கவிதைக்காரர்கள் வீதி



மின்னல் இருந்தும்
மழையில்லாத
இந்த இரவு
வெட்டப்பட்ட
மரங்களின் சாபமாய்
கூட இருக்கலாம்!
- ச.துரைமுருகன், மண்டபம்.



அம்மாவிடம்
சொல்லாத
ரகசியங்களையும்
தொட்டி மீன்களிடம்
சொல்கிறார்கள்
குழந்தைகள்!
- கவி கண்மணி, கட்டுமாவடி.

பகலெல்லாம்
தன்னைத் துரத்திய சிறுவனை
இரவெல்லாம் துரத்துகிறது
பட்டாம்பூச்சி கனவில்!
- நா.திங்களன், ஜோலார்பேட்டை.

நீள அகல
நீர்ச் சவப்பெட்டிக்குள்
துடிக்கின்றது
வண்ண மீன்களின் உயிர்.
- ந.கன்னியக்குமார், நல்லரசன் பேட்டை.

‘‘ஒண்ணுமில்ல...’’
டாக்டர் சொல்லக் கேட்கையில்
ஏறிய சுகர் இறங்குகிறது.
‘‘எழுதிக்கலாம்டா’’
எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட்டின்போது
அப்பா சொன்னது
எம்.பி.ஏ முடிக்க வைத்தது.
‘‘மறந்துடலாம்’’
முன்னாள் காதலி உதிர்த்தது
அவளை பார்க்கத் தோணவேயில்லை
இதுவரை.
‘‘புரட்டிக்கலாம்ங்க’’
மனை வாங்க
அலைந்து சலித்தபோது
மனைவி சொன்னது
சென்னைக்கு மிக அருகில்
இன்று என்னை
முகவரிக்குரியவனாக்கியுள்ளது.
ஆகவேதான் சொல்கிறேன்
ஒரு வார்த்தை என்பது
ஒரு வார்த்தை மட்டுமல்ல!

- எம்.ஸ்டாலின் சரவணன், கரம்பக்குடி.