ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

-சுபா

மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்வதா, காரைப் பின்தொடர்வதா என்று சுகுமார் மேலும் குழம்ப விரும்பவில்லை. துரை அரசனுக்கு  போன் செய்தார். விவரங்களைக் கொடுத்தார். “எல்லா காரோட நம்பரும் இருக்கு... யாரு ஓனர், முகவரி என்னனு கண்டுபிடிச்சுக்கலாம். நீங்க  அந்த எஸ்டி கார்டு எங்க போகுதுனு கண்டுபிடிங்க...” சுகுமார் 3366 என்ற எண் கொண்ட அந்த மோட்டார் சைக்கிளைப் பின்தொடர  ஆரம்பித்தார்.

கே.ஜி. தொலைக்காட்சி நிறுவனம். “உன் பாஸ்வேர்டைப் போடு, விஜய்...” என்று முஸ்தஃபா அந்த லேப்டாப்பை அவன் பக்கம்  திருப்பினான். விஜய் தன்னுடைய பாஸ்வேர்டை கம்ப்யூட்டரில் பதித்தான். முஸ்தஃபா தன்னிடமிருந்த ஒரு பென் ட்ரைவை லேப்டாப்பில்  செருகி, சில ஆணைகளைக் கொடுத்தான். முஸ்தஃபாவுக்கு முப்பது வயது இருக்கும். சிறு வயதில் நிறைய உடற்பயிற்சி செய்தவன் போல  தோள்கள் அகலமாக இருந்தன. மார்பு விரிந்திருந்தது. கம்ப்யூட்டரில் உத்தரவுகளைப் பதிவு செய்த வேகத்தில், விரல்களில்கூட பலம்  தெரிந்தது.

விஜய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அந்த மென்பொருள் லேப்டாப்பில் இருந்த ஒவ்வொரு மென் கோப்பையும் ஊடுருவி, ரகசியமான  ஆபத்துகள் ஏதாவது ஒளிந்திருக்கிறதா என்று சோதனையிட ஆரம்பித்தது. முஸ்தஃபா மெல்லிய குரலில் உரையாடலைத் துவக்கினான்.  “ஓய்வேயில்லாம தெனம் கேமிராவத் தூக்கிட்டுப் போயிட்டிருப்பியே, இப்போ சும்மா இருக்க முடியுதா..?” “கஷ்டமாதான் இருக்கு..”  “ஆனா, ரிட்டயர் ஆனதுக்கு அப்புறம் நீ எழுதறதுக்கு சூப்பரா ஒரு மேட்டர் கிடைச்சிருக்கு இல்ல..? கண்ணெதிரே சிலைத் திருட்டு, லவ்  பண்ற பொண்ணை பார்க்கும்போதே வெட்டிக் கொலை செய்யறது, இந்த அனுபவம்லாம் எல்லாருக்கும் கெடைக்குமா..?”

அவன் குரலில் இருந்த மெலிதான கேலி, விஜய்யை எரிச்சலுடன் நிமிர்ந்து பார்க்க வைத்தது. “இதென்ன அபத்தம்..? கல்யாணியை நான் லவ்  பண்ணேன்னு யார் சொன்னாங்க, முஸ்தஃபா..?” “ஐயோ, நானா எதுவும் சொல்லலப்பா! நம்ப ஆபீஸ்லயே அங்கங்க ஆளுங்க  பேசிக்கிட்டதுதான். ஒரு தடவை கல்யாணியே என்கிட்ட சொல்லியிருக்காளே...” விஜய் திடுக்கிட்டான். “கல்யாணியா? கல்யாணி என்ன  சொன்னா..?” “திரும்பத் திரும்ப விஜய்யோடயே ப்ரோகிராம் பண்ணிட்டிருக்கியே, அந்த மூஞ்சி உனக்கு போரடிக்கலயான்னு ஒரு தடவை  கல்யாணிகிட்ட கேட்டேன்.

அவளுக்கு கோபம் பொத்துட்டு வந்துடுச்சு... ‘ஏய், விட்டா 24 மணி நேரமும் பார்த்துட்டு இருப்பேன்... விஜய் மூஞ்சியைப் பார்த்து எனக்கு  ஏன் போரடிக்கப் போவுது?’ அப்படின்னு சண்டைக்கு வந்துட்டா. அதான் கேட்டேன். தப்பா நினைச்சுக்காதப்பா..!” விஜய் முகத்தை  இறுக்கமாக வைத்துக்கொண்டான். “தயவுசெஞ்சு இந்த மாதிரி அசிங்கமா பேசாதீங்க, முஸ்தஃபா..!” “கோவிச்சுக்காதப்பா... கல்யாணிக்கு நம்ப  ஆபீஸ்ல நிறைய பேர் ரூட் போட்டுட்டு இருந்தாங்க. ஆனா, அவ யார்கிட்டயும் மடியல. உன் கிட்டதான் பிரியமா இருந்தா... அதான்  கேட்டேன்!”

“அந்தப் பட்டியல்ல நீங்களும் இருக்கீங்களா, முஸ்தஃபா..?” முஸ்தஃபாவின் முகம் சரேலென வெளிறியது. “ஏய்... என்னைப் பத்தி அப்படி  ஏதாவது கல்யாணி உன் கிட்ட சொன்னாளா என்ன?” “செத்தவங்களைப் பத்தி நான் பேச விரும்பல...” என்று விஜய் அந்த உரையாடலைத்  தொடர விரும்பாமல் நிறுத்திவிட்டான். ஆனால், முஸ்தஃபாவின் பதற்றம் அவனுள் புதிதாக ஒரு கேள்வியை எழுப்பியது. ‘எம்’ என்று  குறிப்பிட்டது, ஏன் முஸ்தஃபாவாக இருக்கக் கூடாது..?

முஸ்தஃபா சொடக்கு போட்டான். “உன் லேப்டாப்ல பன்னெண்டு ட்ரோஜான் ஒளிஞ்சு உக்காந்திருக்கு, பாரு... க்ளீன் பண்ணாம  விட்டிருந்தா, ஒவ்வொரு ஃபைலா சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கும்...” மேலும் சில உத்தரவுகள் கொடுத்து, எல்லா ஆபத்துகளும்  களையப்பட்டுவிட்டன என்ற அறிவிப்பு வந்தவுடன், லேப்டாப்பை முஸ்தஃபா திருப்பிக் கொடுத்தான். “தேங்க்ஸ்...” என்று இறுக்கமான  முகத்துடன் விஜய் அதை வாங்கிக்கொண்டான்.

சுகுமார் பின்தொடர்ந்த மோட்டார் சைக்கிள் வடக்குக் கடற்கரைச் சாலையில் திரும்பியது. பீச் ஸ்டேஷனைத் தாண்டி ராயபுரம் நோக்கிப்  பயணம் செய்தது. சட்டென இடதுபுறம் இருந்த பெரிய கட்டிடத்துக்குள் நுழைந்தது. சுகுமார் தன் பைக்கை நிறுத்தாமல் தாண்டிச்  சென்றாலும், கட்டிடத்தின் பெயரை மனதில் குறித்துக்கொண்டார். தீபக் மரைன் ப்ராடக்ட்ஸ். கும்கும் மிகவும் அரண்டிருந்தாள்.  கான்ஸ்டபிளால் காக்க வைக்கப்பட்டபோதே, தீபக் தர்மசேனாவுக்கு போன் செய்திருக்க வேண்டும்.

அவரைத் தொந்தரவு செய்யத் தயங்கியது தப்பாகிவிட்டது. இப்போது போனே அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது! அவளுக்கு எதிரில்  அமர்ந்திருந்த துரை அரசன், மிருதுவான குரலில் பேசினார். அவர் குரலில் கனிவு இருந்த அதே அளவு, கண்டிப்பும் இருந்தது. “உங்க பேர்  என்ன..?” “கும்கும்...” “ஆர்.சி. புக்ல சீதாலட்சுமினு போட்டிருக்கே, யார் அது..?” கும்கும் தொண்டை நெல்லி ஏறி இறங்க, மென்று  விழுங்கினாள்.

“அது என் அசல் பேர்... கும்கும் என் தொழில் பேர்...” துரை அரசன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தார். “பேரை மாத்தி செய்யற தொழில்னா,  எழுத்தாளரா..?” “சார்! தெரிஞ்சே கேக்கறீங்க... இது வேற!” “போலீஸைப் பொறுத்தவரைக்கும் அது தப்பான தொழில்மா. அது ஒரு  குற்றம்னா, நம்பர் பிளேட் மாத்தி வண்டி ஓட்டறது அதைவிடப் பெரிய கிரிமினல் குற்றம்... உண்மைகளை ஒளிக்காம சொல்லிட்டீங்கன்னா,  உங்களுக்கு எப்படி உதவலாம்னு யோசிப்பேன்...”

கும்கும் சற்று குழம்பினாள். தீபக் தர்மசேனா ஏதோ விளையாட்டாகத்தானே நம்பர் பிளேட்களை மாற்றுவதாகச் சொன்னார்..? அவர்  பெயரைச் சொன்னால், போலீஸ் பணிந்துவிடும் என்று தோன்றியது. “எல்லாத்தையும் சொல்றேன், சார்...” என்றாள். எம்.டி கிரிதரின் அறை.  “எம்.டி உள்ள வரச் சொன்னாரு...” என்றார் பி.ஏ. செந்தாமரை. தன் போனில் பேசிக்கொண்டிருந்த கிரிதர், விஜய்யை சைகையால் எதிரே  அமரச் சொன்னார். போன் உரையாடல் முடிந்ததும், நிமிர்ந்து புன்னகைத்தார்.

“க்ளீன் பண்ணியாச்சுனு முஸ்தஃபா சொன்னான்...” “ஆமா சார்...” “உன் பேர்ல இருந்த கிரிமினல் கேஸை டிராப் பண்ண நம்ப அட்வகேட்  முயற்சி பண்ணிட்டிருக்காரு...” “தேங்க்ஸ், சார்...” கிரிதர் சட்டென்று முகத்தை சீரியஸாக்கிக் கொண்டார். “சில சேனல்கள்ல இப்போ  பாம்பேலேர்ந்து ஹிந்தி சீரியல் வாங்கி டப் பண்ணிப் போடறது தெரியுமா..?”

“தெரியும், சார்...” “நாம கூடஇங்கிலீஷ் சினிமாவுக்கு ரைட்ஸ் வாங்கி, தமிழ்ல டப் பண்ணிப் போட்டுட்டிருக்கோம். அதைத் தாண்டி ஏன்  யோசிக்கக் கூடாது..? அமெரிக்க தொலைக்காட்சிகள்ல சீரியல்ஸ் கூட சினிமா மாதிரி ரிச்சா எடுக்கறாங்க.. அந்த பட்ஜெட் நமக்குக்  கட்டுப்படியாகாது. அந்த சீரியல்களை வாங்கி டப் பண்ணி தமிழ்ல ஏன் நாம போடக்கூடாது..?”

விஜய் புன்னகையை விரிவாக்கினான். “நல்ல ஐடியா சார்...” “உன் கிட்ட பாஸ்போர்ட் இருக்கு இல்ல? ஒரு ஃபாரின் ட்ரிப் போயிட்டு  வர்றியா..?” விஜய் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தான். “சார்..?” “நம்ம டி.வி சார்பா நீ போய் அமெரிக்கன் கம்பெனிகள்ல பேசிட்டு  வர்றியா..?” “நானா..? சார், எனக்குக் கேமரா பிடிச்சுதான் பழக்கம். இதுல அனுபவமே இல்லியே..?”

“தெரியும்! இந்த டீலை ரகசியமா செய்யணும்னு விரும்பறேன். இப்போ நம்ப மார்க்கெட்டிங் டீம்ல யாராவது ஃபாரின் கிளம்பினா, மத்த  சேனல்காரங்களுக்கு சந்தேகம் வரும். என்ன ஏதுனு விசாரிச்சு, யாராவது ஒருத்தர் நம்மள முந்திக்கிட்டு ஆரம்பிச்சுருவாங்க. அதனாலதான்  உன்னை அனுப்பணும்னு நெனைக்கறேன். இப்ப உன்னை சஸ்பெண்ட் பண்ணி வச்சி லீவு குடுத்திருக்கறதால, நீ ஆபீஸ் வரலன்னு யாரும்  கவனிக்கமாட்டாங்க...”

“விசா கெடைக்குமா, சார்...?” “நம்ம லீகல் டீம் உனக்கு எல்லா உதவியும் பண்ணும். அமெரிக்கால, சான்ஃப்ரான்சிஸ்கோ, சியாட்டல், லாஸ்  ஏஞ்சல்ஸ்னு மூணு இடத்துலயும் உனக்கு உதவ ஆள் இருக்காங்க. எல்லா செலவும் என்னோடது...” இப்படி ஓர் அதிர்ஷ்டம் அவனுக்கு  அடிக்கிறதா? விஜய் நம்ப முடியாமல் அவரைப் பார்த்தான். “சார்! அம்மாவைத் தனியா விட்டுட்டுப் போகணும். அவங்ககிட்ட ஒரு  வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்...”

“ரெண்டு வாரத்துலயே வேலையை முடிச்சிட்டு நீ திரும்பி வந்துடலாம், விஜய்! ஒரே ஒரு கண்டிஷன்தான்...” “என்ன சார்..?” “நீ யாரைப்  போய்ப் பாக்கப் போறே, எதுக்குப் போறேனு அம்மாவைத் தவிர வேற யார்கிட்டயும் சொல்லாத...” “ஓகே சார்...” என்றான் விஜய். சுகுமார்  கொண்டுவந்து கொடுத்த விவரங்களைப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் துரை அரசன். “நாம ஃபாலோ பண்ண ரெண்டு கார்களுமே தீபக் மரைன்  ப்ராடக்ட்ஸ் கம்பெனி பேர்ல ரிஜிஸ்டர் ஆயிருக்கு. ஓனர் பேரு தீபக் தர்மசேனா.

அந்த மாருதி ஜென் காரை ஓட்டின சீதாலட்சுமியும் அழுதுட்டே அதே பேரைச் சொல்லியிருக்கா. தீபக் தர்மசேனாவோட பின்னணி  என்னன்னு கண்டுபிடிச்சாகணும்...” “அவரைக் கண்காணிக்க ஏற்பாடு பண்றேன், சார்...” “அதுக்கு முன்னால, மாத்ருபூதத்தைப் பாக்கணும்...”  என்றார் துரை அரசன். கமிஷனர் ஆபீஸ். மாத்ருபூதம் கலங்கிய கண்களோடு நிமிர்ந்து பார்த்தார். துரை அரசனின் கேள்விக்கு சற்று  யோசித்துவிட்டு பதில் சொன்னார்: “தீபக் தர்மசேனா யாருன்னு எனக்குத் தெரியாது சார்...” “பொய் சொல்லாதீங்க...”

“ஐயோ, சத்தியமா எனக்குத் தெரியாது சார்...” என்று விம்மினார்.  “பொண்டாட்டி, புள்ளைங்களப் பாக்காம பைத்தியம் பிடிச்சுரும் போல  இருக்கு சார்! பெரிய மனசு பண்ணி, என்னை மன்னிச்சு, ஒரே ஒரு தடவை அவங்களைப் பாக்க அனுமதி கொடுங்க சார்...” “விட்டா தப்பிச்சு  ஓடப் பாக்கறீங்களே? ஜார்ஜுக்கு பாதுகாப்பு கொடுக்கச் சொன்னா, அவனை கொலையே பண்ணிட்டு, மன்னிப்பு கேக்கறது கரெக்டா,  மாத்ருபூதம்..?”

மாத்ருபூதம் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார். துரை அரசன் இறுகிய முகத்துடன் வெளியேறினார். “என்னடா சொல்ற..?”  என்றாள் மரகதம், உலர்ந்த துணிகளை மடித்துக்கொண்டே. “நெஜமாத்தாம்மா! என்னை அமெரிக்கா போகச் சொல்றாரு எம்.டி...” என்றான்  விஜய். “உங்க எம்.டி.யைப் புரிஞ்சுக்கவே முடியலடா... ஒண்ணு, குடுமியை அறுத்துக் கையில குடுக்கறாரு; இல்லன்னா, கொண்டையை  முடிஞ்சுவிட்டுக் கொண்டாடறாரு..!” “முதலாளிங்க அப்படித்தாம்மா...” “நந்தினி கிட்ட சொல்லிட்டியா..?”

“இனிமேதான்...” “உன்கிட்ட நல்லதா ஒரு ஸ்வெட்டர் கூட கெடையாதேடா. அந்த ஊர்லலாம் குளிரும்னு சொல்வாங்களே...” “மொதல்ல  விசா வரட்டும்... அப்புறம் ஜட்டி, பனியன் வாங்கறதப் பத்திப் பேசலாம்”  என்று சிரித்தான் விஜய். புழல் சிறைச்சாலை. சின்னதுரை  அவனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில், சுவர்கள் சந்திக்கும் ஒரு மூலையில் முதுகு சாய்த்து அமர்ந்திருந்தான். பூட்ஸ் ஒலிகளை அடுத்து  இரும்புக் கதவு திறக்கப்படும் ஒலி. நிமிர்ந்து பார்த்தான்.

இன்ஸ்பெக்டர் துரை அரசன்! சின்னதுரை தன் இயலாமையைக் கோபமாக வெளிப்படுத்தினான். “சார், எத்தனை நாளைக்கு இப்படியே  வெச்சிருப்பீங்க... என்னை எப்ப வெளில விடப்போறீங்க..?” “எப்ப தீபக் தர்மசேனா சொல்றாரோ, அப்ப..!” ‘தீபக் தர்மசேனா’ என்ற  பெயரைக் கேட்டதும், அவன் முகத்தில் திடுக்கிடல். “டேய், உனக்கு விஷயம் தெரியாது! நீ பயந்த மாதிரி உன்னைக் கொல்ல அவர்  ஏற்கனவே முயற்சி பண்ணிட்டிருக்காரு...” “என்ன சார் சொல்றீங்க..?”

“உனக்கு சாப்பாடு எடுத்திட்டு வந்தாங்களே, அதுல விஷம் கலந்திருந்தது, தெரியுமா..?” சின்னதுரை குழப்பத்துடன் அவரைப் பார்த்தான்.  “உனக்கு வெச்சிருந்த சாப்பாட்டுல ஒரு கைதி ஏதோ பவுடர் தூவறதை வார்டன் பார்த்துட்டாரு. அவனைப் பிடிச்சு, அடிச்சு உதைச்சுக்  கேட்டிருக்காரு.. அது சயனைடாம். ‘இனிமே சின்னா உயிரோட இருக்கக் கூடாதுன்னு தீபக் தர்மசேனாதான் இதை உள்ள அனுப்பினாரு’ன்னு  சொல்றான். அவரைப் பத்தி விஷயம் வெளியே கசியும் போல இருந்தா, அந்த ஆளையே தூக்கிடுவாராமே? இப்ப அந்தப் பட்டியல்ல  நீதான் இருக்க போல இருக்கு!”

சின்னதுரையின் கண்களில் முதன்முறையாக அச்சம் துள்ளியது. “யார் சார் அந்தக் கைதி..?” “அவன் பேரை உன் கிட்ட சொல்லி நீ அவனைக்  கொல்லப் பார்க்கறதுக்கா? உன்னை சேலம் ஜெயிலுக்கு மாத்தினா, அங்கேயாவது நீ பாதுகாப்பா இருப்பியானு யோசிச்சிட்டிருக்கோம்...  தீபக் தர்மசேனாவோட ஆளுங்க அங்கேயும் இருக்காங்களானு விசாரிக்கச் சொல்லிருக்கேன்...” சின்னதுரையின் மண்டைக்குள் குழப்பங்கள்  புரள்வதை துரை அரசனால் உணர முடிந்தது.

‘‘இந்த டீலை ரகசியமா செய்யணும்னு விரும்பறேன். இப்போ, நம்ப மார்க்கெட்டிங் டீம்ல யாராவது ஃபாரின் கிளம்பினா, மத்த  சேனல்காரங்களுக்கு சந்தேகம் வரும்.’’

(தொடரும்...)
ஓவியம்: அரஸ்