உறவெனும் திரைக்கதை



-ஈரோடு கதிர்

துரோகத்தின் ருசி! மனைவி, அம்மா, இரண்டு மகன்கள் என்றிருந்தது அவரின் குடும்பம். தொழில் மற்றும் நிர்வாக வரவு - செலவுகள் ஒன்றாகவே இருந்தாலும், அவருக்கும் அவரின் அம்மாவுக்கும் தனியே சமையல்; மனைவியும் மகன்களும் தனியே சமையல் என ஒரே கூட்டிற்குள் இரண்டு குடும்பங்களாய் பிரிந்து இருபது வருடங்கள் ஆகின்றன. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்ற கேள்விக்கு ‘‘இருக்கிறோம்’’ என அவர்கள் உரத்த குரலில் அறிவிக்கிறார்கள்.



வெளியில் ஒன்றாகச் செல்ல வேண்டிய தருணங்களில் கணவன் - மனைவியாகச் சென்று வந்தாலும், வீட்டில் தனித்தனி சமையல்தான். யார் யாரோ சமாதானங்கள் சொல்லியும், பஞ்சாயத்து பேசியும்கூட அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. இருபது வருடங்களுக்கு முன்பு மாமனார் வீட்டில் நடந்த ஒரு பிரச்னையில், மனைவி பொய் சொன்ன... அல்லது பொய் சொன்னதாக அவர் நினைத்த கணத்திலிருந்து, அந்த செயலை அவர் ‘துரோகம்’ என தனக்குள் ஆழப் பதித்துக்கொண்டார். காலங்கள் மாறியும் அந்த ‘துரோகம்’ என்ற கொடும் பதம் மட்டும் அவர் நினைப்பிலிருந்து அழியவேயில்லை.

ஒருவகையில் அந்த குடும்பத்தில் இருக்க வேண்டிய மகிழ்ச்சியின் மீது, திறவுகோல் தொலைந்து போன பூட்டாக இந்த நினைப்பு பூட்டிக்கொண்டது. அதன்பின் காலம் அவரை பல தருணங்களில், பல துரோகங்களைச் சந்திக்க நிர்ப்பந்தித்தது. அவரையும் துரோகம் இழைக்கச் செய்தது. செய்த துரோகங்களைப் பாரமாய்ச் சுமக்கவும் பணித்தது. அதையெல்லாம் கள்ள மௌனத்தோடு கடந்து வந்தவர், தன் ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் ‘துரோகம்’ என்ற சொல்லுக்கு, தன் மனைவி ‘அன்று’ அவருக்கு செய்தது மட்டுமே பொருத்தமான உதாரணம் என்பதாக மனதை அடைத்துக் கொண்டார் உறவுகளில் மிகப்பெரிய பலமாய் இருப்பது ஒருவர் மீது மற்றொருவர் கொள்ளும் நம்பிக்கைதான்.



அதேசமயம் உறவுகளில் மிகப்பெரிய துன்பத்தை, வலியைக் கொடுப்பதாக ‘துரோகம்’ இருக்கிறது. ‘துரோகம்’ என்ற சொல்லை எப்போது கேட்டாலும், வார்த்தைகளால் விவரிக்க முடியாததொரு பயம் வந்து சூழ்கிறது. உறவுகளின் ஆதார சுருதியாய் இருக்கும் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் கொடுங்கரம் இந்த துரோகத்திற்கு உண்டு. உடனமர்ந்து தோள் மீது பிரியமாய்ப் போட்டிருக்கும் கை, எதிர்பாராதவொரு கணத்தில் எந்தவொரு சலனமுமில்லாமல் கழுத்தை வளைத்துப் பிடித்து இறுக்குவதற்கு நிகரான வல்லமை கொண்டது துரோகம். ஆனால் எதுவெல்லாம் துரோகம், எதுவெல்லாம் துரோகம் போல் இடமாறு தோற்றப் பிழையாய்க் காட்சியளிப்பவை என்பதை உணர்ந்துதானாக வேண்டும்.

துரோகம் இழைக்கப்படும் வரை அது தமக்கு இழைக்கப்படும் என யாரும் நம்புவதுமில்லை, எதிர்பார்ப்பதுமில்லை. ஆனால், துரோகம் எனத் தீர்மானிக்கப்பட்ட நொடியிலிருந்து, மிகுந்த அச்சத்தோடும், கோபத்தோடும், வன்மத்தோடும், பயத்தோடும் அதில் தொடர்புடையவர்களைக் கையாளத் துவங்கி விடுகிறார்கள். உறவுகளை, நட்புகளை, சக மனிதர்களை, உயர்ந்தெழுப்பப்பட்ட சுவரொன்றின் மூலம் பிரித்துப் போடுகிறது நாடுகளுக்கிடையேயான யுத்தவெறியும் அரசியலும். அப்படியாகப் பிரிக்கப்பட்ட இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியைச் சேர்ந்த நண்பன் தாரிக்கை சந்திக்க சுவர் வழியே கயிற்றில் தொங்கி ஏறிச்செல்கிறான் ஒமர். நண்பனைச் சந்திக்கச் செல்வதில் இருக்கும் ஆர்வத்தில் சுவையூட்டியாய் இருப்பது தாரிக்கின் தங்கை நேடியா. தாரிக், ஒமர், அம்ஜத் மூவரும் பால்ய காலம் தொடங்கி நண்பர்கள்.

ஒமருக்கும், அம்ஜத்துக்கும் நேடியா மீது காதல். ஆனால் நேடியாவிற்கு ஒமர் மேல் விருப்பம். இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து தங்கள் பகுதியை மீட்கும் முகமாய் போராட்டக்குழுவை அமைக்கிறான் தாரிக். அதன் ஒரு திட்டமாக தாரிக் வழிகாட்டுதலில், ஒமர் கார் ஒன்றைக் கடத்தி வர, மூவரும் சென்று அம்ஜத் மூலமாக ஒரு ராணுவ முகாமில் இருக்கும் இஸ்ரேல் வீரனைச் சுட்டுக் கொல்கிறார்கள். கொதித்தெழும் இஸ்ரேல் புலனாய்வுத்துறை தேடுதல் வேட்டை நடத்துகிறது. ஒமர் மட்டும் பிடிபடுகிறான்.

கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விசாரிக்கப்படும் ஒமரிடம் சிறையில் சக கைதியாக அறிமுகமாகிறார் ராமி. அவனிடம் அனுசரணையாகப் பேசுகிறார். எப்படியெல்லாம் விசாரிப்பார்கள், எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என ராமி அறிவுறுத்துகையில், ‘‘நான் ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொள்ளமாட்டேன்’’ என ஒமர் சொல்ல, அதுவே ஒப்புதல் வாக்குமூலமாகிறது. ராமி ஒரு இஸ்ரேல் புலனாய்வு அதிகாரி என்பது அதன்பின்னர் தெரிகிறது.

ஆயுள் முழுக்கச் சிறைத் தண்டனை மற்றும் காதலி நேடியா பாலியல் ரீதியாக சிதைக்கப்படுவாள் என்ற மிரட்டலைப் பணயமாக வைத்து அவன் வெளியில் அனுப்பப்படுகிறான். ராணுவ வீரனைச் சுட்டவன் காட்டிக் கொடுக்கப்பட வேண்டுமென்பது கட்டளை. எதிரிகளிடமிருந்து நட்புகளைக் காப்பதா, எதிரிகளிடம் காட்டிக் கொடுத்து தன்னைக் காப்பதா எனும் பெரும் போராட்டம் ஒமருக்குள் நிகழ்கிறது. ‘எதிரிகளுக்கு துரோகமா, நண்பர்களுக்கு துரோகமா’ எனும் முக்கியப் புள்ளியில் நிறுத்தப்படுகிறான் ஒமர்.

மெல்ல மெல்ல ‘துரோகி’ எனும் பட்டம் சுமத்தப்படுகிறான். அவனுடைய நட்புகள் நம்ப மறுக்கின்றனர். மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்படுகிறான். ஒமரை சக கைதிகள் ‘துரோகி’ என அழைக்கின்றனர். மீண்டும் கடுமையான தண்டனை மற்றும் எச்சரிக்கையோடு வெளியே அனுமதிக்கப்பட்டு, காட்டிக் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான். இந்தக் காலகட்டத்தில் நேடியா அம்ஜத்தோடு நெருங்குவதாக ஒமரின் மனதுக்குப் படுகிறது.

எல்லோரும் சேர்ந்து தன்னை துரோகியாக மாற்ற முற்படும் சூழலை உணர்ந்தாலும், துரோகியாக மாற விரும்பாமல் இருக்க ஒமர் படும் அவஸ்தை பலருக்கும் பொருந்தக் கூடியது. இஸ்ரேல் புலனாய்வுத்துறை தாரிக்கை வேட்டையாடத் துடிக்கும் சூழலில், சிறையிலிருந்து ஒமர் இரண்டாம் முறையாக வெளியேறியிருப்பது துரோகத்தின் அடையாளமென எல்லோராலும் பார்க்கப்படுகிறது. அவன் துரோகியாக சித்தரிக்கப்படுவதாலேயே, நேடியா தன் மூலம் கர்ப்பமாக இருப்பதாக அம்ஜத் சொல்ல... உறைந்து உடைந்து போகிறான் ஒமர்.

ஒரு அசாதாரண சூழலில் அம்ஜத் கையால் தாரிக் கொலையாகிறான். நிழல் போல் துரத்திய புலனாய்வுத்துறை சற்று ஓய்கிறது. கர்ப்பமாக இருக்கும் தன் காதலி நேடியாவுக்கு அம்ஜத்தை திருமணம் செய்து வைக்க அந்தக் குடும்பத்திடம் வேண்டுகிறான் ஒமர். நேடியாவைத் திருமணம் செய்துகொள்வதற்காக அம்ஜத் செய்த துரோகம், சில வருடங்கள் கழித்து முழுமையாகத் தெரியவருகிறது. புலனாய்வு அதிகாரி ராமி இன்னொரு திட்டத்திற்காக, புதிய யுக்தியோடு ஒமரை நாடுகிறார். அதுவரையிலும் தன்னை துரோகியாக சித்தரித்த எல்லாவற்றிற்கும் விடையாக ஒமர் இறுதிக்காட்சியில் நம்ப வைத்து ஒரு ‘துரோகம்’ இழைக்கிறான்.

பாலஸ்தீனத்தில் 2013ல் வெளியான ‘ஒமர்’ எனும் அரபி மொழிப்படம், இரு நாட்டு போர்ச்சூழல் பகுதியில் நடக்கும் ஒரு போராட்டக்குழு மற்றும் ராணுவப் புலனாய்வுத் துறை குறித்துப் பேசினாலும், மிஞ்சி நிற்பது ஒவ்வொரு மனித வாழ்விலும் ‘எது’ துரோகம், ‘எவ்விதம்’ துரோகம் என்பதுதான். மனிதன் ‘நம்பிக்கை’ என்ற ஒன்றைக் கண்டுபிடித்தபோதே, அதைக்கொண்டே தான் வீழ்த்த விரும்புவதை வீழ்த்துவதற்காக ‘துரோகம்’ என்ற ஒன்றையும் உருவாக்கியிருக்க வேண்டும். துரோகம் என்பது நம்பிக்கையின் எதிர் துருவமாய் இருந்தாலும், ஏதோ ஒரு பந்தத்தை இரண்டும் தங்களுக்கிடையே ரகசியமாக வைத்திருக்கின்றன.

பொதுவாக நம் அறிதல் மற்றும் அனுபவங்களை மட்டுமே முன்வைத்து துரோகம் என்பது எத்தகையதென முடிவு செய்து விடுகிறோம். பெரும்பாலும் சற்று அவசரமாய்த் தீர்மானித்து ‘இது துரோகம்’ என அறிவித்து விடுதல் யாருக்கும் எளிதாக வாய்க்கின்றது. நாள்தோறும் நிகழும் கொலைகளில், தற்கொலைகளில், தாக்குதல்களில், அந்தச் செயலுக்கு என்னதான் காரணங்கள் என அலசிப் பார்த்தால், ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த உறவு, நடைமுறைகள், நம்பிக்கை, பதவி, அங்கீகாரம், பொருளாதார உறவு உள்ளிட்ட ஏதோ ஒன்றின் அடிப்படையில், ஏதோ ஒரு புள்ளியில் அது துரோகமாகக் கருதப்பட்டதுதான் காரணமாய் இருக்கும்.

உலகின் ஆகப்பெரும் துரோகங்கள் எனப் பட்டியலிட்டால் பல பேரரசுகளின் வீழ்ச்சி தொடங்கி, வீட்டிற்குள் நிகழ்த்தப்படும் துரோகங்கள் வழியே பயணித்து, ஒருவன் தனக்குத்தானே இழைத்துக் கொள்ளும் துரோகங்கள் வரைக்கும் பேசலாம். பாலென்று நம்பிக் குடிக்கும் பச்சிளங் குழந்தையின் தொண்டையில் கள்ளிப்பால் வைப்பதில் தொடங்கி, நட்பாய் மதுவருந்தும் இடத்தில் நண்பனின் குவளையில் விஷம் கலந்து பரிமாறுவது வரை எல்லா துரோகங்களின் பின்னாலும் நம்பிக்கை படு கோரமாக வீழ்த்தப்பட்டிருக்கும்.

ஏன், எல்லாத் தருணங்களிலும் இந்த துரோகம் மட்டும் ஜீவித்து வாழ்கிறதெனப் பார்த்தால், அதற்கென்று தனித்துவ ருசிகளும், ரகசியத் தனித்தன்மைகளும் இருக்கின்றன. அந்த தனித்தன்மையை அனுபவிக்க விரும்புவோருக்கும், ருசியை உணரத் துடிப்போருக்கும் துரோகம் தன் இருப்பின்  மூலமாகக்  கொடுக்கும் போதை அலாதியானது.

உடனமர்ந்து தோள் மீது பிரியமாய்ப் போட்டிருக்கும் கை, எதிர்பாராதவொரு  கணத்தில் எந்தவொரு சலனமுமில்லாமல் கழுத்தை வளைத்துப் பிடித்து  இறுக்குவதற்கு நிகரான வல்லமை கொண்டது துரோகம்.

மனிதன் ‘நம்பிக்கை’ என்ற ஒன்றைக் கண்டுபிடித்தபோதே, அதைக்கொண்டே தான் வீழ்த்த விரும்புவதை வீழ்த்துவதற்காக ‘துரோகம்’ என்ற ஒன்றையும் உருவாக்கியிருக்க வேண்டும்.

(இடைவேளை...)

ஓவியங்கள்:
 ஞானப்பிரகாசம் ஸ்தபதி