கடவுள்



அந்த டாக்டருக்கு காசு ஒண்ணுதான் குறி. ஸ்கேன் சென்டருக்கு அனுப்பினா, அதிலும் இவருக்குக் கமிஷன் உண்டுனு பேசிக்கிறாங்க. ஆனா,  உனக்கு வந்திருக்கிற நோயைக் குணப்படுத்த, அவரை விட்டா இந்தப் பகுதியில் வேற டாக்டர் கிடையாது!’’

தோழி பானு சொன்னவுடன், சரோஜா பயந்து போனாள். ‘‘ஏற்கனவே வீட்டுச் செலவுக்கும், புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸுக்கும் நகைகளை  அடகு வச்சாச்சு. என் கஷ்டத்தை அந்த டாக்டரிடம் சொல்லி, செலவைக் குறைக்கப் பார்க்கிறேன்!’’ என்றாள். ‘‘டாக்டர்களுக்கு பணம்தான்  எல்லாம். இரக்கத்தை எதிர்பார்க்காதே!’’ எச்சரித்து அனுப்பினாள் பானு. டோக்கன் வாங்கி, காத்திருந்து டாக்டரைப் பார்த்தவள், உபாதை  விவரங்களோடு, தன் குடும்பக் கஷ்டத்தையும் சொன்னாள். டாக்டர் எந்த உணர்ச்சியும் காட்டாமல் ஸ்கேன் எடுக்க எழுதிக் கொடுத்தார்.

‘பாவிங்க, சம்பாத்தியத்திலேயே குறியாக இருக்காங்க!’ என்று நொந்துகொண்டு, ஸ்கேன் சென்டருக்குப் போனாள் சரோஜா. ‘‘ஸ்கேன்  ரிப்போர்ட்டை டாக்டருக்கு அனுப்பிடுவோம். நீங்க போகலாம்!’’ என்றார் ஸ்கேன் ஊழியர். ‘‘ஸ்கேனுக்கு எவ்வளவு பணம் கட்டணும்...’’  ‘‘இல்லைம்மா! வசதி இல்லாதவங்களுக்கு இலவசமா ஸ்கேன் எடுக்க, ஒரு சங்கேத எண்ணை டாக்டர் போட்டிருக்கார்!’’ என்றார். ‘பேசாமல்  உதவி செய்பவரே கடவுள்’ என்றுணர்ந்து டாக்டரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டாள் சரோஜா.                           

-எஸ்.ராமன்