கபாலி விமர்சனம்



25 ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலையாகி தமிழர் பிரச்னைகளையும் சொந்தத்தையும் தேடிப் போகிற மலேசிய தமிழ் தாதாவின் கதையே ‘கபாலி’. மலேசிய நாட்டில் பஞ்சம் பிழைக்கப் போய் அங்கே இனத் துவேஷங்களில் அடிபட்டு,மிதிபட்டு தங்களின் அடையாளத்தை இழந்து நிற்கும் மக்களின் கரிய சரித்திரத்தை இவ்வளவு வீரியமாகச் சொல்ல முனைந்த வகையில் பா.இரஞ்சித்திற்கு வணக்கங்கள். ரஜினிகாந்த் சிறையில் இருந்த 25 வருஷத்தில் போதைப் பொருட்களும், குழுக்களின் அட்டகாசமும் பெருகித் திளைக்கிறது. சிறையிலிருந்து வீட்டிற்குக் கூடப் போகாமல் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, டான் ஆக மறுபடியும் உருமாறுகிறார்.



கோட், சூட், கூலிங் கிளாஸ், கையடக்கத் துப்பாக்கி கொண்டு எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து தன் குடும்பத்தையும் கண்டெடுக்கும் ரஜினி ஸ்பெஷல் ‘கபாலி’. ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமேயான படமாகிவிடக் கூடாது என்பதற்காக, எல்லா தமிழர் சரித்திரங்களையும் பின்னணியில் வைத்திருக்கிறார் இரஞ்சித். வழக்கமான ரஜினி இல்லை இது. கதையின் போக்கைப் புரிந்து, உணர்ந்து, வாழ்ந்து காட்டுகிறார். எப்போதோ செய்திருக்க வேண்டிய மாற்றத்தை இப்போதாவது உணர்ந்திருக்கும் ரஜினிக்கு வாழ்த்துகள். தாதா தோற்றத்திற்கு ரஜினி அவ்வளவு கச்சிதம். அதிரடியான பன்ச் எதுவும் இல்லை... ஆனால், சம்பளத்தில் சமம் கோரி ரஜினி வாதிடுவது, வெற்றி பெறுவதெல்லாம் கூர் தீட்டிய வசனங்கள்.

‘‘உன்னோட கருணை கூண்டுப் புறாவுக்கு மரணத்தை விடப் பெரிய தண்டனைடா’’, ‘‘நல்லா டிரஸ் பண்றதும் ஒரு எதிர்ப்புணர்வுதான்!’’, ‘‘என் வளர்ச்சியை உன்னால பொறுத்துக்க முடியலைன்னா சாவுடா!’’ எனப் படம் முழுக்க வார்த்தைகள் தீப்பிடிக்கின்றன. ஒரு தாதாவாக இருக்க நேர்வதும், அதற்கான நெருக்கடிகளையும் மிகை இல்லாத வகையில் சொல்லிச் செல்வது அழகு. ரசிகனை திருப்திப்படுத்த மட்டுமே எதையும் செய்யாமல், சமூகத்தின் பக்கமும் பார்வையைத் திருப்பியிருப்பது ஆறுதல்.

ஆனால் படத்தின் மொத்த முடிவையும், அனேகமாக ரஜினியே சுமப்பது திணறடிக்கிறது. வித்தியாசமான படங்களில் அத்தனை பேரும் பார்த்து வியந்த நடிகை ராதிகா ஆப்தே. ரஜினியும், அவரும் சேரும் ஒரே ஒரு காட்சியில் நடிப்பைக் காட்டிவிட்டு ஓய்வு எடுத்துவிடுகிறார். ‘மெட்ராஸ்’ படத்தின் முக்கால்வாசி நடிகர்கள் இருந்தும் அவர்களின் பங்குதான் என்ன? தன்ஷிகாவும், அப்பா ரஜினியும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் எப்படி இருந்திருக்க வேண்டும்! எத்தனை வருஷப் பிரிவு... கண்களில், செயல்களில் ஒண்ணும் இல்லையே தன்ஷிகா!

உயரத்தில் நின்றுகொண்டு துப்பாக்கியால் சுட்டால் மட்டும் போதுமா? நாசர் வந்த வேகத்தில் பின் வாங்குகிறார். கிஷோர் கழுத்தெல்லாம் தங்கச் சங்கிலி போட்டுக் கொண்டு வார்த்தைகளையும் துப்பாக்கியையும் சுழற்றுகிறார். அதிகம் பேசாமல் அதிரடி காட்டும் வின்ஸ்டன் நன்று! உணர்வுபூர்வமாக நம்மை எடுத்துச் செல்லாததே படத்தின் ஆதார பலவீனம். ரஜினியை கவனித்து கவனித்து மோல்டு செய்திருப்பதிலேயே இயக்குநர் கவனம் செலுத்தியிருப்பார் போல! சந்தோஷ் நாராயணனின் அதிரடி பின்னணியும், முரளியின் அசரடிக்கும் ஒளிப்பதிவும் டான் சினிமா கோட்டிங் கொடுக்கின்றன. ‘நெருப்புடா...’ ஆல் டைம் மாஸ். இன்னும் கதையமைப்பில், பிற நடிகர்களின் பாத்திரப் படைப்பில் கவனம் செலுத்தியிருந்தால், ‘கபாலி’க்கு உரக்கத் தெரிவித்திருக்கலாம் ‘மகிழ்ச்சி’!

- குங்குமம் விமர்சனக் குழு