முகங்களின் தேசம்



வழித்துணைகள்

எங்கள் நீண்ட பயணங்களில் எப்போதும் ஓட்டுநர் வைத்துக்கொள்வது வழக்கம். ஏனென்றால் இப்பயணங்களில் நாம் செல்வது அறியாத ஊர்களின் வழியாக. அங்கெல்லாம் காரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். நண்பர்களில் ஒருவருக்குச் சொந்தமான காரில் சென்றோம் என்றால், காரின் உரிமையாளர் அன்றி பிறர் காரைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். உரிமையாளரோ, காரைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டியிருக்கும்.

மேலும் பல இடங்களில் ஒதுக்குப்புறமான தொல்லியல் மையங்களைத்தான் நாங்கள் தேடிச்செல்வது வழக்கம். அங்கெல்லாம் காரை அநாதரவாக நிறுத்திவிட்டுச் செல்ல முடியாது. ஒருவர் காரிலேயே இருந்தாக வேண்டும்.  பயணத்தில் பங்குகொள்ளும் ஒருவர் அதைச் செய்ய முடியாது. இறுதியாக ஒன்று உண்டு. பயணங்களில் நாங்கள் மலைகளில் ஏறுவோம். ஆலயங்களைச் சுற்றிப் பார்ப்போம்.

அருவிகளில் குளிப்போம். அவையெல்லாமே உடற்களைப்பை அளிப்பவை. அதிலெல்லாம் ஓட்டுநர் ஈடுபட்டால், அவர் களைப்புடன் வண்டியை ஓட்ட வேண்டியிருக்கும். இன்பச் சுற்றுலாக்களிலோ, அல்லது திருமணங்களுக்கான இன்பப் பயணங்களிலோ, பெரும்பாலான விபத்துகள்  திரும்பி வரும்போது நிகழ்பவை என்பது கவனித்தால் தெரியும்.

விபத்து என்பது இந்தியாவில் நம் கையில் இல்லை. நான்குவழிச் சாலையில், ஒருவழிப்பாதையில் நேர் எதிரே, விதிகளை மீறுகிறோமே என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் டிராக்டர்களிலும் மணல் லாரிகளிலும் வருவார்கள். சாலைப் பிரிவினைகளை உடைத்து வழி செய்து கூசாமல் குறுக்காகக் கடப்பார்கள்.  மாடுகளைக் கொண்டுவந்து சாலை நடுவே உள்ள சோலையில் கட்டிவிட்டுச் செல்வார்கள். அவை சாலையில் இறங்கி நிற்கும்.
இந்தியா சாலைப் பாதுகாப்பில் உலகிலேயே மோசமான நாடுகளில் ஒன்று.

சாலையில் நெடுந்தொலைவுப் பயணங்கள் என்பதெல்லாம் இங்கே பெரிய சாகசப் பயணங்கள்தான். ஏனென்றால், சாலை என்பது நம் சமூகத்தின் ஒரு மாதிரி வடிவம். சமூகம் எப்படி சட்டங்களாலும் பலவகையான புரிந்துணர்வுகளாலும் உருவாகியிருக்கிறதோ, அப்படித்தான் சாலையும் உருவாகியிருக்கிறது. இந்தியாவில் நாம் ‘சமூகநெறிகளை மீறுவதில்தான் ஆண்மை உள்ளது’ என நம்புகிறோம்.

நெறிகளைப் பொருட்படுத்தாதவரே பெரிய மனிதர் என எண்ணுகிறோம். அதுவே சாலைகளிலும் வெளிப்படுகிறது. ஆகவே நம் சாலைகள் சமூகத்தைப் போலவே அத்தனை பேரும் மீறிச் செல்வதற்கும் பொருட்படுத்தாமல் இருப்பதற்கும் தங்களிடம் இருக்கும் அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தும் போட்டிக்களமாக உள்ளன.

எனவே நான் சாலைப் பயணங்களில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வேன். நான்கு அடிப்படை விதிகளை உருவாக்கி வைத்திருக்கிறேன்.
ஒன்று, சாலையில் ஒரு நாளில் அதிகபட்சம் முந்நூறு கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்வதில்லை. நெடுந்தூரப் பயணம் ஓட்டுநரிடம் சலிப்பையும் கவனக்குறைவையும் உருவாக்குகிறது. இருநூறு கிலோமீட்டர் கடந்ததும் அவரது உடல்மொழியே மாறி விடுவதைக் காணலாம்.

இரண்டு, இரவில் பயணம் செய்வதில்லை. இந்தியாவில் எவரும் தங்கள் வண்டிகளில் விளக்குகளுக்குரிய சட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை. குறிப்பாக லாரிகள். விளக்குகளின் மேல்பகுதியை கரி பூசி மறைப்பதில்லை. வேட்டைக்குச் செல்லும்போதும் மூடுபனியில் செல்லும்போதும் பயன்படுத்துவதற்கென வண்டிகளில் அமைக்கப்படும் மிகு ஒளி விளக்குகளை முழுக்க எரிய விட்டுக்கொண்டே அத்தனை பேரும் செல்கிறார்கள்.

எந்தக் காவலரும் அதைத் தட்டிக் கேட்பதில்லை. தட்டிக் கேட்பவர் காசு வாங்கும் ஆவலுடன் இருப்பார்.  நாம் காரில் செல்வோம் என்றால், லாரிகளின் அதிநீள ஒளிப்பட்டைகளுக்கு நேர் எதிராக ஓட்டுநரின் கண் இருக்கும். சொல்லப் போனால், எதிரே வண்டி வரும்போது அது கடந்துசெல்வது வரை ஓட்டுநர் முழுக்குருடாகவே இருக்கிறார்.

மூன்றாவதாக, ஓட்டுநர் தூக்கக் கலக்கத்துடன் இருக்கக்கூடாது. ஒவ்வொரு பயணத்திலும் ஓட்டுநருக்கு வசதியான அறையை அளிப்போம். அவரை முன்னதாகவே தூங்கப் போக அனுப்புவோம்.  சில ஓட்டுநர்கள் காரிலேயே தூங்க விரும்புவார்கள். காரின் பாதுகாப்பே காரணம். அந்த அச்சத்தைப் போக்கி, சட்டபூர்வமான, பாதுகாப்பான நிறுத்திடங்களில் கார்களை நிறுத்த ஏற்பாடு செய்வோம். அதற்கும் அப்பால் சில ஓட்டுநர்கள் இரவில் காரில் அமர்ந்து சினிமா பார்க்கவும், செல்பேசியில் அரட்டை அடிக்கவும் விரும்புவார்கள். அவர்களிடம் ‘நீங்கள் ஒழுங்காகத் தூங்குவீர்கள் என்றால் மட்டுமே எங்களுடன் வர முடியும்’ என்று கண்டிப்பாகச் சொல்லி விடுவோம்.

நான்காவதாக, ஓட்டுநர் மது அருந்திவிட்டோ பிற போதைப்பொருட்களை போட்டுக்கொண்டோ  ஓட்ட அனுமதிக்க மாட்டோம். எங்கள் பயணங்களில் நாங்கள் எவரும் மது அருந்துவதில்லை. எங்கள் ஓட்டுநர்கள் எல்லாருமே இந்த நிபந்தனைகளைக் கண்டு சற்று எரிச்சல் கொண்டவர்களாகவே எங்களுடன் பயணத்திற்கு வருவார்கள். ஆனால், முதல் நாளிலேயே எங்கள் பயணத்தின் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். விதிவிலக்கே இருந்ததில்லை. இரண்டாம் நாளில் அவர்களும் நாங்கள் சென்ற இடத்தின் செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். எங்கள் உரையாடலில் கலந்துகொள்வார்கள்.

நாங்கள் குடிப்பதும், சண்டை போட்டுக்கொள்வதும் இல்லை என்பதே எங்கள் மேல் பெரிய மதிப்பை உருவாக்கிவிடும். மேலும் அவர்களின் பணி எளிதாக ஆகும்தோறும் அவர்களின் உற்சாகம் ஏறி ஏறிவரும்.2008ம் ஆண்டில் நாங்கள் இந்தியா முழுக்க ஒரு மாத காலம் பயணம் செய்தபோது உடன் வந்தவர் ரஃபீக். அவருடைய சொந்த வண்டி, டவேரா. அப்போதுதான் வாங்கியிருந்தார். ரஃபீக்குக்கு அரசியல், இலக்கியம், சினிமா என எந்த ஆர்வமும் இல்லை... சீட்டுப் போட்டு பணம் சேர்ப்பது தவிர! ஆனால் ஆந்திரா கடந்ததுமே சிற்பக்கலையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். ஒருகட்டத்தில் சாலையோரம் ஒரு கோயிலைப் பார்த்தால், ‘‘இது காகதீயர் காலமா சார்?’’ என்று கேட்க ஆரம்பித்தார்.

முதலில் நான் பேசிக்கொண்டே இருப்பதைக் கண்டு, ‘‘சார், இவருக்கு ஏதாவது பிரச்னையா? இவ்வளவு பேசுறார்!’’ என்று கேட்டார். ஆனால் அப்பயணம் முடிந்து ஓரிரு மாதம் கழித்துக் கூப்பிட்டார். என் ‘ஏழாம் உலகம்’ நாவலை வாசித்திருந்தார். அடுத்த முறை அழைத்தபோது மேலும் பல நூல்களை வாசித்திருந்தார். இன்று வரை அவர் நல்ல நண்பராகவே நீடிக்கிறார்.

லடாக்கிலும்  பின்னர் காஷ்மீரிலும் எங்களுக்கு ஓட்டிச் சென்றவர் ‘காகா’ என நாங்கள் அழைத்த ராஜேந்தர் சிங். ஜம்முவைச் சேர்ந்தவர். நான்கு  கார்களுக்குச் சொந்தக்காரர். இமயமலைப் பகுதிகளில் வாகனம் ஓட்டுவதற்குரிய அபாரமான தைரியமும் திறமையும் கொண்டவர். உலகத்திலேயே உயரமான சாலையான கார்துங் லா கணவாய்ப் பாதையில் அவர்தான் ஓட்டினார். ஆனால் லடாக்கின் பல பகுதிகளில் அவர் வண்டியை ஓட்ட முடியவில்லை. அதற்கு லடாக்கில் மட்டுமே வண்டி ஓட்டும் அந்த ஊர் ஓட்டுநர்கள் தேவை. அவர்கள் வண்டியை ஓட்டுவதைக் கண்டால், நேரான சாலையில் இவர்கள் ஓட்டினால் காரைக் கவிழ்த்துவிடுவார்கள் என்று தோன்றும்.

காகா எங்களுக்காக காஷ்மீரில் ஓட்டிச் சென்றபோது நடுங்கிக்கொண்டிருந்தார். ஜம்முவின் ஓட்டுநர்கள் காஷ்மீருக்குள் வரக்கூடாது என எழுதப்படாத சட்டம் உள்ளது, தீவிரவாதிகளால். நாங்கள் நகர் மட்டுமே செல்வதாக அவர் எண்ணியிருந்தார். பத்தான் போன்ற தீவிரவாதிகளின் மையங்களுக்குச் செல்லப்போவதை அறிந்து நடுங்கிவிட்டார். கடுமையாக மறுத்து வாதாடினார்.

நாங்களும் விட்டுக் கொடுக்காமல் ‘‘சென்றே தீர்வோம்’’ என்றோம். ஒரு கட்டத்தில் ‘‘சரி! எங்களை இறக்கி விடுங்கள். நாங்களே செல்கிறோம். கணக்கு முடிப்போம்’’ என்றேன். காகா புண்பட்டுவிட்டார். ‘‘அதெப்படி? நீங்கள் என் பொறுப்பு அல்லவா? நான் எப்படி உங்களை விட்டு விட்டுச் செல்ல முடியும்’’ என்றார். வேறுவழியில்லாமல் எங்களுடன் வந்தார்.

பத்தானில் நாங்கள் அவரை சாலையோரம் விட்டுவிட்டு இறங்கிச் சென்று ஓர் ஆலயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். சரசரவென வந்த ராணுவ வண்டிகள் அவரது காரின் இரு பக்கத்திலும் நிற்க, இறங்கி ஓடிவந்த கமாண்டோக்கள் அவரை துப்பாக்கிகளுடன் சூழ்ந்துகொண்டனர். அவர் நெஞ்சில் துப்பாக்கியை ஊன்றி விசாரித்தனர். கைகளைத் தூக்கியபடி காகா நடுக்கத்தோடு இருக்க, நாங்கள் அவசரமாகக் குறுக்கிட்டு, ‘‘அவர் வர மறுத்தார். நாங்கள்தான் அழைத்து வந்தோம்’’ என்றோம்.

‘‘நீங்கள் யார்?’’ என்று எங்களிடம் ராணுவ கேப்டன் கேட்டார். எங்கள் அடையாளங்களைச் சொன்னதும், ‘‘அறிவிருக்கிறதா உங்களுக்கு? இங்கே இவர் வரலாமா? உங்கள் உயிருக்கு ஆபத்தில்லை. இவர் ஒவ்வொரு கணமும் இறப்பின் விளிம்பில் இருக்கிறார். உங்களுக்காக வந்திருக்கிறார். அவர் உயிருடன் விளையாடாதீர்கள்’’ என்றார். நாங்கள் நடுங்கி விட்டோம்.

அதன்பின் ராணுவப் பாதுகாப்புடன் ஒரு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கேயே தங்கினோம். அந்த முகாமின் கேப்டன் ஒத்துழைப்புடன் ஷியா இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவரை ஏற்பாடு செய்துகொண்டு, ஷியா முஸ்லிம்களின் கிராமங்களின் வழியாக பயணத்தைத் தொடர்ந்தோம்.

காகா முழுநேரமும் முகாமிலேயே இருந்தார். அங்கே சதுரங்கம் விளையாடிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்திரும்பும்போது நான் காகாவிடம் கேட்டேன். ‘‘ஏன் காகா, வரமாட்டேன் என்று சொல்லியிருக்கக் கூடாதா? இத்தனை ஆபத்து என்று எங்களுக்குத் தெரியாதே!’’காகா சிரித்தபடி, ‘‘என்னை நம்பி வந்து விட்டீர்கள். நான் விட்டுவிட முடியுமா?’’ என்றார். மேலும் பெரிதாகச் சிரித்தபடி சொன்னார்... ‘‘நானே கொஞ்சம் சாகசத்துக்கு ஆசைப்பட்டுத்தான் வருகிறேன்!’’

இன்பச் சுற்றுலாக்களிலோ, அல்லதுதிருமணங்களுக்கான இன்பப் பயணங்களிலோ,  பெரும்பாலான விபத்துகள்  திரும்பி வரும்போது நிகழ்பவை என்பது கவனித்தால்  தெரியும்.சாலை என்பது நம் சமூகத்தின் ஒரு மாதிரி  வடிவம். சமூகம் எப்படி  சட்டங்களாலும் பலவகையான புரிந்துணர்வுகளாலும் உருவாகியிருக்கிறதோ,  அப்படித்தான் சாலையும் உருவாகியிருக்கிறது.சொல்லப் போனால், எதிரே வண்டி வரும்போது அது கடந்து செல்வது வரை ஓட்டுநர் முழுக்குருடாகவே இருக்கிறார்.

(தரிசிக்கலாம்...)

ஜெயமோகன்
ஓவியம்:  ராஜா