நடை... பளு... டேபிள் டென்னிஸ்...



மெடல் கனவில் ஒலிம்பிக் தமிழர்கள்!

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல, இந்த முறை இந்தியாவிலிருந்து மட்டும் நூற்றி இருபது பேர்! இவ்வளவு பெரிய டீமில் பளு தூக்கும் வீரர் சதீஷ்குமாரும், நடை மனிதர் கணபதியும், டேபிள் டென்னிஸ் சரத்கமலும் தமிழகத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறார்கள். தற்போது போலந்து, பிரேசில் என அயல்நாடுகளில் தீவிரப் பயிற்சியில் இருக்கும் வீரர்களைப் பிடிப்பதே பெரிய வேலை. ஆனால், போனில் பேசும்போது அட்சரம் பிசகாத அன்னைத் தமிழ் அழகு...



கணபதி. இருபது கி.மீ நடை பந்தயத்தில் பின்னியெடுக்கும் இளைஞர்.  கிருஷ்ணகிரி மாவட்டம் கோனே கவுண்டனூரைச் சேர்ந்தவர்.  ‘‘இப்படியொரு விளையாட்டு இருக்குனு ஆர்மியில சேர்ற வரை எனக்குத் தெரியவே தெரியாது சார். ஆனா, இப்போ நாட்டுக்காக ஒலிம்பிக் போட்டியில நடக்கப் போறேன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு!’’ என்கிறார் உற்சாகம் பொங்க!

‘‘அப்பா கிருஷ்ணன், அம்மா மாதம்மாள், தம்பி சக்திவேல்னு வீட்டில் எல்லாரும் விவசாயம் பார்க்குறாங்க. அண்ணன் திருப்பதி, ராணுவத்துல இருக்கார். நானும் +2 முடிச்சதும் 2008ல் ஆர்மியில சேர்ந்தேன். ரெண்டு வருஷம்... நிறைய பயிற்சிகள்... அப்ப நடத்தின நாற்பது கி.மீ நடைப் போட்டியில முதலாவதா வந்தேன். அதைப் பார்த்து பயிற்சியாளர் ராம்குமார் சார்தான் வாக்கிங் ரேஸ் பத்தி எடுத்துச் சொன்னார். 2010ல் இருந்து நடைப் போட்டியில கவனத்தைத் திருப்பினேன்.

அடுத்தடுத்து தேசிய அளவுல தங்கம், வெள்ளி, வெண்கலம்னு ஆறு பதக்கங்கள். இப்போ ஒலிம்பிக்ல இந்தியா சார்பா மூணு பேர்தான் கலந்துக்க முடியும். ஆனா, ஏழு பேர்  தகுதி பெற்றோம். ஆரம்பத்துல எனக்கு சான்ஸ் சந்தேகமாதான் இருந்துச்சு. ஆனா, கடந்த மே மாசம் இத்தாலி யில நடந்த போட்டியில 1.21.41 நிமிஷத்துல இருபது கி.மீ தூரத்தைக் கடந்து உலக அளவுல 22வது ஆளா வந்தேன். இந்திய அளவுல முதலிடம். அதனால ஒலிம்பிக் டீம்ல இடம் கிடைச்சுது.

உள்ளே வந்துட்டேன். இனி, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்றதுதான் ஒரே நோக்கம்’’ என்கிறார் கணபதி நம்பிக்கையாக! மகன் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதை இப்போதும் நம்பவே முடியவில்லை தந்தை கிருஷ்ணனால். ‘‘படிக்க வைக்கவே ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஸ்கூல்ல வாலிபால் நல்லா விளையாடுவான். இப்போ, நடைப் போட்டியில இந்தியா சார்பா மோதுறான்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நிச்சயம் இதுல அவன் ஜெயிப்பான்!’’ என்கிறார் அவர் வெள்ளந்தியான குரலில்!

சதீஷ்குமார் சிவலிங்கம்... 2014 காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவர். வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த இவர்தான், பளுதூக்குதலில் ஒலிம்பிக் தகுதி பெற்ற மூன்றாவது இந்தியர். இதற்கு முன் 1996ல் சதீஷா ராயும், 2012ல் ரவிகுமாரும் தகுதி பெற்றனர். கடந்த ஆண்டு தன்னுடைய காமன்வெல்த் சாதனையையும், சதீஷா ராயின் தேசிய சாதனையும் முறியடித்து ஆச்சரியப்படுத்தினார் சதீஷ்குமார். 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் வென்றதே பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சாதனை! அதை சதீஷ் முந்துவார் என கணிக்கிறார்கள்.

‘‘என் கனவே ஒலிம்பிக்தான். அதுக்காக கடுமையா பயிற்சி பண்ணிட்டு இருக்கேன். காமன்வெல்த் போட்டிக்குப் பிறகு முதுகுத்தண்டுல சின்ன பிரச்னை. அதை சரிபண்ணி வர்றதுக்கு கொஞ்ச நாள் பிடிச்சிடுச்சு. இப்போ, ஐயாம் ஆல்ரைட்!’’ என்கிறார் சதீஷ். ‘‘அவன் நிச்சயம் மெடல் வாங்குவான். அதுக்காக அவன் உழைச்ச உழைப்பு ெகாஞ்ச நஞ்சமல்ல’’ என்கிறார் சதீஷின் தந்தை சிவலிங்கம். முன்னாள் பளுதூக்கும் வீரர் இவர். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்.

‘‘என்னைப் பார்த்து அவனுக்கு சின்ன வயசுல இருந்தே வெயிட் லிஃப்டிங் ஆர்வம். ஸ்கூல், காலேஜ்லயே நிறைய போட்டிகள்ல ஜெயிச்சான். அப்புறம், ரயில்வே வேலைக்குச் சேர்ந்ததும் தேசிய போட்டிகள்ல முதலாவதா வந்தான். காமன்வெல்த் அடிச்சு, இன்னைக்கு ஒலிம்பிக் போறான். கட்டாயம் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பான்!’’ என்கிறார் அவர் நம்பிக்கையாக!

அச்சந்த சரத்கமல்... உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 69வது இடத்தில் இருப்பவர். 2004 மற்றும் 2008ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று, இரண்டாவது ரவுண்ட் வரை முன்னேறினார். கடந்த 2006ம் ஆண்டு காமன்வெல்த் தனிநபர் பிரிவிலும், குழு பிரிவிலும் தங்கப் பதக்கம் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர். 2010ம் வருட காமன்வெல்த்திலும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார். இப்போது, ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் ஈரான் வீரர் நோஷத் அல்மியானை வீழ்த்தி, ரியோவிற்கு டிக்கெட் எடுத்திருக்கிறார் சரத்கமல்! 

- பேராச்சி கண்ணன்
படம்: இ.ராஜ்குமார்