக்க வேண்டும்’’ என பொங்குகிறார்கள் அரசியல்வாதிகள். கிட்டத்தட்ட 260 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி, இப்போது அங்கு மாதச் சம்பளம் 2 லட்சத்து 80 ஆயிரம். இந்தியாவிலேயே இதுதான் அதிகபட்சம்.  

* சயீஃப் அலிகானை திருமணம் செய்து கொண்டபிறகு, தனது முன்னாள் காதலர் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார் கரீனா கபூர். ‘‘பிரிந்த காதலர்கள் சேர்ந்து வேலை பார்க்கக்கூடாது என சொல்வது அபத்தம். நான் அவரோடு விரும்பி இணைந்து நடிக்கிறேன். நாங்கள் நடிகர்கள். ஒருவரின் பணி என்பது உணர்ச்சிகளால் பாதிக்கப்படக்கூடாது’’ என்கிறார் கரீனா.

* நயன்தாரா பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதென்றால் மட்டும் யோசிக்கிறார். நடுவில் இருக்கிற ஹீரோக்களுக்கு உடனே ஓகே சொல்லிவிடுகிறார். மரியாதையாகவும் இருக்கும்... படத்தையும் சீக்கிரம் முடித்துவிடுகிறார்கள் என்பதுதான் காரணம்.

* ஹன்சிகாவும், தமன்னாவும் இதுவரை படங்களில் சேர்ந்து நடித்ததில்லை என்றாலும், சமீபத்தில் விளம்பரப் படம் ஒன்றில் நடித்ததன் மூலம் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். இப்போது இருவரும் மாறி மாறி வாட்ஸ் அப்பில் நட்பை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

* விக்ரம் இப்போதுதான் காஷ்மீரிலிருந்து திரும்பியிருக்கிறார். வெகுநாட்களுக்குப் பிறகு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு அங்கே நடந்திருக்கிறது. ஒரு பிரச்னையும் இல்லையாம்!

* உலகில் அதிக காலம் வாழ்ந்த நாய் என்ற பெருமையுடன் மேகி சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டது. ஆஸ்திரேலியன் கெல்பி இன பெண் நாயான இது, 30 வயது வரை வாழ்ந்தது. இது கிட்டத்தட்ட மனிதர்கள் 133 வயது வரை வாழ்வதற்கு சமம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரையன் மெக்லாரன் என்ற பால் பண்ணை அதிபரின் வளர்ப்பு நாய் இது.

* ‘க்ளிக் ஆர்ட் மியூசியம்’ என்ற பெயரில் 3டி ஆர்ட் கேலரி ஒன்றை கமலின் நண்பரும் ஓவியருமான ஏ.பி.தர் சென்னை வி.ஜி.பி.யில் உருவாக்கியிருக்கிறார். ‘‘உலகம் முழுவதும் 12 நாடுகளில் 42 இடங்களில் இது போன்று இருக்கிறது. இந்தியாவில் இது முதல் முறை!’’ என்கிறார் தர். விழாவிற்கு வந்திருந்த பார்த்திபன், ‘‘குத்துவிளக்கு ஏற்றுவதை நெருப்பு இல்லாமல் எதாவது ஓவியம் மூலம் ஏற்றலாம் என நினைத்திருந்தேன்.

ஆனால், தர் அதனை இங்கே செய்துவிட்டார்!’’ என அதிசயித்தார். ஆம், குத்துவிளக்கு ஓவியத்தின் மீது நெருப்பின் சுடர் வரையப்பட்டே இந்த விழா துவக்கி வைக்கப்பட்டது.

* படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மணிரத்னம் - கார்த்தியின் படம் தமிழ்நாடு, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு உரிமை விற்று முடிந்துவிட்டது.

* பாலிவுட் அளவுகோலின்படி ஹுமா குரேஷி செம குண்டு. ஆனாலும் திறமையான அவருக்கு நடிக்கும் வாய்ப்புள்ள படங்களாக அமைந்தன. இப்போது உலக சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸின் ஜோடியாக ‘தி மம்மி’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்கப் போகிறார் அவர். இது ஹாலிவுட் ஜாக்பாட்!

* ‘கபாலி’ டீஸர் சாதனையைப்  பார்த்துவிட்டு, ரஜினிக்கு ரொம்ப சந்தோஷமாம். எல்லா தரப்பிலிருந்தும் கேட்ட  வார்த்தைகள்தான் காரணம். இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு போன் செய்து அவருடைய  பாஷையிலேயே ‘‘மகிழ்ச்சி’’ என்று சொல்லி போனை வைத்தாராம்.

* பிபாஷா பாசுவின் திருமணம்தான் கடந்த வார பாலிவுட் ஹாட்! ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நடிகர் கரண் சிங் குரோவர்தான் பிபாஷாவின் கணவர். பிபாஷா பற்றி உருகி உருகிப் பேசுகிறார் மனிதர். ‘‘நான் சென்ற பிறவியில் துறவியாக இருந்து பெரும் தவம் செய்திருக்க வேண்டும். அதனால்தான் இவ்வளவு அழகான, அன்பான, அக்கறையான மனைவி அமைந்திருக்கிறார்’’ என்கிறார் கரண்.

* ‘ரெமோ’ ஷூட்டிங் முடிந்துவிட்டது. சிவகார்த்திகேயனும், பி.சி.ராமும் மிகவும் நண்பர்களாகிவிட்டார்கள். பி.சி இதுவரை தான் ஒளிப்பதிவு செய்த படங்களின் சி.டி.க்களை பரிசளிக்க, சிவகார்த்தி மனசு நெகிழ்ந்து அவரின் கைகளைப் பற்றிக்கொண்டார்.