கலர்



துணிக்கடையில் பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் முருகேசன் தன் முதலாளியிடம் வாய்விட்டு கேட்டே விட்டான். ‘‘இத்தனை வருஷம்  வேலை பார்த்து என்ன புண்ணியம் முதலாளி? நான் கறுப்பா இருக்கிறேன்னுதானே என்னை லேடீஸ் செக்‌ஷன் பக்கமே  விடமாட்டேங்கறீங்க! செவப்பா இருக்கிறதால ராஜேஷை எப்பவும்  லேடீஸ் செக்‌ஷன்ல வேலைக்கு அனுப்பறீங்க.

இந்தக் கடையில அதிகமா விற்பனை ஆகுற முக்கியமான செக்‌ஷன் அதுதான். நான் அவனைவிட இங்க சீனியர். அங்கே வேலை பார்க்க  எனக்குத் தகுதி இல்லையா?’’ முருகேசன் ஆதங்கமாகக் கேட்கவும், அவன் தோளில் வாஞ்சையுடன் கை போட்டவாறே முதலாளி சுந்தரேசன்  பதில் சொன்னார். ‘‘டேய்  முருகேசா! கறுப்பு, சிவப்புனு நான் பாகுபாடு பார்த்து உன்னை வேற செக்‌ஷன்ல போடலை.

ராஜேஷ் நல்ல நிறமா இருக்குறான். சேலை, சுடிதாரை எல்லாம் அவன் தன் மேல போட்டு பெண்களுக்குக் காட்டும்போது, மட்டமான  டல்லடிக்கிற துணிகள் கூட நல்லா தெரியும். இது ஒரு வியாபார டெக்னிக்டா. உன் முதலாளி என்னிக்குமே பேதம் பார்க்க மாட்டேன்...  புரிஞ்சுதா?’’ முருகேசன் இனி ராஜேஷை விரோதமாகப் பார்க்க மாட்டான்.

-வி.சகிதா முருகன்