ரஜினி சாரின் ஆச்சரியம்... கமல் சாரின் மேஜிக்!



‘‘கமல் சார் என் படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கார்ங்கறதை நம்பவே முடியல. ராம்குமார் சாரும் நாங்களும் கமல் சாரை பார்க்கப் போயிருந்தோம். ‘நான் எங்கே, என்னிக்கு வரணும்? என்ன காஸ்ட்யூம்?’னு மட்டும்தான் கமல் சார் கேட்டார். சொன்ன மாதிரியே காலையில 8 மணிக்கு வித் மேக்கப் சரியா ஸ்பாட்டுக்கு வந்தார்.

அன்னிக்கு முழுக்க கொளுத்துற வெயிலையும் பொருட்படுத்தாமல் எங்களோட இருந்து அவர் நடிச்சுக் கொடுத்துட்டு போனதே ஒரு மேஜிக் மாதிரி இருக்கு!’’ - இன்னமும் சிலிர்ப்பில் இருந்து மீளாமல் இருக்கிறார் அமுதேஸ்வர். நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘மீன்குழம்பும் மண்பானையும்’ படத்தின் அறிமுக இயக்குநர்.

‘‘இது முழுக்க முழுக்க மலேசியாவில் நடக்கற கதை. ஷூட்டிங் போகும்போதே விமானத்தில் ரஜினி சாரை பார்த்தோம். ‘கபாலி’க்காக அவரும் மலேசியா போயிட்டிருந்தார். ‘மீன்குழம்பும் மண்பானையுமா?’னு டைட்டிலை கேட்டு சிரிச்சார். ‘எப்படி இப்படி டைட்டில் பிடிச்சீங்க?’னு ஆச்சரியப்பட்டவர், அப்புறம் ‘அதெல்லாம் தானா அமைஞ்ச விஷயமா இருக்கும்’னு சொல்லி சிரிச்சார். சிவாஜி ஃபேமிலி தயாரிக்கிற படம்... நடிகர் ஜெயராம் சாரோட மகன்தான் ஹீரோனு தெரிஞ்சதும் இன்னும் சந்தோஷமா வாழ்த்தினார்!’’‘‘எதனால இப்படி ஒரு டைட்டில்?’’

‘‘மீன் குழம்பை நினைச்சாலே கமகமனு ஒரு வாசனை வரும். உடனே சுடச்சுட இட்லியும் மீன் குழம்பும் சாப்பிடணும்னு தோணும். அதுவும் மண்பானையில் சமைச்ச குழம்பு இன்னும் ஆரோக்கியம். மலேசியாவில் மீன் கடை வச்சிருக்கவர் பிரபு. அவரோட மகன் காளிதாஸ். அப்பா - மகன் உறவு பற்றி தமிழ் சினிமாவில் இதுக்கு முன் எத்தனையோ கதைகள் வந்திருக்கு. ஆனா, இப்படி ஒரு இதமான கதை கொஞ்சம் புதுசு. எல்லா உறவுகளுக்குள்ளும்  மனத்தாங்கல்கள் இருக்கும். நாம நினைச்சாலே அதை சரி பண்ணிக்க முடியும்னு இந்தப் படத்தைப் பார்த்ததும் தோணும். 
கமல் சார் இதுல விவேகானந்தரா நடிச்சிருக்கார்னு சொல்றதெல்லாம் உண்மையில்லை.

அவரோட கேரக்டரை சஸ்பென்ஸா வச்சிருக்கோம். படம் முழுவதும் பிரபு சார் ரசிக்க வைப்பார். காளிதாஸ் ஜோடியா ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஹீரோயின் ஆஷ்னா சவேரி நடிச்சிருக்காங்க. ‘விஸ்வரூபம்’ பூஜா குமார் இதுல லேடி டான். ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர்னு ஒரு ஃபேமிலி படத்துக்கான ஆர்ட்டிஸ்ட்கள் நிறைய பேர் இருக்காங்க!’’‘‘எப்படி இருந்தது மலேசிய அனுபவம்?’’

‘‘நாங்க அங்கே போன நேரம், சீனப் புத்தாண்டு தினம். சென்னையில இருக்கறவங்க தீபாவளி கொண்டாட அவங்கவங்க ஊர்களுக்குப் போற மாதிரி, அங்கே இருந்த சீனர்கள் பலரும் நியூ இயர் கொண்டாட மலேசியாவை விட்டுக் கிளம்பினாங்க. ஒன்றரை லட்சம் கார்கள் மலேசியாவை விட்டுப் போயிருந்துச்சு. ரோடெல்லாம் செம ஃப்ரீ. தளபதி தினேஷை வச்சு விறுவிறுப்பான ஒரு கார் ரேஸும், கார் சேஸும் அங்கே நைட் எஃபெக்ட்டில் ஷூட் பண்ணினோம்!’’

‘‘எப்படி பண்ணியிருக்கார் புது ஹீரோ?’’‘‘இந்தப் படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. சிவாஜி சார் ஃபேமிலியின் மூணாவது தலைமுறையான துஷ்யந்த் தயாரிக்கும் படம். வழக்கமா ஒரு தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லப் போனா ‘யார் ஹீரோ’னு கேட்பாங்க. அப்புறம் ஹீரோவைத் தேடி ஓடணும். அந்த மாதிரி எந்த சிரமமும் எனக்கு இல்லை. அவங்ககிட்ட காளிதாஸோட கால்ஷீட் ஏற்கனவே இருந்துச்சு.

ஸோ, கதை பிடிச்சதும் ஷூட்டிங் கிளம்பிட்டோம். ‘மொத்தப் படமும் மலேசியாவில்’னு சொன்னதும் உடனே கிளம்பிடலாம்னு என்னை  உற்சாகப்படுத்தினாங்க தயாரிப்பார்கள் துஷ்யந்தும்  அவர் மனைவி அபிராமி துஷ்யந்தும். இவ்வளவு சீக்கிரம் படத்தை முடிச்சதுக்கு இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் கிடைச்சதுதான் காரணம்.

காளிதாஸ் கடின உழைப்பாளி. ‘இந்தப் படத்துல கண்டிப்பா நானும் இருக்கணும்னு விரும்புறேன்’னு சொல்லி கமிட் ஆனாங்க ஹீரோயின் ஆஷ்னா. பூஜா குமாருக்கு தமிழ் அவ்வளவா தெரியல.

அவங்க அமெரிக்காவில் இருக்கறதால ஸ்கிரிப்டை மெயில்ல அனுப்பினோம். ‘எந்த இடத்துல சிரிக்கணும்? எங்கே சோகம் இருக்கணும்?’னு குறிப்புகள் போட்டு அனுப்பச் சொன்னாங்க. கமல் சாரோட படங்கள்ல நடிச்ச பயிற்சி அவங்ககிட்ட தெரிஞ்சது. வித்தியாசமான வில்லனா எம்.எஸ்.பாஸ்கர் நடிச்சிருக்கார். இமானோட இசை, ‘போடா போடி’ லக்‌ஷ்மணோட ஒளிப்பதிவு எல்லாம் படத்துக்கு பலம் சேர்க்கும்!’’‘‘உங்களப் பத்தி..?’’

‘‘சிவகங்கை பக்கத்துல ஒரு கிராமத்துல பொறந்தவன் நான். எடிட்டிங் அசிஸ்டென்ட்டா சினிமா வாழ்க்கையைத் தொடங்கினேன். சுசீந்திரனோட, ‘பாண்டிய நாடு’ல வொர்க் பண்ணினேன். ‘பாயும்புலி’க்கு வசனம் எழுதினேன். 20 வருஷ அனுபவத்தோடு இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கேன்!’’‘‘கமல் என்ன அட்வைஸ் பண்ணினார்?’’

‘‘கமல் சார் ஸ்பாட்ல என்ட்ரி ஆன  நொடியிலேயே ஒரு அன்பான அரவணைப்பை உணர வச்சிட்டார். கமல் சாரை  இயக்கப் போற பதட்டம் எனக்கு ஏற்படாம கவனிச்சுக்கிட்டார். அவர் எந்த அட்வைஸும்  பண்ணத் தேவையே இல்லை. அவரைப் பார்த்தாலே நிறைய கத்துக்கலாம்!’’

- மை.பாரதிராஜா