கைவிடப்பட்ட தேடல்!



காணாமல் போன மலேசிய விமானத்தை நினைவிருக்கிறதா? கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி கிளம்பிய MH 370 விமானம், பாதி வழியில் மாயமாய் மறைந்தது. 239 பேருடன் அந்த விமானம் கடலில் விழுந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. இந்தியப் பெருங்கடலில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கி.மீ பரப்பில் தேடுதல் நடைபெற்றது. மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தும் இந்தத் தேடல், விமானத்துறை வரலாற்றில் ‘மிக காஸ்ட்லியான தேடுதல்’ எனப்படுகிறது.



இதுவரை சுமார் 905 கோடி ரூபாய் செலவழித்து விட்டார்கள். ‘‘இனிமேலும் இந்தத் தேடுதலை தொடரப் போவதில்லை’’ என அறிவித்திருக்கின்றன மூன்று அரசுகளும். ‘‘எந்தத் தடயமும் கிடைக்காத ஏமாற்றத்தோடு எத்தனை நாள் தொடர்வது? இது கசப்பான முடிவுதான். ஆனால் வேறு வழியில்லை’’ என்கிறார்கள் தேடுதல் குழுவினர். இப்போது தேடுதல் நடக்கும் கடலில் ஒரு சிறிய பகுதி மிச்சம் இருக்கிறது. அங்கும் பார்த்ததும் தேடுதல் முடிவுக்கு வரும். இந்த விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் இணைந்து ‘வாய்ஸ் 370’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு இப்போது போராட்டத்தில் குதித்திருக்கிறது.

- ரெமோ