டிராட்ஸ்கி மருது IN Download மனசுஓவியத்தை புரிந்து கொள்ளுதல்!

தமிழ்ச் சமூகம் அதிகம் வார்த்தைகளையே நம்பி இருக்கிறது. வார்த்தை பொய் சொல்லும்... பிம்பம் பொய் சொல்லாது. இனி வரும் காலத்தில் உலக மக்களுக்கான மொழி, காண்பியல் மொழியே (Visual language).

எந்த மொழி தெரியாமல் இருந்தாலும், அவர்களைப் போய் எந்தச் செய்தியும் சென்றடைவது மாதிரி விஞ்ஞான யுகம் அமைந்துவிட்டது. நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகள் சுருங்கி அலைபேசிக்குள் வந்து அடைந்துவிட்டன.

இனி வெறும் வார்த்தைகளை நம்பி மட்டுமே இருக்க முடியாது. ‘யானை’ என எழுதிப் படித்துவிட்டு யானையை நினைக்க வேண்டியிருக்கிறது. அலைபேசியில் யானையையே அசலாகப் பார்க்க முடிகிறதே! காண்பியல் என்கிறபோது ஓவியமும் அதன் ஒரு பகுதிதான்.

அசையும் ஓவியமே சினிமா. இனி சினிமா நீங்கள் அறிகிற மொழியிலேயே பேச வேண்டுமென அவசியமில்லை. வார்த்தைகள் உங்களை அனுமானிக்க வைக்கும். சித்திரம் உங்களுக்கு எல்லாம் காண்பிக்கும். 5 நிமிடங்களுக்கு ஒரு முறை செய்திகள் காணொலியில் வந்துவிடுகிறது. ஆக, செய்தி செத்துப் போய்விட்டது. இனி நாளிதழ்கள் கட்டுரை எழுதியே வளர வேண்டும்.

பொக்கிஷம்...

குடும்பம், உறவுகள், நட்பு போக உலகப் பார்வையைத் தந்த வாழ்வனுபவம்தான் எனக்கு முக்கியம். இதற்கும் மேலே எனக்குக் கிடைத்த புத்தகங்கள். நான் திடீரென்று எனக்கு அத்யந்தமான புத்தகங்களை அப்படியே விட்டுவிட்டு போய்விடக்கூடாது என நினைக்கிறேன். நாற்பது வருடங்களாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் அலைந்து, தெருவோரக் கடைகளில்கூட தேடிக் கண்டடைந்த புத்தகங்கள் அவை. குறிப்பாக, எனது பிரியத்திற்குரிய ‘அனிமேஷன்’ பற்றிய அரிய புத்தகங்கள் என் கைக்கெட்டும் தொலைவில் இருக்கின்றன.

திருமணம்...

‘‘வா, உனக்குத் திருமணம் செய்ய வேண்டும்!’’ என்று வீட்டிலிருந்து அழைத்தார்கள். உடனே போய் இந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டேன். வேலை கிடைத்து விஜயவாடா போனபோது,  ‘‘இவனை நல்லபடியா பார்த்துக்கோம்மா’’ என என் மனைவியிடம் சொல்லி அனுப்பினார் அப்பா. இன்று வரை இதைச் சொல்லிச் சொல்லி சிரிப்பார் என் மனைவி. எனக்கு புறச்சூழல்கள், வீட்டு நெருக்கடிகள் எதுவுமே தெரியாது. சுதந்திரமான ஓவியனாக என்னை இங்கே உலவ விட்டதில் அவரின் பங்கு அபரிமிதமானது.

கற்ற பாடம்...

 வாழ்நாளெல்லாம் மாணவனாகவும், யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதுமே வாழ்வில் கற்ற அரிய பாடம். உபயோகிக்கும் வார்த்தைகளில் மேலான கவனம் தேவை என உணர்ந்திருக்கிறேன். முக்கியமாக, நான் தினமும் என்னைப் புதுப்பித்துக்கொள்கிறேன். நீங்கள் உங்களைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை எனில், நீங்கள் வாழும் காலத்திலேயே நினைவுச் சின்னம் ஆகிவிடுவீர்கள். காலமும் உங்களை விட்டுப் போய்விடும்.

அதிர்ந்தது...

கி.பி.அரவிந்தன் என் நெருங்கிய நண்பர். ஈழத்தின் இலக்கியப் பரப்பில் பெரும்பங்கில் பணியாற்றியவர். அவரது வெடிச்சிரிப்போடு கூடிய சொல்லாடலுக்கு நான் அடிமை. அவருடைய புத்தகங்கள் எல்லாம் என்னால் வடிவமைக்கப்பட்டவை.

அவர் அதைத்தான் விரும்புவார். பாரீஸ் நகரத்திலிருந்து ஒரு இரவில் அழைத்து,‘‘டிராட்ஸ்கி! ‘நமக்கென்றோர் அழியா கலை உடையோம்’ என்ற வரியை எழுதி அனுப்புங்கள்!’’ என்றார். நான் ‘எதற்கு’ என்றதற்கு ‘‘சொல்றதை செய்ங்க டிராட்ஸ்கி’’ என்றார். எழுதி அனுப்பிவிட்டேன்.

அதற்குப் பிறகு அவர் மறைந்த செய்தி கேட்டுத் தவித்துப் போய்விட்டேன். அவரது உடல் இருந்த பெட்டியின் மீது நான் எழுதி அனுப்பிய அதே வரிகள்; மற்றும் நான் வரைந்த வள்ளுவர் ஓவியம். ‘இதற்காகவா என்னை புன்னகையோடு பேசி எழுதச் சொன்னீர்கள்’ என இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

நான் புழங்கிய இத்தனை வார்த்தைகளில் என்னை உலுக்கி எடுத்த வார்த்தைகள் இவைதான். இறந்தவர்களைப் பற்றிச் சொல்லப்படும் உபசார வார்த்தைகளாக யாரும் இதை சூட்டிப் பார்த்துவிடாதீர்கள். என் நண்பனுக்கு பிரியப்பட்ட இறுதி வரிகளை எழுதச் சொன்னது எவ்வளவு பெரிய அன்பு! ஆனாலும் அவரின் இறுதி முடிவு தெரியாமல் நானே எழுதியது எவ்வளவு தாங்கொணாத துயரம்!

மீட்க விரும்பும் இழப்பு...

 நான் பயணங்கள் செல்ல வேண்டும் எனத் தூண்டியவர் என் அப்பா மருதப்பன். சிற்பி ரொடான் செதுக்கிய ‘சிந்தனையாளன்’ பற்றி அவர் எங்களிடம் சொன்னதை, நான் நேரில் சென்று பார்த்தபோது ‘எவ்வளவு கச்சிதமாக அப்பா பேசியிருக்கிறார்’ என்பது புரிந்தது. பாரீஸ் ‘கம்யூன் கல்லறை’களைப் பற்றிய அவரது பேச்சு, நேரில் பார்த்தால் அப்படியே மனதிற்கு அருகில் வருகிறது. ஒரு தடவை திப்பு சுல்தானின் கல்லறையைக் கண்ட பிறகு அது என்னில் உண்டாக்கிய பாதிப்புகள் பற்றி ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

‘அது நல்ல விவரணையான கடிதமப்பா’ என அடிக்கடி அப்பா சொல்லுவார். இன்றைக்கு ஐரோப்பாவின் கலை வடிவங்களை எல்லாம் எத்தனையோ முறை பார்த்துவிட்டேன். நான் அவை பற்றி இங்கே வந்து உரையாடும்போது, ‘‘இதைக் கேட்க உங்க அய்யா இல்லையேப்பா’’ என்பார் அம்மா. அவர் எங்கள் மீது நம்பிக்கை வைத்து சொன்னது ஒன்று... ‘அன்பு என்பது எல்லா பொருட்களையும் விட முக்கியமானது!’ இப்போதும் கரை ஒதுங்கிய படகு போல அவரை நினைக்கும்போதெல்லாம் தனிமை கொள்கிறேன்.

பாதித்த விஷயம்...

25 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் குடியிருந்தேன். வீட்டின் அருகில் நாடகக் காவலர் நவாப் ராஜமாணிக்கத்தின் சகோதரர் மனைவி இருந்தார். அவரிடம் 400 படங்கள் அடங்கிய ஆல்பம் இருந்தது. தமிழ் நாடக வரலாற்றின் முழுப் பக்கங்களையும் சொன்ன படங்கள் அவை. பிற்காலத்தில் தமிழ் வெளியில் பெரும் புகழ்பெற்ற பலர், அதில் சிறுவர்களாக இருந்தார்கள்.

அப்பழுக்கற்று, உண்மையாக நாடகப் பணிகளைச் செய்து கொண்டு இருந்தார்கள். அந்த ஆல்பம் பிரதியெடுக்க என்னிடம் வந்தது. வேலைகளின் நெருக்கடியில், கவனக் குறைவாய் இருந்துவிட்டேன். திடீரென்று அவர்கள் திருச்சிக்குப் பயணமாகிவிட, பின்னாலேயே நானும் என் மனைவியும் தேடிப் போேனாம். அந்த அம்மையார் மறைந்துவிட்டிருந்தார். குழந்தைகள் அதைப் பாதுகாத்து வைத்திருக்கவில்லை. அரிய களஞ்சியத்தை தவறவிட்டோமே என நெகிழ்ந்து கலங்கியிருக்கிறேன்.

மறக்க முடியாத மனிதர்...

2002ல் ஈழத்திற்கு அழைக்கப்பட்ட முதல் விருந்தினர் பட்டியலில் நானும் ஒருவனாக இருந்தேன். என்னோடு இன்குலாப், திருமாவளவன், ெசயப்பிரகாசம், புகழேந்தி தங்கராஜ் என நால்வர் இருந்தனர். ‘மானுடத்தின் ஒன்றுகூடல்’ என்ற நிகழ்ச்சி அது. நாங்கள் புலிகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியை நெருங்கியபோது, எங்கள் வருகையைக் கேட்டுக் கொண்டார்கள்.

உள்ளிருந்து அவசரமாகத் திரும்பிய தம்பிகள், ‘‘இவர்களில் மருது?’’ என்றார்கள். நான் சுட்டிக் காட்டப்பட்டேன். ‘‘அண்ணா, உங்கள் ஓவியங்களைத்தான் இருபது வருடங்களாக லே அவுட் ெசய்து கொண்டிருக்கிேறாம். மகிழ்ச்சி!’’ என ஆரத் தழுவி, உடனே எங்கள் களைப்பைப் போக்கி உபசரித்தார்கள். எனக்கு கண்ணீர் துளிர்த்துவிட்டது. அப்புறம் தலைவர் பிரபாகரனைக் காண நேர்ந்ததும், அவரோடு மிகச் சிறந்த நேரங்களை பகிர்ந்துகொண்டதும் என் வாழ்வின் வெகுமதி நிறைந்த கணங்கள்.

எடுக்க நினைத்த சினிமா...

மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் கதையை படமாக்க விரும்பி, சி.ஏ.பாலன் உதவியோடு அவரைப் பார்த்தேன். ஆனால், அந்த முயற்சி கூடி வரவில்லை. இன்னொரு முயற்சி திருடு போய் விட்டது. மற்றொரு தடவை ஒரு பெரிய ஹீரோ அதைத் தாமதமாக்கினார். பழந்தமிழர் வாழ்வைத் திரைப்படமாக்குகிற ஆசை ஒன்று கனன்றுகொண்டே இருக்கிறது!

- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்