என்கிட்ட வித்தியாசத்தை எதிர்பார்க்காதீங்க!



விஜய்சேதுபதி பளிச்

தூக்கத்திற்கு கெஞ்சுகின்றன கண்கள். பிடிவாதமாக நம்மிடம் உற்சாகமாகிப் பேசுகிறார் விஜய்சேதுபதி. விறுவிறு துறுதுறு வளர்ச்சியில் சேதுபதி தொட்டிருப்பது பெரிய உயரம். ‘ப்ப்பா’ என அவர் சொன்னால் கூட பரவசம் ஆகி கை தட்டுகிறார்கள். தமிழ்ச் சமூகமோ ‘வித்தியாச நடிகன்’ என்று செல்லம் கொஞ்சுகிறது. ஷூட்டிங்கின் நெரிசலில் இருந்து விடுபட்ட அலுவலக நிம்மதியில் இந்த உரையாடல்...



‘‘எனக்கு அடுத்து ‘தர்மதுரை’ காத்திருக்கிறது. சொல்லப் போனால் இந்தப் படத்தை ஒரு டைம் மெஷின் மாதிரி பார்க்கிறேன்னு சொல்லலாம். இதேபோல் ஆறு வருஷங்களுக்கு முந்தின ஒரு ஏப்ரல் மாதம். ‘தென்மேற்கு பருவக்காற்று’ ஷூட்டிங்... நடுங்கிக்கொண்டே இருக்கிறேன். அதை வெளியே தெரியாமல் சாமர்த்தியமா மறைக்கிறேன். ‘சரியா இல்லைன்னா திருப்பி அனுப்பிடுவாங்களா?’, ‘டேக் அதிகம் போகாமல் முடிக்கணுமே’னு நிறைய கவலைகள்.

இப்ப போகும்போது அதே ஹோட்டல்... அதே ரூம் கேட்டு வாங்கிக்கிட்டேன். நான் ஒரு எமோஷனல் இடியட். ஆறு வருஷத்திற்கு முன்னாடி போய் யோசிக்கிற அனுபவத்தை எனக்குத் தந்த இயக்குநர் சீனு ராமசாமிக்கு நன்றி சொல்லணும்! இன்னிக்கு நினைச்சாலும்  ஆச்சர்யமா இருக்கு. எப்படியோ சினிமா வாழ்க்கை தொடங்கியாச்சு. ஷூட்டிங்ல அன்னிக்கு நின்ன அதே இடத்திலே இன்னிக்கு நின்னேன். ஏதோ ஒரு விதமான உணர்வு... சாதிச்சுக் கிழிச்சிட்டேன்னு சொல்லலை. வர்ணிக்க முடியலை. இளையராஜா பி.ஜி.எம் கேட்ட மாதிரி இருக்கு. இதைச் சொல்லும்போதே இப்போ அங்கேதான் நிக்கிறேன்!’’



‘‘உங்க படங்களின் வரிசையில் ‘தர்மதுரை’ எப்படியிருக்கும்?’’
‘‘இதில் நான் ஒரு டாக்டர். அவன் வாழ்க்கையில் ஒரு பத்து வருஷ தொகுப்பு. அனேகமா ஒவ்வொருத்தர் வாழ்விலும் முக்கிய நிகழ்வுகள் எல்லாமே ஒரு 20 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளேதான் நடக்கும். வாழ்க்கையைப் புரட்டிப் போடுற விஷயங்கள் அப்போதான் இருக்கும். ஏதோ ஒரு ஆசையிருக்கும். எதையோ ஒரு தப்பை பண்ணச் சொல்லும் வினோதமான நிகழ்வு நிகழும். மனசு கிடந்து அல்லாடும். பெண்கள், வாழ்க்கை, பணம்னு நிறைய மாற்றங்கள் நடக்கிற காலம். நமக்கு என்ன முடிவு எடுக்கலாம்னு தெரியாது. எதைப் புரிஞ்சுக்கிறது, எப்படிப் புரிஞ்சுக்கறதுனு தெரியாது. அப்படிப்பட்ட காலத்தை எடுத்து வைக்கிற படம் ‘தர்மதுரை’!’’

‘‘எல்லா படத்தையும் வித்தியாசப்படுத்தணும்னு முயற்சிகளில் ஈடுபடுகிறீர்களா?’’
‘‘தயவுசெய்து வித்தியாசமாக எதையும் என்னிடம் எதிர்பார்க்காதீங்க. நான் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதே இல்லை. காசைக் கொடுத்து, டயத்தை செலவு பண்ணி இரண்டு மணி நேரம் படத்தை பார்க்கிறாங்க. அதுக்காக உழைக்கிறது மட்டுமே எனது பொறுப்பு. என் படம் சுவாரஸ்யமா இருக்கணும் என்பது மட்டும்தான் என் கவலை. மனசுக்குப் பிடித்ததை பண்றேன். ஆடியன்ஸோட இணைவதுதான் எனக்கு முக்கியம். எங்க இயக்குநருக்கு ஈரம் இல்லாத கதைகளைத் தொடவே முடியாது.

ஈரம் இல்லாமல், பெண்களைப் போற்றாமல் இருந்தால் அவரால் படம் எடுக்கவே முடியாது. பெண்களை அப்படியே உயர்த்திப் பிடிப்பார். அந்த மனசை எனக்குப் பிடிக்கும். இதில் வருகிற அத்தனை பெண்களும் இவனை நேசிக்கிறவர்களாகவே இருப்பாங்க. உங்கள் வாழ்க்கையில் வந்த அத்தனை ெபண்களும் உங்களை நம்புறாங்கன்னா அதைவிட பெரிய ஹீரோயிசம் இல்லையே! அப்படி நம்பிக்கைக்கு பாத்திரமாவது எவ்வளவு பெரிய விஷயம். காதலியோ, மனைவியோ, அம்மாவோ, மகளோ... ஒரு பெண் இல்லாத வாழ்வை நம்மால நினைத்துப் பார்க்க முடியுமா? அப்படி முன்னும் பின்னுமா இந்தப் படத்தில் கதைசொல்லல் ஒரு சங்கிலித் தொடரி மாதிரி அழகா இருக்கும். நிறைய ட்விஸ்ட் உண்டு. ஆனால், அதெல்லாம் அர்த்தத்தோடு நிகழும். ‘இதோ வைக்கிறேன் பாரு ட்விஸ்ட்’னு இருக்காது. எங்க இயக்குநரோட ஆகச் சிறந்த கமர்ஷியல் படம் இதுதான்!’’

‘‘சீனுவிற்காக அடுத்தடுத்து படம் பண்றீங்க...’’
‘‘எங்க ரெண்டு பேருக்கும் பேரன்புப் பரிமாற்றம் ஒண்ணு இருக்கு. அவர் என்னை நிறைய இடங்களில் ரசிச்சார். ஆசீர்வதிச்சார். புகழ்ந்தார். உச்சி முகர்ந்தார். அதற்கான எல்லா இடங்களும் இந்தப் படத்தில் இருக்கு. அவர் என்னை தன் பிள்ளை மாதிரிதான் பார்ப்பார். அதுகூட இந்தப் படத்தில் தெரியும். வாழ்க்கையில் அவர் எனக்கு பெரிய நம்பிக்கை கொடுத்ததை நான் முக்கியமா நினைக்கிறேன்!’’

‘‘தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கேனு ஜாக்பாட் போலிருக்கே..!’’
‘‘தமன்னா இந்த இடத்தில் இருக்கிறதெல்லாம் பெரிய சின்ஸியாரிட்டி. அவங்க சினிமாவை அவ்வளவு மதிக்கிறாங்க. என்னை விடவும் அவங்க நடிப்பில் சீனியர். ஒரு துளி ஈகோவைத் தேடினாலும் அவங்ககிட்ட பார்க்க முடியாது. சினிமாவை நேசித்தால் மட்டுமே இது சாத்தியம். சிருஷ்டி டாங்கே ஒரு க்யூட்டான குழந்தை. நடிச்சிட்டு திரும்பிப் பார்த்தால்கூட குழந்தை மாதிரியே முகத்தை வச்சுக்குவாங்க. ஐஸ்வர்யாவை சொல்லவே வேண்டாம்.

ஒரு பறவை பறக்கிற மாதிரி இயல்பா நடிக்கிறாங்க. ஏற்கனவே அவங்க மூணு படங்களில் என்கூட நடிச்சிட்டாங்க. வேற ஆளைக் கொண்டு வருவோம்னு நினைச்சோம். யோசிச்சுப் பார்த்தாலும், தேடிப் பார்த்தாலும், திரும்பத் திரும்ப அவங்கதான் அந்த கேரக்டருக்குள் வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்காங்க. ‘சரி, இருந்துட்டுப் போகட்டும்’னு விட்டுட்டோம். இப்ப பார்த்தால் அது அவ்வளவு நியாயம்னு தோணுது. ‘தர்மதுரை’ பார்க்கும்போது மக்களுக்கு இந்த வாழ்க்கை மீது ஒரு பிடித்தம் வரும். சாதாரண மக்கள் தங்களின் தினசரி வாழ்க்கையின் மீது வச்சிருக்கிற நம்பிக்கையை உடைக்கக் கூடாதுனு எங்க இயக்குநர் நினைக்கிறார். அச்சுறுத்தல் கூடாதுங்கிறது அவரது எண்ணம். நிறைய நல்ல விஷயங்களைப் படம் சொல்லுது. இவனை உங்களுக்குப் பிடிக்கும் பிரதர்!’’

‘‘உங்க அடுத்த கட்டம்..?’’
‘‘ஒரு படம் பண்றேன். அதுல சாதாரண மனிதனோட பாடு, கஷ்டம், இன்ப துன்பம் வருதானு பார்க்கிறேன். இப்ப இமேஜ் பார்க்கிறதே இல்லை. ஒரு சாதாரண மனுஷனுக்கு இருக்கிற சட்டதிட்டங்கள், நினைப்பு மட்டும்தான் என்கிட்ட இருக்கு. இமேஜ் பார்த்துட்டா, அதற்கு தீனி போட்டு, அதை வரலாறு மாதிரி மாற்ற போராட ஆரம்பிக்கணும். யப்பா, அதெல்லாம் பெரிய வேலை. நான் ரசனையை மட்டுமே எடுத்துக்கறேன். ஜெயிச்சே ஆகணும், தோத்துடவே கூடாதுனு சதா நினைச்சுக்கிட்டே இருக்கிறதில்லை. மாறி, மாறி மக்களுக்கு உறுத்தாம படத்தை பண்ணிக்கிட்டே போவோம். மத்தபடி எதையும் கண்டுக்கிறதே கிடையாது. போற வரைக்கும் தேரு ஓடிக்கிட்டு இருக்கட்டும்...’’

‘‘கடந்த பத்து வருஷத்தில் தமிழில் நீங்கள் வித்தியாசமான நடிகர்னு...’’
‘‘அதெல்லாம் சும்மா. ஒரு மொக்கை சீனைக் கொடுத்து நடிக்கச் சொல்லுங்க பார்ப்போம். எனக்கு பெரிய நடிகன்னு தனி மயக்கம் இல்லை. சீன் எழுதிக் கொடுத்தவங்க, கேமராக்காரங்கன்னு பல பேரோட உழைப்பு எங்க மேலே கொட்டிக் கிடக்கு. நாங்க சும்மா பீத்திக்கிறோம். எங்களைவிட சிரமம் எடுத்துச் செய்கிறவங்க சினிமாவில் எவ்வளவோ பேர் இருக்காங்க. சம்பள உயர்வு கூட இல்லாமல் அதை அவங்க செய்றாங்க. கதை நடிகனைச் சுத்தியே போறதால் எங்களுக்கு ஃப்ரீ பப்ளிசிட்டி.

இங்கே இயக்குநர்களாக நுணுக்கமான திறமைசாலிகள் இருக்காங்க. எங்களோடது வெறும் பங்களிப்புதான். ‘டைட்டானிக்’கா இருந்தாலும், கதை சொல்லி, அதை வடிவமைச்சாதான் நடக்கும். பேக்கிரவுண்ட் மியூசிக் இல்லாமல் ஹீரோவை சும்மா வெறுமனே நடந்து வந்து மாஸ் காட்டச் சொல்லுங்க பார்ப்போம்... எடுபடுமா? சிறந்த நடிகர் எல்லாம் நல்ல சீனைப் பிடிச்சு வர்றாங்க. அதைக் கொண்டு வர்றவங்களுக்குத்தான் கிரெடிட்!’’

‘‘ஓய்வில்லாம நிறைய நடிக்கிறீங்களே...’’
‘‘என்னங்க பண்றது... ‘நல்ல கதையிருக்கு, பண்ணலாம்’னு சொல்றாங்க. எனக்குத் தெரியுது. எல்லாம் திட்டம் போட்டா வாழ முடியும்? ரொம்பவெல்லாம் இங்கே பிளான் பண்ண முடியாது!’’

- நா.கதிர்வேலன்