நியூஸ் வே



* அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்புக்கு இருக்கும் இந்தியத் தொடர்பு, ‘டிரம்ப் தாஜ்மகால்’ என்ற பெயரில்  அவர் அட்லாண்டிக் சிட்டியில் நடத்தி வரும் சூதாட்ட விடுதி. கேளிக்கை ரிசார்ட்டான இதை அடுத்த மாதம் டிரம்ப் மூடுவதால், 3000 பேர்  வேலை இழக்கிறார்கள்.

* அடுத்த பிரதமர் கனவு காணுகிறார், பீகாரில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிதிஷ்குமார். மெகா கூட்டணியை தேசம் முழுக்க உருவாக்க  வேண்டும் என்றால், அடிக்கடி டெல்லி போக வேண்டுமே! பீகார் அரசின் பழைய விமானம் பாட்னாவிலிருந்து டெல்லி போக இரண்டரை  மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. சாதாரண பயணிகள் விமானங்களே ஒன்றரை மணி நேரத்தில் போய்விடுகின்றன. முதல் வேலையாக புதிய  விமானம் வாங்க முடிவெடுத்திருக்கிறார் நிதிஷ் குமார்.

* இப்படி ஒரு மாமனார் அமைய ரவீந்திர ஜடேஜா கொடுத்து வைத்திருக்க வேண்டும்! குஜராத்தின் கிர் காடுகளில் சிங்கங்களை சுற்றுலாப்  பயணிகள் சென்று பார்க்கலாம். ஆனால் வாகனங்களிலிருந்து இறங்கி சிங்கங்களின் அருகே செல்ல அனுமதி இல்லை. ஜடேஜா தன்  மனைவியோடு போய் சிங்கங்களின் பின்னணியில் செல்ஃபி எடுத்தது சர்ச்சையானது. ஜடேஜா கிரிக்கெட் ஆட வெஸ்ட் இண்டீஸ்  சென்றுவிட, ‘அவர் தெரியாமல் செய்துவிட்டார்’ என சமாளித்த மாமனார், ஜடேஜாவுக்கு விதித்த 20 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும்  அமைதியாகக் கட்டிவிட்டார்.

* முதல்வர் பதவியில் இருப்பவர் தனக்கு என இருக்கும் அலுவலகத்துக்கு வர வேண்டும் அல்லவா? தன் வீட்டோடு இருக்கும்  அலுவலகத்திலேயே சந்திப்புகள் மற்றும் கூட்டங்களை நிகழ்த்திக்கொள்ளும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மூன்று மாதங்களுக்கு  ஒருமுறைதான் தலைமைச் செயலகத்துக்கே வருகிறார். அதனால் ‘ஆப்சென்ட் ஆகிற சி.எம்’ என அவரை கிண்டல் செய்கிறார்கள் காங்கிரஸ்  கட்சியினர்.

* கங்கை தீர்த்தத்தை முக்கிய அஞ்சலகங்களில் விற்கும் முடிவை எடுத்ததால், இந்திய அஞ்சல் துறை கடும் கண்டனங்களை சந்தித்தது.  ஆனாலும் சளைக்காமல் அடுத்த கட்டமாக கிருஷ்ணா தீர்த்தமும் விற்கப்போகிறது அஞ்சல் துறை. கிருஷ்ணா புஷ்கரலு நடைபெறும்  சமயத்தில் சுமார் மூன்றரை லட்சம் பாட்டில்களை ஒரு பாட்டில் 30 ரூபாய் விலையில் விற்க இருக்கிறது அஞ்சல் துறை.

* ஒலிம்பிக் பதக்க வாய்ப்பை மீண்டும் ஒருமுறை தவறவிட்ட சானியா மிர்சாவுக்கு அடுத்த அடியும் கிடைத்திருக்கிறது. இரட்டையர்  ஆட்டங்களில் அவரோடு இணைந்து ஆடிய மார்ட்டினா ஹிங்கிஸ், ‘இனி சானியாவோடு ஆடப் போவதில்லை’ என அறிவித்திருக்கிறார்.  பெண்கள் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 ஜோடியான இவர்களின் பிரிவு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தனக்குப்  பொருத்தமான ஜோடியை சானியா இனிமேல்தான் தேட வேண்டும்.

* மணிப்பூரில் ராணுவத்தினருக்கு எல்லையில்லா சுதந்திரம் தந்த ராணுவச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 16 ஆண்டுகளாக  உண்ணாவிரதம் இருந்த இரோம் ஷர்மிளா, சமீபத்தில் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டார். அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்வதாக  அறிவித்தார், பத்திரிகை ஆசிரியராக இருக்கும் அரம்பம் ரோபிதா என்ற பெண். ஆனால் பெண்கள் அமைப்புகள் அவருக்கு ஆதரவு  தரவில்லை.

தலைநகர் இம்பாலில் அவருக்கு உதவ யாரும் முன்வராததால், நான்கைந்து இடங்களுக்குத் தேடிப் போய், எங்கும் ஆதரவு கிடைக்காமல்  உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக்கொண்டு திரும்பிவிட்டார். ‘‘இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான ரோபிதா உண்ணாவிரதம்  இருப்பதில் அவரின் கணவரே தயக்கம் காட்டுகிறார். இரோம் ஷர்மிளா போல எல்லோராலும் ஆகிவிட முடியாது. இது ரொம்ப கஷ்டமான  விஷயம். அதனால்தான் நாங்கள் ஆதரிக்கவில்லை’’ என காரணம் சொல்கின்றன பெண்கள் அமைப்புகள்.