சுவை



மாமி... மாமி...’’ -குரல் கொடுத்துக்கொண்டே வீங்கிய கன்னத்துடன் வந்தாள் எதிர்வீட்டு சுசிலா. பொன்னம்மா அவளைப் பார்த்து  திடுக்கிட்டாள். ‘‘என்ன ஆச்சுடி சுசி?’’

‘‘என் புருஷன் இன்னைக்கும் சண்டை போட்டு என்னை அடிச்சிட்டான் மாமி. அவன் கட்டைல போக...’’ - திட்டியபடியே உட்கார்ந்தாள். ‘‘நீ  கொடுத்து வச்சவடி. எனக்கும் ஒண்ணு வாய்ச்சிருக்கே...’’ - அங்கலாய்த்தாள் பொன்னம்மா. ‘‘என்ன மாமி இப்படி சொல்றீங்க. மாமா  உங்களை அடிக்கலைன்னா நல்லவர்தானே..?’’ - குழம்பியபடி கேட்டாள் சுசிலா. ‘‘ஆமான்டி, ரொம்ப நல்லவர். எதையுமே கண்டுக்க  மாட்டார். என்ன சொன்னாலும் தலையாட்டுவார். எதுக்கும் கோபப்பட்டதில்லை.

இதுநாள் வரை என்னை அடிச்சதில்லை. நேத்துகூட சாம்பார்ல உப்பு போட மறந்துட்டேன். ஏதாவது பேசணுமே... ‘உப்பு இல்லைனு  சொல்லக் கூடாதா’னு கேட்டா ‘ஒரு நாள் உப்பில்லாமல் சாப்பிட்டால் செத்தா போயிடுவேன்’ங்கறார். குடும்பம்னா இனிப்பு, காரம்,  கசப்புனு எல்லா சுவையும் இருக்கணும். நான் இனிப்பு மட்டுமே சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். வாழ்க்கையே போரடிக்குதுடி!’’ என்று கம்மிய  குரலில் சொன்ன பொன்னம்மா மாமியை குழப்பத்தோடு பார்த்தபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சென்றாள் சுசீலா. அவளை  சமாதானப்படுத்தி அனுப்பிய திருப்தியோடு, தன் வலப்பக்க கன்னத்தில் இருந்த வீக்கத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டாள் பொன்னம்மா!            
                                                         

-சி.ஸ்ரீரங்கம்