நியூஸ் வே



* இந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் பெறுவதற்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும். இப்போது இந்த விதியைத் திருத்தி, 16 வயது நிறைந்தவர்களுக்கு 100 சி.சி. திறனுக்குக் குறைவான வாகனங்களை ஓட்ட லைசென்ஸ் தரப் போகிறார்கள். இந்த வாகனங்கள் அதிகபட்சம் 80 கி.மீ வேகத்துக்கு மேல் போக முடியாதபடி வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி!



* மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் அனைத்து விளம்பரங்களையும் இனி தனது பார்வைக்குக் கொண்டுவந்த பிறகே வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ‘‘சின்னச் சின்ன வரி விளம்பரங்களைக்கூட பார்க்கும் அனைவரையும் ஈர்க்கும் விதமாக வடிவமைத்து வெளியிட வேண்டும்’’ என்பது மோடி உத்தரவு.

* முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்திருக்கிறது  இந்திய அணி! ஆசிய கண்டத்தைத் தாண்டி இந்திய அணி பெற்றிருக்கும் மாபெரும் வெற்றி இதுதான். இதில், தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து 7 விக்கெட்டையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார். எப்போதும் 8வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கும் அவரை 6வதாக இறங்கச் சொன்ன கோஹ்லியின் முடிவு இதில் முக்கியமானது.



* முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்திருக்கிறது  இந்திய அணி! ஆசிய கண்டத்தைத் தாண்டி இந்திய அணி பெற்றிருக்கும் மாபெரும் வெற்றி இதுதான். இதில், தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடித்து 7 விக்கெட்டையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றிருக்கிறார். எப்போதும் 8வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கும் அவரை 6வதாக இறங்கச் சொன்ன கோஹ்லியின் முடிவு இதில் முக்கியமானது.

* உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒன்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அடைந்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. போலந்தில் நடைபெற்ற ‘20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டி’யில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார் நீரஜ். 86.48 மீட்டர் தூரம் அவர் எறிந்ததும் ஒரு உலக சாதனை! ‘‘பதக்கம் வாங்கும்போது இந்தியக் கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என கொடி தேடினேன்.

இந்திய அணியில் மற்ற வீரர்களோ, பயிற்சியாளர்களோ, அதிகாரிகளோ... யாருமே கொடி கொண்டுவரவில்லை. வழக்கம் போல யாரும் பதக்கம் வாங்கப் போவதில்லை என்ற ‘அதீத நம்பிக்கை’யோடு வந்திருப்பார்கள் போல’’ என சொல்லி சிரிக்கும் நீரஜ் சோப்ராவுக்கு பெரிய வலி, இம்மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறாததுதான். ‘‘எனக்கு வயது இருக்கிறது. அடுத்த ஒலிம்பிக்கில் பாருங்கள்’’ என்கிறார் உறுதியாக!

* வெகுநாளாக பேச்சுவார்த்தையில் இருந்ததுதான். யாஹு நிறுவனத்தை, அமெரிக்காவின் பெரும் டெலிபோன், மொபைல், மற்றும் இன்டர்நெட் நிறுவனமான வெரிசான் கம்யூனிகேஷன் வாங்குவது. கடைசியில் டீல் படிந்து 483 கோடி டாலருக்கு யாஹு கை மாறிவிட்டது. அதாவது சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் விலை. இதை உறுதி செய்திருக்கும் யாஹு நிறுவனத் தலைமை அதிகாரி மாரிஸ்ஸா மேயர், ‘‘யாஹுதான் இன்டர்நெட் என்பதை மக்களுக்கானதாக மாற்றியது.

இந்த இடத்துக்கு வர நாம் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்த விற்பனை நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்!’’ என பாசிட்டிவாகத் தன் ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், மாரிஸ்ஸாவே விரைவில் மாற்றப்பட்டு விடுவார் எனத் தெரிகிறது.

* எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான நிர்மலா கொற்றவை அண்மையில் வெளியிட்டிருக்கும் புத்தகம், ‘சாதிய பிரச்னைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கர் போதாது, மார்க்ஸ் அவசியம் தேவை’. ஆந்திராவின் சமூக செயற்பாட்டாளரான ரங்கநாயகம்மா தெலுங்கில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூலை கொற்றவை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால், சுமார் 400 பக்கங்களில், நல்ல தாளில் அச்சிடப்பட்ட இந்த நூலின் விலை வெறும் 80 ரூபாய்தான். சூடான சாதிய விவாதத்தை மலிவுவிலையில் தந்திருக்கும் இந்தப் புத்தகம் தமிழ்ப் பதிப்பகச் சூழலை அசைத்திருக்கிறது!

* பாரதிய ஜனதாவில் அடுத்த கலகக்காரர், நவ்ஜோத் சிங் சித்து. ராஜ்ய சபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ‘‘என்னை பஞ்சாப்பிலிருந்து விலகியிருக்கச் சொன்னார்கள். எனக்கு பதவியைவிட பஞ்சாப் முக்கியம்’’ என சொல்லியிருக்கிறார். விரைவில் நடைபெற இருக்கும் பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அவர் ஆகப் போவதாகப் பேச்சு. சர்ச்சைக்குரிய இந்த மனிதரை அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி சமாளிக்கப் போகிறாரோ!

* அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் எப்போதும் கூப்பிடக்கூடும் என்பதால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது செல்போனை ஆஃப் செய்வதில்லை. சமீபத்தில் பல மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநில கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு பிரதமரோடு ஒரே டேபிளில் விருந்து சாப்பிட அமர்ந்தார் மம்தா. அவரது செல்போனை ஆஃப் செய்து வைக்குமாறு பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மம்தா ‘முடியாது’ என மறுத்துவிட்டார்.

* கடந்த மாதம் ஆந்திராவில் அண்ணா என்.டி.ஆர் கேன்டீனைத் தொடங்கினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இப்போது, கர்நாடகா மாநிலமும் அண்ணா கேன்டீன் திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது. பெங்களூரூ, மைசூரூ உள்ளிட்ட நான்கு முக்கிய நகரங்களில் முதல் கட்டமாக மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் இந்த கேன்டீனை தொடங்க உள்ளனர். இரவு எட்டு மணி முதல் 9 மணி வரை மட்டும் இவை செயல்படும்!

* நிதிநிலை மோசமான 13 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூபாய் 22925 கோடியைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது அரசு. கடன் கொடுப்பதில் நெருக்கடி, வாராக்கடன்கள் மற்றும் வங்கிகளின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதால் அரசே இந்த நடவடிக்கையில் இறங்குகிறது. இது சாதாரண நிகழ்வுதான். ஆனாலும் வங்கிகள் அறிமுகம் செய்யும் விதவிதமான கடன்கள், முறையற்ற வட்டி முறைகள், பொருளாதாரம் குறித்த அக்கறையின்மைதான் நஷ்டத்துக்கு காரணம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். வங்கிகளுக்கு அரசு கடன் கொடுக்க, வங்கிகள் பணக்காரர்களுக்கு கடன் கொடுக்க, அவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஹாயாக வெளிநாடு பறந்துவிட்டால் இந்தியப் பொருளாதாரம் எப்படி மேம்படும்?