ஜோக்கர் விமர்சனம்



தமிழில் ஆச்சரியமூட்டும், அபூர்வமான அரசியல் சினிமாவே ‘ஜோக்கர்’. கழிப்பறை தொடங்கி, கருணைக்கொலை வரை புதிய தளத்தில்  விரியும் திரைக்கதை, நம்மைச் சுற்றி நடக்கும் அத்தனை அரசியல்  பித்தலாட்டங்களையும் போகிற போக்கில் போட்டுத் தாக்கியதற்காகவே  ராஜுமுருகனுக்கு கைகுலுக்கல்கள்!

தர்மபுரி பக்கம் பாப்பிரெட்டிபட்டி என்ற ஊரிலிருந்து தன்னைத்தானே இந்தியாவின் ஜனாதிபதி என பாவித்துக்கொண்டு கிளம்புகிறான்  மன்னர் மன்னன். தொடர்ந்து அவன் நடத்தும் அதிகார எதிர்ப்பு ராவடி போராட்டங்கள்தான் முதல் பாகத்தின் பெரும்பகுதி. இவன் யார், ஏன்  இப்படி இருக்கிறான் என விரியும் பின் நினைவில் இருக்கிறது தூய்மை இந்தியாவின் லட்சணம்!

‘டாய்லெட் இருக்கிற வீட்டுலதான் வாக்கப்படுவேன்’ என்பது காதலி மல்லிகாவின் கண்டிஷன். இலவச கழிப்பறைத் திட்டத்தில் டாய்லெட்  கட்ட முயற்சிக்கிறான் மன்னன். அந்தத் திட்டத்தின் ஊழல்கள், அதனால் விளையும் விபரீதங்களில் சிக்கி மன்னன் - மல்லிகா என்ற எளிய  மனிதர்களின் வாழ்க்கை என்னவானது எனச் செல்கிறது கதை.

நாம் கொண்டாட வேண்டிய நல்சினிமா. உலகமயமாக்கலுக்குப் பிறகு நமது கிராமங்கள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை விவரிக்கும்  டைட்டில் ஷாட்களிலேயே ஆரம்பிக்கிறது கலாபூர்வமான அரசியல் அணுகுமுறை. நாயகன், நாயகி இருவரையுமே திறந்தவெளி  கழிப்பறையை உபயோகிக்கும் நிலையில் அறிமுகப்படுத்துவதெல்லாம் இதுவரை பார்க்காத வாழ்வியல் சித்திரம். அதே போல போராட்ட  வடிவங்கள் தொடங்கி, கடந்து போகிற மனிதர்கள் வரை எல்லாவற்றிலும் யாரையோ, எதையோ நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது  படம்.

மன்னர் மன்னனாக குரு சோமசுந்தரம் நைந்த கோட்டும், விறைத்த உடல்மொழியும், கண்சிமிட்டி தலைவாரும் மேனரிஸமுமாக அசல்  ‘மக்கள் ஜனாதிபதி’. குழைந்து உருகும் வாட்டர் கம்பெனி ஆளாக அந்த வித்தியாசத்தையும் அபாரமாகக் கொண்டு வந்து  ஆச்சர்யப்படுத்துகிறார். அங்கீகாரமும் புதிய வழித்தடங்களும் காத்திருக்கின்றன சோமு. ஜெயகாந்தன் உருவில் வரும் மு.ராமசாமி,  அறச்சீற்றத்தில் கொதிக்க வைத்து, இறுதிக் காட்சியில் கலங்கடிக்கிறார்.

இசையாக காயத்ரி, மல்லிகாவாக ரம்யா பாண்டியன்... இருவருமே இயல்பான அழகில், நடிப்பில் நல்வரவுகள்! பவா செல்லதுரை  யதார்த்தத்தில் மனதில் நிற்கிறார். மை.பா.நாராயணன், டி.அருள் எழிலன் என சின்னச் சின்ன ரோல்களிலும் பர்ஃபெக்ட் பாத்திரப் படைப்பு.  செழியனின் கேமரா தர்மபுரியின் வறண்ட நிலப்பரப்பின் அழகியலோடு நம்மைப் பயணிக்க வைக்கிறது. இயற்கையான ஒளியின் இயல்பில்  நம்பகத்தன்மையைக் கொடுப்பதில் வென்றிருக்கிறார்.

‘என்னங்க சார் உங்க சட்டம்’, ‘செல்லம்மா’ எனத் தமிழும் இசையும் இணையும் பாடல்களிலும், கதைக்கு வலு சேர்க்கும் பின்னணியிலும்  ஷான் ரோல்டன் அசத்துகிறார். யுகபாரதி, ரமேஷ் வைத்யாவின் பாடல்கள் அழகு. வசனங்கள் ஏகபலம். ‘‘எந்த ஸ்டேஷனிலாவது  பி.எம்.டபிள்யூ, ஆடி காரை பிடிச்சு வச்சு பார்த்திருக்கீங்களா?’’, ‘‘ஒருத்தியோட அன்புக்கு சமமா இந்த உலகத்துல எதுவுமே இல்லை’’ எனப்  படம் நெடுக ராஜுமுருகன், முருகேஷ்பாபுவின் அதிரடி, வருடும் வசனங்கள்!

படத்தில் குறைகளும் உண்டு. ஆங்காங்கே கேள்விகள் எழுகின்றன. வசனம் சீற்றம்தான். பொருள் கொண்டதுதான். சுவாரஸ்யம்தான். ஆனால்,  பக்கம் பக்கமாக இவ்வளவு வசனங்களா? சினிமா விஷுவல் மீடியம் இல்லையா ப்ரோ? ஆனாலும்  இதையெல்லாம் தாண்டி பேசுகிற  பொருளிலும், விதத்திலும் இந்த ‘ஜோக்கரை’க் கொண்டாட வேண்டிய தேவை நம் சமூகத்திற்கு இருக்கிறது!

- குங்குமம் விமர்சனக் குழு