மம்முட்டி இப்படிப் பேசலாமா?



கசப்பைக் கிளப்பிய கசபா!

மல்லுவுட்டில் மம்முட்டி ஜஸ்ட் மெகா ஸ்டார் மட்டுமல்ல; ஒரு மரியாதைக்குரிய மனிதர். 64 வயதாகும் சீனியர். குறிப்பாக பெண்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற ஆளுமை மம்முக்கா. சமீபத்தில் கூட கேரளாவில் ஜிஸா என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது, ‘‘பெண்களைக் காக்கும் ஹீரோக்களாக ஆண்கள் இருக்க வேண்டும்’’ என மம்முட்டி சொன்னது போற்றப்பட்டது. ‘அப்படிப்பட்டவரா இப்படி?’ என இன்று நாக்கின் மேல் பல்லைப் போட்டு நாலு பேர் பேசும் விதமாகச் செய்துவிட்டது அவரின்
‘கசபா’ படம்!



கிட்டத்தட்ட மல்லுவுட் ‘கபாலி’யாக மலையாளிகளிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம் ‘கசபா’. ‘நெடுநாட்களுக்குப் பிறகு மம்முட்டிக்கு நெகட்டிவ் ரோல்... அராஜக போலீஸாக வந்து அதகளம் பண்ணுகிறார்’ என ஒன்லைன்களால் பல்ஸ் எகிறியது. இதற்கு முன் மம்முட்டி நடித்த ‘பத்தேமாரி’ படம் மாநில விருதைத் தட்டியிருக்க, ‘அதுக்கும் மேல’ என ஆவல் வலுத்திருந்தது. ஆனால், ரம்ஜான் அன்று வெளியானதும் முதல் ஷோ பார்த்து வந்த அத்தனை பேரிடமும் முகச்சுளிப்பு!

காரணம், படத்தில் ராஜன் சக்காரியா என்ற கேரக்டரில் மம்முட்டி போட்டிருப்பது ஓவர் ஆட்டம். குடி, புகை, ஆபாச நடவடிக்கை, இரட்டை அர்த்த வசனங்கள்... இப்படியொரு விரசக் குப்பையில் மம்முட்டி இதுவரை நடித்ததே இல்லை என்கிறார்கள். குடிகாரராக அவர் நடித்த படங்களில்கூட ஒரு கண்ணியம் இருக்கும். அது இம்முறை சுத்தமாகப் போச்சு!

அதுவும், ஏட்டு ஒருவரின் மனைவி தனக்கு பிரியாணி பரிமாறும்போது, அந்த ஏட்டின் ‘அந்தத்’ திறமை பற்றி மம்முட்டி பேசுவது ஆபாசத்தின் உச்சம். அனைத்துக்கும் மேலாக தன் சீனியர் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை மம்முட்டி அவரின் முன்புறம் பெல்ட்டைப் பிடித்து இழுத்து, ‘‘உன் மாதவிடாயை நான் நிறுத்திவிடுவேன். அப்புறம் ஒரு வாரத்துக்கு உன்னால் நடக்க முடியாது’’ எனச் சொல்லும் டயலாக்கில் கொதித்து எழுந்துவிட்டன பெண்கள் அமைப்புகள். (அதற்கும் மேலாக, தான் பிடித்த சிகரெட் துண்டை அந்தப் பெண் அதிகாரியின் கையில் திணித்துவிட்டு வருகிறார் மம்முட்டி!)

‘‘மம்முட்டியைப் போன்ற கண்ணியமான நடிகர்கள் இப்படி தரம் தாழ்ந்த வசனங்களைப் பேசலாமா? இதன் அர்த்தம் அவருக்குப் புரியுமே! மாற்றச் சொல்லிக் கேட்டிருக்கலாமே! அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதைத் தவறான உதாரணமாக சமூகத்தில் எடுத்துக்கொள்ள மாட்டார்களா? ‘படைப்புச் சுதந்திரம்’ தேவைதான்... பெண்மையை இழிவுபடுத்த அதைப் பயன்படுத்தக் கூடாது!’’ என்கிறார் கேரள மகளிர்  ஆணையத்தின் தலைவி  கே.சி.ரோஸாகுட்டி.

இதற்கிடையே, ‘‘இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட இந்தப் படத்துக்கு U/A சான்றிதழ் கொடுத்தது தவறு!’’ என வழக்குத் தொடர்ந்
திருக்கிறார் ஆன்டனி ரிச்சர்டு ஜாசன் என்பவர். மம்முட்டிக்கு மட்டுமல்ல... படத்தின் அறிமுக இயக்குநர் நிதின் ரெஞ்சி பணிக்கருக்கும், இந்தப் படத்தைத் தயாரித்த ஆலிஸ் ஜார்ஜுக்கும் கூட கண்டனம் வலுத்திருக்கிறது. ஆனால் நிதின் ரெஞ்சி இதற்காகக் கவலைப்படவில்லை.
‘‘பெண்களுக்கு எதிராக நாட்டில் எவ்வளவோ நிஜப் பிரச்னைகள் நடக்கின்றன.

அதையெல்லாம் விட்டுவிட்டு கற்பனையில் உதித்த ராஜன் சக்காரியா என்ற கேரக்டர் பேசும் வசனங்களுக்காக மகளிர் ஆணையம் ஏன் இவ்வளவு கோபப்பட வேண்டும்? சினிமா மக்களை மாற்றிவிடும் என்றால், ‘காந்தி’ படம் பார்த்தவர்கள் எல்லோரும் உத்தமர்களாக மாறியிருக்க வேண்டுமே? நிஜ வாழ்வில் நடக்காத எதையும் நாங்கள் திரையில் காட்டவில்லை. சொல்லப் போனால், நிஜவாழ்வில் இதைவிட மோசமாக எவ்வளவோ நடக்கிறது.

மம்முட்டி ஒரு நடிகர். இது அவர் நடிக்கும் ஒரு கேரக்டர்; அந்தக் கேரக்டருக்கு அவர் இப்படித்தான் பேச முடியும். இதை மம்முட்டி சொல்வதாக நீங்கள் ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்? நிஜ வாழ்க்கையில் இப்படி பேசக் கூடியவரா அவர்?’’ எனக் கேட்கிறார் நிதின் ரெஞ்சி.
நம் ஊர் வரலட்சுமி சரத்குமார் கூட பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சைகள் குறித்து இதுவரை மம்முட்டி வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. ஆனால் ‘கசபா’ படத்தின் முதல்நாள் வசூல், மலையாளத்தின் அத்தனை பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளையும் முறியடித்துவிட்டது.

மம்முட்டி நடித்த குறிப்பிடத்தக்க வெற்றிப்படங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிடுகிறார்கள். படத்தில் மம்முட்டி இரட்டை அர்த்த வசனங்களைப் பேசும்போது ஆர்ப்பரிக்கிறார்கள் ரசிகர்கள். இதுதான் பலரையும் கவலைப்பட வைத்துள்ளது.
இந்த ராஜன் சக்காரியா கேரக்டர் குறித்து மம்முட்டி தீவிர சிந்தனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்தச் சிந்தனை அடுத்த படத்துக்கு கதை கேட்கும்போது உதவினால் சரி!

‘‘உன் மாதவிடாயை நான் நிறுத்திவிடுவேன். அப்புறம் ஒரு வாரத்துக்கு உன்னால் நடக்க முடியாது’’ என மம்முட்டி சொல்லும் டயலாக்கில் கொதித்து எழுந்துவிட்டன பெண்கள் அமைப்புகள்.

- பிஸ்மி பரிணாமன்