பணக்காரர்களுக்கு கல்வி... இல்லாதவர்களுக்கு தொழில்!



தரம் பிரிக்கிறதா புதிய கல்விக் கொள்கை?

நாடெங்கும் ஒரே பாடத் திட்டம் என்ற லட்சியத்தையும், கல்வியை சர்வதேச வணிகமயமாக்கும் கொள்கையையும் நோக்கி ‘பீடு நடை’ போட்டுக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. மத்திய அரசு தயாரித்துள்ள புதிய கல்விக்கொள்கை, இந்த உண்மையை உணர்த்துகிறது. ‘‘பன்னாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இந்தியாவைத் திறந்து விடுவது, இந்தியக் கல்வியை சமஸ்கிருதமாகவும், ஆங்கிலமாகவும் உருமாற்றுவது, மாநிலங்களின் தனித்தன்மையையும் மொழிகளையும் ஒழிப்பது, அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மாணவர்களை உயர்கல்வியை விட்டு விரட்டி தொழிற்கல்வியின் பக்கம் தள்ளுவது என இந்தக் கல்விக்கொள்கையில் விஷம் தூவப்பட்டிருக்கிறது’’ என்று குமுறுகிறார்கள் கல்வியாளர்கள்.



இந்தியா  சுதந்திரமடைந்த பிறகு, 1968ல் இந்திரா பிரதமராக இருந்த காலத்தில்  கோத்தாரி கமிஷன் பரிந்துரைகளின்படி முதன்முதலில் கல்விக்கொள்கை வகுக்கப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சி, அடித்தட்டு மக்களின் மேம்பாடு சார்ந்த பல்வேறு தனித்துவமான அம்சங்கள் அதில் இடம் பெற்றன. அதன்பிறகு  1986ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் ஒரு கல்விக்கொள்கை  வகுக்கப்பட்டது. அக்காலக் கட்டத்தில், உலக வங்கியிடம் இந்தியா கடன் பெற்று  வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தது. அதன் தாக்கம்  கல்விக்கொள்கையில் எதிரொலித்தது. 1992-93ல் பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்த நேரத்தில் மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் ஒரு கல்விக்கொள்கை  உருவாக்கப்பட்டது.

வெளிப்படையாக தனியார்மயத்துக்கு தூபம் போடுவதாகவே அது அமைந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள கல்விக்கொள்கையும் உலக  வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துகளையே பிரதி எடுத்திருக்கிறது. 2015 ஜனவரியில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியது மத்திய அரசு. ‘நாடு முழுவதும் தேசிய, மாநில, மாவட்ட, வட்டார, கிராம வாரியாக 2.75 லட்சம் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு கருத்துகள் சேகரிக்கப்படும்.

அதன் அடிப்படையில் இந்தக் கொள்கை உருவாக்கப்படும்’ என்றது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். இதற்காக முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. டெல்லி முன்னாள் தலைமைச் செயலாளர் சைலஜா சந்திரா, குஜராத் முன்னாள் தலைமைச் செயலாளர் சுதிர் மங்கட், டெல்லி அரசின் முன்னாள் உள்துறை செயலாளர் சேவாராம் சர்மா, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஜே.எஸ்.ராஜ்புத் ஆகியோர் உறுப்பினர்கள்.

இதில் நான்கு பேர் நிர்வாகத் துறைகளில் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். ராஜ்புத் மட்டுமே கல்வியாளர். அவரும் ஆர்.எஸ்.எஸ் தத்துவங்களில் பிடிப்பு கொண்டவர் என்பது வேறு கதை. இந்தக்குழு 2.75 லட்சம் கூட்டங்களை எங்கேயெல்லாம் நடத்தியது? யாரெல்லாம் பங்கேற்றார்கள்? யாரெல்லாம் கருத்துத் தெரிவித்தார்கள் என்ற கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. கடந்த மே 26ம் தேதி 230 பக்க வரைவு அறிக்கையை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் அளித்தது இக்கமிட்டி.

கடந்த 30ம் தேதி, ‘Some Input for draft NEP-2016’ என்ற பெயரில் 43 பக்க அறிக்கையை தனது இணையதளத்தில் வெளியிட்டு, ‘ஜூலை 31ம் தேதிக்குள் மக்கள் கருத்து தெரிவிக்கலாம்’ என்று அறிவித்துள்ளது மனிதவள மேம்பாட்டுத்துறை. இந்த அவகாசம் போதாது என்பது பல கல்வியாளர்களின் கவலை! ‘‘இந்த கல்விக் கொள்கையின் இறுதி வரைவை உருவாக்க அனுபவம்மிக்க கல்வியாளர் தலைமையில் கல்விக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும். அக்குழுவில் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த கல்வியாளர்களும், பெண் கல்வியாளர் ஒருவரும் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்துத் தரப்பினரின் பிரச்னைகளையும் உள்ளடக்கி நேர்மையான கொள்கை வரைவைத் தயாரிக்க முடியும்’’ என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

‘இந்தக் கல்விக்கொள்கை, இட  ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டிவிடும்’ என்ற அச்சத்தை கல்வியாளர்கள்  எழுப்புகிறார்கள். சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கான இட  ஒதுக்கீடு முறையை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கானதாக மாற்றும்  ஷரத்துகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும் சொல்கிறார்கள். சமஸ்கிருத  மொழிக்குத் தரும் முக்கியத்துவத்தில் துளியளவு கூட பிற மொழிகளுக்குத்  தரப்படவில்லை.

5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை வழங்கலாம் என்று  இரக்கப்பட்டு வாய்ப்பு தரும் இக்கல்விக்கொள்கை, கல்வியை உலகளாவிய அம்சமாக  மாற்றுவதால் ‘ஆங்கிலத்தை கட்டாயம் இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்’  என்கிறது. இதன்மூலம் உயர்கல்வி முழுமையும் ஆங்கிலமயமாக்கப்படும் என்பது  தெளிவாகிறது. ஒரு மாணவன் சரியாகப் படிப்பதும், படிக்காமல் போவதும், பள்ளிச்சூழல், குடும்பச்சூழல், சமூகச்சூழல் சார்ந்தது. அவற்றைச் சரி செய்து அம்மாணவனை மேம்படுத்துவதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க முடியும். அதைச் செய்யத்தான் அரசு.

ஆனால், ‘6 முதல் 8ம் வகுப்பு வரை சரியாகப் படிக்காத மாணவனுக்கு சில வாய்ப்புகளை வழங்கியும் அவன் தேறாதவன் என்று ஆகிவிட்டால் அவனை தொழிற்கல்விக்கு அனுப்பு’ என்று சொல்ல ஒரு கல்விக்கொள்கை எதற்காக...? ஒரு அரசு எதற்காக? 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவனை 7 மணி நேரம் வகுப்பறையில் அடைத்து வைப்பது போதாதென்று, மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்காதா? கற்றல் மீது வெறுப்பு வராதா? எது கல்வி என்ற அடிப்படையைக் கூட ஆராயாமல் எந்திரத்தனமாக வகுக்கப்பட்ட ஒரு கல்விக்கொள்கை தேசத்தின் தலையெழுத்தையே மாற்றி விடாதா?

‘உலக வர்த்தக ஒப்பந்தம் கல்வியை வணிகப் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறது. பணம் இருப்பவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். இல்லாதவர்களுக்கு கல்விக்கூடங்கள் ஏதேனும் தொழிலைக் கற்றுக்கொடுக்கும். கல்வி நிறுவனங்களை அரசோ, நீதிமன்றங்களோ கட்டுப்படுத்தாது. கல்வி நிறுவனத்தின் ‘பிராஸ்பெக்டஸ்கள்’தான் சட்டப் புத்தகங்கள். உணவு உற்பத்தியை சந்தையாக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு காவு கொடுத்தது போல, மருத்துவத்தை கார்ப்பரேட் மயமாக்கி ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக்கியதைப் போல கல்வியை வணிகமாக்கி இந்தியாவின் சந்ததிகளைத்  தெருவுக்குக்  கொண்டு வந்துவிடும் புதிய கல்விக்கொள்கை’ என்ற கல்வியாளர்களின் குமுறலை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறது அரசு? 

‘சரியாகப் படிக்காதவருக்கு சில வாய்ப்புகளை வழங்கியும் தேறாவிட்டால் தொழிற்கல்விக்கு அனுப்பு’ என்று சொல்ல ஒரு கல்விக்கொள்கை எதற்காக...?

விபரீதக் கொள்கை

* மாநில கல்வித்துறைக்கு மாநில அரசுகள் அதிகாரிகளை நியமிக்க முடியாது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தேர்வு செய்யும்
யுபிஎஸ்சி, ஐ.இ.எஸ் (இந்தியன் எஜுகேஷன் சர்வீஸ்) என்ற புதிய தேர்வை நடத்தும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மாநில கல்வித்துறை அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். 

* கல்வி நிறுவனம் சார்ந்த வழக்குகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்ல முடியாது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டு நடுவர் மன்றங்கள் அமைக்கப்படும். அந்த மன்றங்களே விசாரிக்கும். ‘8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்’ என்ற விதி மாற்றப்படும். இனி 5ம் வகுப்பு வரைதான் ஆல் பாஸ். அதுவும், சரியாக கிரேடு வாங்காத மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
 
6 முதல் 8ம் வகுப்பு வரை பெயிலாகும் மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும். மறு ஆண்டும் தேர்ச்சி அடையாதபட்சத்தில், தொழில் படிப்புகளில் அவர்களைச் சேர்க்க வேண்டும்.

* மாநிலங்கள் 5ம் வகுப்பு வரை தங்கள் மாநில மொழியை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம். அதேநேரம், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

* ‘இந்தியாவின் பண்பாட்டுக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தனித்துவமான பங்களிப்பை வழங்குவதோடு, இந்திய மொழிகளின் மேம்பாட்டுக்கு உதவும் சமஸ்கிருதத்தை’ அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிற்றுவிக்க வேண்டும்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்